ஶ்ரீ:
மணிவிழா - 87
04-09-2026
* முடிவுற்ற செல்திசை *
தென்னிந்தியா முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா குழு நிகழ்வு பற்றிய திட்டமிடல் அனைத்திலும் ஒருவித இடக்கரடக்கலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தும் நின்று சட்டென உதிரிகளாக திரிந்து போய்க் கொண்டிருந்தது. திருப்பதி சின்ன ஜீயர் துவங்கி வேளுக்குடி கிருஷ்ணன் என நகர்ந்து அனைத்தையும் நகர முடியாமைக்குள் சென்று கொண்டிருந்தது . அது அளித்தது மன சோர்வல்ல என்றாலும் மிக நுண்மையான பிறிதொரு புரிதல். அதற்கு எதிராக வேகமாக செயல்பட முயற்சிப்பதில் உள்ள சிக்கலை மிக ஆழமாக உண்ந்திருந்தேன். அப்போது என்னிடம் நான் சொல்லிக் கொண்டது சிறிது காலம் அனைத்திலிருந்தும் விலகி நில். பதறாதே காலம் அதை நிகழ்த்த முடிவெடுத்திருந்தால் காலப் போதாமை நிகழாது. அனைத்தும் மிக சரியாக நிகழ்நதேறும். அதுவரை மனதை அமைதிபடுத்த பிறிது எதையாவது செய் என ஆழ்மனம் சொன்னபோது. நான் நம்மாழ்வாரின்“திருவாய் மொழிக்கு” ஒரு எளிய நவீனபாணி விளக்கம் எழுதிப்பார்த்தால் என்ன? என தோன்றியது ஒரு “கீதா முகூர்த்தம்” அதற்கு விளக்கவுரை எழுத நினைத்தது விட அபத்தம் பிறிதொன்றில்லை.
அதில் ஈடுபடும் போது அது அளித்த புரிதல் “என்னுடைய மொழியின்மை”. அது வரை என்னை நான் அந்த கோணத்தில் அவதானித்ததில்லை. மொழி என்னை கைவிட்டதாக நான் எப்போதும் உணரந்ததில்லை. நினைத்ததை சொல்லில் கொண்டு வரும் ஆற்றல் எனக்கு எப்போதும் இருந்தது. ஆனால் இப்போது இது வேறு உலகம் அதற்குரிய கலைச் சொல் இல்லாமல் அவற்றை வெளியிட இயலாது. நவீனமானாலும் அதுவே அதன் அடிப்படை சட்டம். எக்காலத்துக்குமான தத்துவம் நவீனத்துடன் முயங்கியே சொல்லென திரள்கிறது என்பதால் தத்துவம் ஒரு போதும் காலாவதியாவதில்லை. அதை நவீனத்தில் வைத்து சொல்ல இன்னும் அதீத திறமை மற்றும் மொழி தேவையாகிறது என அது என்னை உணரவைத்த அந்த தருணத்தை நினைவுறுகிறேன். என்னுள் அளவில்லா ஆற்றாமை எழுந்து என்ன செய்வது என புரியவில்லை. அந்த எண்ணத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு பலமுறை வாசித்த வியாக்யணத்தை மீளவும் வாசிக்க துவங்கினேன். வாசித்து பக்கம் கடந்து சென்றாலும் ஒரு சொல்லும் அகத்தில் இறங்கவில்லை.அதன் மணிபிரவாள நடை அர்த்தம் செறிந்தது. அந்த கலைச் சொற்கள் இல்லாமல் வியாக்யாணம் எழுத முடியாது. ஆனால் அது இரும்பு கடலை தெளிவாக புரிந்து கொண்டாலும் அதை நவீன படுத்துதல் என்னால் இயலாது. அதற்கான திறம்மிக்கவர்கள் நவீன உலகில் உருவாகி வரவேண்டி இருக்கிறது. ஆனால் அதைவிட அது தெளிவாக சொன்ன செய்தி என் “மொழியின்மை” பற்றிய போதாமை.
என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனக்குள். சற்று நேரம் விட்டு மனதை தொகுத்துக் கொண்டு மீண்டும் வாசிக்கலாம் என சற்று கால அவகாசம் கழித்து வந்த போது பெரிய மாற்றமென ஏதுமில்லை. வலைபக்கத்தில் ஏதாவது தேடலாம் என முன்பு பழக்கத்தில் இருந்த “அனங்கராச்சாரியாரின்” வலைப்பூ தளத்தை திறந்து பாசுரத்திற்கான நேர் பொருளை வாசித்துக் கொண்டிருந்தேன். “தற்செயலாக” கை பட்டு சொடுக்குண்டு அது பழக்கமில்லாத பிறிதொரு முற்றும் புதிய தளத்தை திறந்து கொடுத்தது. அது “ஜெயமோகன்.இன்” அவரின் வலைதளம்.
ஜெயமோகனை எனக்கு இந்தியாடுடே முன்பே சிறிய அறிமுகம் செய்திருந்தது. அதில் பிரதானமாக இருந்தது அவரின் இளைஞர் ஈர்ப்பு பற்றிய அதன் கணிப்பு. இளஞர்களை கவரும் ஆங்கில எழுத்தாளர் “சேத்தன் பகத்திற்கு” இணையாக தமிழில் ஜெயமோகன் சொல்லப்பட்டிருந்தார் . அது மட்டுமே எனக்கு அவரை பற்றிய அறிமுகம் மற்றும் ஆர்வம் தாண்டி வேறொரு செய்தி சொன்னது . நான் இதுவரை “சேத் பகத்தின்” எந்த நூலையும் வாசித்ததில்லை என்றாலும் “சேதன் பகத்” பற்றி சிறிது அறிந்திருந்தேன். இந்திய டுடே மீதிருந்த பெரும் மதிப்பு காரணமாக அதில். சொன்னவற்றிற்கு மேலதிகமாக ஆராய்ந்து பார்க்க தோன்றவில்லை.
ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் உருவாக்ககமே தேங்கி நின்ற ஆன்மீகத்தில் நவீன இளைஞர்களை உட்கொண்டு வரவேண்டும் என்கிற விழைவின் அடைப்படையில் உருவானது . அதன் காரணமாகவே நவீன கருத்தியல் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளயலும் இயலும் என்கிற நம்பிக்கை முற்றாக தடைபெற்ற சூழலில் மாற்று வழிகளை பற்றிய சிந்தனையில் இருந்த போது “ஜெயமோகன்” வலைதளத்தில் நுழையும் வாய்ப்பு அமைந்தது.
அவரது தளத்தில் நுழைந்த போது அதில் உள்ளவற்றை வாசிப்பதன் மூலம் அவரை ஆவதானிப்பது எனது எண்ணமாக இருந்தது. அதன் வழியாக அவர் எனக்கு எப்படி உதவ முடியும் என புரிந்து கொள்ள நினைத்தேன். வெண்முரசின் “முதற்கனல்” சில அத்தியாயங்களை வாசிப்பதன் வழியாக அதன் தத்துவ செரிவு முதலில் எனக்கு புரியவில்லை. அதுவரை எனக்கு தெரிந்த நான் வாசித்திருந்த சிறுகதை மற்றும் நாவல்கள் அனைத்தும் சமூகக் கதைகள். இலக்கிய வாசிப்பு அறிமுகமாகி இருக்கவில்லை. மேலதிகமாக அன்றைய சூழலில் முற்போக்கு என்கிற வகைமையில் ஆன்மீகத்திற்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் ஒரு மோஸ்தராக இருந்த காலம். அவை எனக்கு எப்போதும் மனவிலக்கத்தை கொடுத்தன என்பதால் அத்தகைய எழுத்தாளர்களை கவனமாக தவிர்த்திருந்தேன். “வெண்முரசு எனக்கு படைபுலகத்தின் பிறதொரு பாதையை காட்டிக் கொடுத்தது. வேதாந்தத்தை மிக நுட்பமான அதே சமயம் புதிய கோணத்தில் முன் வைத்து. அதன் அடியில் இருந்த சாமான்யம் ஈர்ப்பும் விலக்கத்தையும் கொடுத்தது. அறிந்திருந்த அத்தனை ஆன்மீகக் கருத்தை மறுத்தும் பிறிதொரு பார்வையை முன்வைத்தது. என்றாலும் அதை மிக கவனத்துடன் கையாண்டிருந்தது.
ஒருபுள்ளியில் அதை வாசிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆனால் அதன் கருத்துக்கள் தொடர்ந்து மனதை தொந்தரவு செய்தன. ஏன் மனம் பிறிதொரு கோணத்தை ஏற்க மறுக்கிறது என அவதானிக்க துவங்கினேன். அதற்கான தர்க்கத்தை உருவாக்கிக் கொண்டேன். ஒன்று ஜெயமாகனுக்கு இளைஞர் மத்தியில் உள்ள ஈர்ப்பும் அதிலிருந்து நான் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதற்காக அதை தொடர்ந்து வாசித்தாக வேண்டும். அதை ஏற்பதும் மறுப்பதும் அதன் பின் நிகழ வேண்டியது. வாசிக்காமல் அந்த இடத்தை அடைய இயலாது. சிக்கல் அது எனது எண்ணத்தை நிலைப்பாட்டை மறுக்கும் பல கருத்துக்களை முன்வைப்பது என்னை தொந்தரவு செய்கின்றன. ஆனால் அவை என்னை மாற சொல்கிறதா? என கேட்டுக் கொண்டால் இந்த வாசிப்பு அதை நோக்கியதல்ல. நான் சார்ந்த உலகிற்கு வெளியே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனபதை இதன் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும். கண்களுக்கு தெரியும் நிதர்சணம் நான் வாழும் உலகை விட பல்லாயிரமடங்கு பெருகிய பெருவெளி எனக்கு என்ன சொல்ல வருகிறது என இந்த வாசிப்பு எனக்கு புரியவைக்கலாம். முதிரா இளமை காலகட்டத்தில் வைக்கம் முகமது பஷீர் எழுதிய சிறுகதை தொகுப்மையும் வாசித்திருந்தேன் “என் வாப்பா வீட்டில் ஒரு யானை இருந்தது” என அதன் தலைப்பு இருந்ததாக நியாபகம்.
சிறுவயதில் துரதிஷ்டவசமாக பாரதிதாசன் எழுதிய பிரகலாத சரித்திரம் என்கிற நாத்திக பிரச்சார நூலை அதன் வகைமை தெரியாது வாசித்தது உருவாக்கிய அதிர்வு எப்போதும் தங்கி இருந்தது.
அதன் பிறகு முற்போக்கு என்கிற சொல்லே கடும் ஒவ்வாமையை உருவாக்கியது. அந்த முற்போக்கின் சாயலை புதுவையில் நிகழும் கம்பன் விழா மற்றும் காப்பிய விழாக்களில் பார்த்திருக்கிறேன். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். இதை பெருமை என ஏன் நினைக்கிறார்கள். இவற்றை மறுக்கும் வாதம் எப்படி இருக்கும் என எண்ணுகிற அதே வேளையில் இதை செய்வதனூடாக பிற மனிதர்களின் தலைகளில் சென்று அமர்கிறார்கள். பிறரின் நம்பிக்கையை நகையாடுகிறார்கள். அதை தங்களது அடையாளமாக முன் வைக்கிறார்கள். அதற்கு நேர் எதிர்புறமாக பக்தி மரபிலக்கியத்தை மேலும் மேலும் பக்தியை நோக்கி செலுத்துவதாக நினைத்து அந்த அவையில் கூடியிருந்தவர்களை தவிர அதை தவிர்த்து தங்கள் அன்றாடங்கிளல் மூழ்கி இருந்தவர்களுக்கு இவர்கள் சொல்ல ஒரு சொல் இல்லை. இரண்டும் இரண்டு எல்லைகள் மத்தியில் மக்கள் கங்கையை போல பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வகை வாதங்களும் அவர்களை சென்று சேரப் போவதில்லை என்பது இன்னும் விந்தை.
ஜெயமோகனின் எழுத்தில் முதலில் ஒவ்வாமை இருந்தாலும் அதில் பிறிதொரு சாரம் இருப்பதை ஆழ்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. இனி வாசிக்காமல் இதை கடந்து செல்ல இயலாது என்பதால் அப்போது மனதளவில் ஒரு நெறியை உருவாக்கி கொண்டேன். வாசிப்பில் எழும் முரணை இரண்டு வகையாக பகுத்துக் கொள்வது .1.புதிய கருத்துக்களை ஏற்க இயலாமனால் அதை தர்க்கத்தில் வைத்து ஏற்பது. ஏற்க இயலாதவைகளை வாசித்து கடந்து செல்வது. 2. வாசிப்பின் தொடர்ச்சியில் எங்காவது அந்த முரண்களுக்கான சமாதானம் கிடைத்தால் அப்போது அதை ஏற்பது. ஒரு புள்ளியில் ஏற்க இயலாதவைகளையும் கடந்த வாசிப்பு காலத்தில் அதற்கான சரியான சமாதனம் கிடைக்க அவற்றில் பலவற்றை ஏற்க துவங்கினேன். அதன் பின்னரே மெல்ல இலக்கிய வாசிப்பு அறிமுகமானது.
எழுத்தின் வழியாக எழுதாத சொல்லும் கருத்தும் மனதில் எண்ணமாக தோன்ற ஆரம்பித்தவுடன் அதில் முழுமையாக மூழ்க இயன்றது. எனக்கு ஆழ்மன அமைதியின்மைக்கு எதிராக அவரிடமிருந்து ஏதாவது பிடி கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையை அது அதிகப்படுத்தி இருந்தது . அவருடைய தளத்தில் நுழைந்து அத்தனையும் வாசிக்கத் துவங்கினேன். அப்போதும் அது இலக்கியம் பற்றிய கருதுகோலை புரிந்து கொள்வதற்கு அல்ல “ஜெயமோகன்” எனகிற அந்த ஆளுமையை அவதானிக்கும் பொருட்டு. என் இயல்பில் நான் ஒன்றை புரிந்திருந்தேன். எனக்கு “சொல்,சிந்தனை,செயல்பாடு என அனைத்தும் ஒரு நேர் கோட்டில் நிற்பவர்கள் மேல் உள்ள ஈர்ப்பு. அது இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு வலிகிவிடுகிறேன். எனது ஆதர்சமாக உணர்ந்த மிக சிலரில் இதை உணர்ந்தே அவர்களுடன் பயணிக்க இயன்றது.
ஜெயமோகன் எழுத்தும் அது எனக்குள் நிகழ்த்திய மகத்தான மாற்றம் அவரை நேரில் சந்திக்க வைத்தது. பின் எனக்கு நிகழ்ந்தவைகளை பற்றி முன்பே பதிவிட்டிருக்கிறேன். விரிவாக இதில் பின்னால் சொல்ல நினைக்கிறேன். கீதை உரை எனக்கு தனித்த ஒரு செய்தியை கொடுத்திருந்தது. அவரின் இந்து ஞான மரபு நூல் அனைத்து வகையிலும் எனது எதிர்பார்பை நிறைவு செய்திருந்தது. “திறந்த அரங்கிற்காக” நான் தேடிக் கொண்டிருந்த பாடத்திட்டத்திற்கு மிக பொருத்தமான நூல். ஆனால் அதை வைத்து யாரை உள்ளே கொண்டுவர இயலும் என புரியவில்லை. வேளுக்குடி கிருஷ்ணனிடம் ஜெயமோகனின் நூல் பற்றிய அறிமுகம் செய்து “திறந்த அரங்கம்” நிகழ்த்த இருக்கும் விவாதங்களில் அவருடன் மேடையில் தோன்ற இயலுமா என கேட்ட போது மறுக்காமல் சம்மதித்தார். இது பற்றி ஜெயமோகனிடம் முன்பே பேசி ஒப்புதலும் பெற்றிருந்தேன். அவர் சொன்ன ஒரே நிபந்தனை. என்னால் யார் பாதத்தையும் தொழ இயலாது என்பது மட்டும்.
எனக்கு அதற்கான உடன்பாட்டை அப்போதே ஜெயமோகனிடம் சொல்லி இருந்தேன். முதல் முறையாக உலகளவிலான அறிஞர்களை அழைத்து்தத்துவ மாநாடு நிகழ்த்தும் திட்டம் அப்புது உருவானது. அதற்கான முழு பொறுப்பும் தான் ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார். எனது பொறுப்பு நிதி மற்றும் அறிஞர்கள் மேலான்மை மட்டும் என முடிவானது. அதற்கு எனக்கு குறைந்தது நூறு தன்னார்வளர்கள் தேவை. ஆயிரமாவது ஆண்டு விழா குழுவில் இருந்து அவர்களை தெரிவு செய்ய வேண்டும். முதலில் அதற்கான குழு அமைக்க வேண்டும் என முடிவு செய்து பெருமாள் ராமாநுஜம் , கோசகன் பட்டாசாரியார் மற்றும் DA.ஜோசப்பை தெரிவு செய்து அறிவித்தேன். DA.ஜோசப் நான் நினைத்த திட்டத்தை மிக திறமையாக கையாளக்கூடியவர். அவரைத்தான் தலைவராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அது சிக்கலை அழைத்து வரும். முதல் நிலையில் கருத்துரு உருவான பிறகு அதை முன்வைத்து பின் அதை தொடர்ந்து திறந்த அரங்கை முன்னெடுக்கலாம் என திட்டமிட்டேன்.
திறந்த அரங்கம் அறிமுக கூட்டம் மிக சிறப்பாக நிகழந்தது. அந்த கூட்டத்தில் நான் முன் வைத்த கருத்தை ஒட்டி யாராலும் பேச இயலவில்லை. அது நான் எதிர்பார்த்தது என்பதால் DA.ஜோசப்பை பேச அழைத்தேன். அன்று அவரது உரை மிக சிறப்பாக அமைந்தது. அவருக்கு பிறகு பேச வந்தவர்கள் மிக எளிதாக அவர் சொன்ன கருத்திலிருந்து தங்கள எண்ணத்தை வைத்தனர். எனக்கு அறிமுக கூட்டம் மிக் பெரிய வெற்றி இனி அடுத்த நகர்வு பற்றி திட்டமிட ஶ்ரீரஙகம் சென்று வேளுக்குடி கிருஷ்ணனை சந்தித்த போது அவர் DA.ஜோசப்பை ஏற்கவில்லை. அவரை தவிர பிற எவரையும் என் மனம் ஏற்வில்லை என்பதால் முழு திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஜெயமோகன் சொன்ன மாற்று திட்டத்தை செயல்படுத்தும் சூழல் உருவாகி நின்றதை புரிந்து கொள்ள முடிந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக