https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 டிசம்பர், 2022

மணிவிழா - 42

 


ஶ்ரீ:


மணிவிழா - 42


28.12.2022





மரணம் என்பது முழு முதல் இறை நம்மீது கொண்டுள்ள கருணை என பல சமயங்களில் தோன்றும் இடங்களை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள். ஏன் இருக்கிறோம் என்கிற கேள்வியுடன் உலாவிக் கொண்டிருப்பவர்கள். அனைவரும் தொன்னூறு வயதை கடந்து இங்கு ஆற்ற ஒன்று மில்லாதவர்கள். அவர்களை குறித்து என் தந்தைஎமன் பட்டியலில் விடுபட்டு போனவர்கள்என வேடிக்கையாக சொல்லுவதுண்டு. இயற்கையின் முன் மனித முயற்சிகள் பலன் அற்றவை. வெற்றி தோல்விகளுக்கு பின்னால் நிஜமான காரணத்தை ஒரு வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு அவரவர் கொடுக்கும் காரணங்களும் அகண்ட காலத்தால் ஒரு உறவும் இல்லாதிருக்கலாம் ஆனால் செய்ய வேண்டியவை என நம் முன் வந்து ஒன்று நிற்கும் போது அதை செய்யாமல் கடந்து போவது என்னால் இயல்வதில்லை


ஆடிட்டர் கணேசன் ஒரு புலராத அதிகாலை கைநிறைய தாமரை மலர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார். புதுவை கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவராக இருந்த சுப்பையா அவர்களின் வீட்டிற்கு மிக அருகில் என் வீடு. அவரது வீட்டிற்கு வந்தவர், அரசாங்க பொறுப்பில் இருந்த வீடு அந்த வேளையில் திறக்கப்படாததால் அருகில் இருக்கும் என் நினைவு ஆடிட்டர் கணேசனுக்கு வந்திருக்க வேண்டும் . புதுவை கம்யூனிட் தலைவர் மன்மறைந்த சுப்பையா அவரின் மிக நெருங்கிய நண்பர். இருவருக்கும் இடையே அது ஒருவகை விந்தையான உறவு. இருவரும் நேர் எதிர் களத்தை சேர்ந்தவர்கள். அவரது தொழில் மிக பெரிய வெற்றியை அடைந்ததற்கு அது போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கலாம். அவருக்கு அரசு தொடங்கி பல முணைகளில் நண்பர்கள் இருந்தனர். அவர்களை இணைக்கும் சரடுகளை மிக சரியாக நிர்வகிக்க தெரிந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் அவரை ஒருவிதவிட்டேந்திமனநிலை கொண்டவராக அறிகிறேன். திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமாரின் அணுக்கர். அவரின் மறைவிற்கு பிறகு கிருஷ்ணபிரேமிக்கு நெருக்கமானார். காஞ்சி மடத்தில் அவரின் செல்வாக்கு அபரிதமானது. சிலருக்கு தொழில், குடும்பம் அல்லது மனம் சார்ந்த நெருக்கடிகள் உருவாகும் போது விடுவித்துக் கொள்ள தங்கள் தலையை கொண்டு வைக்க ஒரு இடமும் தேவையாகிறது . திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் சமாதியான பிறகு கிருஷ்ணபிரேமியிடம் நெருக்கமாக இருந்தாலும் என்ன காரணத்தினாலோ அவர் கிருஷ்ணபிரேமியுடன் ஒன்றி இருக்க இயலவில்லை. கிருஷ்ண பிரேமி ஒரு முணையில் அவரை போன்றவர். எதிலும் தன்னால் ஒட்டி இல்லாதபடி பார்த்துகொள்பவர்.  


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவில் அவர் இணைந்த போது அதன் கதவுகள் மிக விரிந்து திறந்து கொண்டது. அவரது ஆதரவு பல தளங்களில் செயல்படும் வல்லமையை விழாக் குழுவிற்கு வழங்கியதுஅதிகாலையில் எதிர்பாராத அந்த சந்திப்பு எனக்கு மிகுந்த திகைப்பை கொடுந்திருந்தாலும் கைகளில் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களுடன் அவரை பார்ப்பது மனதிற்கு மிக நிறைவாக இருந்ததுஉங்க வீட்டு ராமர் நினைவிற்கு வந்தார். அவருக்கு இருக்கட்டும் என தாமரையை கொண்டு வந்தேன். இன்று முழுவதும் இங்கிருந்து கொண்டு ராம நாம சொல்லுவதாக இருக்கிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையேஎன்றார். நாள் முழுக்க இங்கிருக்க போகிறாரா? என திகிலாக இருந்தது. வயதானவர்களின் கிறுக்கு கணிக்க முடியாதது. அவர்கள் செல்வாக்கும் உள்ளவர்களாக இருந்துவிட்டால் சிக்கல் பல மடங்கு. என்னிடம் எந்த பதிலையும் எதிர் நோக்காது ராமர் படத்திற்கு எதிரில் உள்ள மர மேடையில் அத்தனை பூக்களையும் வைத்து விட்டு உரத்த குரலில் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்தார். நான் குளித்து முடித்து எனது பூஜையை துவங்கினேன்


எனது வழக்கமான காலை பூஜை சுமார் இரண்டு மணி நேரம். பூஜை அறையில் பிரபந்தம் அல்லது கிருஷ்ணபிரேமி ஸ்வாமியின் பாகவத பராயணம் ஒலித்துக் கொண்டிருக்கும். அனைத்தையும் தாண்டி ஆடிட்டரின் ராம நாமம் கேட்டுக் கொண்டிருந்தது. முந்தய நாள் ஏகாதசி. நான் விரதம் இருப்பதில்லை. இருந்தாலும் தூவாதசி பாரணை உண்டு. பூஜை முடித்து காலை சாதம் வாழைப்பூ கூட்டுடன் மிக எளிமையான உணவு. பிராமனான அவர் இங்கு சாப்பிடுவாரா? என சந்தேகம். பின்னர் உணவருந்துவதும் மறுப்பதும் அவர் விருப்பம் என அவரை சாப்பிட அழைத்தேன். மிகுந்த மகிழ்வுடன் உணவருந்தினார். ரசித்து உணவருந்தியது மனதிற்கு நிறைவாக இருந்தது


சாப்பிட்டு முடிந்ததும் அவர் என்னிடம்இன்று நான் சந்யாசம் வாங்கிக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். உங்களிடம் சொல்லி செல்ல வந்தேன் என்றார். எனக்கு பேச்செழவில்லை. நான் எங்கு யாரிடம் என்கிற கேள்வியை கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை.அன்று முழுவதும் இங்கிருக்கப் போவதாக சொன்னவர். என்ன நினைத்துக் கொண்டார் என தெரியவில்லை. சட்டெனஎனக்கு விடை கொடுங்கள்என்று சொல்லி சென்றார். பிறகு ஆறு மாத காலம் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. நான் விழா குழு ஆரம்ப கட்ட வேலைகளில் அவரை மறந்து போனேன. ஒரு நாள் அறிமுகமில்லாத அலைபேசி அழைப்பு. எடுத்தேன். ஆடிட்டர் கணேசன். நலம் பற்றிய விசாரிப்பு. பின்னர் மெல்ல எங்கிருக்கிறீர்கள் என தயங்கி கேட்டதற்கு. திருபுவணையில் உள்ள அவரது தொழிற்சாலையில் இருப்பதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. பேரன் உடல் நலமில்லாததால் அந்த தொழிற்சாலை நிர்வாகத்தை பார்க்கும் படி ஆனது என்றார். துறவறம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...