ஶ்ரீ:
பதிவு : 528 / தேதி :- 08 ஜூன் 2018
“கீதை ஒரு தருணத்திலும் செயலாற்றாமலிருப்பதை முன்வைக்கவில்லை. மாறாக செயலாற்று செயலாற்று என்று மீண்டும் மீண்டும் அறைகூவுகிறது. மிகச்சிறந்த செயலை ஆற்றுவதெப்படி என்று மட்டுமே அது பேசுகிறது.
செயலாற்றுவது மனிதனின் அடிப்படை இயல்பு. எது தன்னுடைய இயல்புக்கு ஏற்றதோ, எதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளமுடியுமோ அதில் முழுமூச்சாகச் செயலாற்றுவதே ஒருவனின் கடமை. அவனுடைய நிறைவும் மகிழ்வும் அங்குமட்டுமே உள்ளது. அதையே கீதை தன்னறம் என்கிறது” எனகிறார் ஜெயமோகன் தனது பதிவு ஒன்றில் .
எனது பதிவுகள் அனைத்தும் எனது தீவிர செயல்பாடுகளிலிருந்து நான் விலகி செயலின்மைக்கு திருப்பியதையும் அதை பலர் எனது தோல்வியாக , இயலாமையாக சொன்ன போது , அவற்றை மறுத்து சொல்ல எனக்கு நிறைய காரணங்களும் ,விஷயங்களும் இருந்தன. ஆனால் என்னை நோக்கிய கேள்விகள் அனைத்தும் ஒற்றைபடையானவைகள் , அவற்றிற்கு விளக்கத்தைவிட என்னை சீண்டிவதற்கான ருசி மட்டுமே பிரதானமாக இருப்பதை உணர்ந்த போது , அவற்றை பற்றிய எனது எண்ணங்களை பிறகு யாரிடமும் ஒருபோதும் பேசாதானேன்.
என்னை நோக்கி பேசப்பட்ட அனைத்தையும் நான் மறுப்பதாக இருந்தாலும் , அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டது போல இது எனது தோல்வியா?, இயலாமையா? , அவர்கள் ஏதாவதொரு புள்ளியில் நான் பார்க்க மறுப்பதை பார்கிறார்களா?. அல்லது வெறும் காழ்ப்பு மட்டும்தானா? என்பதை அவதானிக்க அவற்றை எழுத்தில் கொண்டு வருவதை விட சிறந்த வழி இருக்க முடியாது என நினைக்கிறேன் . மேலும் நான் எனக்கே எவ்வளவு நேர்மையானவன் என்பதை பற்றி நான் அறிந்து கொள்ளவதை பற்றி இந்தப்பதிவுகள் எனக்கு சொல்ல வந்தவை .
“அடையாளமாதல்” பதிவுகள் எனது தீவிர செயல்பாட்டையும், “அடையாளமழித்தல்” பதிவுகள் , அதிலிருந்து முற்றாக விலகி செயலின்மைக்கு சென்றதை பற்றிய அவதனிப்பாக அவற்றை தொகுக்க துவங்கினேன் . வழமையாக பதிவுகள் அன்றைய உளத்தூண்டல் வழியாகவே எனக்கு நிகழ்கிறது . அவை முற்றும் ஜெயமோகனின் எழுத்துக்களிலிருந்து நான் அடைந்து விடுவது உண்டு. அது பொதுவாக பல நேரங்களில் நிகழ்வது . அவரின் ஒரு சொல் கூட அந்த தூண்டலை கொடுத்துவிடுவதுண்டு . அவரின் “இமைகணத்திற்கு” முன்பாக விடுதலை பற்றிய பதிவு
கைதி
“என் அறை சிறியது
நிறைய ஜன்னல்கள்.
என் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன
மேஜைக்குக் கீழ் காகிதக் குப்பை
கறை படிந்த காபி கோப்பை
அறுந்து துடிக்கும் கவிதை வரிகள்.
கோடையில் சூடான தென்றல்
உள்ளே வருகிறது
இரவில் நிலவும்
தூரத்து சங்கீதமும்
கனவும்.
எனக்கு அலுத்துவிட்டது
என் ஜன்னல் பார்வைகளுக்கெல்லாம் ஒரே கோணம்
வெளியே போக விரும்புகிறேன்
உடைமாற்றிச் செருப்பணிந்து
தேடினால்
வாசல் இல்லை.
நாற்புறமும் சுவர்கள்
ஜன்னல்கள்
வெளிக்காற்று உள்ளே வருகிறது
இதற்குள் என் உடல் சூடு புழுங்குகிறது.
இந்த ஜன்னல் வழியாக
நான் வீரிட்டு அலறினால்
எத்தனை பேருக்குக் கேட்கும்?
ஒரு துண்டு வெள்ளைத் தாளில்
என் துயரை ஏற்றி
தெருவுக்கு விட்டெறிகிறேன்
இதயத்துடிப்புடன் காத்திருக்கிறேன்.
அவற்றின் மேல் மனித காலடிகள்
இரக்கமின்றி நடந்து போகக் கூடும்”
இந்தப் பதிவு எனக்கு அன்றைய சூழலில் பெரும் நிலையழிதலையும் , இனம்புரியாத உளக்கொந்தளிப்பையும் மன விம்மலையும் எனக்கு கொடுத்தன. சில மாதங்களாக நான் எங்கோ சிக்கிக்கொண்டதை போல பலமுறை எழுத உட்கார்ந்து முட்டி தெறித்து எழுந்து விடுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது . எழுத துவங்கும் முன்பாக இருக்கும் உள எழுச்சி எழுத துவங்கிய சில நிமிடங்களில் ஆவியாகி விடுகிறது . செயலின்மை பற்றிய ஜெயமோகனின் பதிவு தொடர் உளத்தூண்டலை கொடுத்தாலும் அவற்றை எழுத்தில் கொண்டுவருவது முடியாது போனது . ஒருவகையில் அது அப்படி நிகழக்காரணம் ஏறக்குறைய நான் ஒரு சரியான புள்ளிக்கு வந்துவிட்டதை எனக்கு உணர்த்துகிறது என நினைக்கிறேன். எனது 500 க்கும் மேற்பட்ட பதிவுகள் என்னில் அவற்றை அவதானிக்க எழுதப்பட்டதே .
செயலின்மை , விலகல் மனப்பான்மை , வெறுப்பு , தளர்ச்சி,கோபம் போன்றவற்றிலொடுத்து கிளைப்பது , அது தற்காலிக செயலின்மைக்கு சிலரை கொண்டு செல்வது , அவை நீர்த்துப்போனால் மறுபடியும் அவர்கள் செயல்பாட்டிற்கு வந்து விடுகிறார்கள், அடுத்த நிகழ்வு நடந்தேறும்வரை . வேறு வகையான சிலர் செயல்பாட்டிற்கு வந்த பிறகும் தனக்கு உலகியல் கொடுத்த படிப்பினை வழியாக அவற்றில் முற்றும் ஆழ்ந்து விடாமல், மீளவும் அதேபோன்ற பிறிதொரு பாடம் கிடைக்காது தன்னை தற்காத்து கொள்வார்கள் , அவர்கள் செயல்களுக்கு வந்தாலும் ஒருவித ஈடுபாடற்ற தன்மை கொண்டிருப்பாரகள் இது வேறொரு வகையான செயலின்மை.
ஒருமுறை ஒன்றிலிருந்து விலகினால் பின் ஒரு போதும அதை நோக்கி திரும்பாத என்னை “அடையாளமழித்தல்” பதிவின் வழியாக பிறிதொரு கோணத்தில் அவதானிக்க நான் முயன்றபடி இருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக