ஶ்ரீ:
பதிவு : 602 / தேதி 31 ஜனவரி 2019
* இருமை பாதைகள் *
அஞ்சலி -3
அனுக்க நண்பனின் திடீர் மரணம் , முதலில் ஒரு திடுக்கிடல் போல நிகழ்ந்த பிறகு , என்னை திரட்டிக்கொள்ளும் யுக்தியாக உள்ளார்ந்து நோக்குவதை விலக்கி , அதன் எதார்த்தத்தை மட்டும் உள்வாங்கும் மனநிலையை உருவாக்கிக்கொண்டேன் . பாதிப்படையும் விஷயங்களை சில நாட்கள் கழித்து எனக்குள் நிகழ்வதை அவதானிப்பது எனது வழமைகளில் ஒன்று .
நம்பிராஜன் , பிற எவரையும் விட எனக்கு மிக அணுக்கமாக இருந்தவன் . எனக்கான மெய்மையின் பொருட்டு நான் சமூக ஒழுக்கிலிருந்து மிகவும் அந்நியப்பட்டு விலகல் மனப்பான்மையுடன் இருந்த காலத்திலும் , ஒரே நண்பனாக என்னுடன் எப்போதும் இருந்ததை நினைத்துப்பார்க்கிறேன் . அவனது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பரபரப்பானது . சமூகத்தின் பல பிரிவினருடன் அவன் பேணிய தொடர்புகள் மிகவிரிவானவை. அதனால் ஆவது என்ன? என நான் பலமுறை அவனிடம் கேட்டதுண்டு . சமூக இயல்பின் எதார்த்தத்தை எப்போதும் புரிந்து கொள்ள முயல்வது எனது பாதையாக இருந்தது. அது என்னை எதன் மேலும் கசப்படைவதை தவிரத்துக் கொடுத்தது.
சமூகம் தங்களை முட்டாள்களாக , எமாளிகளாக நினைத்துக் கொள்கிறது . உண்மையில் அது ஒரு பாவனை மட்டுமே . அது யாரிடமும் ஏமாற்றமுறுவதில்லை . அவர்களை வழிநடத்தும் அனைத்து விதமான தலைமைகளும் அவர்கள் மத்தியில் இருந்து உருவாகி வந்தவர்கள் என்பதால் இரு தரப்பும் ஒன்றை ஒன்று நன்கு புரிந்து கொண்டே செயல்படுவதை பார்த்திருக்கிறேன் .
சமூகம் தனது கருத்தாக்கத்தை தன்னிடமிருந்து பெறுகிறது. கருத்தாக்கம் , தேவையை உத்தேசித்து எழுவது . எனவே எதையும் தனது தேவையை எதிர்நோக்கியே தொடங்கும் . யாரையும் ஒரு மனக்கணக்கோடு மட்டுமே அனுகும் . எப்போதும் மிகையாக அல்லது சிறுமையாக எவரையும் கணக்கிடும். மிகையில் தனது அதீத எதிர்பார்ப்பையும். அது தவிர்த்த பிறரை உதாசீனமாக நடத்தும் . துரதிஷ்டவசமாக அது அனுகும் அனைவரும் இந்த இரண்டின் இடைப்பட்டவர்கள் என்பதால் அதற்கு ஏமாற்றம் தவிர வேறு வழிகள் இருப்பதில்லை.
நம்பிராஜன், சமுக எதர்த்தம் தெரிந்திருந்தும் , அதனோடு சுமூகமாக பழகும் சாமரத்தியமுள்ளவன் வெளித்தோற்றத்தால் அனைவரையும் கடந்து செல்லும் ஆளுமையாக , சிரிப்பும் , கூரிய சொற்களும் நிறைந்தவன் . ஆனால் உண்மையில் மன அளவில் பலஹீனனாகவே நான் அவனை கண்டிருக்கிறேன். அவனை மிக அனுக்கமாக அறிந்த எவரும் இதில் என்னுடன் முரண்பட முடியாது. ஆன்மீக நம்பிக்கையும், வாழ்வியல் ஒழுக்கமும் கொண்டவனாக அவனை எப்போதும் அறிந்திருந்தேன் .
இளமைக்காலத்தில் தீ போன்ற கூரிய சொற்களால் அனைவரையும் தெறிக்க விடுவதில் சமர்த்தன். பிற்காலத்தில் அதன் வீர்யம் குறைந்து போனது. யாரையும் வைத்துப் பார்ப்பதில்லை . என்ன காரணமாகவோ அவற்றை என்னிடம் பயன்படுத்தியதில்லை . அதிலுள்ள கணக்குகள் அவனுக்கு மட்டுமே புரிந்தவை . நான் அரசியலில் ஈடுபட எண்ணிய காலத்தில் அதுபற்றி அவனிடம்தான் முதலில் பகிர்ந்து கொண்டேன் . என்ன காரணத்தினாலோ , அதிலிருந்து நான் விலக வேண்டும் என்றே கூறிவந்தான் . இது பற்றி எனது ஆரம்பகால பதிவுகளில் விரிவாக எழுதி இருக்கிறேன்.
அவன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணனுக்கு மிக அனுக்கமானவன் . ஒருவகையில் கண்ணனின் இளமை காலம் அவனது வீட்டின் ஆதரவினால் நிகழ்ந்தது . நம்பிராஜின் தமையன் இன்பசேகரன் கண்ணனுக்கு அனுக்கத் தோழன் . அவரை வைத்தே அனைவரும் கண்ணனுக்கு அனுக்கமானவர்களாக ஆனார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் கண்ணனிடமிருந்து விலகிப் போன பிறகும் , நம்பிராஜின் கண்ணன் தொடர்பு தொடர்ந்து நல்ல நிலையில் இருந்தது என்றே நினைக்கிறேன்.
கண்ணனின் ஆரம்ப கால அரசியல் நம்பிராஜன் வாழ்ந்த “கல்வே பங்களா” என்கிற குறியீட்டை சார்ந்தே இருந்தது.நம்பியின் தகப்பனார் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து காங்கிரஸின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் . அக்கால காங்கிரஸில் “காலனா உறுப்பினர்” என்பது மிகுந்த மரியாதைக்கு உரியதாக இருந்த காலம். காமராஜருடன் மிகுந்த நெருக்கம்முள்ளவரான நம்பியின் தகப்பனார் திரு. ராஜாபாதர் , காமரஜருக்கு தேர்தல் நிதியை விழா நிகழ்த்தி கொடுத்ததுண்டு.
புதுவை அரசியலில் நம்பியின் வீடான “கல்வே பங்களா” முக்கிய பங்கு வகித்தது . சிக்கலான குடும்ப உறுப்பினர்கள் என ஐம்பது பேருக்கு மேலாக அவன் தனது உறவுகளைப் பற்றி என்னிடம் சொன்னதுண்டு ஆனால் அது இன்றுவரையில் புரிந்ததில்லை. புதுவையின் காங்கிரஸ் அரசியலில் கல்வே பங்களாவின் பங்கு பெரியது. புதுவையின் பல தலைவர்களை உருவாக்கிக் கொடுத்தது அந்த இடம். அரசியலின் இருண்ட பக்கங்களை நம்பி தனது வாழ்வில் அறிந்திருந்தால் எனது அரசியல் நுழைவு அவனால் விமர்சிக்கப் பட்டது ஒன்றும் ஆச்சர்யமில்லை.