https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 11 ஜூலை, 2019

அடையாளமாதல் - 450 *கற்றலின் பிறிதொன்று *


ஶ்ரீ:அடையாளமாதல் - 450

பதிவு : 450 / 627 / தேதி 11 ஜூலை  2019

*கற்றலின் பிறிதொன்று  * 


எழுச்சியின் விலை ” - 52
முரண்களின் தொகை -03 .

பிறந்தவர்கள் அனைவரும் இறக்கிறார்கள்.வாழ்வியல் முறையை புரிந்து கொள்ள தன்னுடன் ,தனக்குள்ளே சதா சர்வ காலமும் தர்கித்தபடி இருப்பவன் ஒரு சொல்லையாவது தன்பின்னால் விட்டுச் செல்கிறான் .

தலைவர் வீட்டிலிருந்து உடனே என கிளம்பி விட விரும்பினேன் .ஆனால் அது நடக்காது என்பது போல தலைவர் மெல்ல தனது வழமைப் பாணி பேச்சின் மூலம் அவரை குடைந்து கொண்டிருந்த ஆற்றாமையிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தாதால் என்னை நோக்கி எதையாவது பேசிக் கொண்டேயிருந்தார்.நானும் அவருமாக மட்டும் தனித்து விடப்பட்ட சூழலில்  , அதை அறுத்துக் கொண்டு என்னால் அங்கிருந்து கிளம்ப இயலவில்லை.

அவர் பேசப்பேச மனம் நிலையழிதலால் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது .அவர் எனக்கு அரசியலை , அதில் தன்னறம் பேண வேண்டிய அவசியத்தை சொல்லிக் கொடுத்த குரு.ஆனால் இன்று அவர் பேசத் துவங்கிய விஷயங்கள் அவர் மீது ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டிருந்தது . முதல் முறையாக அவரது சொற்கள் கூர்திரண்டு அவரையே குத்தி கிழித்துக் கொண்டிருந்ததை அறியாதவர் போலிருந்தார். எனது கற்றல் முற்றுப்பெற்றது போல அவர் சொல்லிக் கொண்டிருந்த அனைத்தையும் எனக்கான ஒன்று என்னுள் எழுந்து மறுத்துக் கொண்டிருந்தது. அவர் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது வெற்று மன சமாதனங்கள் .அவற்றில் புதிய கல்வி என ஒன்றில்லை.

மனம் அவர் சொல்லுவதை முழுக்க உள்வாங்கிக் கொண்டிருந்தாலும், அது பலவாறாக பிளவுற்று  அவரைப் பற்றிய கேள்விகளாக அதற்கான பதில்களாக, வெள்ளமென எழுந்து பரவி ஒன்றை ஒன்று கவ்வி இழுத்துக்கொண்டிருந்தன , பிறிதொன்று எழுந்து தனக்கென ஒரு நிலை எடுக்காது இரண்டு பக்கத்தின் சார்பையும் மாறி மாறி எடுத்துக் என்னை நிலையழியச் செய்து கொண்டிருந்தது. அது ஒரு ஆபத்தான நிலை என அறிந்திருந்தேன்.இனி மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தியாக வேண்டும் என்கிற உந்துதலை எதிர்கொள்ள முடியாது.

ஆழ் மனம் பிறந்து பிறந்து இறந்த பல பிறவிகளின் மனதின் ஒரு துளி மிச்சமென  பல்லாயிரக்கணக்கான  எண்ணப் படிமங்களின் அடுக்குகளால் ஆனது . அதில் நான் என்கிற இருப்பு மெல்லிய சரடால் நிகழுலகில் பிணைக்கப்படுகிறது. அதன் நிகர்நிலை பேணுதலே வாழும் உலகில் நம்மை நிலை பெயறாது கட்டிவைக்கிறது. அதை இழக்கும்  மனம் பிறழ்ந்து போகிறது .அதுவரை சொல்லிய சொல்லில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்பவர்கள் மனம் பிறழ்ந்தவர்களே

கற்றலில் ஒன்றும் மனம் எண்ணை ஒழுக்கு போல இடையறாத எழுவதை அறுக்க இயலாத நான் எனும் இருப்பு எண்ணங்களே அந்த பல்லாயிர படிம கண்ணிகளின் வழியாக ஒழுகி அதன் பிரதிபிம்பம் அனைத்திலும் ஒளிர, அங்கு இட்டுச்செல்கிறது. கற்றல் கற்பிப்பவருடான ஆழ்மன உரையாடலில் இருக்கும் போது , அவரின் மீது படர்ந்து அவரது அனுபவ அறிவினுள் நுழைவது மட்டுமின்றி .அவரது மனம் எனும் தொகுப்பிற்குள் அவர் பிரவேசிக்காத பகுதிகளில் நுழைந்து அதன் பின்புலத்தையும் பார்க்க முடியும் என்கிற ஒன்று ,அவரை எனக்கு மிகச் சரியாக அடையாளப்படுத்தி இருந்தது.அது பொய்யல்ல என்றது மனம் .அது பொய்யல்ல என்றால்  இதோ இன்று என்னுடன் உரையாடக் கொண்டிருப்பவர் யார் ?இவரை நான் அறிந்ததில்லை.

என் சிந்தனையில் எழுவது சொல்லப்படாத போது சொற்கள் எடையை கூட்டிக் கொள்கின்றன . ஒரு புள்ளியில் எடை மிகுந்து உடைவு பெறுகிறது .பின் ஒருபோதும் அதை இணைப்பதென்பது  நிகழ்வதேயில்லை. நான் வெளியேறும் எண்ணத்தை விடுத்து அவரிடம் தர்கிக்க தயாராகிக் கொண்டிருந்தேன் . கற்றதை கற்ப்பித்தவரிடம் வெளிப்படுத்தி மதிப்பெண் பெறுவதல்ல இன்றைய நோக்கம்.கற்பித்தலுடன் தான் வாழ்ந்து காட்டிய முறையில் இருந்து இன்று அவர் முரண் கொள்கிறார். அறம் வெறும் சொல்லாக மட்டும் திகழும் நாவின் மீது எனக்கு மதிப்பில்லை .அதை வாழ்வியலுடன் கலந்து கொடுத்ததால் மட்டுமே அவரை நான் சென்னியில் சூடியிருக்குறேன்.ஆனால் இன்று  சொல்லும் அத்தனை சொற்களும் , அவர் இதுநாள் வரை சொன்னதில் சென்று சேரவில்லை.நான் அவரிடம் கற்ற அவற்றை வாழ்வியலில் பொறுத்த சரியான இணைவை அங்கிருந்து பெற்றுச் செல்ல எண்ணினேன் .இனி அதற்கான வாய்பபுகள் இல்லை

மனம் ஒரு விந்தையான மிருகம் .தன்னை இதுவென அது யாரையும் புரிந்து கொள்ள  விட்டதில்லை .சில சமயம் என்னைப் பற்றிய என் புரிதலை கடந்து அது வேறொன்றாக என்முன் எழுந்து நின்றதை பார்த்திருக்கிறேன் .பாலனுடன் முரண்பட்ட போது , பாலனுக் எதிரான  எனது செயல்கள் அனைத்தும் என்னைப்பற்றி நான் அறிந்திருந்தவைகளுக்கு முற்றிலும் வேறானவை .வெறி கொண்டு எழந்த அவரை கருத்தால் தாக்கியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் . அது இதே போன்ற ஒரு எதிர்நோக்காத தாக்குதலால் விளைந்தது.அவர் அதன் பிறகு பல கட்சி நுழைந்து அவரது ஆதர்சங்கள் பலவற்றை அடைந்தாலும் , எங்கும் எதிலும் நிறைவடையாதவராக பார்க்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக