ஶ்ரீ:
பதிவு : 683 / 872 / தேதி 21 ஜூன் 2025
- * சிலைத்த முகங்கள் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 81.
அரசியல் மட்டுமன்றி பிற துறை அல்லது தனி முயற்சிகளில் கூட அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் எதிர்மறை தன்மை அல்லது எதிர் நோக்கிய ஒன்று நிகழாமை என தொடர்ந்து இருக்குமானால் ஊழ் அதை வேறு வகையில் மண்ணில் வைக்கிறது என்கிற எண்ணம் அரசியல் மூத்த தலைவர்களிடம் இருந்து கற்றது. நான் தற்செயல் வாதத்தை நம்புவதில்லை அனைத்து நிகழ்விற்கும் பின்னால் நம்மால் ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாத பெருந்திட்டம் ஒன்று தற்செயல் போல சிறிய உதிரிகளாக பரப்பி வைக்கப்படுகிறது, அதை தனித்தனி நிகழ்வு என நம்ப வைக்க முயல்கிறது ஆனால் அதன் விசை பெரும் சூறாவளிக்கு முன் என இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்புபவன். பிறரை நம்ப சொல்வது என் வேலையல்ல. விளிம்பு நிலை சமூக இளைஞர்கள் பிரதிநிதி படுத்தும் அரசியல் உருவாகிவர பல முறை வாய்ப்பிருந்த போதும் நிகழவில்லை ஏன்? என கேட்டுக் கொண்டு அதன் பின்னணியில் இருந்து அதை புரிந்து கொள்ள முயல்கிறேன். கண்ணன் , பாலன் அவர்களை பின் தொடர்ந்து அதை நான் வெற்றிகரமாக அவர்களை முதல் முறையாக ஒருங்கிணத்தேன் ஆனால் அதை செயல்படுத்த முயன்ற போது இயங்கத் துவங்கும் முணையில் சிதறிப்போனது . அதற்கு பின்னால் இருந்த நாராயணசாமியின் பிரித்தாளும் சூழ்தல் காரணம். அதை அறிந்தோ அல்லது அறியாமலோ அவர்கள் அனைவரும் அதற்கு பலியானார்கள். இன்றுவரையிலும் அவர்கள் இழந்தது என்ன என்பதை அறியமாட்டார்கள்.
இறுதியாக நீண்ட நாள் காத்திருந்த அரசியலில் உருவாகி வந்த ரங்கசாமி மாநிலம் முழுவதுமாக அதை திரட்டி எடுத்தார் . பல பத்தாண்டுகளாக எதிர் பார்த்த பெரும் நிகழ்வு இதுதானோ என மயக்கங் கொள்ள வைத்தது. ஆனால் இப்போதும் அந்த அரசியல் மாற்றம் நிகழாமல் போனது. புதுவை அரசியலில் துவங்கிய எழுச்சி அது போன்ற ஒன்று இனி நிகழ வாய்ப்பில்லை என்றே ஊகிக்கிறேன். உறுதியாக நான்கு கட்டங்களாக அரசியல் நிகழ்வுகளை காட்டும் ஒன்று கண்ணன் பாலன் அவர்கள் வரிசையில் எனக்கு கிடைத்த வாய்ப்பும் அது நிகழாத காரணங்கள் பிறிதொன்று ஆனால் இறுதியாக ரங்கசாமி பெரும் தலைவராக உருவாகி எழுந்த பிறகும் அது ஏன் நிகழவில்லை என்பது நகைமுரண்.
நான்கும் வெவ்வேறு வகைகளில் துவங்கிய காரணத்தை சொல்ல முடிகிறது ஆனால் விளிம்பு நிலை சமூக இளைஞர்களை பிரதிநிதித்துவ அரசியல் நிகழாததின் பின்னுறையும் நுண்மையான காரணத்தை சொல்ல முடியாது என நினைக்கிறேன். சமூக அமைப்பின் அடிப்படையில் என்ன நிகழந்து கொண்டிருந்தது என்பது பற்றி இந்த பதிவுகளில் அவதானிக்கலாம் என்ன நினைக்கிறேன். அவர்கள் தங்களுக்குள் ஒருவரை எதிர் நோக்குகிறார்கள் இதில் வினோதம் அது தன்னைத் தவிர பிறிதொருவர் அல்ல என நினைக்கிறார்கள்.கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மீள மீள நிகழ்ந்து கொண்ட இருக்கும் இந்த முன்வைப்பு ஆட்கள் மாறியிருந்தாலும் இந்த எண்ணம் மட்டும் மிறுதலின்றி நீடிக்கிறது.
இளைஞர் காங்கிரஸ் குடந்தை ராஜகோபால் தில்லியில் இருந்து மேலிடப் பார்வையாளராக வராமால் இருந்திருந்தால் கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆகி இருக்க முடியாது காரணம் சண்முகத்தின் சிபாரிசை அவர் கேட்கவில்லை. ஹரிபிரசாத் மேலிட பார்வையாளராக வராமல் இருந்திருந்தால் பாலன் தலைவராக வந்திருக்க முடியாது காரணம் அதன் தலைவராக இருந்த கண்ணனின் சிபாரிசை அவர் நிராகரித்தார். அவர்கள் உருவாகி வர பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு பின்னால் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களை கொண்டு தங்களை முன்னகர்த்திக் கொள்ள முடியும் என்பதை புரிந்திருந்தால் அவர்கள் ஒருவேளை நிச்சயித்த இலக்கை அடைந்திருக்க முடியும். துரதிஷ்ட வசமாக தன்மயம் என்கிற கனவு கொண்டவர்கள் அங்கிருந்து கொண்டு பொங்கி பெருகிய கங்கையில் வரு குவளை மொண்டு எடுத்து கொள்ள முயன்றனர். தங்களை சூழ்ந்திருந்த பிரவாகத்தை அவர்களால் உணரவோ பார்க்கவோ முடியவில்லை என்பது பரிதாபம். அவர்களால் முடிந்தது தங்கள் இலக்கை நோக்கி அது நிகர்த்தி செல்லும் பதவியை அடையவைக்கும் என நினைத்தனர். அவர்கள் அதை அடைந்திருக்லாம் அல்லது அடையாமலாகி இருக்கலாம். எப்படி இருந்தாலும அவர்களுக்கு விளிம்பு நிலை சமூக இளைஞர்கள் எழுச்சி ஒரு படிநிலை மட்டுமே.
ரங்கசாமியின் அரசியலில் நிகழ்ந்தது மேல் சொன்ன எந்த வகைமையிலும் சேராது. காங்கிரஸின் முதல்வராக சண்முகத்தின் வெளியேற்றத்திற்கு பிறகு முதல்வராக எதிர்ப்பின்றி வந்தமர்ந்தார். இயல்பில் அவருக்கு இருந்த கிராம மிராசு பாணி அரசியல் அவரை நவீன அரசியல் நோக்கி கொண்டுவரவில்லை என்பது திகைப்பை தருவது. அனைத்து நாற்காலிகளிலும் அமர நினைத்தார் தனக்கானதை பிறர் இடத்தில் அமர்ந்து அதை தனக்கு தானே செய்து கொண்டார். இது ஒன்றும் புதிய வகை அரசியல் அல்ல திராவிட பாணி அல்லது இந்திய முழுவதும் நடைமுறையில் உள்ள மேலாதிக்க அரசியல் Mgr துவங்கி ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் வரை என்றும் எங்கும் பரந்து காணப்பட்ட ஒரு வழிமுறை ஆண்டான் அடிமை வகை. அதை நிகழ்த்தும் வல்லமையை தனக்கு பின்னால் இருக்கும் மிகப் பெரிய மக்கள் சக்தியை வைத்து அதை நிகழ்த்திக் கொண்டனர். அந்த செல்வாக்கு கைவிட்டு செல்லாதவரை அவர்கள் நினைத்தது போல நடந்து கொள்ள முடிந்தது ஆனால் புதுவையில் அது போன்ற ஒன்றை நிகழ்த்த முடியாது. காரணம் இங்குள்ள நுண்ணிய அரசியல் மக்கள் ஆழ்மனதின் வழியாக நிகழ்த்துவது. ஆழுள்ளம் என்பது தனிமனிதர்களுக்குரியது அல்ல, அது மிகப்பெரிய ஒரு தொகுப்பு, தனி உள்ளங்கள் அந்த பெரும் பெருக்கில் சிறு துளிகள். தமிழகம் போல நேரில் சந்திக்க இயலாத தலைவர்களைப் பற்றி பலவிதமாக உருவாகும் அல்லது உருவாக்கிக் கொள்ளும் பிம்பம் போல புதுவையில் நிகழ்வதில்லை. புதுவையில் மிக எளிதில் சென்று சந்திக்கும் அரசியல் அளுமைகள் குறித்து மிகை பிம்பங்கள் உருவாவதில்லை அல்லது உருவானாலும் அது நீடிப்பதில்லை என்பது முதல் முரண். தனிநபர் வழிபாடு தமிழகம் போல இங்கு உக்கிரமாக இருப்பதில்லை. சில காலம் மட்டும் நீடிக்கும் அது போன்ற போக்கு. அது அரசியல் தலைமைக்கு மிக நெருக்கமாக இருப்பதாக தங்களை காட்ட முயலும் இரண்டாம் நிலை தலைவர்கள் கட்டமைப்பது. ஒரு புள்ளியில் அது இளிவரளாகுகிறது. ரங்கசாமியை பல வித சினிமா காதாப்பாத்திர வேடத்தில் புணைந்து வைக்கப்பட்ட பேனர்கள் எளிய மக்களின் இளிவரளுக்கு இலக்கானதை அவரின் ரசிகர்கள் அறிவில்லை அல்லது கவலை கொள்ளவில்லை .
அதே போன்ற பிறிதொன்று ரங்கசாமி காங்கிரஸை மறுத்து தனி கட்சி என மாநில அரசியலில் அடைந்த வளர்ச்சி மற்றும் வெற்றி கண்ணன் கடைசிவரை பெற இயலாத இலக்கை ரங்கசாமியை மிக எளிதில் பெற வைத்தது. அந்த எழுச்சி நிகழ்ந்ததை திகைப்புடன் பார்க்க வைத்தது. ஆனால் உரிய கருவிகள் வழியாக மடைமாற்றப்பட்டு பல்வேறு நிலைகளில் தேக்கி வைக்கும் கட்சி அமைப்புகளை உருவாக்கும் நேரம் அவர்களுக்கு வாய்க்கவில்லை நேராக பதவியில் அமர்ந்தனர் இனி அடுத்த தேர்தல் வரை ஆற்றுவதற்கு ஒன்றில்லை என நினைத்திருக்கலாம். மிக நுட்பமாக அவதானித்தால் அது ஒருவகையில் சண்முகத்தின் தியரி போல ஆட்சியமைக்க கூடிய வல்லமையுள்ள கட்சி என கட்டமைக்கப்படுகிற போது வெற்றி வாய்ப்புள்ள சுயேட்சைகளை அது கவர்கிறது. அவர்கள் இணைய எதிர் நோக்கும் பெரும்பாண்மை கிடைத்து விடுகிறது. ஆனால் காங்கிரஸில் நிகழ்ந்தது போல அவர்களை கட்சிக்குள் அடைக்க முடியாது என்பதால் கலகம் மிக விரைவில் எழுந்து பற்றி பரவக்கூடியது. இரண்டாம் முறை அவரால் சிலரை உட்கொண்டு வருவதில் எழுந்த சிக்கல் ஆட்சியில் அமர முடியாது செய்தது. அந்த இடைவெளியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
இன்று அவர்கள் அடைந்த வெற்றி விரல் இடுக்குகளின் வழியாக வடிந்து கொண்டிருக்கிறது. அமைப்புகளை நிர்வகித்த அனுபவத்தில் இருந்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் அந்த இடத்தை மிகச் சரியாக கண்டடைந்து வளர்த்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்க முடியும் அதை செய்வார் என எதிர்பார்த்தேன் ஆனால் அவர் தன் பழைய அனுபவங்களில் இருந்து எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.வழக்கம் போல சொந்த நரகம் ஒன்றை உருவாக்கி அதில் உழன்று பரிதபாமாக மண்மறைந்தார்.அவர் இறப்பிற்கு பிறகு ஒரு மேடையில் ரங்கசாமி கண்ணீர் மல்கி அவர்குறித்து பேசியது அமைப்பை பற்றி அவருக்கு இருந்த கருத்தை இறுதிவரை அவரால் செய்ய முடியாது போன வருத்தம் தொனித்தது. ஆனால் நடைமுறையில் அது குறித்த அவருக்கு எந்த திட்டமும் இல்லை .
காங்கிரஸில் ரங்கசாமி முதல்வராக நீடிக்க முயன்ற காலத்தில் அவருடன் இணக்கமாக பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முதல் முறையாக அதற்கான திட்டம் அவரின் அணுக்கர்களுக்கு இடையே நடந்தது. ரகசியம் கருதி மிக சிறிய கூடுகையின் முதல் கட்டம் பாலன் தலைமையில் ஹோட்டல் அண்ணாமலையில் நிகழந்தது. என்னை அதில் பங்கு கொள்ள அழைத்திருந்தார்கள். அந்த கூட்டத்தில் பாலன் பேசும் போது ஒன்றை சொன்னார். “ இந்த கூட்டத்திற்கு அரிகிருஷ்ணனை அழை என்றார் எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது அவரால் திரளில் நிற்கும் சிலரின் பெயரையாவது நினைவுகூற இயல்வது அதிசயம்” என்றார். இது அந்த கசப்பின் இயலாமையின் வெளிப்பாடு. இதன் வழியாக பாலன் கட்சியில் செயல்படுவதற்கான சுதந்திரத்தை கொடுக்கவில்லை என புரிகிறது. உட்கட்சி குழப்பத்தின் வெளிபாடு இது. பாலன் சொல்வதில் இருந்து அவரது மனக்குறையை உணர முடிந்தது. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த புறகு சிலரும் சந்திக்கும் திரளை ஒருவித சிலைத் தன்மையுடன் எதிர் கொள்வதை பார்த்திருக்கிறேன். சந்திக்கும் யாருக்கும் சென்று சேராத ஒரு புண்ணகையை உருவாக்கிக் கொள்வார்கள். இது தங்களை பிரத்தரிய வேண்டும் என நினைக்கும் ஆளுமைகளை எட்டி நிற்க வைத்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக