https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

அடையாளமாதல் * பிரித்தலில் காலம் *

  


ஶ்ரீ:



பதிவு : 664  / 854 / தேதி 12 பிப்ரவரி  2023



* பிரித்தலில் காலம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 60.






நான் அரசியலில் தீவிரமாக இருந்த காலம் 1982 முதல் 2008 வரையிலானது. அதில் எனது அரசியல் கற்றலுக்கு சிலரை முன் மாதிரியாக வைத்துக் கொண்டே அன்றைய அரசியலின் போக்கை அவதானித்துக் கொண்டிருந்தேன் . அதற்கு உகந்த கருவிகளாக முக்கிய தலைவர்களை தேர்ந்திருந்தேன். அவர்களில் நேர் மற்றும் எதிர்மறை என அனைத்து ஆளுமைகளும் இருந்தனர். அவர்களின் செயல்பாடுகளால் உருவானவற்றை பகுத்துக் கொள்வதனூடாக அவர்களை வரையறை செய்திருக்கிறேன். அவற்றின் பலன்களை எடுத்துக் கொண்டு அவர்களை வாசிக்க முயன்றிருக்கிறேன். அவை அரசியலில் செயல்பட வேண்டிய முறைகளை எனக்கு கற்றுக் கொடுத்தன. அதில் முதன்மை ஆளுமை சண்முகம் அவர் அரசியல் அறம் பற்றிய நம்பிக்கையை அளித்தார். அது ஒரு நீண்ட பயணம். ஏறக்குறைய 2017 முதல் இந்த பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பயணத்தின் வழியாக நான் என்னை அறிந்து கொண்ட ஒன்று அது ஒற்றை பார்வையால் ஒரு ஆளுமையை அவதானிப்பதை தவிற்க முயல்வது . பதிவுகளின் துவக்கத்தில் சண்முகம் சார்பாக நின்று பேசியதில் இருந்து அனைத்திலிருந்தும் விலகி ஒரு பொது புரிதலுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். எனவே இந்தப் பதிவுகளில் முன்பே சொன்னவைகள் மீளவும் சொல்லப்பட்டிருகிறது. ஆனால் அவற்றை பார்க்கும் பார்வையும் புரிதலும் மாறியிருப்பதை அறிகிறேன்.


இது நான் வலிந்து உருவாக்கிக் கொண்டதல்ல அந்த பயணத்தில் நான் என்னை அறிந்து கொண்டது மனம் என சொல்லப்படுகிற ஒன்றுடன் எனக்கான தொடர்பை பற்றி. அதை அறிந்து கொண்ட போது நிகழ்ந்த முதல் துணுக்குறல் அந்த மனம் என்பது நான் அல்ல அதன் பிரம்மாண்ட இருப்பெனும் கடலில் ஒரு சிறு துளியாக நான் என்னை உணர்ந்த கணம். அதன் இயங்கு விசையை குறைந்தது மூன்றாக பகுத்துக் கொள்வேன். அது ஒரு தறியை போல இரண்டு எதிர் எதிர் பக்க ஓட்டத்தை தொடர்ந்து கண்டு புரிந்து அவற்றை அது வேறு ஒன்றிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. சில பதிவுகளை எழுதும் போது அங்கிருந்து சற்று மேலெழுந்து கடந்த கால காட்சிகளை மனதில் ஓட்டி பார்த்து அன்று புரிபடாத விடைகளை இப்போது சட்டென அடைந்து திகைத்திருக்கறேன். ஒவ்வொரு முறையும் என் பதிவுகள் நான் நினைத்த இடத்தில் துங்கியதோ முடிக்க நினைத்த இடத்தில் முடிந்ததோ இல்லை. அதை பிறிதொன்று முடிவு செய்கிறது


நான் ஈடுபட்ட அரசியல் காலத்தை தசாப்தங்களாக பல குறுக்கு கோடுகளால் பிரிக்கலாம் அவற்றில்சந்திஎன்பது ஒரு இரண்டும் இல்லா ஒன்றை ஒன்று முயங்கு காலம். அது மிக முக்கியமானது. அதில் அரசியல் செயல்பாடுகள் எந்த அசைவுமின்றி இருப்பதாக தோன்றி அந்த காலத்தில் அனைவரையும் நிலையழியச் செய்கிறது. ஆனால் அது அரசியலின் மிக முக்கிய காலமாக கருதுகிறேன். காலத்தின் நகர்வின்மையால் உருவாகும் நிலையழிவை தாங்க இயலாது பலர் தங்களை விட்டுக் கொடுத்து மாற்று அரசியலை தேர்கிறார்கள் அல்லது பிறரிடம் தோற்கிறார்கள் . சண்முகம் போன்ற அரசியலாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பது இந்த காலத்தை நோக்கி. மலைப் பாம்பு வேட்டையாடுவதில்லை உணவு அதைத் தேடி வரும் எனக் கால சுழற்சிக்கு தன்னை ஒப்புக் கொடுத்து காத்திருக்கிறது. அவர்களுக்கு காலம் கனிகிறது. விட்டில் பூச்சி போல நாளை விடியலை ஆஞ்சி இன்று இரவே முடிவெடுக்க துடிப்பவர்கள் ஒரு புள்ளிக்கு மேலாக காத்திருக்க முடியாமலாகிறார்கள். அது அமைதியாக காத்திருக்கும் ஒருவரை நோக்கி செலுத்துகிறது. சண்முகம் எப்போதும் அங்கு காத்திருப்பவராஎ இருக்கிறார்


சந்தி காலம்மிக மெல்ல நகர்ந்து அனைவரையும் நிலையழியச்செய்வது. இரண்டு காலதிற்கும் இடையேயான கருப்பும் வெள்ளையும் முயங்கிய சாம்பல் பகுதி அதன் இணைப்பு புள்ளிகள் குழுப்பம் மிகுந்தது. ஒன்றில் இருந்து ஒன்று முயங்கி வருவது. அது சமூக மனப்பான்மையில் ஆழத்தில் யாரும் எதிர்பாராத திருப்பங்களை வைத்திருந்தது . சண்முகத்தின் அரசியல் முடிவுற்றது அப்படி ஒருசந்திகாலத்தில் நிகழ்ந்தது என்பது ஒரு வினோதம்.


2006 தனது நீண்ட 65 ஆண்டு கால காங்கிரஸ் அரசியலில் இருந்து சண்முகம் வெளியேறிய போது அவருடன் நானும் மனதளவில் வெளியேறியிருந்தேன். அவர் விலகி பின் சில காலம் அரசியலில் இருந்தேன். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அங்கிருந்து இரண்டாண்டுகளில் முற்றாக வெளியேறினேன்.அவர் எனது குரு அவரது முடிவே எனக்குமானது. அவர் வெளியேறிய பிறகு எனக்கு அங்கு ஆற்ற ஒன்றுமில்லை. அதே சமயம் அவரைப் போன்ற ஒரு மாபெரும் ஆளுமையின் அருகமர்ந்து அரசியலை கற்ற எனக்கு அவருக்கு கீழே அரசியலில் சென்று நிற்க பணியாற்ற எந்த தயக்கமும் இருந்ததில்லை. அவருக்காக செயலாற்றியதை அது எந்தவித அரசியலானாலும் அதை உச்சகட்ட கௌரவமாக எடுத்துக் கொண்டேன் என்பதுடன் பிறரும் அதை அப்படியே பார்த்தனர். அவரின் பிரதிநிதியாக சென்ற இடங்களில் கிடைத்த இடம் அவரது பெருமையை சொல்லுவது. நான் கட்சியில் இருந்து வெளியேறிய போது அதன் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் பிற தலைவர்கள் மீது எனக்கிருந்த ஒவ்வாமையும் அவர்கள் யாருடனும் இணைந்து செயல்படுவதை அனுமதிக்கவில்லை. அதன் அடுத்தடுத்து வந்த தலைவர்கள் கட்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவர்கள். நான் எடுத்த முடிவு மிகச் சரியானது என என்னை நினைக்க வைத்தது


காங்கிரஸின் அரசியலின் தரம் மேலும் மேலுமென கீழிறங்கி கொண்டே இருந்தது. தலைபைப் பண்பு குறித்த வெற்றிடம் அதை உருவாக்கி இருந்தது. புதுவை காங்கிரஸ் கட்சியில் சண்முகத்திற்கு பிறகு நல்ல தலைமை ஏன் உருவாகி வரவில்லை?. அது பற்றி தனியே ஒரு பதிவு போடவேண்டும் என நினைக்கிறேன் .அடிப்படையில் சண்முகம் வளர்ந்த வந்த முறையே அதற்கான காரணத்தை சொல்லும். பிறரை அரவணைத்துச் செல்லும் முழுமையானத் தலைமை தன் கீழுள்ள ஆளுமைகளை தேம்பச் செய்துவிடும். காரணம் அவர்கள் எதையும் போராடி பெறுவதில்லை அனைத்தையும் சலுகையாக பெறுகிறார்கள். தமிழக காங்கிரஸில் காமராஜருக்கு பிறகு வலுவான தலைமை உருவாகி வரவில்லை. மூப்பனார் அதில் விதிவிலக்கு. ஆனால் காமராஜரிடம் சிவாஜிக்கு இருந்த இடம் மூப்பனாருக்கு இல்லை அது குறித்த மன வருத்தம் அவருக்கு உண்டு என்பார்கள். காமராஜர் இருந்தவரை மூப்பனார் தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக இருக்க முடிந்தது. மாநில அளவில் அவர் முக்கியத்துவம் அடைய முடியவில்லை என்கிற நெருப்பு அவரிடம் இருந்தது. அதுவே அவர் இந்திராகாந்தி பார்வையில் பட தனக்கான இடத்தைப் பெற்றார். காமராஜரிடம் இருந்த முக்கிய ஆளுமைகள் மூப்பனாரின் பின் அணிவகுத்தனர். மூப்பனாருடான முரண் காரணமாக வாழப்பாடி வெளித் தெரிந்தார். அது காங்கிரஸில் பண்ணையார் தொழிற்சங்கவாதிக்கான முரணாக வெளிப்பட்டு வாழப்பாடிக்கான அரசியல் இடத்தைப் பெற்றுத் தந்தது. மூப்பனார் கூட காங்கிரஸை விட்டு வெளியேறி அடைந்த இடம் இன்றும் சர்ச்சை மிகுந்தது . தமிழக திராவிட அரசியலின் நெருக்கடியில் ஒரு கட்டத்திற்கு மேலதிகமாக அவரால் பயணிக்க முடியவில்லை. தனிக்கட்சி அரசியலின் கொடு முகத்தை பார்க்க வேண்டி இருந்தது. அவருக்குள் இருந்தஜென்டில் மேன்அரசியல்வாதி ஒரு அளவிற்கு மேல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அரசியல் அசல் ஆளுமைகள் வருடிக் கொடுத்து வளர்வதில்லை. நமக்கான முகத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அதன் காற்றில் காணாமலாவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...