ஶ்ரீ:
அடையாளமாதல் - 86
* கருத்தெனும் துணுக்குகள் *
இயக்க பின்புலம் - 13
அரசியல் களம் - 26
கண்ணனுடைய அறிவுதலின் படி அவர்கள் அனைவரும் சண்முகத்திற்கு எதிராக வேலை செய்கிறாரகள் என்று எங்கும் பேசப்பட்டது , ஒருகட்டத்தில் சண்முகம் தனக்கெதிராக வேளை செய்ததாக யாரை நினைக்கிறாரோ அவர்களைக் காதி போர்டில் இருந்து வேலை நீக்கம் செய்வதை முழுநேரமாக செய்யும்படி சண்முகம் தரப்பு அவருக்கு அழுத்தம் கொடுத்தபடி இருந்தனர் .
அதன்படி வேலை இழந்தவர்கள் இன்னும் தெளிவாக சண்முகத்திற்கெதிராக தேர்தல் வேலை செய்ய போனார்கள் . இது சண்முகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது . கடலோரப்பகுதிகளில் வாக்கு பெறுவது இயலாது என்றாகிப்போனது . நகர் பகுதியில் சேகரிக்கும் வாக்கு மட்டுமாவது தேருமானால் வெற்றி சிறு இக்கட்டிற்கு பிறகு சாதகமாகலாம் என்பது கணக்கு . ஆனால் அவரை சுற்றியிருந்தவர்கள் நகர்புறத்திற்கு மிக அன்னியர்கள் . ஓரிருவரைத் தவிற பிறர் சென்றால் கிடைப்பதையும் கெடுக்குமளவிற்கு வெகு ஜெனவிரோதிகள். மதிப்பு மிக்கவர்கள் வயோதிகர்கள் , அவர்கள் கண்ணனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சண்முகம் தோற்றுக்கொண்டிருக்கிறார் , என்றேன்.
நான் விரிவாக சொல்ல சொல்ல சுப்பாராயன் ஒன்றும் பேசாது கேட்டபடி இருந்தார் . பின்னர் நான் சொன்னவற்றில் முதல் பகுதி அவருக்கு தெரிந்ததே ஆனால் இரண்டாம் பகுதி அவருக்கு புதிதாக இருந்தது . என்னிடம் "எங்கிருந்து இவற்றை திரட்டினாய்" என்றார் . அதற்கு நான் " தகவல்கள் சிறு சிறு குறிப்புகளாகத்தான் கிடைக்கும் அவற்றை தொடர்புறுத்தி இணைத்து ஒருங்கினால் கிடைப்பதே செய்தி. அது ஒரு யூகம் மட்டுமே . இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை "என்றேன்.
அட்டகாசமாக சிரித்தபடி என் தோளில் தட்டி தாமோதரனை பார்த்து "நான் அரியை பார்த்த முதல் பார்வையிலேயே முடிவு செய்தேன் , உங்களைவிட வேறு மாதிரி என்று நீ தான் நம்பவில்லை " என்றார் . தாமோதரனும் அதை ஆமோதித்து, தனக்கு சண்முகத்தை பற்றிய செய்தி தனக்கு கிரும்பாக்கத்தில் கிடைத்தும் ஏறக்குறைய இதுவே என்றார்.அடுத்த என்ன என்றதும் . நான் எனக்குத் தோன்றியதை சொல்லத் தொடங்கினேன் திடீரென தாமோதரன் என தோள்மேல் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு மெல்லிய விசில் சப்தம் கொடுத்தார் அது தாக்கப்படுவதற்கான எச்சரிக்கை . எங்களுடன் வந்திருந்த நான்குபேர்கள் எங்களை சுற்றி நின்று கொண்டார்கள் .
அங்கிருந்து திரும்போதுதான் கவனித்தேன் எதிர் வேட்பாளர் சுபாராய கவுண்டர் வீடு டீ கடைக்கு வெகு அருகாமையில் இருந்ததை. நங்கள் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்புள்ளது . நான் காதுகளில் திடீர் உஷ்ணத்தை உணர்தேன் . அங்கு ரோட்டில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தவர் சுப்பாராய காண்டரே . வைத்திலிங்கம் வீட்டிற்கு வேறு பாதைகள் இல்லை இவரை கடந்தே செல்ல வேண்டும் தாமோதரனை லேசாக குறிப்புணர்த்தினேன் அவர் சட்டென புரிந்துகொண்டார் . அவர் முன்னே சென்றார் .
தாமோதரன் ஆறடி ஆஜானுபாகு ஆள் தாடிவைத்தபடி பார்பதற்கு ஒருமாதிரி இருப்பதால் அவருடன் வம்பு வைத்துக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் . அது நிஜமும் கூட சில பிரச்சனைகளில் அவர் நடத்திய தாக்குதல்களை பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறேன் . அந்தளவு ஒரு மனிதனை சற்றும் யோசிக்காது தாக்குவதை நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன் . என்னால் ஒருகாலும் அப்படி நடந்து கொள்ள இயலாது என்பதையும் புரிந்திருந்தேன்
அவர் முன்னே செல்ல நாங்கள் அவருக்கு பின்னல் சென்றோம் , ஆனால் நான் நினைத்தமாதிரி இல்லை. அவர்கள் நேராக தாமோதரனை யார் எந்த ஊர் என்கிற தோரணையில் ஏதோ கேட்க இவர் அதற்கு பதில் சொல்லாமல் கடக்க முயன்றார் . ஏறக்குறைய கைகலப்பு மாதிரி ஆரம்பிக்கும் முன்பாக எங்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் அங்கு வந்து சேர கூட்டம் கூடிவிட்டது .
என்னை அடையாளம் கண்டுகொண்டே இது துவங்கியிருக்குக் வேண்டும் . காவல்துறை ரோந்து வண்டி வர உஷ்ணம் குறையாது விலக்கி விடப்பட்டனர் . அதற்குள் பாலன் அங்கு வந்து அவர் சப்தம்போட ஒரு மாதிரி மோதல் முடிவுக்கு வந்தது . என்னுடைய கார் அருகில் வேகமாக வர அனைவரும் வண்டிக்குள் ஏறிக்கொண்டோம் . அந்த தெரு முனை வயல்வெளி சூழ்ந்த பகுதிகள் அதை தாண்டுவதற்குள் பெருத்த சப்தத்தை ஏற்படுத்திக்கொண்டு கல் ஒன்று வண்டியை தாக்கி தெறித்தபடி எங்களை தாண்டிச்சென்றது வண்டி டயர்தேயும் சப்தமும் நாற்றமுமாக நிற்க அனைவரும் ஒரேசமயத்தில் வண்டியிலிருந்து வெளியே பாய்ந்தார்கள்.
வண்டியை சடாரென நிறுத்தி ஒரே சமயத்தில் வெளியே வந்ததும் சிலர் ஓடுவதை தெரிந்தது தாமோதரனுடன் சிலர் அவர்களை துரத்த எத்தனிக்க . மறுபடியும் போலீஸ் குறுக்கே வந்துவிட ஒன்றும் செய்வதற்கில்லாமல் வண்டியேறினோம் . பாலன் சுப்பாரனிடம் கடிந்து கொண்டார் .
-ஏற்கனவே அவர்களுக்கு அரியை தெரியும் பின் எதற்கு கவுண்டர் வீடு அருகில் சென்றீர்கள் என கோபப்பட்டார் . தாமோதரன் பேச்சை மாற்ற "அரி நிறைய புதிய தகவல் சொல்லுகிறார் உங்களுக்கு தெரியுமா" என்கிறார் .பாலன் என்ன என்று பார்க்க , நான் விருப்பமில்லாமல் சுருக்கமாக சில விஷயங்களை சொன்னேன் . வைத்திலிங்கம் என்ன சொன்னார் என்றதும் . "எதையும் தெளிவாக பேசவில்லை கண்ணனுக்கு அஞ்சுகிறார் . தன்னுடைய பெயர் இதில் தேவை இல்லாமல் அடிபடுவதாக நினைக்கிறார் "என்றார் , "தான் நினைத்ததைவிட அரசியல் வேறுமாதிரி இருக்கிறது" என்கிறார் . இது எதிர்பார்த்ததுதான் . "அரசியலை விட்டு விலக நினைப்பதாக சொல்லுவது அரசியல் தலைவர்வதற்கு முதல் தகுதி" என்றேன் . என்னை சற்று உறுத்து பார்த்துவிட்டு திரும்பி கொண்டார் தாமோதரன் மெல்ல சிரிக்க நானும் அவருடன் இணைந்து கொண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக