ஶ்ரீ:
அடையாளமாதல் - 454
பதிவு : 454 / 632 / தேதி 26 ஜூலை 2019
*நம்பிக்கையின் மேல் *
“ எழுச்சியின் விலை ” - 56
முரண்களின் தொகை -03 .
ஶ்ரீகாந்த் புதுவையில் முதல் முறை பணியில் இருந்த போது அவர் எனக்கு முகப்பழக்கம் மட்டுமே , பின்னர் அவர் தில்லியில் உள்துறையின் உளவுப்பிரிவிற்கு மாற்றலாகி அங்கு பணியாற்றிய போதுதான் அவருடான எனது நட்பு மிகவும் அனுக்கமானது . புதுவையிலிருந்து மாற்றலாகி தில்லி உள்துறையின் சர்வதேச நுண்பிரிவுத் துறையில் பணியாற்றிய காலத்தில் இந்தியா முழுவதுமான அதன் செயல்பாடுகள் குறித்த அறிமுகத்தை நான் பெற்றது அவர் மூலமாகத்தான். வழக்காமான காவல்துறையில் பணியாற்றுபவர்களிடம் காணும் கரடுபாய்ந்த முகமற்று மிக இளையவராக மென்மையான முகமும் பேச்சும் கொண்டவர் .சொல்லில் நளினம் கொண்டவராக , கருத்துகளை மிக ஆழமாக முன்னிறுத்துபவராக .தெளிவான சிந்தனை உள்ள மனிதராக அவரை அறிந்திருக்கிறேன் .
சர்வ தேச அரசியலின் நுண்மையை அவர் சொன்ன போது அதன் யாதார்த்தத்தால் உலுக்கப்பட்டேன் .அங்கிருந்து இந்திய அரசியலின் போக்கை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது .அதுவரை நான்றியாத புதிய பாதை அது .அந்தப் பாதையால் என்னை முற்றாக களைந்து மீளவும் வகுத்துக் கொண்டேன்.மனதை அழுத்தி வலியை உருவாக்கும் அரசியல் நிகழ்வுகளால் , நான் பின்னாளில் கசப்படையாது இருந்ததற்கு அங்கிருந்து நான் பெற்றப் புரிதல் அடைப்படையாக இருந்தது என காலம் தாழ்த்தியே அறிந்து கொண்டேன் .அந்தப் புரிதல் அளப்பறியது.
சர்வதேச அரசியல் சற்றும் இரக்கமற்றது அதன் நீட்சியே இந்திய மற்றும் மாநில அரசியலின் போக்கு . தன்னை நிலை கொள்ளச்செய்ய மனித மனம் செல்லும் உளவியல் எல்லைகளை யாராலும் அறிதியிட்டு விட இயலாது . அதன் உண்மைகள் முகத்தில் அடித்தால் போல வந்து அறைவது. அதன் எல்லைக்குள் அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களால் மட்டுமே அது ஏற்கப்படுவது .அங்கிருந்து விலகுகையில் அவர்களையும் அது விட்டு வைப்பதில்லை என்பது நாம் அறிந்து கொள்ள இயலாதது .
சர்வதேச அரசியலில் இந்திய நுண்ணறிவு பிரிவுகளில் ஒன்று இலங்கை குறித்து மிக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம் .அதன் செயல்பாடுகளும், கருதுகோளும் , எனக்கு இந்திய அரசியலின் போக்கை அதன் பிற எல்லாவகை தொடுகைகளை எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தன. தில்லியையும் அதன் தேசிய அரசியல் செயல்பாடுகள் குறித்து பிறிதொரு கோணத்தில் பார்க்கும் பார்வையையும் , வழியை அங்கிருந்தே அடைந்தேன்.
கால மடிப்புகள் நீக்கப்பட்டு நிகழ்ந்து முடிந்த நிகழ்வுகளினால், கடந்து சென்ற மற்றும் இனி நிகழ இருப்பதை குறித்த அனைத்து நிஜங்களையும் அருகில் இருந்து பார்க்க வைப்பது. அது ஒரு தனித்த உலகம் .அது ஒன்றின் மீது ஒன்று கொள்ளும் நம்பிக்கையின்மையே அதன் பிரதானமாக மூலதனமாக இருந்தது.அவை வாழ்வியல் நம்பிக்கை குறித்த ஒவ்வாமையை கொடுக்க வல்லது.சாமாண்ய மனிதர்களின் உலகிலிருந்து முற்றாக வேறு பட்டிருந்தது.அது சொல்லும் செய்திகளை , தகவல்களை அறிந்து கொள்ள நேரும் எவரும் பின் ஒரு போதும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியாது .
அது மனதை பேதலிக்க செய்யும் பிறிதொரு நரகம் .போலியும் பாசங்குகளும் கழற்றப்பட்டு உண்மை மட்டுமே என முன்வைக்கப்பட்டு உலவும் உலகம் . நாமது சூழலும் அதை ஒட்டி நாம் உருவாக்கி வைத்து புரிந்து கொண்ட நமது வாழ்கையும் , வாழும் நிலப்பகுதியும் அதன் சூழல் என அத்துனையும் ஒரு பாவனை மட்டுமே ,என்கிற உண்மையை முகத்தில் வந்து அறையும் போது மனதை சமநிலையில் வைக்க இயலாதவர்கள் நிலைகுலைந்த போவார்கள் . நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற எண்ணம் முழுவதையும் காணாமலாக்கும் பிறிதொரு நிஜம் அங்கு பேருரு கொண்டு எழும் .அதை அறிந்து கொள்ளாதிருப்பதே ஒருவரின் நல்லூழ் என நினைக்கிறேன்.அதில் உழலும் எவருக்கும் “நாளையும் உண்டு” என்கிற நம்பிக்கைத் தரும் நல்விடியல் இல்லை என்பதே அதன் அச்சமூட்டும் உச்சப்பகுதி.
அரசு நிர்வாக முறை பற்றி பெரிய புரிதலை எனக்கு கொடுத்தவர் என்பதால் ஶ்ரீகாந்த் எப்போதும் எனது மரியாதைக்குரியவராக இருந்தார்.அவர் சணமுகத்திற்கு மிக நெருக்கமானவர் .அன்று பேசு பொருளாக சண்முகத்தின் அரசியல் வியூகங்கள் குறித்த எனது விமர்சனங்களாக அவை இருந்தன .என்னைப்போலவே அவரும் சண்முகத்தை பற்றி உயரிய கருத்து கொண்டவர் . அவர் முன்னிலையில் சண்முகத்திற்கு முரணான அந்த உரையாடலை நான் நிகழ்த்த விரும்பவில்லை .அது எனக்கும் அவருக்குமான தனிப்பட்ட உரையாடலாக திடீரென எழுந்தது .அதற்கு சாட்சியாக நான் யாரையும் வைக்க விரும்பாதது பிறிதொரு முக்கிய காரணம் .