ஶ்ரீ:
பதிவு : 342 / 519 / தேதி :- 24 மே 2018
* செய்திகளில் திகழ்வது *
“ நெருக்கத்தின் விழைவு ” - 36
விபரீதக் கூட்டு -04.
ஆனந்த பாஸ்கரன் எனக்கு சொன்ன காபி வரும்வரை, அந்த கிளப்பிற்கு தினம் வந்து செல்கிற அவரது நண்பர்கள் மரியாதை நிமித்தமாக அவரைப் பார்த்து ஓரிரு சொல் பேசி செல்ல, நான் அதை பார்த்தபடி அமைதியாக இருந்தேன் . விட்ட உரையாடலை எங்கிருந்து மறுபடியும் துவங்க வேண்டும் என்பதை மனம் ஒன்றின் மேல் ஒன்றாக தன்னிச்சையாக அடுக்கியபடி இருந்தது . அவர் சற்று சகஜ நிலைக்கு வந்ததுபோல இருந்ததால் நான் அவரிடம் . “நான் காலை உங்களிடம் சற்று தேவைக்கு அதிகமாக பேசிவிட்டேன் என நினைக்கிறேன் . இது போல ஒன்று நிகழக்கூடாது என்பதனாலேயே , நீங்கள் துவங்கும் எந்த உரையாடலுக்குள்ளும் நான் வருவதில்லை” என்றேன் .
“உங்களை அஞ்சியே நீங்கள் பேசுவதை முகத்திற்கு நேராக உங்களை மறுக்காதவர்கள் அதை ஒரு இளிவரலைப் போல பின்னல் பேசுவதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள் . நம்மை பற்றிய செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றுவதை போல ஒரு வீண் வேலை இல்லை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை . இன்று காலை நான் பேசியவை எனது எண்ணமோ கருத்தோ அல்ல , பல செய்திகளை இணத்து ஒரு உருவகம் கொடுத்தது மட்டுமே நான் செய்தது. அந்த அவதானிப்புகளில் சில தவறாக இருக்கலாம். நீங்கள் மறுதளிக்க வேண்டியது எனது யூகத்தை . செய்திகளை நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது காரணம் செய்திகள் உண்மையானவை. அதுபோல என்னையும் என்றேன்.
முதலில் சிரித்துக் கொண்டவர் “நீ சொன்ன பல விஷயங்கள் எனக்கு தெரிந்தவைகளே ஆனால் அவற்றை நீ தொகுத்து கொண்டதை போல நான் செய்யவில்லை , உன்னிடம் ஒன்றும் சொல்லாது எழுந்து வந்தது எனக்கும் சிறிது வருத்தமளிப்பதாக இருந்தது , ஆனால் மதிய உணவிற்கு பிறகு என்னை சந்திக்க வந்த சிலருடன் நான் பேசியபோது நீ சொன்ன தகவல்களை போலவே அவர்களும் சொன்னார்கள் ஆனால் அவை உதிரிகள் , நீ தொகுத்ததைப்போல இல்லை”. என்றார் ஆனந்த பாஸ்கரன் . “நீ சொல்லவருவது சண்முகம் மிக சிறந்த கட்சிக்காரர் மேற்படும் மதியூகி என்பது உனது தீர்மாணமா? என்றார். சாந்தமாக பேசினாலும் இந்த இடத்தில அவரது குரலில் கடுமை வந்து சேர்ந்தது .சண்முகம் பற்றிய சிந்தனையே அவரை பற்றி எரியச் செய்வது என எனக்கு தெரியும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக