ஶ்ரீ:
பதிவு : 670 / 859 / தேதி 30 மார்ச் 2023
* வலியுறுத்தல் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 68.
அரசியலில் எப்போதும் உயரிய இடத்தை பெறுவதற்கும் அடைந்த இடம் உறுதியாவதற்கும் சில சமயங்களில் வன்முறை கையிலெடுக்கப்பட்டிருக்கிறது. அது எதிர்பார்த்த பலனை சடுதியில் கொடுத்தாலும் பின்விளைவுகள் அபாயகரமான இடத்தில் கொண்டு விடுவதை பார்த்திருக்கிறேன்.அரசியலில் வன்முறை எனது வழியாக எப்போதும் இருந்ததில்லை. உளவுத்துறை அதிகாரி அதைப்பற்றி மறைமுகமாக என்னிடம் கேட்ட போது கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் வெளியில் ஏதோ பேசி செய்தி போல கசியவிட்டிருக்க வேண்டும் . அவர்கள் தான் பேரணிக்கு பதிலாக போராட்டம் அல்லது ஆர்பாட்டம் என முதலில் இருந்தே என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். மாலை நிகழவிருக்கும் கூட்டம் பற்றிய எந்த முடிவிற்கும் வரவில்லை “பேரணியை வன்முறையாக மாற்றும் எண்ணம் இல்லை உங்களுக்கு கிடைத்த தகவல் பிழையானது” என சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
அன்று மாலை தாமாக இளைஞர் அணி தலைவர் நமச்சிவாயம் வரப் போவது உறுதி என புரிந்தது . அது முன்னமே நான் ஊகித்தது. அனைத்து கட்சி நண்பர்கள் கூடி மாலை நிகழ இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தின் பேசு பொருளை வடிவமைத்தோம். எனது ஊகத்தை யாரிடமும் பகிரவில்லை. எனக்கு தலைவர் சண்முகத்தை சந்திக்க வேண்டிய சூழல் உருவாவதை பார்க்க முடிந்தது. அவரை சந்திக்க அவரது இல்லம் சென்றேன். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மாறாத மெனு சாதம் ரசம் வேக வைத்த காய்கறிகள் பல வித வடிவங்கள் மற்றும் கலர்களை கொண்ட மலிவான வத்தல். வெய்யில் காலமென்றால் வெள்ளரி காய் துருவிப் போட்டு தயிர். அவர் சாம்பிடும் முறையே அலாதி. பிசைந்த ரசம் சாதம் உருண்டையாக எடுத்து அதன் மீது தொடுகறிகளை வைத்து எடுத்து குவிந்த வாயால் சாப்பிடவார். கதர் துணியில் தைத்த கை வைக்காத பனியன் “வி” வடிவ கழுத்து அதன் முனையில் இருந்து வலது நோக்கி கீழிறங்கு பனியனின் இருபக்க வெட்டுடன் சென்று முடியும். மார்ப்பற்கு சற்று கீழே ஒரு கை நிழையும் அளவை விட சற்று பெரிய உள் பை. முழங்கால் முட்டி அளவேயான உயரமான டீபாய் மேஜை. தொடை மீது கதர் துண்டு போட்டுக் கொண்டு ருசித்து சப்பிடும் போது மூக்கை உரிஞ்சுவதும் துடைப்பதுமாக இருப்பார். எதனூடாகவும் பேச்சு தடையுறுவதில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் பேசியவை குறித்து அவரது முடிவை சொல்லிவிடுவார்.
கை கழுவி வந்து அமர்ந்து சற்று யோசனைக்கு பிறகு “தாமாக விற்கு அழைப்பு அனுப்பினாயா”? என்ற பின் “ஏன்? வீண்வேலை தேவையற்ற சிக்கலை உருவாக்கும் தெரியாதா உனக்கு” என்றார். நான் அதற்கு பதில் சொல்லாமல் காலை உளவுத் துறையில் இருந்து உயர் அதிகாரி வந்திருந்ததும் அவரிடம் பேசியது குறித்தும் சொன்னேன் அந்த தகவல் அவருக்கு ஆர்வமளிக்கவில்லை. யார் வந்திருந்தது என்றார் பெயரைச் சொன்னேன். ஆழுளம் கணக்கிடுவதை அவர் முகம் சொன்னது. சற்று நேரத்திற்கு பிறகு தான் முதலில் சொன்ன அதே சொற்களை மீண்டும் சொன்னார். நான் அதற்கு பதில் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அவர் முன்பு சொன்னதற்கும் இப்போது சொன்னதற்கும் உள்ள வேறுபாட்டை நினைத்த போது முகத்தில் புண்ணகை எழுவதை தடுக்க முடியவில்லை. இனி மேலும் அங்கு அமர்ந்திருப்பது வீண். சட்டென ஆரம்பித்து சொன்னதையே சொல்லி வெறுப்பேற்றுவார் அல்லது புதிதாக எந்தெந்த கணக்கோ நினைவிற்கு வர “இப்ப சரியா வராது அடுத்து பார்க்கலாம்” என சொல்லக் கூடும். இன்று அவர் அப்படி சொன்னாலும் கேட்க நான் தயாரில்லை.
அன்று மாலை ஆலோசனை கூடுகை அனைத்து கட்சி இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள் பங்கு பெற்ற கூட்டம் என் வீட்டில் முழு அளவில் கூடியிருந்தது. யாருடைய பங்களிப்பு என்ன யார் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவுகளை தீர்மாணங்களாக பதிந்து கொண்டிருந்தோம். என் அலுவலக பணியாளர் வந்து தாமாக நமச்சிவாயம் வந்திருக்கிறார் என்றார். கூட்டம் பரபரப்பை அடைந்தது. நான் ஆர்வத்தை வெளிக் காட்டாமல் அமர்ந்திருந்தேன். நமச்சியவாயம் உள்நுழைந்து பரஸ்பரம் மரியாதை செய்து கொண்ட பிறகு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நண்பர்கள் அவரிடம் சொன்னார்கள். நான் அவர்களை வெருமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரவர் தங்கள் இடத்தைப் பற்றிய போலி அடையாளத்திற்காக முண்டியடித்தனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்து பல நண்பர்கள் விடைபெற்று சென்ற பிறகும் கம்யூனிஸ்ட் நண்பர் முருகன் மற்றும் நமச்சிவாயம் மட்டும் அமர்ந்திருந்தோம். நமச்சிவாயத்திற்கு மேலதிகமாக ஏதோ ஒன்று சொல்ல வேண்டி இருந்தது. “ஊர்வலம் நிறைவுறும் போது ஊர்வலத்தின் தீவிரத்தை உணர்த்த எதாவது ஒரு வகையில் அதை வெளிப்படுத்த வேண்டும்” என்றார். ஊர்வல இறுதியில் அனைத்து தலைவர்களும் உரையாற்ற இருப்பதை சொன்னேன் “ஊர்வலம் கூட்டமாக உருமாறிய பிறகு அது கூட்டம் மட்டுமே அதன் அடுத்த கட்டம் கலைந்து செல்வது நல்லது”. அவருக்கு வேறு எண்ணம் இருந்தது . இரவு நெடுநேரம் ஆனபடியால் நாளை காலை மீண்டும் சந்திப்பது என முடிவெடுத்து கலைந்தோம். எனக்கு காலை உளவுத்துறை அதிகாரி கோடுகாட்டியதற்கும் நமச்சிவாயம் சொல்ல வருவதற்கும் ஏதாவது தொடர்பிருக்க வேண்டும் என்கிற ஐயம் எழுந்தது .