இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
ஞாயிறு, 29 ஜூன், 2025
சனி, 28 ஜூன், 2025
“வெய்யோன்” பகுதி 6 பேசு பொருள் “விழிநீரனல்” என் உரையாடலின் எழுத்து வடிவம்.
வெண்முரசு கூடுகை. 83 . வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல் “வெய்யோன்” பகுதி 6 பேசு பொருள் “விழிநீரனல்” என் உரையாடலின் எழுத்து வடிவம்.
எளியோரின் கண்ணீரால் உருவாகும் வஞ்சம் என்கிற சாமான்ய இதற்கு அர்த்தம் பொருந்தாது என நினைக்கிறேன்.மகாபாரத விடுபடல் மற்றும் உள்ளடுக்குகளை Sub text வழியாக முன்வைக்கவே வெண்முரசு எப்போதும் முயல்கிறது. இந்தப் பகுதி முழுவதும் கர்ணனின் உளவியல் பற்றியது. மிக நுட்பமாக Sub text வழியாக சொல்லிச் செல்கிறது.
Sub text என நான் புரிந்து கொள்வது சிக்கலான அரசியல் ரீதியில் கர்ணனின் இடம் , நட்பென வரும் போது மட்டுமே அது விரிகிறது. துரியனுக்கு முத்தவனாக தார்தராஷ்டன் வரை உள்ள அவனுக்கான அங்கீகாரம். சகுனி கர்ணனுக்கு தரும் இடம். அனைத்திற்கும் வெளியே கர்ணன் தன்னை வைத்துள்ள இடம். அத்தனை இடத்திலும் ஊடுபாவாக சொல்லப்படாத ஒரு சொல் கர்ணனை செலுத்துகிறது அல்லது தடுக்கிறது . அது என்ன என்று கேட்டுக் கொண்டால் விலகும் திரை
நாக அன்னை அவனது மறைந்துபோன உண்மை மற்றும் வஞ்சக நிழல்களை வெளிக்கொண்டு வருகிறார்.விழி அதை மறக்கும் கண்ணீர் அதனால் அனையாத அனல். மனம் இயங்கு முறை அதன் விசை மனித எல்லையை கடந்தது. அதை சார்ந்த நுட்பமான உளவியல் பற்றியது இந்தப் பகுதி.தாயால் கைவிடப்பட்டவன் என்கிற ஒன்றை கடந்து தன்னை தொகுத்து கொள்ள இயலாமை என்கிற மிக எளிய உளச்சிக்கலில் கர்ணன் இருகின்றான என கேட்டுக் கொண்டால் அதற்கு ஆம் இல்லை என இரண்டும் பொருந்தி வரும் . மகாபாரதத்தில் தாயாலும் தந்தையாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் வரிசை மிகப் பெரியது. அவர்கள் அனைவரும் முக்கிய ஆளுமைகள் .வியாசர் , துரோனர் ,அம்பை சத்தியவதி ,மானசாதேவி பராசரர் யயாதியின் மகன்கள் (புரு தவிர) கண்ணனே கூட ஒருவகையில் கைவிடப்பட்டவனே .ஆனால் அவர்கள் யாரும் நிலையழியாமல் வென்று முன் செல்கிறார்கள் செல்கின்றனர்.
கர்ணனின் வன்மம் அல்லது உளவஞ்சம் அது என்பதால் அதை சார்ந்து அலைக்கழிப்பு என்பது என்ன? அதிலிருந்து வெளி வர அவன் முயல்வது அவனது ஆழ்மனதிற்கு எதிரானது. ஒரு வகையில் மூர்க்கமானதும் கூட. காரணம் கர்ணன் எப்போதும் பிறரின் ஆட்டக் காய்,தன்னளவில் முழு திறன் இருந்தாலும் அது சமயத்தில் உபயோகமற்றுப் போகும் என்கிற தீயூழ் பெரும் பலவீனம்.அவனது குரு கர்ணனின் குலத்தை கேட்டு வலியுறுத்துவது கூட இந்த உளச் சிக்கலில் இருந்து அவனை மீட்டு வெளிக் கொண்டு வர ஆனால் அவன் வர மறுக்கிறான் . குருவின் சாபம் பெருவது இங்கு . உலகில் ஒருவர் கடக்க இயலாதது மனம் மற்றும் அதன் இயங்கு விசைக்கு ஆதாரமான விதை. சில வகை விதைகள் முளைப்பதை தாமதப்படுத்தி தனது கருக்கொண்ட மாபெரும் விருட்சத்திற்கு ஏற்ப வேர்களை ஆழத்தில் செலுத்துகிறது. அது போல் கர்ணனின் வஞ்சம் அவனிறியாத ஆழம் கொண்டது. “ரீங்காரமென்பது சொல்லென ஆகாத ஒலி”என்பது கர்ணனின் ஆழுள்ளத்தில் இருக்கும் அவனறியாத அல்லது அறிந்து கொள்ள விரும்பாத வெளிவர வாய்ப்பிருந்தும் ஏற்க மறுத்த வஞ்சம்.
முதல் பகுதியில் துரியன் அன்றில் வாழும் மிக எளிய, விரிந்து உள்ளம் கொண்டவனாக தன்னை முன்னிறுத்தும் இடம். உணர்வு பெருக்கின் அடிப்படையில் செயல்படுபவன். இந்தப் பகுதியில் வாரி கொடுப்பவனாக தன்னை முன்னிறித்தி அடைய நினைக்கும் பெருமை எளிய மனதை ஆனால் அதை தீவிரமாக செய்பவனாக காட்டப்படுகிறான். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நவீன யுகம் நோக்கி நகரும் கட்டுமானத்தை பார்த்து திகைப்படைகிறான். பரிசு பொருள்களின் நிரை அவனை சீண்டுகிறது. அவனின் மன வரிவு உடையும் போது அவமானகரமாக தோன்றி அதன் மறு எல்லையான சீற்றம் காழ்ப்பு போன்ற உணர்வுநிலையை அடைகிறான்.
தன்நிலை மறந்து, துரியோதனன் கொண்டு செல்லும் பரிசு் பொருட்கள் மற்றும் தேவயாணியின் கிரீடம் போன்றவை கர்ணனின் மனதில் இனம் புரியாத கசப்பை உருவாக்குகிறது. தேவையாணியின் கிரீடத்தை கர்ணன் அவையில் எழுந்து அறிவித்து அளிக்க வேண்டும் என துரியன் சொல்லும் போது சீண்டப்படுகிறான் . வழக்கம்போல் தான் சொல்ல நினைத்ததை சொல்லாமல் விடுகிறான். எதன் பொருட்டு என வகுத்துக் கொள்ள இயலாமல் அடையும் நிலையழிதலை இரண்டாம் பகுதியில் காட்டப்படுகிறது. ஒளிரும் கவசத்திற்கு பின்னால் கல்லென கணத்து கிடக்கிறது அவனது மனம்.
நாக அன்னை கர்ணனுக்கு புரிய வைக்க முயலும் இடம் அதை அவனது வஞ்சனையாக எடுத்து வைக்கப் படுகிறது . நாக அன்னை தன் வஞ்சனையை புறந்தள்ளி அவனை தங்களில் ஒருவனாக கருதி அவனுக்கு உகந்த ஒன்றை சொல்ல விழையும் போதும் வெறும் விழிமயக்கு என அதை கர்ணன் நிராகரிப்பது அவனது ஆழுள்ளம் அவனை மீறிய வஞ்சத்தை வெளிப்படுத்துகிறது. அவனுள் கிடக்கும் அந்த விதையின் பிரமாண்டத்தை அவன் அறியவில்லை.
“நீ அறிந்தாய். நீ எதை அறிந்தாயோ அது உண்மை.
அதை மறைத்தது தான் வஞ்சம்”
- இங்கு வஞ்சம் என்பது செயலல்ல, உண்மை அறிந்த பின் அதை மறைக்கும் உளச்சதியென கர்ணனுக்கு புரிய வைக்கிறாள்.
அதுவரை அவன் கொண்ட அலைக்கழிப்புகள் அனைத்தும் அர்த்தமற்றவையாக இங்கு உருவெடுக்கிறது. கர்ணன் ஒரு போர் தெய்வம் மட்டமே அங்கு ஒருமை படும் மனம் பிற அனைத்து சூழலிலும் பிளவுபட்டே நிற்கிறது. அவன் நாகர்களை அனுகுவது பாண்டவர்களுக்கு எதிராக கிடைக்கும் என ஊகிக்கும் சந்தர்ப்பம். அது நிகழாத போது மீண்டும் பிறிதொரு வாய்ப்பிற்கு ஜராசந்தனை நோக்கி நகர்கிறான். மானுட மனதை கொக்கை குறியீடாக கொண்டு அதன் நீந்துதலை துயரத்தை கர்ணனை நோக்கியதாக கூறப்பட்டிருப்பது கவித்துவமானது. பறத்தல் அதன் விடுதலை.இந்த பகுதியின் இறுதியில் மானுடர் உலகிற்கு வெளியே அவர்களை பொருட்படுத்தாத நாகர் உலகம் தங்களுக்கான உலகில் தங்களின் நாக வேதம் புராணம் தொன்மம் என நிறைந்தும் அங்கிருந்தே தங்களது எதிரிகளையும் கண்டடைகிறார்கள். உலகின் விரிந்த புலத்தில் வாழும் உலகில் மனிதன் ஒரு சிறு கூறு மட்டுமே என எடுத்துவைக்ப்படுகிறது.
கர்ணனின் மனநிலையை புரிந்து கொள்ள இரண்டு எல்லைகள் காவிய லட்சணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
1.அர்ஜூனன்/ கர்ணன் இருவரின் ஒப்புமை
2. ஆண் / பெண் தன்மை ஏறப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருப்பது.
காவியத்தில் இரண்டு நிகர்நிலை பாத்திரம் இடம் கொடுக்காது. அவற்றின் பேதங்கள் மற்றும் போதாமைகள் பற்றி சொல்லியாக வேண்டும் என்பதும் அதன் காவிய லட்சணங்களில் ஒன்றாக இருக்கலாம். இருவருக்கும் பொது அம்சம் தாயை குறித்து ஏங்குபவர்களாக இருவரும் முன் வைக்கப் படுகிறார்கள். வித்தியாசம் அதை கடந்து சென்று வெல்பவனுக்கும், உழல்பவனுக்குமான வேறுபாடுகள் கொண்டதாக உருவாகி வருகிறது. இவர்களை ஆண் மற்றும் பெண் தன்மை ஏறிடப்பட்டு மேலதிகமாக ஒளிர்பவர்களாக எடுக்கலாம் என நினைக்கிறேன்.
இந்த இடத்தில் தம்ஸன் பிறதொரு கோணத்ததில் பூடகமாக அவனுடன் எப்போதும் அவனுக்கு எதிர் வலியாக காட்டப்படுகிறான்.கர்ணனின் உடல் வழியாக நுண்சொல் பெற்றும் அவனது குருதியின் பசையால் இறகு ஒட்டி விண்னேகும் வாய்ப்பை இழந்தவனாக சொல்கிறான் -ரத்தம் ஒரு தடை. - குறியீடு- ஞானம் மற்றும் தீர்மானம் பற்றியது தாய் பற்றிய நினைவுகளை கிளர்வதற்கு தம்ஸனின் வருகையும் ஒரு குறியீடு. ஒரு வகை புனர் ஜென்ம நினைவுகளின் மீட்டல்.
உடல் எனும் பிரபஞ்ச வெளிக்குள் தம்ஸன் நுழையும் தருணம் கவித்துவமானது். அங்கிருந்து பெண்கள் பற்றிய நினைவுகளை கிளர்ந்தெழச் செயகிறான். உடல் பஞ்ச பூதங்களில் மண்னை குறிப்பது. மனம் சந்திரனை தொட்டு பெண்னின் வடிவமாக பார்க்கப்படுவதால் கர்ணன் பிறவி தோரும் சந்தித்த அத்தனை பெண் வடிவங்களை அவன் நினைவு கூர்கிறான்.
நிறைவாக
குந்தியின் நேரடி அழைப்பு கர்ணனை பல வித எண்ணங்களை உருவாக்குகிறது. தம்ஸன் கனவு வருகை கர்ணனின் பிறப்பு மற்றும் அதுபற்றிய அவனது எதிர்மறை எண்ணங்களை பற்றிய குறியீட்டை அவனுக்கு கொடுக்க முயல்கிறது
- தாய் என்பவள் எல்லையற்றவள் அவளை இயக்கும் தெய்வங்கள் மட்டுமே அவள் செயல்களை அறிவது . அதை வகுப்பது மாநுட எல்லைக்கானது அல்ல என்பது தம்ஸன் சொல்லும் செய்தி
- “கியாதி, புலோமை,ரேணுகை, அம்பை, பிருதை, திரௌபதி…என பிறந்திறந்து ஆடி முடித்து அவள் சென்ற அடிச்சுவடுகள் எஞ்சும் வெறும் வெளி ஒன்றுள்ளது” …“நதி” எனும் கருவி வழியாகக் கூறும் கவியுரு.
சட்டென தோன்றும் விஷ்ணுவின் அங்க வர்ணனைகள் பாஞ்சாலிக்கும் பொருந்து படி ஏறக்குறைய கர்ணனுக்கு கிடைத்த விஸ்வரூப தர்சணம்.
“தர்மம்” என்பது வெளியில் தரிசிக்க வேண்டிய ஓர் உண்மை அல்ல,அது ஒருபோதும் புற வெளியில் நிகழாது என்பதால் அவன் அகத்தில் நிகழ்கிறது. ஆனால் கர்ணனை உலகியலில் மட்டுமின்றி ஆன்மீக குருடனாகவும் காட்டப்படுகிறது.
வெள்ளி, 27 ஜூன், 2025
அடையாளமாதல் * தேடலின் நுண்மை *
ஶ்ரீ:
பதிவு : 684 / 873 / தேதி 27 ஜூன் 2025
* தேடலின் நுண்மை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 82.
அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிற்கு வந்த நண்பர் ஜெயபால் ரங்கசாமிக்கு அணுக்கர் வந்தவுடன் என்னிடம் “முதல்வர் வீட்டில் இருக்கிறார் உங்களை அழைத்து வரச்சொன்னார்” என்றார். “மதியம் 1:30 மணி உணவிற்கு பிறகு செல்லலாம்” என சொன்னேன் “நேரமில்லை” என்ற பின்னர் “இல்லை பேச்சு எவ்வளவு நேரம் எடுக்கும் என தெரியவில்லை வழியில் எங்காவது உணவிற்கு நிறுத்தலாம்” என்றார் . நான் மறுக்க என் வீட்டிலேயே ஜெயபாலும் உணவருந்தி முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்திக்க கிளம்பினோம் . போகும் வழி முழுவதும் நானும் ஜெயபாலும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ரங்கசாமியிடம் என்ன சொல்லெடுக்க வேண்டும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
முதல்வர் ரங்கசாமியின் அரசியல் என்ன? அது பிறரால் எப்படி பார்க்கப் படுகிறது ? அவரது பதவிக்கு இன்று எழுந்திருக்கும் சிக்கல் இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா காங்கிரஸ் முதல்வர்களும் தொடர்ந்து எதிர் கொண்டது. ஆனால் ரங்கசாமிக்கு என வரும் போது அதன் உண்மை தன்மையாக வேறு எப்படி கூர் கொள்கிறது அல்லது அதன் தனித் தன்மையை அது எப்படி இழக்கிறது என்பது பற்றி நான் உத்தேசித்திருந்ததை அவரிடம் என் பார்வையாக வைத்தேன். அது எப்படி பிறிதொரு அரசியல் பார்வையை கோருகிறது என்பதையும் சொல்லியிருந்தேன் . அவர் அதை ஏற்றால் பின்னர் பிறர் அவரிடம் வைக்க தயங்கிய அரசியலை பற்றி பேசலாம் என நினைத்திருந்தேன் .
முதல்வர் ரங்கசாமியின் அரசியலை நான் எப்படி புரிந்திருந்தேன் என இந்தப் பதிவில் விளக்க முயல்கிறேன். என் அரசியலுக்குள் முதல்வர் ரங்கசாமி வந்தது நான் வழக்கமாக என் அரசியலின் அடுத்த நிலைக்காக செய்யும் புதிய முயற்சி ஒன்றின் வழியாக. அது என் வழமையான பாதையில் இருந்து மீறிச் செல்வது. புதிய முயற்சிகளில் காணப்படுகிற மீறல் என்கிற ஒவ்வாமையும் அதை பற்றிய நமது முடிவான மதிப்பீடுகள். எல்லோரும் பிறர் பற்றிய மதிப்பீடுகள் வழியாக “இவர் இப்படித்தான்” என வரையறை செய்வது கொண்டு அவர்கள் வரைந்து கொண்ட கோட்டிற்குள் நின்று முன்னகர இயலாமல் சிக்கிண்டு கிடப்பதை பார்த்திருக்கிறேன். அந்த கருத்தை நான் எப்போதும் ஏற்பதில்லை. யாரும் அப்படி மாற்ற முடியாத நிலைப்பாடுகளை கொண்டவர்கள் அல்ல. குறைந்தபட்சம் அரசியலில் அப்படிப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அர்த்தமில்லை என நினைப்பவன். தன்னை நோக்கி காலத்தால் கொண்டு வரப்படும் நிஜமான உதவியை யாரும் புறந்தள்ளுவதில்லை.
நான் உத்தேசிக்கும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதில் அவ்வப்போது இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் அந்த முயற்சிகளின் குறைந்தபட்ச அளவிற்கு எப்போதும் ஏற்கப்படுவதை பார்த்திருக்கிறேன். பின் அங்கிருந்து அதை விரித்தெடுத்து வெற்றியை நோக்கி நகர்கிறேன்.
அரசியலில் மட்டுமின்றி பிற துறைகளிலும் சிறந்த அவதானிப்புகள் மாற்றுப் பார்வைகளாக முன்வைக்கப்பட்ட போது அவை பல சமயங்களில் அதன் உண்மை தன்மை வேறு வடிவம் கொண்டது என ஆகி பெருகி இருக்கின்றன.அரசியலில் உதவுவதும் உதவியை பெறுவதும் குறிப்பிட்ட நிலைகளில் தங்களை வைத்துக் கொள்வதில் இருந்து தான் துவங்குகிறது. அந்நிலை கொண்டவர்களுடன் மட்டுமே நாம்மால் விவாதிக்க அல்லது உரையாட முடிகிறது. அத்தகைய முயற்சிகளில் குறைந்தபட்ச நட்பை அங்கு எதிர்பார்கலாம் அதை தாண்டி வேறு கற்பனையை வளர்த்து கொள்ள தேவையில்லை. அந்த புது நட்பில் நமக்குமான அரசியலும் இருக்கிறது என்பது அதன் பின்புலம். எந்த நிலைப்படும் இல்லாதவர்கள் சந்தர்ப்பவாதிகள் அவர்களுடன் பேச ஒன்றுமில்லை.
ரங்கசாமி தன்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து பல தேர்தல்களை கண்டார் ஆனால் தன் தொகுதியை தன்னை மட்டும் சார்ந்த அமைப்பாக உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார். ரங்கசாமி மட்டுமன்றி புதுவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அனைவரும் அதை ரங்கசாமிக்கு முன்பும் பின்பும் செய்திருக்கிறார்கள் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அதில் பலர் வென்றதில்லை காரணம் கட்சி அல்லது ஆட்சியில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கான இடம் இல்லாமலாகும் போது அவர்கள் உருவாக்கிய இடத்தை தக்க வைத்துக் கொள்ள இயலுவதில்லை. ஆனால் ரங்கசாமி தொடர்ந்து “கட்சி மற்றும் தொகுதி” என இரண்டு நிலைகளிலும் தனது இடத்தை பெற்று வென்று வந்தார். அது போல ஒன்றை பிற சட்டமன்ற உறுப்பினர்களும் உருவாக்க விழைந்து முடியாமலாகி பின் குறுங்குழுவாக தேங்கிப் போனார்கள் . ரங்கசாமி தனது ஆதரவாளர்களை ஒருபோதும் கட்சிப்படுத்தவில்லை என்பது உண்மை என்றாலும் அவர் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டை புதுவை சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேர் மீதும் வைக்க முடியும் . அரசியல் சரிநிலைகள் இங்கு பெரிய மாற்றத்தை அடைகின்றன.
தன் தொகுதி மக்கள் தன்னை மட்டுமே சார்ந்திருக்கும்படி வைத்திருந்தார் என்பது வேறு வித நுண் குற்றச்சாட்டு அதே சமயம் அவர்கள் தங்கள் தேவைக்கு பிற அரசியல் தலைவர்களை நாடும்படி கைவிட்டதில்லை. அவர்கள் கோருவதை சலியாது மீள மீள அவர்களுக்கு செய்து கொடுக்கும் இடத்தில் தன்னை வைத்திருந்தார். அவர்களுக்கு ரங்கசாமியை கடந்து பிறிதொரு மாற்று இல்லை என்பது கள உண்மை அது அவர் உருவகித்திருந்த அமைப்பும் கூட. ஒரு புள்ளியில் அவர்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் அரணாக நிற்கும்படியான சூழலை உருவாகியது இரு தரப்பும் ஒன்றை ஒன்று இறுக பற்றியிருந்தது . அது அவர் பலம் அதே சமயம் பலவீனமும் கூட மாநில கட்சியின் அமைப்பின் பார்வையில்.
1991 களில் அவர் அமைச்சரான போது துவங்கிய அந்த குற்றச்சாட்டு 2001 களில் அவர் முதல்வரான போது பல மடங்கு பெருகியது. 30 தொகுத்திக்கு முதல்வராக இருக்க வேண்டியவர் தனது ஒரு தொகுதிக்கு மட்டும் முதல்வராக இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு பிறரால் ஏற்கவும் பட்டது. ஆனால் அதில் முழு உண்மையில்லை என்றே நினைக்கிறேன். ரங்கசாமி தேவைக்கும் குறைவாக பேசுபவர். ஆனால் சகஜமான உரையாடலுக்குள் அவர் எப்போதும் தன்னை வைத்துக் கொண்டதில்லை என்பதை நான் ஏற்கவில்லை. மிக சரியாக வைக்கப்படும் விஷயங்கள் குறித்து மிக ஆழமாக விவாதிக்கக் கூடியவராக அவரை அறிந்திருக்கிறேன். அதே சமயம் அவரது ஆதரவாளர்கள் பிறருடன் இணங்கி பழகுவதில்லை என்பது ஒரு வித மூடுண்ட சமூகமாக பார்க்கப்பட்டது .அது அவர்களின் நெறியாக இருக்கலாம். அதன் வழியாக அவருக்கும் பிற அரசியல் தலைவர்களுக்கு உருவான இடைவெளி மிகப் பெரியது. அவர் சார்ந்த தட்டான்சாவடி மற்றும் கதிர்காமம் போன்ற தொகுதிகள் புதுவையில் பிறர் ஊடுவ முடியாத தனித் தீவுகளாயின.
அவரிடம் அரசு ரீதியான பலன்களை அடைய நினைத்தவர்கள் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தனர் அதன் வெளிப்பாடே அவர் தனது சொந்த தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பது.
2001 களுக்கு பிறகு தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் கடந்து வந்தார் . அதை பிறர் மட்டுமின்றி தில்லி கட்சி தலைமையும் ஏற்றதாக தெரியவில்லை. அவரிடம் உரையாடிய போது அதை தெரிந்து கொண்டேன். தில்லியில் தன்னை நோக்கிய கேள்விகளுக்கு தன் செயல்பாடுகள் வழியாக பெற்ற தனது மக்கள் செல்வாக்கு மற்றும் அரசியல் பார்வையை முன்வைத்த போது அவர்கள் புதுவை அரசியலை “ஒரு பாராளுமன்ற மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்” கொண்டதாக குறுகிய அரசியல் பார்வையாக பார்க்கப்பட்டதையும் புதுவையின் ஒற்றை இலக்கு வெற்றி அகில இந்திய அளவில் அது பெரியதாக அளிக்க ஒன்றுமில்லை என சொல்லப்பட்ட போது அவரால் அதை ரங்கசாமியால் ஜீரணிக்க இயலவில்லை. கடும் கோபத்தோடு என்னிடம் சொன்னார் “நான் பல வருடங்களில் புதுவை மற்றும் தமிழக மண்ணில் வளர்த்துக் கொண்ட தனிப்பட்ட செல்வாக்கு சட்டமன்ற மற்றும் பாராலுமன்ற தேர்தல் சமயத்தில் புதுவை மட்டுமின்றி அதை சார்ந்த தமிழக பகுதியில் இருந்து என்னால் 10 அல்லது 15 நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க முடியும்” என்றார். அவர் இந்த தகவலை சொன்ன போது முதலில் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை சந்தித்ததால் அவருள் நிகழ்ந்திருந்த அந்த மாற்றம் நான் அறிந்திருக்கவில்லை. அது உண்மை என தனி கட்சி துவங்கிய சில மாதங்களில் ஆட்சியில் அமர்ந்து நிரூபித்தார். பொதுவாக தில்லியில் அமர்ந்திருக்கும் அகில இந்திய கட்சி உதவி செயளாலர்களுக்கு இருக்கும் ஒரு வித ஆணவம் நான் அறிந்தது. அவர்களால் தங்களுக்கு எதிரே அமர்ந்திருப்பவரை ஒரு போதும் எடை போட இயன்றதில்லை காங்கிரஸின் பல கீழ்மைகளில் இது ஒன்று.
புதிய பதிவுகள்
கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்
வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...
-
ஶ்ரீ : பதிவு : 168 / 242 : தேதி :- 24 ஆகஸ்ட் 2017 * அனத்திலிருந்தும் தனித்திருத்தல் * மாநில தொடர்பை ...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 482 பதிவு : 482 / 668 / தேதி 03 நவம்பர் 2019 * வகை விளையாட்டு * “ ஆழுள்ளம் ” - 02 தத்த...
-
முன்னுரை வெண்முரசு தொடர மீண்டெழுவன November 16, 2020 ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும் . நானோ...
-
ஶ்ரீ : பதிவு : 621 / 811 / தேதி 14 மே 2022 * அலைக்கழிக்கும் நினைவுகள் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 18. மக்களின் ...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : பதிவு : 691 / 880 / தேதி 20 அக்டோபர் 2025 * இலக்கற்ற ஓட்டம் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 88. 1988 மற்றும் ...
-
ஶ்ரீ : பதிவு : 704 / தேதி 25 ஜனவரி 2020 * வெண்முரசு கூடுகை புகைப்படங்கள் *
-
அடையாளமாதல் - 8 அரசியல் களம் - 8 முதல் அடுக்கில் பிளவு அந்நாள் ஒரு அழகிய வாய்பென விடிந்தது. கட்சியிலிருந்து என்னை சிலர் தேடி வந்திர...
-
அன்பிற்கினிய ஜெ, வணக்கம் , நீங்கள் புதுவை வந்து சென்றதையும் அதை ஒட்டி நிகழ்ந்து முடிந்ததையும் பற்றிய நினைவுகளில் இருந்து விடுப...
-
ஶ்ரீ : பதிவு : 205 / 284 / தேதி :- 05 அக்டோபர் 2017 * சீர்குலைந்து போன தொடர்புகள் * “ தனியாளுமைகள் - 31 ” இ...





















