ஶ்ரீ:
மணிவிழா - 67
19.07.2025
* உற்று நோக்கும் காலம் *
வாழ்கையில் அது போல ஒரு புயல் வரும் என நான் ஊகிக்கவில்லை. அது நிகழும் போது திகைப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது . மண்ணில் இருந்து வேரோடு பிடிங்கி எறிவது போல அந்த புயல் வீசிக் கொண்டுருந்தாலும் அதன் நோக்கம் வேறொன்று போலும். ஆவது ஆகுக. புயலால் அனைத்து புறத்திலிருந்தும் வீசப்படும் காற்று செடி உயிருக்கு துடிப்பது போல ஓலமிடுவது போல அனைத்து உறுப்புக்காளாலும் மண் படிந்து இறைஞ்சுவது போல செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாகி அதன் விசைக்கு ஒப்புக் கொடுத்தேன். சரணாகதி போல காப்பது பிறிதொன்றில்லை. நான் இங்கு காப்பது பற்றிய வேறொரு புரிதலில் இருந்தேன். அது இரண்டிற்கும் சாத்தியமான நிலை. காப்பாற்றப்படுவது அல்லது கைவிடப்படுவது என இரண்டும் அங்கு நிகழ்கிறது. நான் இரண்டையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். காப்பாற்றப்படுவது ஒருவகை விடுதலை என்றால் கைவிடுப்படுவது வேறொரு வகை விடுதலை. இரண்டும் கட்டுக்களில் இருந்து விடுபடுதல். இரண்டும் அக புற என்கிற எந்த வறையறைக்கு உட்படாதது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று முயங்குவது. காப்பற்றப்படுதலில் இருந்து அகவய உலகை புரிந்து கொள்ளவதைப் போலவே கைவிடப்படலிலும் புறவய உலகை புரிந்து கொள்ள முயலலாம் .
சட்டென ஒரு புள்ளியில் புயல் விலகிய போது உடலும் உள்ளமும் சோர்ந்திருந்தது. மறு பிறவி என அதுவரை இருந்த அத்தனை பிடிமானமும் விலகி புதிய உலகம் ஒன்று துலங்கி இருந்தது. அங்கு எனக்கான இடம் பற்றி எந்த முன் முடிவும் இல்லாமல் அந்த உலகின் பார்வையாளன் போல உருவகித்துக் கொண்டு அது என்னை சுற்றி உருவாக்கி இருந்த அதனுள் நுழைந்தேன். அப்போது எனக்குள் இருந்தது வெறுப்பும் காழ்ப்பும். புயல் அகவயமாக உலுக்கி எடுக்க உடன்பிறந்தார் அகவயத்தில் உருவாக்கி என் ஆழுள்ளத்தில் பொங்கி பெருகிய எழுந்த கேள்வி ஒன்று அது “இவர்கள்?ஏன்? இப்படி?….” என்பதாக இருந்தது. யாரை இத்தனை நாள் அவர்களின் சங்கடங்களில் இருந்து காப்பாற்றி இருந்தேனோ அந்த உறவுகள் என்றும் எனக்கு கடமைபட்டவர்கள். தங்களின் நலன் கருதியாவது நிர்பந்தத்தின் அச்சத்தின் காரணமாக தங்கள் தேவையின் காரணமாக என்னுடன் இணக்கமாக பயணிக்க வேண்டியவர்கள் அவர்கள் அனைவரும் இணைந்து எனக்கெதிராக கிடைத்த சந்தர்பத்தில் என்னை காயப்படுத்த தயங்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இருள் செயல்வடிவம் பெற்றது.அதன் பின்னால் உள்ள எளிய மானுட சிந்தனை தான் எனக்கு தெரிந்தது. மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள் தங்களால் தவிர்த்திருக்க வேண்டிய சந்தர்பங்களில் அவர்கள் அறியாத இருள் உலக தெய்வங்கள் ஏறி வருகின்றன அவர்கள் முன்வைத்த அத்தனையும் அபத்தம் என நன்கு அறிவார்கள் ஆழத்து இருளில் இருந்து எழும் தெய்வம் அழுக்கும் வன்மமும் உருவென கொண்டது ஒரு நாளும் சுத்தமானவற்றை அவற்றால் தர இயலாது.
அம்மவை மையம்படுத்தி அவர்கள் என் மீது குற்றமாக சுமத்த நினைத்த பல விஷமங்கள் பின்னால் உள்ள படிமத்தை அறிவேன் அதற்கு ஒருநாளும் பதில் வைக்க முடியாது என்றாலும் ஒரு புள்ளியில் என்னை கடுமையாக பாதித்தது. அது ஆத்மாவை அழிப்பது அவர்கள் செய்ய முயன்றது ஆன்மக் கொலை ஆனால் உறவுகளிடம் இருந்து உலகம் இதைத்தான் எதிர்பார்க்க வேண்டும் என தெரிந்திருந்தேன். தற்காலிக புயல் ஓய்வில் இருந்து வெளிவந்த போது எனக்கு முன்பாக இருந்த வழிகள் இரண்டு. வெறுப்பு வழியாக பழிவாங்கும் சந்தர்ப்பத்தை காத்திருப்பது அல்லது அன்பு அது என்னியல்பால் வழிநடத்தப்படுவது . என்னால் வெறுப்பை வாழ்நாள் முழுவதும் எடுத்து சுமந்து கொண்டு பயணிக்க இயலாது முதன்மை காரணம் அது எனது ஆத்மாவை அழிக்க வல்லது. அதை தூக்கி சுமந்த என பெரியதந்தை மற்றும் அம்மா சென்று சேர்ந்த இருளை மிக அருகே இருந்து பார்த்தவன். இரண்டு அவ்வளவு கசப்பை தூக்கி சுமக்கும் அளவிற்கு அவர்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல அதற்கான தகுதியற்றவர்கள். மன்னித்து அதை கடந்து செல்வது எனது வழிமுறை இப்போதும் அதையே செய்ய முடிவெடுத்தேன்.
அம்மாவின் மரணத்திற்கு பிறகு உடன்பிறந்தார் அனைவரும் மெல்ல வீட்டிற்கு வர போக இருந்தனர் யாரும் என்னிடம் வந்து அவர்களின் கடந்த கால நடத்தைக்கு மன்னிப்பு கேட்க்கவில்லை நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை சிலர் குற்ற உணர்வுடன் இருப்பதாக பட்டது சிலர் வேறு ஒருவரின் தூண்டுதலுக்கு பலியானதாக சொன்னார்கள் வேறு சிலர் ஒன்றும் நிகழாதது போல் நடந்து கொண்டனர். பாவம் மிக எளிய உயிர்கள்.
வாழ்க்கை முற்றாக மாற்றிய அந்த சந்தர்ப்பத்தை மீண்டும் ஒருமுறை நினைவுறுகிறேன். ரிஷிகேஷில் கங்கைநதி புரண்டு ஓடும் கரைக்கு மிக அருகில் அதன் துமிகள் தெறித்து உடலை உடையை ஈராமக்கும் நெருக்கத்தில் அந்த மேடையின் மீது அதர்ந்திருந்தேன். மன அழுத்தம் தாளாமல் உள்ளம் விம்மி இருக்க நான் அழுது கொண்டிருந்தேன் என்பதை கண்களின் வழியும் நீரில் உணர்ந்தேன். கட்டுப்படுத்தும் எண்ணமில்லாமல் அருகில் இருந்தவர் தெரியாமல் கங்கை நீரின் நீராவியில் உடல் நனைந்திருக்க கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நான் எப்போது கடைசியாக அழுதேன் பத்து வருடத்திற்கு முன்பு . அப்பா இறந்த போதும் அழுததாக நினைவில்லை. அவரது மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பது காரணமாக இருக்கலாம். மருத்துவ உதவியால் அவரது ஆயுளை நீட்டித்துக கொண்டிருந்தேன் கடைசியாக சென்னையில் மலர் மருத்துவ மணை எதிரில் தனது காருக்காக காத்திருந்த அவரிடம் சென்றேன் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் அவரை பார்த்துக் கொண்ட புகழ்பெற்ற மருத்துவர் TJ செரியன் சொன்னார். “போதும் அரி அவரை நிம்மதியாக மரணிக்க விடு” என்று. அதன் பிறகு நான் சென்னை செல்வதை நிறுத்திக் கொண்டேன்.ஆனால் மீராபாய் அக்கா இறந்த போதுதான் கதறினேன் அந்த மரணம் குறித்து மட்டுமல்ல எனது எதிர்காலம் இருண்டிருந்தது அதை குறித்தும் அந்த கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இனி ஒவ்வொரு மரணத்திலும் நான் இதைத்தான் செய்ய போகிறேன் போலும் என்பதாக மனம் கனத்துக் கிடந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக