ஶ்ரீ:
பதிவு : 356 / 537 / தேதி :- 23 ஜூன் 2018
* கௌரவம் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 49
விபரீதக் கூட்டு -04.
“இங்கே எழக்கூடிய முக்கியமான வினா இதுதான். இப்படி இவர்களை ஆக்கியது எது? திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் அனைத்து சமூக ஆய்வாளர்களும் சமூகச்செயல்பாட்டாளர்களும் சொல்வார்கள். இங்கே நமக்களிக்கப்படும் கல்வியின் அடிப்படையானது பிரிட்டிஷ் காலத்தில் வரையறை செய்யப்பட்டது. அதை நாம் ‘கருங்காலிக்கல்வி’ என்று சொல்லலாம். சொந்த சமூகத்துக்கும் சொந்த மக்களுக்கும் எதிரான ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கும்நோக்குடன் வடிவமைக்கப்பட்ட கல்வி அது.
அந்தக்கல்வியை பெறும் ஒருமனிதர் முதலில் தன்னை தம்மைச் சார்ந்த பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார். தான் அவர்களைவிட மேல் என்றும் அவர்களிடமிருந்து கூடுமானவரை விலகியிருப்பதே தனக்கு கௌரவம் என்றும் நினைக்க ஆரம்பிக்கிறார். ஒரு படித்த மனிதன் எவ்வகையிலும் அவனுடைய சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதற்காக அவன் அக்கறை காட்டுவதில்லை, போராடுவதில்லை. அதை சுரண்டுவதற்கும் அடக்கியாள்வதற்கும் அவனை பிறர் உரிய கூலிகொடுத்து எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். அவன் படிப்பின்மூலம் துரோகியாக, கருங்காலியாக மட்டுமே உருவாகிறான்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் . இது பிரிட்டீஷ் அரசாங்கம் விட்டுச்சென்ற அதன் நீட்சியான இந்திய கல்வி முறை , அந்த கோட்பாட்டை அதன் நடைமுறைச் சிக்கலை மிக உக்கிரமாக சொல்ல வந்தது இந்தப் பதிவு . அரசியலும் ஒரு கல்விதான் என்பதால் இது அப்படியே அதன் தலையிலும் பிசிறில்லாது உட்காருவதை பார்க்க முடிகிறது.
தில்லிக்கு சென்று புதுவை விடுதியில் வாசராஜுடன் தங்கி இருந்தபோது , இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் எந்த கேள்வியோ? விலகல் கடிதமோ கொடுக்காது காங்கிரஸை விட்டு விலகி கண்ணனின் தமாகாவில் சென்று இணைந்ததனார் . செய்தியை வல்சராஜ் என்னிடம் சொன்ன போது நான் திகைத்துப் போனேன் , இது அவருக்கு அதிர்ச்சி கொடுக்கவில்லை , என்றாலும் இதை அவரின் தனிப்பட்ட அவமானம் என்றே அணுகினார் . அவர்களை நோக்கி தனது கோபமான வசை சொற்களை சொல்லி மாய்ந்து பின் ஓய்ந்து படுக்க சென்றுவிட்டார் . எனக்குள் நெடுநாளாக உறங்கவைக்கப்பட்ட ஒன்று எழுந்து விட்டதை அறிந்து கொண்டேன் . இனி என்னால் உறங்கமுடியாது .
நான் கலசலன மனநிலையில் படுக்க பிடிக்காமல் எழுந்து வெளியில் வந்தபோது டிசம்பர் மாத தில்லி குளிர் ஊசியால் குத்துவதை போல உணர்ந்தேன் . மன அழுத்தத்திற்கு அது தேவைபோல இருந்தது . மனம் தனது இயல்பான பாதையில் நிலையழிதலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. நான் மிகவும் அஞ்சுவது இதைத்தான் . அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது , எவ்வகையிலும் நான் சொல்லும் சமாதனத்தை அது ஏற்காது . நீண்டநாள் கட்டிவைக்கப்பட்ட ஓன்று கட்டவிழ்ந்தது போல இருந்தது .
எனது சிந்தனை ஒழுங்கிற்கு வராது கலைந்து கிடந்தன முழுவதுமாக . இன்று நான் வந்து அடைந்திருக்கும் இந்த அமைதிக்கு பின்னால் கொந்தளிக்கும் ஒரு வெளி உண்டு . மனப்பழக்கத்தினால் அதை நீண்ட நெடுங்காலமாக மெல்ல தடவி தடவி ஒரு படிமனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன் . நிகழ் அரசியல் எனது கவனத்தை வேறு பாதைக்கு திருப்பும் என்பதற்காக இதில் நுழைந்து சர்வ ஜாக்ரதையாக முக்கிய புள்ளியை நோக்கி நகர்வதை கவனமாக தவிர்த்து வந்தேன் .
கடந்த சில ஆண்டுகளாக மிதமான செயல்பாட்டில் எனது பாதைகள் முழுவதுமாக தடைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒரு குழு இதோ இன்று வெளியேறி விட்டது .மிச்சமுள்ளது கிருஷ்ணமூர்த்தி குறுங்குழு மட்டுமே . அதற்கு எப்போதும் தனியான திட்டம் என ஒன்று இருப்பதில்லை . இனி முழுமையான செயல்பாட்டிற்கு வருவது என்கிற எண்ணம் எழுந்தது. அதன் பாதையில் வல்சராஜையும் தலைவர் சண்முகத்தையும் கூட எதிர் கொள்ள நேரிடலாம் . கொள்ளும்படி வந்தால் அதை செய்துதான் ஆகவேண்டும் என்கிற மனம் மெல்ல அமைதியடைய துவங்கியது .நான் முழுவதுமாக சிதறி இருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக