https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 23 நவம்பர், 2019

அடையாளமாதல் - 490 *அதிகாரப் பரிமாற்றம் *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 490

பதிவு : 490 / 677 / தேதி 23 நவம்பர் 2019

*அதிகாரப் பரிமாற்றம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 05



விடுதலைக்கு பின்னர் நிகழ்ந்த புதுவை அரசியலில் அகில இந்திய காங்கிரஸ் தனது முதல் முரண் கணக்கைத் துவங்கியது . வெங்கடசுப்பா ரெட்டியார் முதல்வராக வந்திருக்க வேண்டிய வரலாற்றை மாற்றி அமைத்தது காமராஜரின் அரசியல் முடிவு . ஒவ்வொரு நிகழ்வும் ஒரு முடிவெடுத்தலின் துவக்கம் ஆனால் அது அந்த நிகழ்வின் முடிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை , பிறிதொரு சமயம் சரிசெய்யப்பட வேண்டிய ஒன்றாக அது இருக்குமானால் , அதை முயற்சிப்பவர்களின் பாதை தனியானது . சண்முகத்திற்கான பாதை அப்படித்தான் திறந்து கொண்டது

தலைவர் சண்முகத்தின்  அரசியலில் துவக்கத்தில்  இருந்து இறுதி காலம் வரை சரி செய்யப்பட வேண்டிய ஒன்று எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது  . அதைப்  போல ஒன்றை  முயற்சிப்பார்கள் அனைவரும் வெற்றிக்கு பின்னர்  என்றோ ஒருநாள் முற்றான வெறுமை என்கிற ஒரே இடத்தை சென்றடைகிறார்கள் .அது மீளா சுழற்சி  . முடிவிலி . உலகம் தோன்றியது முதல் இதுவே இயற்கையின் நியதியாக  உணரப்படுவது போலும்  .

காமராஜரின் பிறழ்வை நிகர் செய்வதுனூடாக தனக்கான அரசியல் இருப்பு ஒன்றை சண்முகம் உருவாக்கி கொண்டார் . தவறென நினைக்கும் ஒன்றை சரிசெய்தபடி இருப்பது அவரது அரசியலானது .நிகழ்ந்தவைகளை ஒழுங்கு செய்ய பிறிதொன்று எழுந்தேயாக வேண்டிய அவசியமில்லை . சில சமயம் அவை புதிய தவறுக்காக பாதையை உருவாக்கி கொடுக்கலாம் . காமராஜருக்கு நடந்தது அதுவே , சண்முகத்தற்கு அது சற்று பிந்தி நிகழ்ந்தது . அவர் சரிசெய்ய முயன்ற ஒன்று பிறழ்வாகி ஒருநாள் அதற்கு விலையாக தராசின் எதிர் தட்டில் தனது அரசியல் வாழ்வு மொத்தத்தையும்  வைக்க வேண்டி இருந்தது அந்த ஆடலின் உச்சம்.

முதுமையின் காரணமாக அரசியலில் இருந்து யாரும் ஓய்வு பெறுவதில்லை .அதுவரை நிகழ்த்திய ஏதாவதொன்றிற்கு தங்களை விலையாக கொடுத்தே அவர்களது அரசியல் அத்தியாயம் முடிவுறுகிறது . அவர்கள் நினைத்துக் கொள்ளும் தங்களின் நீண்ட அரசியல்  அனுபவம் என்கிற வகைமையால் பிற எதையும்  அவதானிக்க மறுக்கிற போது அவர்களது முடிவு துவங்கி விடுகிறது . ஆழ்ந்த அனுபவம் என்பதே கூட ஒருவித தடைதான் போலும் .அனுபவத்திலிருந்து கிடைக்கும் ஒருவித ஆணவம் புதிய எவற்றையும்  உள்நுழைய விடுவதில்லை .

புதுவையின் அரசியல் களத்தில்  காமராஜருக்கு முக்கிய பங்கை   மூன்று கட்டமாக பிரித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.ஒன்று:அரசியல் பிறழ்வு மற்றும் அதை சரி செய்தது. இரண்டு: அவற்றை திருத்தி அமைக்க முயன்ற சண்முகத்துடன் உடன்பட்ட அரசியல் சூழ்தலுக்கு ஒப்புக் கொடுத்தது . அது சண்முகத்தின் வளர்ச்சிக்கும் எதுவார் குபேரின் வீழ்ச்சிக்கும் காரணமானது . மூன்று காமராஜர் இந்திரகாந்தியுடன் முரண்பட்டு விலகி தனிக்கட்சி துவங்கிய காலத்தில் சண்முகத்துடனான உரையாடல்  , காமராஜரின்  அரசியல் வீழ்ச்சி அதிலிருந்து உருவான சண்முகத்திற்கான இடம் .

அம்மூன்றினாலும் காமராஜரிடமிருந்து சண்முகத்திற்கு கைமாறிய அரசியலே அவரை மெல்ல பலம் மிக்க அரசியல் தலைவராக வளர்ந்து வர வைத்தது .இந்த இடத்தில் இரண்டு கூறுகளில் எது அவரை உருவாக்கி இருக்கக் கூடும் என  நினைக்கிறேன் . அவை ஒன்றோடொன்று ஊடுபாவாக செல்பவை . ஒன்று காலம்” பிறிதொன்று ஆளுமை”

சண்முகம் தனது அரசியல் அனைத்திலும் முதன்மை பெற்றது அவர் தன்னை  கோஷ்டியில் அங்கமாக  ஒருபோதும் தொகுத்துக் கொள்ளாது . தன்னை தனித்தலைமையாக புரிந்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் அரசியலில் காமராஜருக்கு என்ன இடமோ அதுவே தனக்கும் என நினைத்திருக்கலாம்அது புதுவை பிற பிரிட்டீஷ் ஆண்ட பகுதியிரிருந்து வேறுவிதமானது .வெளியிருந்து அதை பிறர் இயக்குவதை அவரது ஆழ்மனம் ஏற்காதது முதன்மை காரணமாக இருந்திருக்க வேண்டும்ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்னை அப்படி பார்க்க தூண்டுகிறது .முதலவராக இருந்த பக்கிரசாமி பிள்ளை மறைவிற்கு பிறகு உருவான வெற்றிடத்திறகு குபேர் தேர்வானது சண்முகம் போன்றவர்களுக்கு சற்றும் ஏற்வில்லை .குபேருக்கு பிரதமரின் நல்லாசி இருந்தது அடிப்படைக்  காரணம் .

காரைகாலில் தனது அரசியலை துவங்கிய அவருக்கு புதுவை அறிமுகக்களம் . தில்லியும் ஆதரவாக இல்லை . மாநில அளவில் ஏதாவது முன்னெடுத்தால் மட்டுமே முதல்வர் மாற்றம் சாத்தியம் .ஆகவே பொறுத்திருக்க முடிவு செய்தார் . அதே சமயம் பிரன்ச் அரசாங்க பிரதிநிதி போல குபேர் அமர்ந்திருப்பது அரசியல் முரணாக அவருக்கு தோன்றியது . ஏன் குபேரை எதிர்க்க அஞ்சுகிறார்கள் என அவருக்கு புரிந்திருந்தாலும் , காலம் மாறியிருப்பது உணராத அரசியல்வாதிகளின் மீது வெறுப்புற்றார் .சந்தர்ப்பத்தை  எதிர்பார்த்து காத்திருந்தார். அதே நேரம் குபேரின் பிறழ்வுகளை அரசியல் ரீதியாக  எதிர்க்க துவங்கினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்