ஶ்ரீ:
பதிவு : 339 / 512 / தேதி :- 18 மே 2018
* தெளிவின்மை *
“ நெருக்கத்தின் விழைவு ” - 33
விபரீதக் கூட்டு -04.
அரசியலென்பதே "திறமையாக ஏமாற்றுதல்" என்று சுதந்திரத்திற்கு பிறகு வந்த குடிமை சமூகம், முரணியக்கத்தின் வழியாக பிழை புரிதலை அடைந்துவிட்டிருந்தது துரதிஷ்டவசமானது. அதை ஒட்டியே புதிய தலைமைகள் அவர்களிலிருந்து உருவாகிவந்தார்கள். அவர்களுக்கு அரசியல் விழுமியங்கள் என ஒன்னறில்லை . கட்சி கோட்பாடுகளில் வேறுபாடு போல சில இருந்தாலும் , ஒரு காலகட்டத்தில் இது அனைத்து கட்சிகளின் பொது இயல்பு என்கிற நிலையை அடைந்தது. அந்த தலைமைகளின் மத்தியில் யுகசந்தியில் சிக்கியவர்கள் என சண்முகம் போன்றவர்கள் இரண்டுமற்ற நிலையில் தங்களை இருத்திக் கொண்டார்கள்.
அன்று நிலவியசூழலில் எங்களை போன்றவர்களுக்கு சண்முகம் மிக சிறந்த தலைமையாக, அதனால் சிறந்த தேர்வாக இருந்ததில் வியப்பில்லை . 1983ல் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் 1985ல் ஆட்சியை பிடித்தது . மீளவும் பலமுள்ள அமைப்பாக அதை மாற்றியது சண்முகத்தின் அரசியல் முக்கியமான இந்த நகர்வுகளே. அவை கட்சியை வளர்க்க செய்த முயற்சிகள் என்கிற அந்தஸ்தை அடைந்தன .
1980 தேர்தல் பலவித பரிமாணங்களை கொண்டதும் சற்று சிக்கலானதும் கூட . காங்கிரஸின் முன்னாள் முதல்வரின் மகனான வைத்திலிங்கம் சண்முகம் தரப்பால் மடுகரை தொகுதியில் வற்புறுத்தி நிற்கவைக்கபட்டு தேர்தலை சந்தித்தார். ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை .
மடுகரை புதுவை சுதந்திர போராட்ட களத்தில் முக்கிய பங்குவகித்த பகுதி . குபேரின் அடியார்களுக்கு அஞ்சி விடுதலை போராட்டம் , நகர்ப்பகுதிகளில் கடைசீ வரை நிகழவில்லை . இந்திய சுதந்திரதிற்கு பிறகும் புதுவை இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு குபேர் பெரும் தடையாக இருந்தார் , அந்த காலகட்டத்தில் அரசியல் கொலைகள் சர்வசாதாரண நிகழ்வுகளாகி நடந்தேறியது. புதுவை பிரெஞ்ச் ஆட்சிக்கு கீழ் இருந்ததால் சட்ட ஒழுங்கு கவர்னரின் கைகளில் . கட்சி என சில துவக்கப்பட்டு தேர்தல்கள் வெறும் கண்துடைப்பாக நடந்தேறிக் கொண்டிருந்தது . கவர்னரை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் புதுவையில் நிகழ்த்த முடியும் என்பது எதார்த்தம் .
பல விஷயங்களுக்கு மத்தியில் இந்த உண்மை பெரிதாக எடுத்து பேசப்படவில்லை . துணிந்து குபேரரை எதித்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் சுப்பையா மட்டுமே , அது இறுதி கணம் வரை தனிப்பட்ட விரோதம் போலவே புரிந்து கொள்ளப்பட்டது . பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்திற்கு மத்தியில் புதுவை ஒரு தனி தீவு போல இருந்ததால் கடத்தல் வியாபாரம் செழித்திதோங்கி இருந்தது .
பெரும் பொருளியல் வளம் உள்ளவர்கள் புதுவை இந்திய ஒன்றியத்துடன் இணைவதை விரும்பவில்லை . இது பற்றிய முழுமையான புதுவை சுதந்திர போராட்டம் பற்றிய தகவல்கள் தனித்து பதிவேண்டிய ஒன்று என நினைக்கிறேன் . பழைய அரசியல் நிகழ்வுகளால் வைத்திலிங்கத்திற்கு தேர்தலில் நிற்க விருப்பவில்லை . சண்முகம் தரப்பில் அழுத்தம் அதிகரித்த பொது வைத்திலிங்கம் திடீரென ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் காணாமலானார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக