ஶ்ரீ:
பதிவு : 680 / 869 / தேதி 15 ஜூன் 2025
* தனி முகம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 78.
அரசியலில் கட்சித் தலைவர்களுக்கு ஊடாக பரஸ்பர நம்பிக்கை எளிதில் இயல்வதல்ல. பார்க்க பொதுவில் இருப்பது நாகரீகம் கருதி ஆனால் பொது வெளியில் ஒருவர் பற்றி ஒருவரின் கருத்து தனிப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாவது. அவற்றின் அளவீடுகள் வேறு. அங்கு அரசியல் தலைவர்கள் பற்றிய பொதுமக்கள் கருத்துக்கள் எதிரொலிப்பதில்லை. ஒருவர் பற்றிய உள் தகவல்களை பிற அனைவரும் அறிவர். பொது வெளியில் கொண்டாடப்படும் தலைவர்களை அரசியலுக்கு அப்பால் பிற கட்சி மேல் மட்டத் தலைவர்கள் ஒன்று கூடி உரையாடும் போது மட்டுமே அந்த மெல்லிய பகடியுடன் வெடிச் சிரிப்புடன் விமர்சித்து விலகி செல்வதை பார்த்திருக்கிறேன். அவை பெருமாலும் அதிரவளிக்கும் உண்மை சம்பவம் பற்றியதாக இருக்கும். பொது வெளியில் அறம் சார்ந்து பேசும் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை தன்நோக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றி தெரியும் போது அவை அதிர்ச்சி தருவது. பொதுவாக அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தலைவர்கள் குறித்து நல்ல எண்ணம் பிற கட்சி தலைவர்களுக்கு இருப்பதில்லை. பல்வேறு போராட்டங்கள்,செயல்பாடுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகள் வழியாக அந்த தலைவர்கள் பற்றிய கருத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அவற்றில் இருந்து விதிவிலக்கு காங்கிரஸ் கட்சி தலவர் சண்முகம். பல கட்சி தலைவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பிற கட்சி தலைவர்கள் சண்முகத்திற்கு கொடுக்கும் இடமும் மரியாதையும் மிக உயர்வனதாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இதில் முரண் பிற கங்கிரஸ் தலைவர்கள் அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகள். தனது வாழ்க்கையையே ஒரு குறியீடு போல முன்வைத்தவர். மிக எளிய வாழ்கை முறை பலமுறை பாராளுமன்ற உறுப்பினர் மாநில அமைச்சர் என இருந்தாலும் தனது சொந்த கிராமமான கரைக்கால் நெடுங்காடு பூர்வீக சொத்தை தவிர புதுவையில் அவருக்கு சொந்த வீடோ நிலமோ கிடையாது. அவரின் நேர்மை எப்போதும் கேள்விக்குள்ளானதில்லை. சைவ உணவு, தடுத்து நிறுத்தும் யாருமின்றி வந்தவர் நேரடியாக சந்திக்கும் இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை காமராஜரிடமருந்து அவர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.தலைவர் சண்முகத்தை எனது அரசியல் குரு ஸ்தானத்தில் வைத்திருந்தது எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கலாம் . எனக்கான மதிப்பீடுகள் அங்கிருந்து உருவானவை . அரசியல் சரிநிலைகளை கடந்து ஒருவரின் கள செயல்பாடு நேர்மறை அனுகுமுறை ,உரையாடலின் கருத்தியல் போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன. சாதாரண மக்கள் பார்வையில் இருந்து அரசியாளலர் பார்வை இன்னும் கூர் கொண்டவை.
இளைஞர் அமைப்பின் தலைவர்களின் நம்பிக்கையை பெறுவது முக்கிய இடத்தை வகித்தது. சமச்சீர் வரி எதிர்ப்பு திட்டமிட்டவைகளை செயல்படுத்துவது அதற்கான தனிபாணி மற்றும் நேர்மறையான அனுகுமுறை அந்த வெற்றியின் வழியாக எனக்கான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதாக இருந்தது. மத்திய வாஜ்பாய் அரசின் சமச்சீர் வரிக்கு எதிரான கூட்டுக் குழுவின் தலைமை பொறுப்பை நான் விழையவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்றத்தின் செயலாளர் முருகனை மனதில் வைத்தே மொத்த திட்டத்தையும் உருவாகியிருந்தேன் . முதல் முறையாக கூடுகையில் அவரது பெயரை முன் வைத்த போது முருகன் அதை கடுமையாக மறுத்தார். பிற கட்சி தலைவர்களும் மௌனமாக அதை ஆதரித்தது முதலில் திகைப்பை கொடுத்தது . அவர்கள் அனைவரும் களத்தில் நீண்ட கால செயல்பாடுகளை உடையவர்கள், நண்பர்கள் என்றாலும் அவர்களுக்குள் முரண்கள் மிக இயல்பானவை. அரசியலின் பொருட்டு தங்களுக்குள் ஒருவரை ஆதரிக்க விடமாட்டார்கள். புதியதாக வந்திணைந்த என் போன்ற புதியவர்கள் அவர்களுக்கு எளிதில் கையாளக்கூடியவர்களாக தெரியலாம். நான் அறிந்த மிக எளிய அரசியல் கோட்பாடு. அவர்கள் ஒரு மனதாக என்னை முன்வைத்த போது நான் அதை மறுக்கவில்லை.
அந்த மாதம் முழுவதும் பல கட்டங்களாக இளைஞர் பெருமன்ற பொது செயலாளர் முருகன் , சிபிஎம் லெனின்துரை , தமாக நமச்சியவாயம், அஇஅதிமுக இளைஞரணி போன்ற பலர் என்னுடன் தொடர்ந்து பயணித்தார்கள். பல கட்சியை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் மெல்ல இணையத் துவங்கினர். ஓரிரு மாதங்களில் அனைவரையும் உள்ளடக்கிய குழு உருவானது. நான் தலைவர் சண்முகத்திடம் அதன் பிறகே நிகழ்ந்ததை தகவலாக சொன்னேன். வழக்கம் போல தனது அதிருப்தியை தெரிவித்தார். பிற கட்சியினருடன் பயணிப்பது நல்ல பலனை கொண்டுவராது என்றார். தன்னுடைய அனுபவத்தில் நிகழ்ந்த பல விஷயங்களை பற்றி பேசிய பின்னர் நீண்ட அறிவுரைகள். அவை நிஜமான கவலைகள் ஆனால் களத்தில் செயலபட விரும்பும் ஒருவரை அதிலிருந்து விலக்கி வைக்க முடியாது.
அரசியல் எப்போதும் புதிய களங்களை கண்டடைவது வளர்வதற்கான வழி அதை தவிர்க்க இயலாதது. அவை செயலாக்கப்பட்ட பிறகு அதன் மீதான விமர்சனம் புரிந்து கொள்ள கூடியது. அதற்கு முன்பாக புதிய செயல்பாடுகளின் வழியாக புதிய நிலைபாடுகள் உருவாகி இருக்கும். அதுவரையில் அது அரசியல் முன்னகர்வாக இருக்கும் . மேலும் அன்று அது பற்றி எரிந்த அரசியல் களம். அகில இந்திய அளவில் காங்கிரஸ் அமைப்புகள் அந்த புதிய வரிவிதிப்பு முறையை கடுமையாக எதிர்க துவங்கி இருந்தன. நான் அதை ஒட்டியே எனது செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டிருந்தேன்.
அனைத்து இளைஞர் அமைப்பின் கூட்டங்கள் பலகட்டங்களாக அனைத்து தொகுதிகளிலும் நிகழ்ந்தது. பிற அமைப்புகளை விட இளைஞர் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் பலமாக இருந்தது. பல வருடங்களாக அவர்களை ஒருங்கி திரட்டி இருந்தேன். பலமுறை அவர்களை முன்னிறுத்தி எடுக்க நினைத்த களங்கள் அமையாது போனது. ஒவ்வொரு முறை அதை செயல்படுத்த நான் நினைத்த அந்த தருணம் வாய்க்கவில்லை. இந்த முறை அதை மனதில் வைத்து கூட்டுப் போராட்ட கூட்டங்களில் செயல்பாட்டு நெறிகள் மற்றும் போராட்ட யுக்திகள் முன்வைத்து விவாதித்தோம்.மற்றவர்களுக்கு அது எப்படி இருந்தது என தெரியாது. எனக்கு அவை முற்றும் புதிய அனுபவங்களை கொடுத்தது. முக்கியமாக தெரு முணை பிரச்சாரம் கம்யூனிச பாணி செயல்பாடுகள் மிகச் சிறப்பானவை. நேரடியாக பொது மக்களுக்கு செய்திகளை மிகச் சரியாக கொண்டு சேர்ப்பவை. அவற்றில் திரளாக நண்பர்களை கொண்டு வந்து குவிக்க வேண்டிய நிர்பந்தமில்லை. காங்கிரஸ் கட்சி செயல்பாட்டு பார்வையில் இருந்து அவை முற்றிலும் வேறுபட்டவை. காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நான் அவற்றை கட்சியின் பொருட்டு ஒருங்கிணைத்த அனுபவம் உண்டு கடந்த முப்பதாண்டுகளாக அதை செய்திருந்தாலும் கம்யூனிச பாணி எனக்கு புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தியது. தெருமுணை பிரசாரத்தில் மேடை பேச்சு அனுபவம் தேவைப்பட்டது காங்கிரஸில் அதற்கான எந்த பயிற்சியும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் மேடையில் சிறப்பாக பேசக் கூடியவர்களாக மிக சிலரே இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக