https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 நவம்பர், 2025

அடையாளமாதல் * முன் தூது *

 




ஶ்ரீ:



பதிவு : 693  / 882/ தேதி 05 நவம்பர்  2025



* முன் தூது * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 90.







முன்னாள் அமைச்சர் காந்திராஜ் புதுவையின் புகழ் பெற்ற குற்றவியல் வழக்கறிஞர். தர்க்கத்தில் மிக சிறந்தவராக அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு விவாதத்தின் போதும் எடுத்து வைகப்படுகிற கருதுகோள் குறித்ததெளிவான பார்வை கொண்டவர். அரசியலை வரலாற்றில் வைத்து முன் பின் என வகுக்கக் கூடிய ஆவரது திறமையைப் பற்றி எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நேரடி அரசியலில் பழக்கமற்றவர் என்பதால் அரசியல் கோரும் நுண்மை அனுகுமுறை இல்லாதவர். அரசியல் நிகழ்வுகள் என்ன மாதிரியான நகர்வுகளை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்ள எளிய தொண்டர்களுடனான உரையாடலில் துவங்குகிறது என தலைவர் சண்முகம் சொல்லுவார். தனது இறுதிவரை அதை செய்து கொண்டிருந்தார். அது என்ன மாதிரியான உளப்பதிவை வழங்கும் என்பது குறித்து அவரிடம் நேரடியான விளக்கம் இல்லை என்றாலும் உள்ளுணர்வு சார்ந்து அதை செய்து கொண்டிருந்தார். நவீன தர்க்கத்தில் அதற்கு வேறு இடமுண்டு என இன்று அறிகிறேன் . அது சமூகத்தின் ஆழுள்ளம். நிஜமான தலைவர்கள் அனைவரும் அதை நோக்கி பேசிக் கொண்டே இருந்தனர். அது தனிப்பட்ட ஒருவராக இருந்தாலும் திரளாக இருந்தாலும் அதை புரிந்து கொள்ள தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தனர்.


அரசியல் நகர்வுகள் தரவுகளையும் உள்ளுணர்வுகளையும் இணைத்து புரிந்து கொள்ள களத்தில் உள்ள ஆளுமைகளை அவர்களது அணுக்கர்களை அறிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. எளிய தொண்டர்கள் கொண்டு வரும் செய்திகளில் அந்த நகர்விற்கான கூறு இருப்பதை அறிய முடியும். எங்கோ எவரோ சொல்லும் ஒரு சிறு தகவல் ஒரு சிறி செய்தி துணுக்கு ஒட்டு மொத்த பார்வையை மாற்றிவிடுவதை பார்த்திருக்கிறேன்.

ஜோசப் மரியதாஸ் மற்றும் காந்திராஜ் இருவரிடமும் ஒரு பொதுத் தன்மையுண்டு. அவர்கள் எளிய தொண்டர்களுக்கு அப்பால் தங்களை வைத்துக் கொண்டார்கள். அரசியலில் குறுகிய கால வெற்றியை நீடித்துக் கொள்ள அவர்களிடம் எந்த கருவியையும் அது உருவாக்கவில்லை. அதானல் தேர்தல் களத்தில் தொடர்ந்தது தங்களை தக்க வைக்க இயலவில்லை . ஒருவித மேல் தட்டு அரசியளாலராக இருவரும் இருந்தார் என்கிற ஒரு கூறு கள நடைமுறை அரசியலுக்குள் அவர்களால் வரவே இயலாமலானது. காந்திராஜ் அரசியலுக்கு அப்பால் சண்முகத்துடன் நல்லுறவில் இருப்பவர். இதற்கு அடிப்படையான சில காரணிகள் உண்டு. புதுவை அரசியலில் சுதந்திரத்திற்கு முன் பின் என அந்த இணைவு காலத்தில் அரசியல் மோதல் போக்கை முன்வைத்தவர் பிரென்ச் இந்திய தலைவர் எதுவார் குபேர். சுதந்திரத்திற்கு பின்னர் சில காலம் வரை அந்த மோதல் போக்கை அவர் கைவிடவில்லை. தில்லி உள்துறை அமைச்கத்தின் கெடுபிடியால் அனைத்தையும் கைவிட்டு காங்கிரஸிற்குள் வர வேண்டியதானது.


கட்சிக்குள் அவரது போக்கு தொடர்ந்தது. புதுவை விடுதலை இயக்கம் ஒருவகையில் குபேரை எதிர்த்து நடைபெற்ற ஒன்று என்பது அதன் முரண்நகை.பிரதமர் நேரு இந்திய சிறு பிராந்தியங்களை ஒன்றிணைக்க ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை பேண முயன்று கொண்டிருந்தார் அதன் அடிப்படையில் புதுவை தன்னியல்பில் இந்திய தேசத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்பதால் புதுவை பொறுத்தவரை அவரது எண்ணமாக இருந்தது. அதன் அடிப்படையில் பிரதமர் நேருவிடம் குபேரிடம் நல்ல தொடர்பில் இருந்தார். அது உள்ளூர் அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. சண்முகம் குபேர் மோதல் காங்கிரஸின் கோஷ்டி மோதல் போன்று பார்க்கப்பட்டாலும் உண்மையில் அது புதுவை விடுதலை போராட்டத்தின் நீட்சி என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் போன்றவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் சண்முகம் குபேருக்கு எதிரான அரசியலை முன்வைத்த போது அவர் விலகி திமுக வில் இணைந்து பின்னர அரசியலில் இருந்து விலகினார். அவரின் ஆதரவாளராக இருந்தவர்களும் அவர்களை பின் தொடர்ந்தவர்களும் காங்கிரஸிற்குள் தங்கிவிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருவித மேலடுக்கு அரசியல் செய்பவர்கள். மரியதாஸ் மற்றும் காந்திராஜ் போன்றவர்கள் கால சூழலால் மேலெழுந்து வந்தவர்கள். அவர்களுக்கான வேர் இல்லாமையால் நிலைத்திருக்க இயலவில்லை. குபேரின் மறைவிற்கு பிறகு காங்கிரஸில் நீடித்த அவரது ஆதரவாளர்கள் ஒருவித பிரான்ஸின் காலனியுகத்தின் எஞ்சிய மக்களாக அந்த காலத்தை எப்போதும் விதந்தோதுபவர்களாக இருந்திருக்கிறார்கள். காங்கிரஸில் செயல்பட்டவர்களுக்கு திராவிட கட்சி அரசியல் மிக அன்னியமானவை என புரிந்து கொள்ள அதிக காலம் தேவையாகிறது


புதுவை சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை கோரும் கட்சியாக காங்கிரஸை உருவாக்கிய முதன்மையாளர்கள் மாநில அரசியல் கட்சிகளின் எழுச்சியுடன் மட்டுமின்றி காலனியுகத்தில் எஞ்சியவர்களுடனும் போராட வேண்டி இருந்தது. ஒருவகை இரண்டாவது சுதந்திர போராட்ட பாணியை கொண்டது. குபேர் அதன் முக்கிய முகமாக இருந்தார். குபேரின் வீழ்ச்சிக்கு பிறகு அவர்களின் ஆதரவாளர்கள் காங்கிரஸில் இருந்தாலும் கள செயல்பாட்டாளர்களாக இருந்ததில்லை. காந்திராஜ் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் ஒருவகையில் அவரின் நீட்சி அவர்களிடம் குபேரிடம் காணப்பட்ட பல குணம் மற்றும் சாயல்களை பார்த்திருக்கிறேன். அவர் உடுத்தும் சட்டை கூட அதன் முன் அடிப்பகுதியில் இரண்டு பைகளை வைக்கும் குபேரின் பாணியை கொண்டதாக இருந்தது . பொது சமூகத்திடம் அதிகம் நெருக்கம் காட்டாத அரசியலை முன்னெடுப்பவர். இளமையில் கட்டற்ற வாழ்கையை முன்னெடுத்தவர் அதன் பாதிப்பால் உருவாகும் பல போக்குகள் அனுகுமுறைகள் அவரிடம் இன்றும் இருக்கின்றன. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகளாக இருந்தனர் . காந்திராஜ் அவரின் பிற சகோதரர்களைப் போல கட்சி அரசியலில் பதவி பெற்று அமர்ந்தவரல்லர். அரசியலாளராக அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அந்த சூழலில் சண்முகம் ஜோசப் மரியதாசிடம் கொண்ட கசப்பின் காரணமாக 1991 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு மாற்று வேட்பாளராக முன்வைக்கப்பட்டவர் காந்திராஜ். அவர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட பின்னணி சுவாரஸ்யமானது. 1991 தேர்தலில் ஜோசப்மரியதாஸ் மரைக்காயரின் அணி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டிருந்தார். 1981 களில் திமுக சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியலை துவங்கியவர். திமுக கூட்டணி அரசியல் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை ஆலோசிக்காமல் நாடாளுமன்ற வேட்பாளராக CP.திருநாவுக்கரசை முதல்வர் ராமசந்திரன் தெரிவு செய்ததில் முரண்பட்டு சண்முகம் அந்த ஆட்சியை கலைத்தார். அதற்கு திமுக வின் துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்த ஜோசப்மரியதாஸ் உதவியதாக சொல்லப்பட்டு பின்னர் 1985 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டு வென்று அமைச்சரானார்


1985 சட்டமன்ற தேர்தலில் நீண்ட காலத்திற்கு பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவானது. புதிய தலைமுறையினர் பலர் அந்த தேர்தலில் முதன் முறையாக வென்றிருந்தனர். அதில் முக்கியமானவர்களில் கண்ணன், வைத்தியலிங்கம், பாலாஜி,சந்திரகாசு ஜோசப்மரியதாஸ் போன்றவர்கள் இவர்களைத் தவிர முக்கிய ஆளுமைகள் அஷ்ரப்,சபாபதி,சுப்புராய கவுண்டர்,கோவிந்தராஜன்,முன்னாள் முதல்வர் ராமசாமி என பெரும் படை வென்றிருந்தது. முதல்வராக மரைக்காயர் என முடிவானதால் இஸ்லாமிய சீட்டு காரணமாக அஷ்ரப் விலக்கப்பட்டார். ஆறு பேர்களை கொண்ட மந்திரிசபையில் கண்ணன், வைத்திலிங்கம்,ஜோசப்மரியதாஸ், நாகரத்திணம் போன்றோர் இடம் பெற்றனர் மரைகாயருடனான சமரசத்தில் சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான சந்திரகாசு அமைச்சரவை இடம் பெறச் செய்ய இயலாமல் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். சண்முகம் மற்றும் மரைக்காயருடனான இழுபறி தில்லிவரை சென்று அங்கு முடிவான மந்திரிசபையில் முதல்வருக்கு அடுத்த இடத்திதில் கண்ணன் நியமிக்கப்பட வேண்டும் என மரைக்காயர் ஏற்றுக் கொண்டார் . அமைச்சரவையில் மரைக்காயருக்கு கண்ணன் ஒரு எதிர் எடை என சண்முகம் நினைத்தார் ஆனால் புதுவை திரும்பியதும் மரைக்காயர் தில்லியில் சொன்னதை மாற்றி கண்ணனுக்கு மூன்றாவது இடத்தை அளிக்க முடிவு செய்திருந்தார்


தில்லி முடிவு மற்றும் அதில் தனது மாற்றம் குறித்து அடுத்த நிலை அமைச்சர்களுடன் விவாதித்து அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தது தான் என ஆக்க நினைத்திருக்கலாம்  புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியாகாத சூழலில் ஒரு சிலரை மட்டும் தனது ஆளுமைக்கு கீழ் கொண்டு வர தனது இல்லத்தில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து அமைச்சர்களாகும் வாயப்புள்ளவர்களை அழைத்திருந்தார். அதில்  ஜோசப் மரியதாஸும் ஒருவர். மரியதாஸ் ஒருவித மேல்தட்டு அரசியலாளர் அரசியலில் எல்லாம் சரியாக இருப்பது ஒரு தோற்றம் மட்டுமே ஆனால் அதில்  ஆழ்மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை பற்றிய புரிதல் இல்லாதவர்சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான அவரை மரைக்காயர் அழைத்த போது அதின் பின்னால் இருக்கும் உள் முடிச்சுகள் கொண்ட அரசியலை அவர் அறிந்திருக்கவில்லை. அந்த அழைப்பை தனக்கான இடமாக பெரிமிதமாக புரிந்து கொண்டார். அதே சமயம் சண்முகத்தை பற்றி ஆழ் மனதில் அறிந்திருக்க வேண்டும் . சண்முகத்திடம் தன்னை மரைக்காயர் அழைத்திருப்பது தனிப்பட்ட ஒன்று அவரின் அழைப்பை பற்றி சண்முகத்திடம் பேசி அதை சிக்கலாக்க விரும்பவில்லை. அதே சமயம் மரைக்காயரை நிராகரிக்கவும் இயலவில்லைஅவர் பொறுத்தவரை இது ஒரு அழைப்பு நாளை முதல்வராக வர இருப்பவர் அழைக்கிறார் சண்முகத்துடன் பேசி அவர் செல்ல வேண்டாம் என்ற பின்னர் போகாமல் இருந்தால் அது நாளை சிக்கலை உருவாக்கும் என நினைத்தார். அந்த அழுத்தத்தில் இருந்து வெளியேறி அவரால் இயலவில்லை். அதற்கான நியாயத்தை உருவாக்கிக் கொண்டார். அது தனிப்பட்ட சிறு கூடுகை ஒரு விருந்து யாருக்கு என்ன தெரியப் போகிறது என கணக்கிட்டிருக்கலாம். பொதுவில் விருந்து உபச்சாரத்திற்கு மரியதாஸ் இல்லம் புதுவையில் புகழ் பெற்றது . அதில் உள்ள ஈர்ப்பு காரணமாக அங்கு சென்று அந்த சிறு பிரத்தேயக விருந்தில் கலந்து கொண்டார்


இதற்கிடையில் தனக்கான இடத்தை மரைக்காயர் கொடுக்க மறுக்கிறார் என்பதை கட்சி தலைவர் என்கிற முறையில் சண்முகத்திடம் கண்ணன் முறையிட்டார். அது கண்ணனின் மிக சிறந்த அரசியல் நகர்வு மரைக்காயர் அதை எதிர்பார்ககவில்லை. கண்ணனின் இடத்தை குறைப்பதில் சண்முகத்திற்கும் உடன்பாடிருக்கும் என அவர் கணக்கிட்டிருந்தார். ஆனால் தன்னிடம் கண்ணன் முறையிட்ட பிறகு சண்முகம் அவரை அழைத்துக் கொண்டு மரைக்காயரை பார்க்க சென்றார். சென்ற இடத்தில் ஜோசப் மரியதாசை சந்தித்தார். அது ஒரு ஊழின் நொடியில் அனைத்தும் மரியதாஸிற்கு எதிராக புரிந்து கொள்ளப்பட்டது . தில்லியில் எடுத்த அமைச்சரவை பட்டியலில் எந்த மாற்றமும் இருக்க கூடாது என உறுதியாக சொன்ன சண்முகம் அருகில் இருந்த ஜோசப் மரியதாஸிடம் ஒரு சொல்லும் பேசாமல் கண்ணனுடன் வெளியேறினார். அதன் பிறகு ஜோசப் மரியதாஸ் அளித்த எந்த தன்னிலை விளக்கத்தையும் சண்முகம் ஏற்கவில்லை. அரசியலில் தன்நிலை விளக்கங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை


அதன் பிறகு அவரது அமைச்சரவை காலகட்டங்களில் சண்முகத்துடன் மெல்ல முரண்பட்டு பின் மரைக்காயர் அணியில் சென்று சேர்ந்தார். அது மரைக்காயரின் மிக துல்லியமாக திட்டமிடப்பட்ட நகர்வு என்பதால் மரியதாஸின் முடிவிற்கு உரிய இடத்தை அவர் இறுதிவரை அளிக்கவில்லைஜோசப்மரியதாஸிற்கு நிகழ்ந்தது அரசியல் ரீதியானதில்லை ஊழின் வசத்தாலும் சட்டென சென்று சேர்ந்த இடம் அவருக்கு பின்னாளில் அனைத்து அரசியல் கசப்புகளுக்கு புரிதலும் விளக்கமும் கிடைத்தாலும் காலம் கடந்துவிட்டதை அவர் அறிந்து கொள்ள நிறைய அவகாசம் தேவைபட்டது. அதன் பின் கட்சி நிகழ்வுகளில் அவ்வப்போது தலைகாட்டினாலும் பிறகெப்போதும் அவரால் அரசியலின் மையத்திற்குள் வர இயலவில்லை.1991 சட்டமன்ற தேர்தலில் மரைக்காயர் மரியதாஸை முன்வைக்க அவருக்கு எதிராக நிறுத்த சண்முகம் நினைவில் வந்தவர் காந்திராஜ். ஏறக்குறைய அவருக்கு மிகச சரியான மாற்று . அந்த தேர்தல் சூழலில் ராஜீவ் காந்தி மரணம் நிகழ அந்த அனுதாப ஒட்டில் வெறும் 41 ஓட்டு வித்தியாசத்தில் முதல்முறையாக திமுக வேட்பாளரை வென்று அமைச்சரானார். அவரால் ஒருபோதும் வாக்காளர்கள மற்றும் கட்சி உறுப்பினர்களை சென்று தொடவே இயலாதவராக இருந்தார். அவரிடம் தினம் உரையாடும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அந்த சூழலில் அரசியல் பற்றி பேசும் போது சரியான நுண் தகவல்களை கொடுத்த பின் அதுபற்றிய மிக சரியான அவதானிப்பை பல முறை வைத்திருக்கிறார். அரசியலில் எனது இரண்டாவது காலகட்டம் ஒருவகையில் காந்திராஜிடம் இருந்து ஆரம்பித்தது. அவருடன் சுமார் பத்து வருடம் இணைந்து பயணித்தேன். அவ்வப்போது முரண்பாடுகள் எழுந்தாலும் அது அந்த பயணத்திற்கு தடையாக இல்லை. முதல்வர் ரங்கசாமியை ஆதரிக்க வேண்டும் என முதல் முறையாக அவரிடம் பேசிய போது அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. கடசிக்கும் முதல்வருக்கும் உள்ள பெரிய இடைவெளி அப்படி சொல்ல வைத்திருக்கலாம். பின் என்ன நிகழ்ந்தது என போன பதிவுகளில் விரிவாக கொடுத்திருக்கிறேன். இந்த பதிவில் நான் அவதானிக்க முயல்வது பாதி பயணத்தில் ஏன் தனித்து பயணிக்க முடிவு செய்தார் அதற்கான காரணம் என்ன அது அவரது சொந்த முடிவா அல்லது யாராவது அவரை அப்படி செய்யத் தூண்டினார்களா? என தெரியவில்லை என்பதை விட அந்த தகவல்களை அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை. அதன் பிறகு அவரை சந்திக்காததால் அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியவில்லை. அவரின் தில்லி பயணம் பெரும் தோல்வி அடைந்ததுடன் மேலிட முடிவுகள் அதன் பிறகு வேகம் எடுக்க அவரின் அந்த தோல்வி காரணமாக இருந்தது என்பதால் மிகுந்த சங்கடத்தை அடைந்தார் என நினைக்கிறேன். அதன் பிறகு அவர் முதல்வரை சந்தித்தாக தெரியவில்லை


முதல்வர் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்யும் முயற்சிக்கு எதிராக நான் முன் வைத்த திட்டத்தை முதல்வர் ஏற்றாலும் தில்லியில் அதற்கு எதிரான நடவடிக்கை உடனே துவங்கப்பட வேண்டும் என்கிற கருத்தை காந்திராஜ் தனது தர்க்க அனுபவத்தால் முன்வைத்தபோது தில்லி நடைமுறை மற்றும் அரசியல் சூது என அதன் அத்தனை பற்றிய ஆழ்மன புரிதலை தர்க்க ரீதியில் என்னால் வைக்க முடியவில்லை. ரங்கசாமியும் தில்லியை சரி செய்ய வேண்டும் என நினைத்திருக்கலாம் . என்னிடம் தனிப்பட்ட முறையில் அதை அவர் முன்வைத்த போது என்னால் மறுக்க முடியவில்லை. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜெயபாலிடம் முதல்வர் கொடுத்திருந்தார் போல . அந்த திட்டத்தை ஆரம்பம் முதல் உருவக்கி அனைவரையும் உள்ளே கொண்டு வந்தை பற்றியோ அதன் பின்னால் இருக்கும் அரசியல் உக்தி பற்றியோ அறிந்தவரால்ல ஜெயபால். அரசியல் என்பது வேறு வகையை சேர்ந்தது நீர் விலகி எழுந்து உருக்காட்டுவது. பரவசம் தருவது உலகியல் பார்வையின் வெற்றி தோல்விக்கு அப்பால் நிற்பது. அரசியல் என்பது அதில் திளைப்பது மட்டுமே. அது ஒரு ஆன்ம தரிசனம் போல அந்த தரிசனம் கிடைக்காதவர்களுக்கு அதன் புண்ணகையற்ற வெற்றி தோல்வி என்கிற இருமையை கொடுக்கிறது. மிகச் சிலரை மட்டும் நோக்கி புண்ணகைக்கிறது. ஜெயபால் ரங்கசாமிக்கு வேண்டியவர் என்கிற தகுதியுடன் அரசியலுக்கு வந்தவர். மிக எளிதில் அந்த சூழ்ச்சியில் சிக்கி ஏமாந்திருந்தார் என்று நினைக்கிறேன். காந்திராஜ் தனது வாதத் திறமையை நம்பி தில்லி கிளம்பினார் தன்னுடன் பயணிக்க இயலாதவர்களை அவர் தவிர்க்க நின்னைத்திருக்கலாம் . அது அவர் வரையில் மிகச சரியானது. அது எந்த வகையிலும் வெற்றியடைய போவதில்லை என நான் முன்வைப்பவை ஏற்கப்படாமல் போனதும் அந்த தில்லி பயணத்தில் நான் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதும் எனது ஆறுதலானதே. ஆனால் நடந்தது என்ன என்பதை முதல்வருக்கு சொல்ல வேண்டிய சூழல் எழுந்த போது அதைச் செய்தேன். “கீதா பேக்கிரியில்அவரை பார்த்தது ஊழின் சிரிப்பை போல. அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளை என்னால் பிரித்தறிய இயலவில்லை


காந்திராஜ் தில்லி செல்வது முடிவாகி அங்கு சந்திக்க வேண்டிய அகில இந்திய நிர்வாகிகள் யார் என்பது பற்றி அவருக்கு அங்கு சென்றடைந்த பிறகும் புரிந்து கொள்ள இயலவில்லை. அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து தலைவர் சண்முகத்தின் பிரதிநிதியாக தில்லிக்கு பல நூறு முறை பயணித்தவர். அந்த சூழலில் அங்கு அத்தனை காலம் சென்ற பிறகும் தனக்கென எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. இம்முறை அவர் தனியனாக விடப்பட்டார். வல்சராஜ் தனக்கான நகர்வை மிகச சரியாக செய்திருந்தார். தில்லி தலைமையிடத்தில் அடுத்தடுத்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எதற்கும் இவரிடம் பதில்லை. இறுதியாக அடுத்த முதல்வராக யாரை கொண்டு வரலாம் என்கிற கேள்வியின் ஆழ் அர்த்தத்தை அவரால் உள்வாங்க முடியவில்லை. அவர் செய்த ஒரே தவறு தன்னை முதல்வரின் பிரதிநிதியாக முன்னிருத்தி கேட்ட போது அதை மறுத்து கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை முன்வைத்திருக்க வேண்டும். தனது கருத்தை கட்சியின் கருத்தாக சொல்லியிருக்க வேண்டும். அது சம்பந்தப்பட்ட தரவுகளை அவர்கள் கேட்டபோது தனது கடிதத்தை மட்டுமே அவரால் கொடுக்க முடிந்தது. கட்சி தீர்மானம் என எதுவும் அவரிடம் இல்லை. அப்படி ஒன்றை அவரால் கொடுத்திருக்க முடியாது. முதல்வர் மீதான வல்சராஜ் முரண் வேறு முறையில் புதுவையில் முன்வைக்கப்பட்டதாலும் அதற்கு கட்சித் தலைமையின் ஆதரவு இருப்பதாலும் கட்சி என ஒன்று தனது தீர்மானத்தை இங்கு கொடுத்திருக்க முடியாது


அதை எதிர் கொள்ள ஒட்டு மொத்த அமைப்பும் தனித்தனியாக அந்த தீர்மானத்தை அல்லது கடிதத்தை கொடுக்க முடியும் அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது . இது போன்று ஒன்றை உத்தேசித்தே அது புதுவையில் துவங்கப்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தில்லியில் காந்திராஜிடம் முன்வைக்கப்டட இரண்டு கேள்விகள் ஒன்று சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் அவர் முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மருமகன். அவர் ஆரம்பம் முதலே முதல்வருடனான மோதல் போக்கில் இருந்தார். அவர் பெயரை முன்வைத்துமுதல்வரின் மருமகனே அவரை எதிர்க்கிறார் பிற சட்டமன்ற உறுப்பினர்களை விடுங்கள் சொந்தத்தையே சரியாக கையாள முடியவில்லை என்றால் பிறர் பற்றி என்ன சொல்ல? என்பதை போல முன்வைத்திருந்தனர். அது மிக வலுவாக தில்லியில் எடுப்பட்டது. அதை தவிர்க்க முதல்வர் தரப்பு நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சிக்கு அவர் ஒத்துழைக்கவில்லை அவருக்கு அழுத்தம் அதிகரிக்க துவங்கியவுடன் அவர் சட்டென காணாமலானார். பல மாதம் தொடர்ந்து அவர் புதுவையில் இல்லை. இது முதல்வருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த கேள்வி யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பதாக இருந்தது. நிலைமை அடுத்தடுத்து வேகமெடுக்க துவங்கியது. காந்திராஜிற்கு தனது தில்லி பயணத்தை வைத்து முதல்வருக்கு பின்னடைவை உருவாக்கும் என கணித்திருக்க மாட்டார்.  


அந்த சூழலில் தான் ஜெயபால் மூலம் என்னை முதல்வர் அழைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் தாண்டி இருந்ததால் ஜெயபாலையம் என்னுடன் வீட்டில் உணவருந்திய பிறகு முதல்வரை சந்திக்க சென்றோம். மதியம் 2:30 மணி முதல்வரின் வீடு ஆளரவம் இன்றி இருந்தது. சம்பிரதாயத்திற்கு ஒரு காவலர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். முதல்வரின் கார் வீட்டு வாசலிலும் அவரது பாதுகாப்பு வண்டி சற்று தொலைவில் நிழலில் நின்றிருந்தது. மதிய நேரங்களில் இப்படி இருக்கும் போல என நினைத்துக் கொண்டேன் வீட்டின் கீழ் தளத்திலும் யாருமில்லை முதல் மாடி சென்ற போது அங்கும் யாருமில்லாமல் முதல்வர் மிக மெலிந்த உடல் சற்று கூன் போட்டபடி சட்டை அணியாமல் தரையில் அமர்ந்திருந்தார் பின்னால் அவரது குரு அப்பா பைத்தியம் சாமி உருவம் வரையப்பட்ட மிகப்பெரிய படம் சட்டமிட்டு தரையில் சுவர் ஓரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. காலை அணிவித்திருந்த மாலை வைத்து அந்த படம் எப்போதும் அங்குதான் இருக்கும் போல என ஊகித்தேன். ஆச்சர்யமாக அவரை சூழ்ந்திருக்கும் திரள் என எதுவும் இன்றி வீடு மட்டுமின்றி அவரும் மிக அமைதியாக  இருப்பதாக தோன்றிது. அவரை வணங்கி அருகில் தரையில் அமர்ந்து கொண்டேன்


காந்திராஜின் தில்லி பயண செய்தி அதனால் உருவாகும் அடுத்த கட்ட எதிர் நகர்வு என அனைத்து பற்றிய தகவல்கள் அவரிடம் இப்போது இருக்கலாம் அடுத்த என்ன என்பது பற்றிய ஊகம் கூட அவரிடம் இருப்பதாக தோன்றியது. அந்த நகர்வு பற்றிய திட்டம் யாரிடமும் விரிவாக பேசும் சூழல் அப்போது உருவாகியிருக்கவில்லை. முதல்வரை ஆதரிப்பது என்கிற கருதுகோளை அடைந்த பிறகு பொதுச் செயளாலர் என்கிற முறைமையிலும் என் இணக்கமான சக பயணியாக காந்திராஜை அணுகி எனது யோசனையை சொன்ன அவருக்கு முதல்வர் இதற்கு ஒத்துழைக்கும் சாத்தியகூறு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்றார். அன்று அமைச்சரவை கூடத்தில் நான் அதை முழுமையாக அதை சொல்லும் சூழல் உருவானது. இதற்கு புன்புலம் யார் என்பதை அவதானிப்பது அவருக்கு எந்த சிக்கலும் இருந்திருக்காது


அவரை வணங்கிய பின்னர் அவர் அருகில் சென்று தரையில் அமர்ந்தேன். அவர் சொன்னவைஅரி இந்த பதவிக்கு நான் விரும்பி வந்ததில்லை இதோ இருக்கிறாரே இவர் சென்று அமர் என்றதால் இருக்கிறேன். இப்போது வேண்டாம் போதும் இறங்கு என்றால் துளி மிச்சமில்லாமல் அதிலிருந்து விலகிவிடுவேன்என்றார் அவருடன் முழுத் தனிமையில் உரையாடியதில்லை என்பதால் அவரது குரல் அங்கில்லாதவர் போல ஒலித்தது. அதனுடன் உரையாட இயலாது. நான் எதிர் வார்த்தை இல்லாமல் அமர்ந்திருந்தேன். நீண்ட நேரம் ஒரு சொல்லும் இல்லாமல் தனக்குள் ஆழ்ந்திருந்தார். பிறகுவா சாப்பிடலாம்என்றார். நான் இயல்பாகஇப்போது தான் சாப்பிட்டேன் நீங்கள் சாப்பிடுங்கள்என்றேன். அங்கு நிலவிய அசாதாரண சூழலை முதலில் நான் உள்வாங்கவில்லை. மெல்ல அந்த உளநிலையை அடைந்தேன். நான் ஜெயபாலுடன் என் வீட்டில் உணவருந்தி வந்ததை அவரிடம் சொன்ன போது சிறிய சீற்றம் அவர் கண்களில் உருவானதை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெயபாலை நோக்கிஇங்கு சாப்பிடலாம என்று தானே அழைத்து வரச் சொன்னேன்என கடிந்து கொண்டார். பிறகு அவர் உணவருந்தி பின்னர் பிற விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார் அதில் தில்லியில் நிகழ்ந்ததைப் பற்றி ஒரு சொல்லும் இல்லை. நானும் அது பற்றி எதுவும் அவரிடம் உரையாடவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...