ஶ்ரீ:
இயக்க பின்புலம் - 20
அரசியல் களம் - 27
முருகேசன் பாரப்பதற்கு மிக சாதுவாக தெரிபவருக்கு வேறு முகங்கள் உண்டு . இந்தப் பதிவு அவரைபற்றி சொல்லவந்ததல்ல என்னைபற்றியது என்பதால் . அவரைப்பற்றிய விபரங்களை இதில் கொடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை . அவரைப் பற்றிய என் மனப்பதிவு இங்கு சொல்லுவதற்கு காரணம் பிற்பாடு இதை தொட்டு சில தகவல்களை சொல்வதற்காக .
அவரிடமிருந்து உடன் விலகச்சொல்லி என் ஆழ்மனம் சொன்னதால் அவரிடம் "நீங்க பெரியவர் பேசிமுடித்தபிறகு நாங்கள் வருகிறோம் "என்றேன் . அதற்கு அவர் "இளந்தலைவர் பேசும்போது நாங்களெல்லாம் ஒன்றுமே இல்லை .நீ பேசு அரி" என்றார் இதுதான் அவர் சுபாவம் . சண்முகம் முருகேசனிடம் "உனக்கு எல்லாரையும் தெரியுதே முருகேசா" என்றார் .அதற்கு உட்பொருள் அறிமுகம் செய்துவை என்பதாக பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன் . அவர் "உங்களுக்கு இவரைத்தெரியாத" என்று ஆச்சரியமாக கேட்டபடி என்னை என் குடும்ப பெயரை சொல்லி அறிமுகப்படுத்தினார் . சண்முகம் ஆச்சர்யத்துடன் எனக்கு கைநீட்ட , நான் சங்கோஜத்துடன் எழுந்து அவருடன் கைகுலுக்கினேன் . தனக்கு என்னுடைய பாட்டனாரை நன்றாக பழக்கம் என்றார் .அவர்கள் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு ஒருவரா என்று சிரித்தபடி சொன்னதும் , சற்றுநேர அமைதிக்கு பிறகு தாமோதரனைப்பார்த்து "எப்பிடியா எங்காளுங்களா பார்த்து புடிக்கிறீர்கள்" என்றபடி என்ன விஷயம் என்றார் . பிரச்சாரக்கூட்டத்தின் அழைப்பிதழ் மற்றும் கடவு சீட்டு பற்றி சொன்னதும் . அனைத்தையும் அன்று இரவு வந்து வாங்கிப்போகச்சொன்னார் . மிக நெருக்கத்தில் கூட்டம் , நாங்கள் யோசித்தபடி இருக்க , சண்முகம் புரிந்துகொண்டு , ராஜீவ்காந்தி வருகையில் சிறிய மாற்றமிருப்பதை சொல்லி , இப்போதுதான் மரகதம் சந்திரசேகர் வீட்டிலிருந்து பேசியதாகவும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் முடித்து பிறகு இரவு அடையார் கவர்ணர் மாளிகையில் தங்கி , அடுத்தநாள் மாலைதான் புதுவைக்கு வர இருப்பதை சொல்லி எங்களை அனுப்பிவைத்தார் . நான் எழுந்து சென்ற பின் முருகேசன் என்ன பேசுவார் என்கிற சிந்தனையிலேயே அங்கிருந்து கிளம்பினேன் . நான் நினைத்ததை போலவே முருகேசன் நல்ல மனிதரில்லை என்கிற உண்மை பிற்காலத்தில் தெரிந்துகொண்டதும். அவரின் மீதுள்ள துவேஷம் கூடிற்று . அவரைப்பற்றி "தூங்குகிறபோதுகூட நல்லகனவு காணாதவர்" என்கிற சொலவாடை உண்டு
காரில் ஏறியதும் நான் தாமோதரனிடம் தீர்மானமாக சொனேன் இரவு நீங்கள் வந்து அனைத்தையும் வாங்கிவாருங்கள் . இங்கு மறுபடி வரும் எண்ணமில்லை எனக்கு என்றேன் . முருகேசன் பேசியதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார் தாமோதரன் . அவருக்கு நல்லதென ஒன்று இருப்பதே தெரியாது என்றேன் . அன்றுமாலை நான் முதலியர்ப்பேட்டை தொகுதிக்கு சென்றுவிட்டேன் . சண்முகம் வீட்டிற்கு செல்லும்வேலையை மறுபடி எடுத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை , அங்கு என்னவோ எனக்கு எதுவும் என் இயல்பாக இல்லை, அது எனக்கான இடமில்லை , என்னைவிட வயதில்,ஸ்தானத்தில் ,பதவியில் ,அனுபவத்தில் பெரியவர்கள் இருக்கும் இடத்தில் எனெக்கெனவோ பிறிதொருவருக்கோ ஆற்றக்கூடியதற்கு என ஏதும்மில்லை அங்கு. நான் அங்கு ஒரு இடத்தில் அமர்ந்திருக்க கூட இயலாது என நினைத்தேன் . எனக்கான இடம் நான் ஆற்ற வேண்டிய பணிகள் அவை எனக்காக காத்திருக்கும் இடமே எனக்கான இடமாக இருக்க முடியும் .
நான் சரியான இடத்தில் இருக்கிறேன் . ஏன் இப்படி யோசிக்க துவங்கினேன் என்று தெரியவில்லை ஆனால் முருகேசனின் பேச்சிற்கு பின்னல் உள்ள அந்த வாளின் கூர்முனையின் குளுமை போல ஒன்று என்னை தொட்டு சென்றதை உணர்கிறேன் , ஒருவித எரிச்சல் , கையாலாகாத்தனம் . அவர் பேசிய தொனியிலேயே பதிலிலடி கொடுக்க தெரிந்தும் ஏன் கொடுக்கவில்லை . என்னிடம்முள்ள சில இயலாமைகளில் இதுவும் ஒன்று , வெளியில் வந்து அது குறித்து குமைந்துகொண்டே இருப்பதேன் . என்னால் அவற்றை யோசித்தெல்லாம் கடக்க இயலாது , ஒருவித கோபம் என்மேலேயே . ஏதாவதொரு நிகழ்வால் அதை கடக்க விரும்பி முதலியார்பேட்டை தொகுதிக்கு சென்றேன்
அது மத்திய கோடைகாலம் ,வெயில் கொளுத்திய மாலை பொழுது , வெக்கை தீராது எங்கும் அமர முடியாதபடி நாற்காலிகளிகளெல்லாம் தகித்துக்கொண்டிருந்தது. இங்குமங்குமாக திண்டாடிக்கொண்டிருந்தேன் , என்ன குடித்தாலும் தாகத்தின் அழல் தீரவில்லை . கடைசியில் யாரோ "சூடா டீ சாப்பிடு கோடைக்கு அதுதான் சரியாவரும்" என்று சொல்ல நான் மாலை நேர சாய்வு வெய்யிலை தாண்டி பஸ் திருப்பதிலுள்ள கடையில் நால்வருக்கு டீ சொல்லிவிட்டு காத்திருக்கையில் கமலக்கண்ணன் வந்தார் . அவருக்குமான ஐந்து டீ சொல்லி மொத்தமாக காத்திருந்தோம் .
கமலக்கண்ணன் மதியம் என்ன நடந்தது என்றார் . நான் நேரே பதில் சொல்லாமல் நீங்களும் வந்திருக்கலாம் நன்றாக இருந்திருக்கும் என புளுகினேன் . டீ சாப்பிட்டு வெளியே வந்ததும் மறுபடி என்மீதே எரிச்சல் காரணமின்றி முருகேசன் மீது பாய்கிறேன் . நான் அப்போதெல்லாம் இப்படித்தான் நடந்து முடிந்த அரை நாழி விஷயத்தை அரைநாள் வெறித்தபடி நினைவுகளாலால் அலைக்கழிகப்பட்டு அவதியுர்வது வழமை . இப்போதெல்லாம் எருமை மாதிரி யார் என்னசொன்னாலும் என்னையல்ல என்பதைப் போல ஒரு பொறுமை வந்துவிட்டது .
அன்று இரவுவரை அங்கேயே இருந்தேன் . பாலன் கூட என்னை ஒருமாதிரி பார்த்தார் . நான் வீடு திரும்போது இரவு 10:30 மணி இருக்கும் தெருமுனை தாண்டும் போது கிருஷ்ணமூர்த்தி தன் வீட்டிற்கு வெளியே தெருவில் நின்றபடி ஆவேசமாய் யாரிடமோ ஏதோ பேசிக்கொண்டிருந்தார் , காங்கிரஸில் இருப்பவர் , மரைக்காரின் வலதுகை மிக முக்கிய பிரமுகர் , நான் வெறுக்கும் சிலரில் இவரும் ஒருவர் ஏதோ சில காரணங்களால் பெரிய தலைவர்களை ஒட்டி ஏன் ஏதற்கு என தெரியாமல் இவரைப்போன்றவர்கள் இரண்டாம் நிலை நின்று நிறுத்தி அனைவரையும் நிர்மூலமாக்குபவர்கள் . அவரை தாண்ட நான் வண்டியின் திராட்டலை வேகமாக திருக திடீரென என் பெயரை யாரோ இறைந்து கூவுவதை கேட்டேன் . என்னை யாரும் வீதியில் அப்படி கூப்பிட்டதில்லை , திகைப்புடன் வண்டியை நிறுத்தி திரும்பிப்பார்த்தால் கிருஷ்ணமூர்த்திதான் அப்படி கூப்பிட்டது.
முருகேசனை போல இவரும் குள்ளர் குறுங்கழுத்தர் , ஆகவே நம்பத்தகாதவர் . இந்தப்பதிவில் இருவர்பற்றி ஒன்றாக வந்தது ஒரு தற்செயலாக நிகழ்ந்தது . இதை தொடங்கும்போது எனக்கு அப்படியொரு திட்டமில்லை . இருவரையும் ஒரு அடைப்புகுறிக்குள் வைக்கலாம் .மிக மர்மமான இரும்பின் கூர்கொண்டு சில்லிட்டு தொடச்செய்வது உறையவைப்பதில் , அதில் மகிழ்வதில் சமர்த்தர்கள் பலரின் வாழ்வில் இதை நிகழ்த்தியவர்கள்.
கிருஷ்ணமூர்த்திதான் அப்படி கூப்பிட்டது. இருப்பினும் இப்படி கூப்பாடுபோடுபவர் அல்லர் அவர் . மேலும் எனக்கும் அவருக்கும் எப்போதும் சரிவருவதில்லை என்பதால் தவிற்கவியலாத சந்தர்பங்களில் ஒரிரு வார்த்தை பேசியைத்தவிர எவ்வகையிலும் நான் அனுக்கம் கொள்ள விழையாதவர். வண்டியை திருப்பி அவரை அணுகி நிறுத்திவிட்டு மரியாதைக்கு இறங்கி "என்ன " என்று கேட்டதும் அவர் சொன்ன செய்தி எனக்கு பொறிகலங்கிவிட்டது . திக் பிரம்மை பீடித்தது போல நின்ற என்னை அவர்தான் உலுக்கி நிகழுலகத்திற்கு கொண்டுவந்தார் செய்தி "ராஜீவ்காந்தி வெடுக்குண்டு விபத்தில் காலமானார்" அப்போது செய்தி அப்படித்தானிருந்தது . நான் அவருடன் ஒன்றும் பேசாது பதைபதைத்த நெஞ்சுடன் வீட்டிற்கு விரைந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக