https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 464. * வாய்ப்பும் விலகளும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 464

பதிவு : 464 / 649 / தேதி 27 செப்டம்பர் 2019

* வாய்ப்பும் விலகளும் * 


எழுச்சியின் விலை ” - 66
முரண்களின் தொகை -03 .






தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது. பெருங்கடலைக் காணும்போது ஆறு தோன்றிய இடமெதுவென அறிந்துகொள்கிறார்கள்.”  என்கிறது வெண்முரசின் வண்ணக்கடல் . விதிர்கச் செய்யும் கூற்று இது . கேள்வி என்பதே பொங்கி நிறைத்து வெளிவர நிற்கும் பதில்களின் நுழைவாயில் . குருதி மணம் கொண்ட விலங்கு போல தேடிக் கிளம்பும் ஒன்றின் தேடலின் இறுதிக கணம் அதன் துவக்க நிலையை வந்தடையும் ஒரு முழுமைச் சுற்று . அது உள்ளிருக்கும் ஒன்றின் தன்னை வந்தடையும் வட்டப்பாதை . அதனால் தானோ தேடல் நிலைகுலைவை கொண்டுவருகிறது போலும்

இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு பின் மீட்பில்லை.” என்கிறது வெண்முரசின் வண்ணக்கடல் நூல்.

என் ஆழுள்ளத்தில் திரளும் கருத்தின் உள்ளே ஒரு சிறு துளியாக அதற்கான விடையும் இருந்திருக்க வேண்டும் . அதன் திரண்ட கருத்திற்காக காத்திருப்பது ஒன்றே என்னால் இயன்றதாக அப்போது இருந்ததிருப்பதை இன்று நினைவுறுகிறேன் . அவற்றை பெருமளவில் திரட்டி எடுத்துக் கொள்ள முயன்றது வெண்முரசு வாசிப்பு துவங்கிய பிறகு . அவற்றினுள்ளே இருந்து கிளம்பிய கருத்துக்கள் என்னுள் ஆர்பரித்துக் கொண்டிருந்த போது அதன் அத்தனை அலகுகளையும் தனித்தனியாக உற்று நோக்கி அறிந்து கொள்ளவும் அது பற்றி  விவாதிக்கவும் விரும்பினேன் . சில சந்திப்பிலேயே  ஜெயமோகனை  மனம் மிக அனுக்கமாக உணர்ந்தது. முதல் சந்திப்பிலேயே எனது தேவை குறித்து பேசி அவரது ஒப்புதல் பெற்றது பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருந்தது . எழுத்தாளர்  ஜெயமோகனுக்கு தினம் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்கிற உத்வேகம் எழுந்ததும் எழுத துவங்கி விட்டேன் . அவற்றை எழுதி தொகுக்காமல் எனக்கு மீட்பில்லை என்றிருந்த காலம் 

எழுதியதை மீளவும் வாசித்த போது எனக்குள் முயங்கிக் கொண்டிருந்தவற்றை முற்றாக எழுத்தில் தொகுக்கும்  இயலாமையை புரிந்ததும்  அவற்றை அவருக்கு அனுப்ப தயக்கம் கொண்டு , பின்னர் நண்பர் கடலூர் சீனுவிற்கு தலைப்பிட்டு நிறைய எழுதி முடித்ததும் , அதை சீனுவிற்கு அனுப்பவும் தயக்கம் சூழ்ந்து கொண்டது

கடலூர் சீனு வேறொரு உலகில் வாழ்பவர். ஒருகால் அவரை என் கடிதங்கள் இம்சிக்கலாம் . மேலும் அவர் இயல்பில் விட்டேந்தி , யாரையும் பொறுப்பதும், கருதிப்பார்கவும் இயலாதவர் . தோன்றியதை முகம் கருதி மாற்றிச் சொல்லும் எண்ணமில்லதவராகவும், பல சமயம் அவர்  விடுக்கும் கூரிய சொற்களையும் , கருத்துக்களின் கூர் தொட்டு பலர் தெரிப்பதை அறிந்திருக்கிறேன் . எனக்கும் அவருக்குமானது நல்ல ஆழமான நட்பாக வளர்ந்திருந்தாலும் அவரது விமர்சனத்ததால்  நான் காயமடையக்கூடும் . அந்த எண்ணம் தோன்றியதும் அதன் இறுதி தீர்வாக என்முன் எழுந்தது , எனதுவலைபூதளம்” . வெகுநாட்களுக்கு முன்பாக துவங்கி பிறகு கைவிடப்பட்டிருந்தது . அதையே தொடரும் எண்ணம் தோன்றியதும் அனைத்தையும் அவற்றில் கோர்க்கத்துவங்கினேன். வலைபூதலத்தின் பதிவுகள் விரிந்தன . நான் எனக்குள் உரையாடத் துவங்கினேன் .

வெண்முரசின் உளவியல் கருத்துக்கள் என்னை திகைக்க செய்திருந்தன . அவைகளின் வேறு பரிமாணங்களை ஆழ்மனதில் உணர்ந்திருக்க வேண்டும், குறிப்பாக பொது சமூகத்தின் எண்ணம் . வெண்முரசின் கணத்த சொற்களின் பலு தாங்காத போது சற்று எளிய நூல் வாசிக்க முயன்ற சமயத்தில்  ஜெயமோகனின்இன்றைய காந்திகிடைத்தது . அது ஒரு கீதா முகூர்த்தம் . வெண்முரசின் சிடுக்கான உளவியல் கூறுகளை திறக்கும் சாவியை நான் இன்றைய காந்தியில் கண்டடைந்தேன் . எனக்குள் சொற்கள் திரளத் துவங்கின

அதுவரை பொதுவான தனித்தனி  பதிவுகளை எழுதிக் கொண்டிருந்த எனக்கு என்னுள் நிகழும்  தொடர் சிந்தனைக்கு அறுபடாத நீண்ட பதிவு தேவையாகியது . வெண்முரசின் கருத்துக்களை தொகுத்துக் கொள்ள எனது அரசியல் அனுபவம் சிறந்ததாக இருக்கும் என தோன்றியது . இன்றைய காந்தியில் அடைந்த அனுபவம் , மற்றும் வெண்முரசின் தத்துவ கோட்பாடுகளை நான் இன்றைய காந்தி என்கிற பணையில் வைத்து உடைக்க துவங்கினேன் . அது எனக்கு எனது எழுத்தை , தமிழை எனக்கு  வடிவமைத்து கொடுத்தது

எனது வலைதளத்தில் இடம்பெறும் அத்துனை அரசியல் நிகழ்வுகளும் எனது ஈடுபாட்டை சொல்லவந்ததல்ல . அவற்றை நினைவில் இருந்து மீட்பதின் வழியாக என் தேடலுக்குகான பாதையை கண்டடைய முயல்கிறேன் . அதன் பலத்திருப்பங்களில் நான் உடைத்தவற்றிற்கான தேவையுள்ள  வெற்றிடங்களை  காணுகிறேன் . அவை எனக்கு வாழ்வின் புதிய அர்த்தங்களை கொடுப்பதாக இருந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்