ஶ்ரீ:
மணிவிழா - 37
02.12.2022
* *
பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க செல்லும் முன்பு அவருடன் எந்த விவாதத்திற்குள்ளும் செல்லுவதில்லை என முடிவு செய்திருந்தேன். சந்திப்பு ஆயிரமாவது ஆண்டு விழா துவக்கம் பற்றி அவருக்கு நேரடியாக சொல்ல வேண்டும் . பிறிதொருவர் வழியாக அறிந்தால் அவருள் எழும் தன்மதிப்பு பற்றி சிக்கலை பின்னர் எவ்வகையிலும் சரி செய்ய இயலாது. சமாதான முயற்சிகள் மேலும் மேலும் சிக்கலானதாக உருவெடுக்கும். அடுத்தடுத்த செயல்பாடுகள் நீண்ட நேரத்தை கோருவதால் ஒருவர் பின் ஒருவராக சமாதானம் செய்வது வீண் வேலையாக முடியும். என்னால் புது சிக்கல்கள் உருவாக வேண்டாம் என இருந்தேன். நான் அவரிடம் விழா துவக்கம் பற்றி பேசவில்லை. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்திற்கான எனது முன்வரைவை அவருக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தேன். “திறந்த அரங்கம்” பற்றிய கருத்தியல் சொல்லத் துவங்கிய போது அவரில் இருந்து வேறொருவர் எழுந்து வந்தார். அவரின் வழக்கமான வன்மம் அதில் இல்லை என்பது வியப்புகுறியது. நான் நினைத்திருந்த மாற்றம் அவருள் நிகழாமல் இருக்கலாம். ஆனால் காலம் தனக்கான வேலையை எப்போதும் செய்து விடுகிறது. தனது முத்திரையாக வடகலையினர் உள் வருவதை எதிர்த்தார். இதில் வேடிக்கை அதைவிட அடர்த்தியான சிக்கல்கள் நிறைந்த “திறந்த அரங்கத்தின்” கருத்தியலை அவர் முழுயமையாக உள்வாங்கவில்லை. நான் எனது வைப்பு முறைப் பற்றி பேச வேண்டிய தேவை எழுந்ததை உணர்ந்தேன். அவரிடம் நேரடியாக விவாதிக்க முடிவு செய்தேன்.
“இரண்டிற்குமான பேதங்களை களைய முடியுமா அல்லது அதன் தத்துவார்தமான விஷயங்களை பேசி புரிய வைத்துவிட முடியுமா அதை யார் செய்கிறார்கள். யார் ஏற்கிறார்கள். யாருக்கு அது தேவை. ஆன்மீக உலகம் முழுவதும் எல்லா சம்பிரதாயங்களும் கலந்து திரண்டு பக்தி என்றான பிறகு, தத்துவ விவாதம் ஆர்வமுள்ள யாரோ ஓரிருவருக்குள் நிகழவேண்டியது. அதற்கும் பார்வையாளர்கள் யாருமில்லை. அதில் ஆர்வமோ புரிதலோ இல்லாமலாகி பல ஆண்டுகள் கடந்து விட்டது. நீங்கள் சொல்லும் அத்தனை விஷயமும் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறது. எஞ்சிய சிலர் அதை தங்களது அரசியல் அதிகாரத்தை பற்றிக் கொள்ள பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை எக்கலாத்திலும் யாரும் தீர்க்கப்போவதில்லை. அது தீர்க்கபட வேண்டும் என யாரும் எதிர் பார்க்கவுமில்லை. இந்த பிடிவாதம் எதை நோக்கியும் நகர்ந்து செல்லாத முட்டு சந்து. இதற்குள் அமர்ந்து கொண்டு பல நூற்றாண்டுகாளக தர்க்கித்துக் கொண்டிருப்பவர்களுடன் நான் ஏன் இணைய வேண்டும் என நினைக்கிறீர்கள்.நீங்கள் இதை தொடர்ந்து வலியுறுத்து கடைபிடித்து அடைந்த வெற்றி என்ன. உங்களை ஏற்பவர்கள் யார்?”.
“இன்றளவும் திருவஹீந்திபுரம் பெருமாள் கோவில் மணவாள மாமுனிகள் சர்ச்சைக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் எந்தளவில் உங்களுக்கு உதவியது. இத்தனைக்கும் வருடத்தில் பத்துநாள் பல லட்சம் நிதியில் உற்சவங்களை நடத்தும் முக்கியஸ்தர்களும் அங்குள்ள வடகலை பெருமாள் கோவிலை அனுசரித்தே அதை நிகழ்த்துகிறார்கள். நீங்கள் மீண்டும் ஒரு நூற்றாண்டிற்கு் பின்னோக்கி என்னை இழுத்துச் செல்ல முயல்கிறீர்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் இப்போதுள்ள துண்டுபட்ட நிலையும் முழுவதுமாக இல்லாமலாகப் போகிறது”. “ஶ்ரீபெரும்பூதூர் கோவில் நிர்வாகம் ராமாநுஜரை தரிசிக்க ராகு காலம் சிறந்தது என அங்கு அறிவித்திருப்பது பற்றி நீங்கள் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்” என்றேன்.விவாதித்து தனது கருத்துக்களை என் மீது திணிக்க முடியாது என அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
வேளுக்குடி ஸ்வாமி விழாக் குழுவின் துவக்கத்தில் பங்கு கொள்ள வருவது அவரால் ஏற்க முடியாததாக இருந்தாலும். அவரே விழாக்குழுவின் இன்றைய மைய விசை. இது எப்படி நிகழ்ந்தது என அவருக்கு ஆச்சர்யமளித்திருக்கலாம். அவர் மட்டுமின்றி விழாக்குழுவின் பிற அனைத்து நிர்வாகிகளுக்கும் அதே உணர்வு. விவாதம் எந்த முடிவும் இல்லாமல் நிறைவுற்றது. பெருமாள் ராமாநுஜம் தன் ஒத்துழைப்பை முழுவதுமாக தருவதாக கூற நான் அவரிடம் இருந்து விடை பெற்றேன். பெருமாள் ராமாநுஜம் வேளுக்குடி ஸ்வாமியைக் கொண்டு எனக்கு கடிவாளமிட முடியும் என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக