https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 394 * ஒழுங்கமையா விழைவுகள் *

ஶ்ரீ:



பதிவு : 394 / 565 / தேதி : 27 ஆகஸ்ட்   2018

* ஒழுங்கமையா  விழைவுகள்  


நெருக்கத்தின் விழைவு ” - 89
விபரீதக் கூட்டு -05 .





கூடுகையின் தொடக்கத்தை அறிவிக்கும்வந்தே மாதரம்பாடல் ஒலிக்கத் துவங்கியது .அதன் பின் கூடுகையை முன்னெடுத்தால் நான் தாக்கப்படலாம் என்கிற அசாதாரண அமைதி நிலவுவதையும், அதை எதிர்கொள்ளும் துணிவும் , என் உடல் முழுவதுமாக சூடாக பரவுவதை உணர்ந்தேன் . அமைதியான இடத்தில் திடீரென பரபரப்பாக நாற்காலிகள் இழுபடும் ஓசையுடன் சட்டென உருவாகிய அனைவரின்  குரல்  கார்வை ஒலியாக எழுந்து அங்கு நிலவிய அமைதியைக் குலைத்தது , தலைவர் தனக்கு இருபுறமும் சூழ்ந்து நின்றவர்களை கரம் குவித்து வணங்கியபடி உள் நுழைந்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்டதும்  சிலர் பதட்டத்துடன் பின்வாங்குவதையும் சிலர் உற்சாகம் பொங்க அவரை நோக்கி வேகமாக முன்நகர்வதையும் பார்த்தேன் . தலைவரின் நுழைவு அங்கு நான் உள்ப்பட யாரும் எதிர் நோக்கத்தது . எங்கும் ஒரே களேபரமாகி இருந்த சூழல் விலகி சற்று அரோக்கியமான அமைதி திரும்பியிருந்தது , தலைவர் வழக்கத்திற்கு மாறாக மாடியில் உள்ள தனது அறைக்கு செல்லாமல் கீழே உள்ள கட்சி ஊழியர்களின் அலுவலகத்திற்குள் நுழைந்தார் . அவர் என்ன செய்யப்போகிறார் என ஒருவருக்கும் தெரியவில்லை . என்ன ஒரு காட்சி. அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சூர்யநாராயணன் என்னைப் பார்த்ததும் , கண் சிமிட்டினார் .வரமட்டேன் என உறுதியாக இருந்தவரிடம் மாற்றம் எந்தப்புள்ளியில் நிகழ்ந்தது என தெரிந்து கொண்டதும் , நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் . மேடை அருகே நின்று கூச்சலிட்டுக்கொண்டிருந்த கூட்டம் என்னைவிட்டு விலகி அறைக்குள் அமைந்திருந்த தலைவரை மெல்ல சூழ்ந்து கொண்டு  , அவரது நோக்கி ஏராளமானவர்கள் ஒரே குரலில்  கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்

அவருக்கு இது வழமையான ஒன்று . நான் மேடையை விட்டு விலகாமல் எனது குழு என்ன செய்கிறது என பார்த்துக்கொண்டிருந்தேன் . அடுத்தடுத்த நிகழ்வுகளினால் அவர்கள் முதலில்  திகைத்து செயலிழந்தார்கள். பின்னர் தங்களை திரட்டிக்கொண்டு மெல்ல என்னை நோக்கி வந்தனர். அவர்களுக்கு முதலில் என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை . தலைவர் உள்நுழைவு அவர்களுக்கு ஒரு மனபலத்தை, உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும்

முதலில் என்னை சூழ்ந்திருந்த எதிர்க்கூட்டம் மெல்ல விலகி இப்போது எனது குழுவை சேந்தவர்களால் நான் முற்றாக சூழப்பட்டிருந்தேன் ,இதுவே நான் விரும்பிய நிலைமை . அரசியலில் யார் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் . நல்லது இப்போது அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் . இது நான் உள்நுழைந்தனுடன் நிகழ்ந்திருக்க வேண்டியது , சற்று தாமதமாக நிகழ்ந்துள்ளது. வருத்தமும் மகிழவையும் ஒருங்கே அடைந்தேன் . அரசியலில் எனது யதார்த்த நிலை இதுதான் என்பது எனக்கு மீண்டும் ஒருமுறை அது சொன்னது .

நான் எனது அரசியல் எதை பற்றியதாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த தருணம் அது . நான் அலுவலகம் வருவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பிருந்தே சுகுமாரன் அங்கு அலப்பறை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறான். “கூட்டம் சட்டவிரோதமானது என்றும் தில்லிக்கு தான் தகவல் சொல்லப்போவதாகவும் , இன்று கூட்டம் ரத்து, அனைவரும் எழுந்து செல்லலாம்என சப்தமிட்டதை கேட்டு கூட்டம் குழம்பி போனாலும் , கலையவில்லை என்பதை எனக்கு சாதகமானதாக பார்த்தேன் .அதில் பலர் முதல்முறையாக இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள், சிலர் பாலன் காலத்திலிருந்து நிர்வாகிகளாக இருந்து பின்னர் வல்சராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியில் இடம்பெறாதவர்கள் . மூன்றாவது பிரிவினர்  புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் .அவர்களுக்கு தங்கள் தலைமை என்றும் பலவீனமாக இருப்பது தங்களுக்கு உகந்தது என்கிற எண்ணமுள்ளவர்கள்

அந்த நிர்வாகிகள்  , தாங்கள் மட்டுமே அமறவேண்டிய இடத்தில் இப்பெருங் கூட்டத்தை எதிர்பார்க்காததால் திகைத்திருந்தனர் .அதுவே என்மீதான  எரிச்சலை அவர்களுக்கு உருவாக்கி இருக்கும் . அதனால்  சுகுமாரன் நிலைப்பாடிற்கு அவர்களது மறைமுகமான ஆதரவிருந்தது , நியமிக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களைத் தவிர மற்ற எல்லோரும் வெளியேற்றப்பட்டு , இந்த கூட்டம் நிறுத்தப்படாது நடைபெற வேண்டும் என்கிற விழைவுள்ளவர்கள் . அதில் என்மீது கண்டனம் எழுப்ப அங்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் . பழைய நிர்வாகிகளில் சிலருக்கு நான் தலைமை ஏற்க இருப்பதை இரட்டை மனப்பான்மையுடன் பார்க்க வந்தார்கள் . தலைவர் பங்கெடுக்க போவதில்லை என்கிற செய்தியை அவர்கள் இங்கு வந்த பிறகே தெரிந்துகொண்டிருக்க வேண்டும் . அதனால் குழப்பமடைத்தவர்களாக அமர்ந்திருந்தனர்.

இப்படி பல காரணங்களின் அடிபடையில் அங்கிருந்தவர்களில்  யாரும் எழுந்து அவனுடன் விவாதிக்கவில்லை என்பதை அலுவலகத்திற்குள் நுழைந்த அந்த வினாடி புரிந்துகொண்டேன் . முதலில் இது எனக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது . ஆனால் இதுதான் நிதர்சனம். இவர்கள் தங்களின் அரசியலின் பொருட்டு இங்கு கூடி இருக்கிறார்கள் . யார் முதன்மை பெறுகிறார்களோ அவர்களை சார்ந்து தங்களது அரசியலை வளர்த்தெடுத்துக் கொள்வார்கள் . இது ஏறக்குறைய நான் கணித்ததே

எனக்கும் இதை எனது ஆதரவாளர்களை மட்டும் கொண்ட கூட்டமாக அதை நடத்த நான் ஆரம்பம் முதலே விரும்பவில்லை . அது என்னை நானே ஏமாற்றிக்கொள்வது . இவர்கள் அரசியலில் தன்னியல்பாக , தங்களின் விழைவின் படி ஈடுபடுவது என்கிற முடிவிற்கு வந்துவிட்டவர்கள் , இவர்களை எனது ஆதரவாளர்களாக மாற்றிக் கொள்வது என் திறன் பொறுத்தது . என்னை நோக்கி சுகுமாரன் கேட்ட எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல தயாரில்லை . என்ன செய்வதாக இருந்தாலும் அவன் அதை முதலில் துவங்கட்டும் . என்னை பொறுத்தவரை இதுதான் நாளை நான் நியமிக்கவுள்ள ,அனைத்து பொறுப்பிற்கும்  வர இருப்பவர்களின் கூட்டம். அவர்கள் இங்கு நிலவும் அரசியல்  குழப்பத்தை பார்க்கட்டும் . யார் யார் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதை திறமையிருந்தால் புரிந்து கொள்ளட்டும் .

இங்கிருந்து எனக்கான அரசியலின் பாதை பிரியுமானால் அதில் பயணப்பட நான் தயாராக இருந்தேன் . அல்லது அனைத்தும் இங்கு இப்போது இந்த நிமிடம்  தூர்ந்து போனாலும் எனக்கு ஆவது ஒன்றுமில்லை . என்னால் ஆனா முயற்சியை நான் எடுத்தேன் சூழல் சாதகமில்லை என்றால் , அது ஊழ் . அது என்ன நினைக்கிறதோ அது நடக்கட்டும் . சுகுமாரன் தான் அழைத்து வந்த  கூட்டத்துடன் தலைவருக்கு பின்னல் சென்று அவரது அறை முழுவதும் நிறைத்துக்கொண்டு அவருடன் அர்த்தமில்லாது விவாதிக்க துவங்கினான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக