ஶ்ரீ:
பதிவு : 681 / 870 / தேதி 19 ஜூன் 2025
* அனுபவங்களின் சொல் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 79.
1997 களில். புதுவை மாநில அனைத்து கட்சி இளைஞர் பேரவை அமைப்புகள் இளைஞர் காங்கிரஸ் தலைமையை ஏற்க அதன் அமைப்பு பலம் பின்னணி காரணமாக இருந்து. கடந்த மூன்று ஆண்டுகளாக கள செயல்பாட்டில் ஈடுபட ஆரம்பித்தது பொதுமக்கள் பிரச்சனைகள் அதற்கு அரசு சார்ந்த எதிர்வினை போன்றவற்றை தொடர்ச்சியாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தது புதிய அணுகுமறையாக அவர்களால் பார்க்கப்பட்டிருக்கலாம். இளைஞர் காங்கிரஸ் அமைப்பை புதுவையில் மிக பலமான ஒன்றாக உருவாக்கிய சூழல் தானாக திரண்ட ஒன்று. நான் கனிந்து வந்த அந்த நேரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதுவரையில் என் கனவில் திட்டமாக மட்டுமே இருந்தது. அந்த திட்டங்களின் துவக்கம் 1990 களின் ஆரம்பத்தில் அரசியலில் ஒரு முதிரா சிறுவனாக அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலனுடன் புதுவை மாநிலம் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து அரசியலில் எதிர் கொண்ட சிக்கலை மையப்படுத்தி உருவானவை . அன்று சந்தித்த சிக்கல்கள் தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் பதவி நிலமுடை சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எதிர் கொண்டவை . அவர்களை கடந்து இளைஞர் காங்கிரஸ் இளம் தலைவர்களை கண்டடைவதும் அவர்களை செயல்பட வைப்பதும் இயலாது என புரிந்து கொண்டேன். புத்துயிர் கொள்ள வைக்க ஒவ்வொரு முறையும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு நிர்வாகிகளை நியமிக்கும் போது ரசிகர் மன்றம் போல வேண்டியவர்களுக்கு பதவி வாரி வழங்கும். அவர்கள் பலர் களத்தில் செயல்படாதவர்கள். சிலர் உள்ளூர் அரசியலுக்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள். மற்றவர்கள் சண்டியர்களை போல தனி ஆளுமை யாருக்கும் கட்டுப்படாதவர்கள்.
இவர்களை கொண்ட அமைப்பு ஒரு போதும் ஜனநாயகப் பாதைக்கு வரவே முடியாது என்கிற ஏக்கம் எப்போதும் மேலோங்கி இருக்கும். மாநில காங்கிரஸ் அமைப்பும் இளைஞர் காங்கிரஸும் எதிரிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். கண்ணன் உருவாக்கிய கசப்பு அவரது அமைப்பை வீர்யமிக்கதாக்கி அவருக்கு அரசியல் ரீதியான பலனை கொடுத்தது. ஆனால் அவரால் ஒரு முனையில் குவிக்கப்பட்ட வெற்றி பிறர் தங்களுக்கும்மானதாக நினைக்க வைத்த ஒன்று. ஆனால் அரசியலில் ஒருபோதும் கடக்க முடியாத எதிர்பார்ப்புகளை தொண்டர்களிடையே உருவாக்கி பின் நிறைவேறாமையின் எல்லையில் அமைப்பை மெல்ல சிதைத்து விடுகிறது. அங்கிருந்து கண்ணன் அமைச்சரானார் அது அவரளவு வெற்றி. அவரை தாண்டி பிறிதொருவரின் பெயரை இன்று வரை சொல்ல முடியாது. நம்பிக்கை இழந்து அவரை சுற்றியிருந்த முதல் நிலை அரசியல் செயல்பாட்டு அமைப்பு சிதறி அவரின் வீழ்ச்சியை துவங்கி வைத்தது . பாலனும் அதே போன்று அர்த்தமில்லாமல் ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் அமைப்புகளை ஒருபோதும் இணைக்க இயலாத பெரிய இடைவெளியை உருவாக்கியது.
கண்ணன் பெரும் ஆளுமையாக உருவெடுத்த போது அனைத்து தலைவர்களும் அவருக்கு அஞ்சினர். ஆனால் பாலனின் ஆளுமை மிக பலவீனமானதாக எளிதில் வீழ்பவராக, அவரது செயல்பாடுகள் நிஜமான அரசியல் களத்தை சென்று தொடவே போவதில்லை என அவருக்கு மட்டுமின்றி அவருக்கு எதிரான அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்திருந்தது.அதன் பலன் அவரால் முதல் நிலைக்கு செல்லவே இயலாமல் போனது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் இவை அனைத்தும் மாறிவிடும் என அவர் நினைத்தார் ,நம்பினார் எங்களையும் நம்பவைத்தார் . எங்களுக்கும் ஒரு புள்ளி வரை அது எளிதில் நிகழும் கணக்காக தெரிந்தது. 1991ல் நிகழந்த சட்டமன்றத் தேர்தலில் முதலியார் பேட்டை தொகுதியில் அவர் தோற்ற முறை அனைத்தையும் சிதறடித்தது.
பாலனுக்கு எதிராக செயல்படுவதில் உள்ள சிக்கலில்லாமையால் அதை பயன்படுத்தி இளைஞர் காங்கிரஸ் வளர்ச்சியை தங்களுக்கு எதிரானதாக நிலமுடை சமுதாயத்தால் தலைவர் சண்முகத்தின் முன் வைக்கப்பட்ட போது அதை ஏற்றார். ஆனால் கடந்து வந்த பாதையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு எதிர் கொண்ட வளர்ச்சியின்மைக்கு அதன் அமைப்பு ஜனநாயக முறையில் இருந்து நழுவியது காரணம். சண்முகம் இன்றளவும் கட்சியை பலமுள்ளதாக்கி அதன் தலைமையில் அமர்ந்திருப்பது கட்சியை அனைவருக்கும் பொதுவாக்கியது. நடைமுறை சிக்கல் உருவாகும் போது அவற்றை உரையாடல் வழியாக எதிர் கொண்டது போன்றவையில் இருந்து எனக்கான உருவகங்களை பெற்றுக் கொண்டேன். அது எத்தகைய சிக்கல்களை தீர்க்க வல்லதாக இருக்கும் என்பதை குறித்து ஒரு கனவு போல நண்பர்களிடம் விவாதித்திருக்கிறேன் . அதை நிறைவேற்றும் வாய்ப்பும் நாளும் எனக்கு அமையும் என தலைவர் சண்முகத்தை சந்தித்த பிறகும் கூட நினைத்திருக்கவில்லை.
1996 களில் மத்திய மாநில் தேர்தல் தோல்விக்கு பிறகு அமைப்பு முற்றாக சோர்வடைந்து விட்டது. காங்கிரஸில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் நிச்சயமற்ற சூழல் நிலவியது. கட்சி தலைவர் நரசிம்மராவிற்கு மாற்றாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சீத்தாராம் கேசரியை தலைவராக கொண்டு வந்தனர். அதே நேரம் தேர்தல் ஆணையர் TN.சேஷன் அது வரை காகித அளவில் இருந்த தேர்தல் விதிமுறைகளை முற்றிலும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருந்தார். அது அவருக்கு அகில இந்திய அளவில் புகழை பெற்றுத் தந்தது. அது கொடுத்த உற்சாகத்தில் அவர் அடுத்ததாக கட்சி தேர்தல் விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கினார். உட்கட்சி தேர்தலிலும் அவர் நேரடியாக தலையிட அனைத்து கட்சிகளும் தேர்தல் நடத்த முடிவு செய்திருந்தன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரி கட்சியில் தன் நிலையை உறுதிபடுத்திக் கொள்ள கட்சிக்குள் முறையான அமைப்பு உருவாக்க திட்டமிட்டார். சோனியா காந்தியின் அரசியல் நுழைவு மிக சீக்கிரம் என்கிற சமிக்ஞை தென்பட்ட சூழலில் முறையாக தேர்ந்தெடுக்கப்படுவது தனக்கு சாதகமானது என அவர் நினைத்திருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு அனைத்து மாநில தலைவரை நியமிப்பது பதிலாக உட்கட்சி தேர்தல் வழியாக தேர்ந்தெடுப்பட வேண்டும் என அறிவித்தது. வழக்கம் போல அது வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் தீவிரமாக கொண்டு செல்லப்பட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இம்முறை கட்சி தேர்தல் சமரசமின்றி நடைபெரும் என தில்லியில் நடந்த கூட்டங்களின் வழியாக அறிந்திருந்தேன்.
தலைவர் சண்முகம் தேர்தல் பற்றி அறிவித்த போது அது வழக்கமான கண்துடைப்பு விளையாட்டாக மாநில கட்சி நிர்வாகிகளால் பார்க்கப்பட்டது. ஆரம்ப கட்ட உறுப்பினர் சேர்க்கை எந்த தொகுதியிலும் நடைபெறவில்லை. உறுப்பினர் சேர்க்கும் முறைமைகள் மிக விரிவானவை சோர்வை தருபவை. 25 உறுப்பினரை சேர்க்கும் நபர் தீவிர உறுப்பினராகி ஓட்டுரிமையுடன் தொகுதி நிர்வாகியாக நியமிக்கப்படுவார். அன்றுவரை 25 உறுப்பினர் சேர்கை என்பது வெறும் கண்துடைப்பாக நடைபெறும். வாக்காளர் பட்டியலை பார்த்து உறுப்பினர் பெயர் பதிவு செய்யப்படும். உறுப்பினர் யாருக்கும் தாங்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில வருடங்கங்களுக்கு முன் உறுப்பினர் எண்ணக்கை புதுவை மொத்த ஜனத்தொகையும் தாண்டிய விந்தை நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கும் பணி ஏறக்குறைய செயல்படாததை அறிந்து சண்முகம் நீர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தில்லியில் புதுவைக்கு மேலிட தேர்தல் பொருப்பாளர் வர இருப்பதையும் தேர்தல் நடைபெற இருக்கும் தேதி உறுப்பினர் சேர்க்கை கால கெடு போன்றவற்றை அறிவித்ததுடன். தொகுதி தேர்தல் நடத்துனரை நியமித்த போதுதான் அதன் தீவிரத்தை நிர்வாகிகள் உணர்ந்தனர். அதற்குள் காலம் கடந்திருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக