https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 16 டிசம்பர், 2022

அடையாளமாதல் * சில சமயம் சில நிகழ்வுகள் *

  ஶ்ரீ:பதிவு : 653  / 843 / தேதி 16 டிசம்பர்  2022* சில சமயம் சில நிகழ்வுகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 48 .

மேலிடப் பார்வையாளரை புதுவைக்கு அழைத்து வரும் பொறுப்பேற்றதால் அவர் புதுவையில் இருக்கும் வரை அவரை புரக்க வேண்டிய கட்டாயம் வந்தது. பொதுவாக அது போல புதுவைக்கு வருபவர்களை கட்சியின் மூத்த தலைவர்கள் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை அதை நான் செய்ய வேண்டும் என தலைவர் சொல்லிவிட்டார். அதற்கு பின்னால் உள்ள சிக்கல் முதலில் எனக்கு புரியவில்லை ஆனால் அனைத்து தரப்பில் இருந்து அவரை சந்திக்க வரும் குழுவினர் பலர் நாராயணசாமிக்கு வாய்ப்பு கேட்டு வந்திருப்பவர்கள் சண்முகத்தின் அறியப்பட்ட ஆதரவாளன் என நான் அங்கிருப்பதால் என்னை கண்டு திகைத்து பின்னர் பொதுவில் பேசி வெளியேறுவதை கவனித்தேன். நாராயணசாமிக்கு இந்த முறை மக்களவை தேர்தலில் வாய்பளிக்க வேண்டும் என தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லத் தயங்கினர். சண்முகம் இதை முன்பே அறிந்திருந்தார். அவரது ஆதரவாளர்களில் பலர் பல காரணங்களுக்காக சண்முகத்தை கசந்திருந்தனர் . நீண்ட காலம் ஓரிடத்தில் இருப்பதால் உருவாகும் உளச்சோர்வு. மாற்று வாய்ப்பிற்கு காத்திருந்தவர்கள் இப்போது யார் சார்பும் இல்லாத தனியாளுமையாக தன்னை அறிவித்துக் கொண்ட நாராயணசாமியை கொண்டாடினர். அவருக்கு பின்னால் சென்று நிற்க முண்டியடித்தனர். ஆனால் அதை வெளிபடையாக செய்ய சண்முகத்தை அஞ்சினர். இது ஒரு நிற்காத சுழற்சி அரசியலில் சில மேலமட்ட தலைவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டேயிருந்தாலும் அவர்கள் பாதைகளில் தடைகள் விழுவதில்லை. விழுந்தாலும் சில காலங்களில் அது நகர்ந்து விடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் கட்சி பொறுப்பில் மட்டும் அறியப்பட்ட சில இரண்டாம் கட்ட தலைவர்கள் சபிக்கப்பட்ட ஜென்மங்கள். இருந்த இடத்தில் கிடைக்கும் சொற்ப வசதியும் போய் சேர்ந்த இடத்தில் கிடைப்பதில்லை. அங்கும் சில காலம் கழித்து இதே போல வேறு ஒருவர் எழுந்து வந்தால் அங்கே இதே போல சென்று நிற்பார்கள். இது முடிவற்ற ஒன்று


கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் நாராயணசாமிக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை சொல்ல திட்டமிட்டு அனுப்பப்பட்டு வந்தவர்கள். கட்சி உயர்மட்டத்தில் இது போன்ற கருத்துக் கேட்பிற்கு என்ன இடம் என சண்முகத்திற்கு தெரியும். என்னை அவர் பக்கத்தில் அமர்த்தியது தற்செயலாக இருக்கலாம் அல்லது பார்வையாளர் என்னை தெரிவு செய்து சண்முகத்திடம் கேட்டிருக்கலாம். நான் அவரது அறையில் அவருக்கு அருகமர்ந்து தமிழில் பிறர் சொல்லும் அனைத்தையும் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆரம்ப நிலைக்களில் அவர்களுக்கு நான் தொந்தரவாக இருப்பதை அறியவில்லை. ஒரு இடைவேளைக்கு எழுந்து வெளிய வந்த போது அங்கு கூடியிருந்த பெருங் கூட்டம் எனக்கு முதலில் திகைப்பை கொடுத்தது. அவர்கள் அனைவரும் பார்வையாளரை சந்தித்தவர்கள் பின் ஏன் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள் என கேட்டுக் கொண்ட பிறகு அவர்கள் தங்கள் எண்ணங்களை உள்ளே முழுமையாக பதிவு செய்யவில்லை என நினைக்கிறார்கள் என்கிற உணர்வு முகத்தில் அறைவது போல இருந்தது. நான் அதிலிருந்து வெளியேற நினைத்தேன். ஆனால் இன்று ஒரு விஷயம் அனைவருக்கும் தெளிவாகி இருக்கும். சண்முகம் தலைவர் எனக்கு மட்டுமல்ல நாராயணசாமிக்கும் அவர்தான். அவரை கண்டெடுத்து இந்த இடத்திற்கு கொண்டு வந்தது அவர். இன்று தான் தனியான ஆளுமை யாருடைய கட்டுப்பாட்டிலும் தான் இல்லை என அவர் வெளிப்பட்டிருக்கிறார். இன்று கட்சியில் நாராயணசாமி சண்முகம் முரண் வெடித்திருக்கிறது. இப்போது நான் நடுநிலை எடுக்க முடியாது. நாராயணசாமி ஒரு தரப்பு என்றால் நான் மற்றொரு தரப்பு என நிற்கும் வாய்ப்பை இழக்க தயாரில்லை. நான் திரும்பவும் பார்வையாளர் அறைக்குள் தென்று அமர்ந்து கொண்டேன்


இம்முறை சண்முகத்திற்கு எதிராக பேச வருபவர்களை அடையாளம் காணத்துவங்கினேன் . உடல் மொழி மாறுபடுகிறபோது அது புதிய செய்திகளை எல்லோருக்கும் புரியவைத்து விடும். நான் திரும்ப உள்ளே வந்து அமர்ந்த பிறகு அருவியாய் உள்ளே வழிந்து கொண்டிருந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள் சட்டென குறையத் துவங்கினர். வெளியில் இருந்த உள்ளே வந்த எனது நண்பன் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் என்மீதி கடும் கோபம் கொண்டிருப்பதாக சொன்னான். அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. நான் அவனிடம் அவர்கள் நாராயணசாமிக்கு ஆதரவாக தங்களது கோணத்தை பார்வையாளருக்கு வலிநுத்த வேண்டும் என்றால் அதற்கு நான் தடையில்லை அதை செய்ய இயலாதது அவர்களது மனத்தடை . அவர்கள் என் இருப்பை நிராகரித்து தங்கள் கருத்தை சொல்லட்டும் அதில் என்ன அச்சம் அல்லது தயக்கம் . எல்லா தரப்பிற்கும் பொதுவாக தங்களை வைத்து கொள்ள விரும்புபவர்கள் இந்த விளயாட்டில் நுழைய வேண்டியதில்லை . தங்கள் யார் என்பதை இன்று வெளிப்படையாக அவர்கள் அறிவித்துக் கொள்ளட்டும் என்றேன்.


நாராயணசாமிக்கு ஆதரவாக பாண்டியன் தலைமையில் ஒரு குழு பேசிக் கொண்டருந்து போது சற்று நேரத்திற்கெல்லாம் நாராயணசாமி சட்டென உள்ளே நுழைந்தார். நான் இதை ஓரளவிற்கு ஊகித்திருந்தேன். இது போன்ற தடாலடிக்கு அவர் பிரபலமானவராக அறியப்பட்டவர். நான் எழுந்து வெளியே செல்லவில்லை. பலர் அங்கிருக்க நான் வெளியேற வேண்டிய தேவை எழவில்லை என நினைத்தேன் மேலும் நான் வெளியேறுவது அவரை அஞ்சி என எல்லோராலும் புரிந்து கொள்ளப்படும். அந்த செய்தி ஒரு இளிவரலாக அன்று முழுவதும் கட்சி அலுவலகத்தில் அலைபோல அடித்துக் கொண்டே இருக்கும். நான் எழுந்து அவருக்கு இடமளிக்காததை பார்த்து நாராயணசாமியின் ஆதரவாளர்கள் திகைப்பதை பார்க்க முடிந்தது. அங்கு யாரும் சண்முகத்திற்கு மாற்றாக பேசுவதை நான் நின்று எதிர்ப்பது  ஒரு போர் அறிவிப்பாக அவர்களுக்கும் பிற கட்சித் தலைவர்களிடம் சென்று சேர்ந்துவிடும். ஊசல் மனம் கொண்டவர்கள் தங்கள் இடத்தை மீண்டும் ஒருமுறை ஒப்புநோக்கத் துவங்கிவிடுவார்கள். பின் தாயம் சட்டென மாறிவிழத்துவங்கும்.


முந்தைய நாள் நாராயணசாமியை சென்னையில் சந்திக்காத து நல்லதாக போயிற்று. அவரை சந்தித்திருந்தால் இன்று அவரை எதிர் கொள்ள சிறு தயக்கம் உருவாகியிருக்கும். பாண்டியன் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு வெளியேற நாராயணசாமி தனிப்பட்ட முறையில் பேச விழைவது புரிந்து எழுந்து வெளியே வந்தேன். பாண்டியனுடன் வந்த அனைவரும் நாராயணசாமியை காத்து நின்று கொண்டிருந்தனர். பாண்டியன் என்னிடம் வந்து ஏதோ சொல்ல நினைத்து என்னை அனுகினான். முகத்தில் நட்பார்ந்த புண்ணகை. நானும் அவன் அருகணைந்தால் பேசும் மனநிலைநில் இருந்தேன். நாராயணசாமி அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தபோது அவன் சட்டென தன் உடல் மொழியை மாற்றிக் கொண்டான். நாராயணசாமி என் கையை பற்றி குலுக்கி விட்டு வெளியேறினார். நான் முகத்தில் எந்த வித்தியாசமும் காட்டாமல் அங்கு நின்று கொண்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்