ஶ்ரீ:
பதிவு : 677 / 866 / தேதி 29 ஏப்ரல் 2023
* எப்போதும் அப்படித்தான் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 75.
இந்திரா காந்தியின் இளைய புதல்வர் மறைந்த சஞ்சய் காந்தி இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்து போது அவர் மீது வைக்கப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கு குறைவில்லை மிகவும் முரண்பட்ட மனிதராக இன்று வரை பார்க்கப்படுகிறார் என்பதற்கு அப்பால் என் போன்ற இளைஞர்களுக்கு அன்று அவர் ஒரு ஆதர்சம். இந்திராகாந்தி அரசியலில் தனிமைப்பட்ட போது அதிலிருந்து மீள அரசியல் பாதை அமைத்து கொடுத்ததன் வழியாக இளைஞர் அமைப்பு அகில இந்திய கட்சி அரசியலுக்குளான நுழைவை உறுதி படுத்தியவர். அதற்கு இந்திரா காந்தியின் சொல் அவரிடம் இருந்தது. அதை ஒரு கட்சி விதி போல. இளைஞர் காஙகிரஸ் அமைப்பின் நிர்வாகிகள் அகில இந்திய மற்றும் மாநில கட்சி அமைப்பிற்குள் நிர்வாகிகளாக ஒருவர் பின் ஒருவராக சென்று அமர இயன்றது. அது ஒரு நுழைவு அனுமதி சீட்டு போல. அவர் மறைவிற்கு பிறகும் காங்கிரஸ் கட்சி அரசியலுக்கு வந்த எந்த பின்புலமும் இல்லாத என்னை போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று வரையில் கூட கட்சி ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிற வழியை உருவாக்கியவர். என்றோ ஒருநாள் கட்சி அரசியலின் பதவிகளை அடைய முடியும் என்கிற நம்பிக்கையை அது உருவாக்கி இருந்தது. இளைஞர் காங்கிரஸில் நிகழும் அரசியல் கற்றல் கட்சியை நிர்வாக ரீதியிலான புரிதல் திரள் நிர்வாகம் ஆகியவற்றை வரலாற்றில் வைத்து அணுகும் வழியை பெற்றுத் தரும். அந்த அனுபவம் அகில இந்திய மற்றும் மாநில கட்சி அமைப்புகளில் புதிய இடத்தை உருவாக்கும் . இன்று அந்த தலைமுறை வழக்கொழிந்துவிட்டது. காங்கிரசின் இன்றைய இழி நிலைக்கு அதுவும் ஒரு காரணம்.
அவசரநிலை காலகட்டத்திற்கு பிறகு இந்திரா காந்தி எதிர் கொண்ட அரசியல் பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர இளைஞர் காங்கிரஸின் போராட்டங்கள் அவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. நான் இங்கு அவரசர நிலை சட்டத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை. என்னைப் போன்றவர்கள் உள்நுழையும் போது அவை காலத்தில் எங்கோ பின்னால் இருந்தது. இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு ராஜீவ் காந்தி பொறுப்பிற்கு வரும் போது எங்கள் அரசியல் நுழைவு நிகழ்ந்தது.அன்றைய அரசியல் சரிநிலைகளை கடந்து இளைஞர் காங்கிரஸ் என்கிற கட்சி அமைப்பு ரீதியில் என்னை போன்ற எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்கள் சஞ்சய் காந்தியை வேறுவிதமாக வரையறை செய்து கொள்ள முயன்றோம் . காரணம் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பில் இளைஞர்களுக்கான இடம் உருவாகி வர அவர் பதவிக்காலம் முக்கிய இடம் வகித்தது. இளைஞர் காங்கிரஸின் முக்கியத்துவம் கட்சி மேலிடம் தெளிவாக உணர வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அதற்கு பின்னால் எதிர்மறை அரசியல் இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முயன்றோம்.
சஞ்சய் காந்திக்கு பிறகு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்து NT. திவாரி,PR. தாஸ்முன்ஷி, அம்பிகா சோனி, ராமசந்திர ராத், குலாம்நபி ஆசாத், தாரிக் அன்வர் பின்னர் ஆனந்த சர்மா,குருதாஸ் காமத், முகுல் வாஸ்னிக், ரமேஷ் சென்னித்தலா, மணிந்தர்ஜித் சிங் பிட்டா காலத்திற்கு பிறகு ராஜீவ் காந்தியின் மரணம் பிரதமர் நரசிம்மராவிற்கு எதிரான உள்கட்சி அரசியலில் அவருக்கு பெரும் ஆதரவளி்த்த மணிந்தர்ஜித் சிங் பிட்டா ஓரங்கட்டபட்ட பிறகு இன்றைய நிலை நோக்கிய தொய்வு உருவாக ஆரப்பித்தது பின்னர் அதுவே அதன் வீழ்ச்சிக்கு காரணமானது. ஜிதின் பிரசாதா, மணீஷ்திவாரி,ரன்தீப் சிங் சுர்ஜிவாலா என பெரும் நிரை அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. தங்கள் பதவி காலத்தில் ஒரு சிலரால் மட்டுமே கட்சி ரீதியில் அகில இந்திய துணை அமைப்புகளை ஒருங்கிணக்கவும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தங்களை ஆளுமைகளாக முன்வைக்க முடிந்தது.
புதுவை காங்கிரஸ் தலைவர் சண்முகம் தனது நிலைபாடுகளால் புதுவையில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதாலும் அவசர நிலை காலத்திற்கு பிறகு அடைந்த வீழ்ச்சி பல காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தியை விட்டு விலக அவர் அரசியலில் தனிமை படுத்தப்பட்டதுடன் சிறை செல்லவும் நேர்ந்தது. இந்திராகாந்தியின் தேர்தல் தோல்வி ஏற்படுத்திய வீழ்ச்சியும் தனி அறுதிப் பெரும்பான்மையுடன் மக்களின் அதீத ஆதரவுடன் ஆரவாரமாக வந்தமர்ந்த ஜனதாவின் அரசு போன்ற அரசியல் நிகழ்வுகள் காங்கிரஸின் அரசியல் முடிவிற்கு வந்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காங்கிரஸின் மீள இயலாத தோல்வியாக அனைவராலும் கணிக்கப்பட்டது. இந்திரா காந்தியின் வீழ்ச்சி சண்முகம் போன்றவர்களை பாதிக்கவில்லை. அவருடன் இருந்த மிக சில தலைவர்களுள் சண்முகமும் ஒருவர். சமயம் வாய்க்கும் போதெல்லாம் இந்திரா காந்தியை சிறையில் சென்று சந்தித்து வந்தார். இது சண்முகத்திற்கு இந்திரா காந்தியிடம் ஒரு இடத்தை உருவாக்கி தந்தது. அந்த சந்தர்ப்பத்தை தனது அரசியலுக்கு பயன்படுத்தி தன்னை பலப்படுத்திக் கொண்டார். அதை ஒருவித தீவிர விஸ்வாசம் போல வைத்துக் கொண்டார். இந்திரா மீண்டு வந்த போது தனக்கான தனி இடம் உருவாகி வந்ததை மிக திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.
புதுவை ஒரு மிக சிறிய மாநிலமாக இருந்ததாலும் அதன் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொண்டதாக இருந்ததாலும் அது எப்போதும் தமிழகத்தை வைத்தே புரிந்து கொள்ளப்பட்டது. இரண்டிற்கும் பொதுவாக பல அம்சங்கள் இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல என்கிற சண்முகத்தின் நிலைப்பாட்டிற்கு தில்லியின் ஆதரவிருந்தது. புதுவையை தங்களுடன் இணைந்த பகுதியாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர் அல்லது புதுவையை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. தமிழக தலைவர்களால் நிர்பந்தந்தத்திற்கு உள்ளாவதை தவிற்து தன்னை அவர்களுக்கு
கட்டுப்படாதவராக வளர்த்தெடுத்திருந்தார்.
தமிழக அரசியல் சிக்கல்கள் குறித்து அகில இந்திய தலைமை சண்முகத்திடம் மாற்றுக் கருத்திற்காக தொடர்ந்து அணுகிக் கொண்டிருந்தது இருந்தது. தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் இடத்தை நோக்கி அதனால் நகர முடியவில்லை. கூட்டணி கட்சிகளை சார்ந்து தனது நிலைப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டிய நிலை தமிழக கங்கிரஸ் தலைவர்களுக்கு உருவானது. தில்லி அகில இந்திய தலைமைக்கு பாரளுமன்றத்திற்கான தனது தமிழக பங்கை வென்றெடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதை நிலைப்படுத்திக் கொள்ள தேவையான தரவுகளை அது சண்முகத்திடம் கொடுத்திருந்தது சண்முகமும் தமிழக அரசியல் மற்றும் தமிழக காங்கிரஸ் அரசியல் சூழல் மற்றும் அதன் தலைவர்களின் போக்கு குறித்த தனது “நிழல்” அறிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார் அல்லது அவர் அப்படி கொடுப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர். அரசியலின் அடிப்படை ஊகமும் தகவல்களும்.
இது தமிழக தலைவர்களுக்கு எரிச்சலை கொடுத்ததுடன் சண்முகத்தை அஞ்சினர் . அவரை கட்டுப்படுத்த நினைத்த போதுதான் கண்ணன் எழுந்து வந்தார். அவர்கள் கண்ணனை தங்கள் அரசியலுக்கு உபயோகப் படுத்தினர். அதிலிருந்து தனக்கான அரசியலை கண்ணன் கண்டடைந்ததால் சண்முகத்திடம் எதற்கும் பணியாத தலையராக தன்னை உருவாக்கி கொண்டார். அரசியலில் தீவிர நிலைப்பாடுகள் களத்தில் குறுகிய கால பலனை கொடுத்தாலும் நீண்ட கால நோக்கில் அது எதிர்மறை பலனையே கொடுக்கும் என்பதை நடைமுறை அரசியலில் இருந்து கண்ணன் கவனிக்க தவறினார். உணர்சிகரமான தலைமையாக தன்னை இளைஞர் காங்கிரஸில் நிலை கொண்டது போல அதிலிருந்து விலகிய பின்னரும் அவர் தனது அதிரடி அரசியல் பாணியை மாற்றிக் கொள்ளவில்லை .