ஶ்ரீ:
*பிளவுகளை இனிதாக்குதல் *
இயக்க பின்புலம் - 31
அரசியல் களம் - 33
அரசியல் என்பது வஞ்சனைகளுக்கும் கைவிடப்பாடல்களுக்கும் இடைப்பட்டவை , வலிதாங்கும் திறனற்றவர்களுக்கு அங்கு இடமில்லை . உடலின் வலிகளைக்காட்டிலும் மனவலிகள் எக்காலத்திற்குமானது , நினைவுறும்தோறும் , நெஞ்சம் உருகி கண்களில் பெருகுவது . வெட்டுப்படலுக்கு உவந்து உடலை கொடுப்பது அனைவருக்கும் சாத்தியப்படாதது . பிளவுறத்தலை ஒரு ஒத்திசைவிற்கு விடுதல் இங்கு வகுக்கப்பட்டது .
தலைவர்கள் தனியார்கள் அவர்கள் இருக்குமிடம் பலரால் கவனிக்கப்படுவதாலேயே தங்கள் வாழ்வினை ஒழுக்க நெறிகளால் முறைமைப்படுத்திக்கொண்டவர்கள் . சண்முகம் அப்படிப்பட்டவர் . எனக்கான தலைமையாக ஏற்று நான் அரசியலில் வளர்ந்தது அவரின் அறிவுரைகள் படி . பின் அதைவிட்டு வெளியேறியதும் அவரிடத்தில் பிரிதொருவரை கொண்டு வைக்கமுடியாமை . அதுவே என்ஊழ் எத்துறையிலும் எக்காலத்தும் .
இந்த பதிவை நான் எழுதுகிற சமயத்தில் நாராயணசாமி இந்த மாநில முதல்வராக இருக்கிறார் . அவரை பற்றிய எனது பதிவை பிறிதொன்றில்வைக்கிறேன். வக்கீல் முருகேசனோ டாக்டர் ஆனதவேல் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருந்தால் இருவருமே கொடுக்கப்பட்ட காலத்திற்குள் அதை முடித்து ஒருவேளை அத்துடன் காணாமலாகி இருக்கலாம் . மறுபடி அரசியலின் மையப்புள்ளி சண்முகத்திடமே வந்து சேர்த்தும் இருக்கலாம் . ஆனால் நாராயணசாமியை தேர்ந்தெடுத்ததின் மூலமாக அது அவர் கைக்கு மறுபடி வராதே போனது . அதுவரை அரசியலில் நடப்பதை முடிவெடுத்ததால் அவரின் செயல்பாடுகள் நேர்மறையாக நின்றது . பின் கைவிட்டுப்போன அரசியலை துரத்த துவங்கியதும் பிறிதெவர்க்கும் அவருக்குமான இடைவெளி குறையத்துவங்கியது .
தனக்கு வஞ்சகம் நிகழ்ந்ததை அவர் எடுத்துக்கொண்ட விதம் 1991 நிகழ்ந்ததை ஆனந்தபாஸ்கர் என்னிடம் விரிவாக பேசிய போது அதை ஒரு தலைவனின் கம்பீர கடந்து செல்வதை ஒத்திருந்தது . ஆனால் அதன் காயங்கள் மறைந்தாலும் வடு நெடுநாள் அவரின் நெஞ்சில் நீங்காது இருந்துவந்தது . தான் தோல்வியுற்றதாக செய்தி வந்து சேர்த்தபோது அது அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவை நிகழ்கிறபோது தாங்கிக்கொள்ள முடியாததாகிவிடுகிறது .
அவர் வழமையாக அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு பின்புறமாக உள்ளது ஒரு சிறிய அறை , அவரின் சாப்பாட்டு அறையாகவும் உடை மாற்ற என பலவித உபயோகத்திற்கானது . அதை ஒட்டிய பின்புறத்தில் விசாலமான குளியலறை இக்காலத்திற்கொப்பான மிக நவீன வசதிகளுடன் இருப்பதை பார்த்திருக்கிறேன் . அவை சுமார் நூற்றுஐம்பது வருடத்திற்கும் மேல் பழமையானது . அந்த வீடு அவரின் மீதிருந்த மரியாதையின் காரணமாக பத்மினிச்சந்திரசேகர் அவர் காலம் வரை அவரின் பயன்பாட்டிற்கு என விட்டது . அதற்கு அவர் கடைசீ வரை வாடகை தந்துகொண்டிருந்தார் .
பத்மினி சந்திரசேகர் செல்வராஜ் செட்டியாரின் மகள் . புதுவையின் மிக பெரிய செல்வந்தர்களின் ஒருவர் , இன்றும் அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் புதுவையிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமாக கணக்கிட்டு மாளாது இருப்பதை இன்றுவரை கேள்விப்பட்டு வருகிறோம் . அவரது காலத்திற்குப்பின் பல அரசியல்வாதிகளின் கை வழியே அது தொடர்ந்து முறைகேடாக இன்றுவரை கைமாற்றப்பாடு வருகிறது . செல்வராஜ் செட்டியாரைப் பற்றி ஏராளமான கதைகள், அவரை ஒரு பயங்கர வில்லன் அளவிற்கு நான்சிறுவயதில் நடுங்கவைக்கும் கதைகளை கேட்டிருக்கிறேன் . அவர் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அவை அனைத்தும் உண்மைதான் என்பது போல எழுந்த படலம் கடைசீ வரை கலையவேயிலாதபடி நின்று விட்டது . அவரை பற்றிய பதிவை பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன் அவை புதுவை விடுதலைக்கு சம்பந்தப்பட்டது .
தான் தோல்வியுற்ற செய்தி தன்னை அடைந்ததும் , தனது சாப்பாட்டறையில் இருந்து அவர் வெளியே வரவேயில்லை. இரண்டு நாள் அதனுள்ளேயிருந்து அவர் செயல்பட்டபடி இருந்தார். ஜன்னலில்லாத, காற்றோட்டமில்லாத அந்த அறையில் எவரும் ஐந்து நிமிடத்திற்குமேல் இருக்கமுடியாது . பத்துக்கு ஏழு என்கிற அளவிலுள்ள அந்த அரை சேர்ந்தாற்போல் இருவர் நிற்க கூட இயலாது சுற்றிலும் அவரின் உடைகளை அடுக்கிவைத்த மர அலமாரிகள் , ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் மாதிரியான இரண்டடுக்கு இரண்டடி மர சாப்பாட்டு மேஜை சுமார் இரண்டடி உயரமிருக்கும் .அவர் அமர்வதற்கு சிறிய மரநாற்காலி .
அவர் உட்கார்ந்துவிட்டால் அங்கு ஒருவருக்கு மட்டுமே இடமிருக்கும் . அந்த இரண்டு நாள் முழுமையும் அந்த அறையை விட்டு அவர் வெளியே வரவேயில்லை . அவரை சந்திக்க வந்தவர்களில் கட்சி சம்பந்தமாக அவர் அழைத்தவர்கள் மட்டிலுமே அவர் சந்தித்தார் . அங்கிருந்தபடி தன்னுடைய மனப்புழுக்கம் , ஆற்றாமை வெறுப்பு இழப்பின் வலி வெஞ்சினம் என பலவித மனோநிலையில் இடையே நிதானமிழக்காது அவர் நிகழ்த்திய நகர்த்தல்களை உப்பளம் விடுதியில் கூட்டம்கூட்டமாக கூடிக்கூடி ஆலோசித்து எதிர்வினையாற்ற முடியாது திகைத்தனர் .
என்னிடம் ஆனந்தபாஸ்கரன் சொன்ன அந்த சொல் இன்றும் என் காதுகளில் கேட்டபடி இருக்கிறது . அவர் சொன்னார் " மாளாத மனப்புழுக்கத்திற்கு அந்த அறையின் தங்கவியலாத புழுக்கம் ஈடுகொடுத்தது , உள்ளும் புறமுமாக புழுங்கி புழுங்கி ஒரு இனிய பழம் போலே பழுத்து கனிந்து வெளிவந்தார்" என்றார் . அந்த மனநிலையை பற்றிய சண்முகத்தின் நிலை விரிப்பை அவர் வாயாலேயே நான் ஒருவன் மட்டுமே கேட்கும் வாய்ப்பு அமைந்திருந்து . ஆனால் அதை அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு அன்று எனக்கில்லை . சண்முகத்தை சந்திக்காமல் நான் தவிர்த்திருந்தால் என் அரசியில் வாழ்வு அர்த்தமற்றுப்போயிருக்கும் .
இந்த கோணத்தில் எழுதுவதால் அன்று உப்பளம் விடுதியில் நிகழந்தவைகள் பல கூறுகளில் என்னால் உணரமுடிகிறது அதன் அடிப்படையில் அன்று எனக்கு என் தரப்பில் சொல்லப்பட்டதும் ஆனந்தபாஸ்கர் , வல்சராஜ் அன்று சொன்னதும் பிற்பாடு தியாகராஜன் சொன்னது நானும் பாலனும் பேசியது அதை ஒட்டிய என் அனுமானங்கள் . இப்போது நினைக்கையில் பிரம்மிப்பூட்டுவபாவை . இறுதியாக ஜெயலலிதா கூற்றுப்படி யார் முதல்வர் என்கிறவாய்ப்பு வைத்திலிங்கத்தை வந்தடைந்தோது அவருக்கு எல்லாம் துலக்கமாக விளங்கிவிட்டது .
சண்முகம் பேருருக்கொண்டு எழுவதை பெரும் பயத்தோடு அண்ணார்ந்து பார்த்தார் வைத்திலிங்கம் , ஆனால் அந்த நினைவே அவருக்கு சண்முகத்திற்கு எதிரே நிற்கவும் அவருக்கு அறைகூவல் விடுப்பவராக மாறவும் காரணமென்று அமைந்தது . வைத்திலிங்கத்தின் அரசியல் பிறழ்வு அவரை துரத்தியபடி அவர் எதிர்பார்த்த பாரம்பரிய பெருமை மரியாதை மதிப்பு என அனைத்தும் அவரை கைவிட தனியராகி பின்னெப்போதும் அது தனக்கு அளித்த அரசுசூழ்தலின் வழியாக தனக்கான இடத்தை கண்டடையாமல் , பிறர் எடுத்து அளிக்கும் நாற்காலிகளில் அமர்ந்தபடி தன் அரசியல் வாழ்வை தொடர்ந்தார். ஒவ்வொன்றிலும் ஒரு இனிய பிளவுகள் போல பிறர் செய்வதறியாது நிற்க அது அவரது காலத்தை பிளந்தபடியே இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக