ஶ்ரீ:
மணிவிழா - 86
01-09-2026
* கைவிடப்படல் சொல்லும் செய்தியின் நுண்மை *
ஒரு வகையில் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு உருவாக்கப்பட்டது யாருக்காவும் இல்லை அது எனக்கானது மட்டும் என அதிர்வளிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் . அப்படி எடுதுக் கொண்டால் மட்டுமே என்னால் அவற்றின் சிக்கலை மிக இயல்பாக அவிழ்க்கவும் அதன் நீண்ட இழைப்பிண்ணலை சிக்கல் விலக்கி நோக்கம் இயல்கிறது . அதன் பின் என் வாழ்கையில் நிகழ்ந்தவைகளும் அது இன்றுவரை என்னை கொண்டு வந்து அமர வைத்திருக்கும் இடமும் மனநிலையும் அதன் ஒருங்கமைவிற்கு பின்னால் அது நின்றிருக்கிறது என நினைக்கிறேன். பிரபஞ்ச விதிகள் யாருடைய ஊகத்திற்குள்ளும் வருவதில்லை என்றாலும் கடந்த சென்றவைகளை கொஞ்சமேனும் நினைவுகளில் நிறுத்தி அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் போனால் நிச்சயம் சில நல்ல விஷயங்களை இழக்க நேரிடலாம் . ஆம் இப்போது நான் உறுதியாக நம்புகிறேன் தனிப்பட்ட என் ஒருவனுக்காக மட்டுமே அந்த விழாக்குழு நிகழ்ந்து முடிந்ததும் அதில் நிகழாது போனதும் . அதிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள் மிக மிக தனிமையானவைகள், தனித்துவமானவைகள் என்பதை புரிந்து கொள்ள எனக்கு நீண்ட காலம் தேவையானது.
அந்த கனவு நான் நினைத்தபடி ஏன் நிகழவில்லை. தனிமனித கனவுடன் இதை பொருத்த முடியாது குறைந்த பட்சம் தென்னகம் முழுவம் உள்ள ஆயிரக்கனக்கான வைணவர்களுக்கு சொந்தமானதும் நூற்றுக் கணக்கான கோவில்களில் சிலா மூர்த்தியும் காத்திருப்பதும். பின் ஏன் இப்படி என கேட்டுக் கொள்ளலாம். ஆனால் அங்கேயே தயங்கி நின்றுவிட்டால் அந்த கனவு பிறிதொரு தளத்தில் மிக தெளிவாக நிகழ்ந்து முடிந்திருப்பதை தவறவிட்டு விடுவேன் என நினைக்கிறேன். அது என்ன என அவதானிப்பதே இப்போதைக்கு தேவை. காரணம் அது எனது தனிப்பட்ட தேடலுக்கானது என்பதால் அந்த கனவு மேகம் போல கலைவதில்லை அது ஒரு போதும் பரு வடிவம் எடுக்காது. அதற்கான தர்க்க ரீதியான விளக்கம் என்பது என் தேடலை மையப்படுத்தியது என்பதால். அது ஒரு நுண்மான் நுழைபுலம் போல் ஒரு நுழைவாயில். என்னை எங்கு இட்டுச் சென்றது என்பதில் இருந்து அதற்கான தேவையை உருவகிக்க வேண்டி இருக்கும்.
அவற்றை இன்னும் அணுகி அணுகி பார்த்து நேதி நேதி என்பது போல் இது நிகழவில்லை என்றால்,இது நிகழவில்லை. இது நிகழவில்லை என்பதால் இதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான ஊகத்தை அடைய இயலும். நான் முன்னரே கணித்ததை இப்போது போட்டுப் பார்க்கலாம். அது நிகழ்ந்திருக்க வேண்டிய காலம் முழுவதுமாக கடந்து சென்று சுமார் பத்து வருடங்களாகிறது. என்றாலும் அதன் மிச்சல்கள் குறியீடுகள் போல எனக்கு எங்கும் காணகிடைக்கின்றன.
அகவயமான பார்வையால் அவற்றை மிக மிக யதார்த்மான நுட்பமான ஒன்றாக விளங்கிக் கொள்ள அனுமதிக்கலாம். இப்போது எதுவும் வெறும் ஊகமல்ல வரலாறு . இதில் மீளவும் ஊகம் என்பது இனி அதன் செல்திசையையும் அதன் உருவாக்கமும் உருவகிப்பும். ஆனால் பிறருக்கு அது விளங்க இன்னும் ஒரு நூற்றாண்டானாலும் ஸ்தூலமாக வெளிப்படாமல் போகலாம். அந்த காலத்தில் பிறப்பெடுக்க இருப்பவர்களுக்குமே கூட அது புரியாமல் போகலாம். ஆனால் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் முயற்சித்தால் அந்த காலத்தில் வாழும் கற்பனையை ஒட்டி என்னவெல்லாம் உருவகிக்க முடியும் என்பதில் அத்தனையும் இருக்கிறது . அப்போது காலமும் போனால் போகிறது என மனம் கனிந்து தன்னை சிறிதாளவாவது தன்னை திறந்து காட்டலாம். அந்த வெளிச்ச கீற்றை பார்பவன் வாழ்த்தப்பட்டவன். அவனுக்கு இது நீண்ட நெடிய காலத்தில் என்ன மாதிரியான விளைவை உருவாக்க இருக்கிறது என்பது பற்றிய பிடி கிடைக்கலாம்.
இவ்வளவு பிரமாண்டமான நிகழ்வு என் ஒருவனை மையப்படுத்தியா? பின் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது . இலக்கை அடையா நிற்கும் பெருமுயற்சிகள் தயங்கி நின்றால் அது வேறு எதுவோ சொல்ல வருகிறது. பிற யாருக்கெல்லாம் அது என்னென்ன பொருள் படுமோ பின் அதுவே அதுவானது. பலர் தங்கள் உலகியல் லாபங்களை அதில் பார்த்தனர். சில அடையாளமற்றவர்கள் அதில் தங்களது புது அடையாளங்களை தேடினார்கள். பெரும் ஆளுமைகளுடன் நெருக்கமாக இருப்பதாக கனவு கண்டவர்கள் அதை நோக்கி சென்றார்கள். ஆன்மீகத்தில் தாங்கள் திளைத்திருப்பதாகவும் இறுதி சொட்டு தயங்கி தங்கள் தலைக்கு மேல் நிற்பதாக நினைத்தவர்கள் அதை பிறருக்கு ஓயாது சொன்னார்கள். பலர் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பிறருடன் கூச்சமற்று இணைந்தார்கள் முரண்பட்டார்கள்.
இது அரசியலாக நொதித்து ஆறாக பல வாய்க்காலில் பாய்ந்து ஓடிய போது என்னால் அதை வேடிக்கை கூட பார்க்க இயலவில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களின் இடத்தை நோக்கி தள்ள நானும் அதில் இறங்கியாக வேண்டும். எனக்கு அதில் மனம் ஒப்பவில்லை. விழாக் குழுவின் மைய நோக்கம் மிக உயர்ந்த சம்பிரதாயம் மற்றும் தத்துவம் அதனின் நவீன உலகம் நோக்கிய பார்வை குறித்து. என்றாலும் இவர்களை பற்றி மிக நுணுக்கமாக அறிந்திருந்தேன்.
திட்டமிட்டபடி கருத்தியல் விவாதம் துவங்கி விட்ட பின் அதன் தாக்கத்தால் ஈர்க்கப்படுகிற ஒரு சிலரையாவது அடையாளம் காண இயலும் என்கிற தூரத்து கனவு இருந்தது. அடுத்த கட்ட நகர்வு இன்னும் தீவிரமானது என்பதால் அதற்கான நிர்வாக தகுதி கொண்ட சிலரையாவது அதற்குள் நான் கண்டடைய வேண்டும் என்கிற நிர்பந்தம் எனக்கு இருந்தது.இப்போது காணும் காட்சி இவர்களை ஒரு போதும் அங்கு அழைத்து செல்ல முடியாது போலும் என நினைக்கத் தோன்றியது. அப்போதைய ஏமாற்றம் நல்ல நிர்வாகிகள் கிடைக்கவில்லை என்பதைவிட அவர்களை கண்டடையும் சாதனமே இன்னும் கண்களுக்கு புலப்படவில்லை என்பதாக இருந்தது.
ஆயிரமாவது ஆண்டு 2017 என்கிற இலக்கு நிர்ணயமாகிவிட்டது அதை நோக்கிய எனது பயணத்திற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்பாதல் ஐந்து வருடத்திற்கு முன்பாக அதாவது 2012 களில் அதன் துவக்கம் நிகழ்ந்தது.ஒவ்வொரு வருடமும் அடைய வேண்டிய இலக்கு என ஐந்து முக்கிய விஷயங்களை அப்போது அவதானித்திருந்தேன்
1.முதல் வருடத்திற்குள் 2012 . அனைத்து சம்பிரதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அரசாங்கம் மற்றும் தொழிற்துறையின் பெரும் ஆளுமைகளையும் உள்ளடக்கிய மாநில அமைப்பு துங்கப்பட வேண்டும் அத்துடன் பத்திற்கும் அதிகமான துணை கமிட்டிகள் அவற்றன் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.அவை உடனடியாக செயல்பாட்டிற்கு வரவேண்டும். முதலாவது நிர்வாக கமிட்டி கூடுகை. அத்துடன் அடுத்த ஐந்து வருடத்திற்கான முழு திட்ட வரைவு சமர்பிக்கப்பட வேண்டும்.
நிதி ஆதாரம் வேளுக்குடி கிருஷ்ணன் ஐந்து வருட தொடர் உபன்யாசம் மற்றும் காலஷேபம் வழியாக மற்றும் திருப்பதி சின்ன ஜீயர் தலைமையில் நிகழவிருக்கும் 1008 பரமாண்ட ஹோமம் வழியாக தேவை படும் 3 முதல் 5 கோடி வசூலை மிக எளிதில் அடைய இயலும் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்து வருட நிகழ்வுகள் முழுவதும் தனிப்பட்டு மிக சிலரின் நிதி உதவியுடன் நிகழ்ந்தது. வசூல் என எங்கும் நிகழவில்லை. அன்றைய சூழலில் நிர்ணயித்த தொகையை விட இரண்டு மடங்கு பெரும் வசதி வாய்ப்புகள் இருந்தன. எனது ஒரே சிக்கல் அவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்வை ஒருங்கினைக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து நியமிப்பது. அனைத்தும் திட்டமிட்டபடி நிகழ்ந்து முடிந்தது. அதில் தொக்கி நின்றது “திறந்த அரங்கம்” என்கிற மதப் பாகுபாடு இல்லாத அறிஞர்கள் கூடி விவாதிக்கும் அரங்கு. அதன் தலைமையை நான் இன்னும் தெரிவு செய்யவில்லை காரணம் பின் அந்த மொத்த கமிட்டியும் அதன் உறுப்பினரும் அவரின் தெரிவுபடி அமைந்துவிடும் அது ஒரு கால் மைய திட்டத்திற்கு எதிராக இருக்கலாம் என்கிற அச்சம் காரணமாக அதற்கான தலைமையை தெரிவு செய்யவில்லை.
இவை அனைத்தும் மிக சரியாக துவங்கி எனக்கு மிகுந்த நம்பிக்கையை உருவாக்கி இருந்தது. திறமை வாய்ந்த நிர்வாகிகளை தெரிவு செய்யும் வாய்புள்ள பல களங்களை உருவாக்கி இருந்தேன் அங்கிருந்து அவர்களை மிக எளிதில் பெற இயலும் என்கிற நம்பிக்கை இருந்தது.
முதல் வருட விழாக்குழுவின் துவக்கம் மிக மிக பிரம்மாண்டமான முறையில் அது மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருந்தது. திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் பங்கு கொண்ட விரிவான ஏற்பாடு. சுமார் நான்காயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
2. இரண்டாவது வருடத்திற்குள் 2013 திறந்த அரங்கமும் அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் நியமனம் உடனடி செல்பாட்டிற்குள் வர வேண்டியது.
முதல் இடற் இதில் துவங்கியது. “திறந்த அரங்கம்” எனப்படும் தத்துவ உரையாடல் மற்றும் விவாதம் நிகழும் அரங்கத்தை ஒருங்க முதல் வருடம் முதலே துவங்கி இருந்தேன். அது சம்மந்தமாக பல கூட்டங்கள் பல நூறு தனிப்பட்ட சந்திப்புகள் என வைணவ மற்றும் அறிவுத்துறையை சேர்ந்த ஆளுமைகளுடன் தொடர் விவாதம் உரையாடல் என பலமுறை முயற்சித்து அது நிகழவில்லை. இன்னும் ஐந்துவருடம் இருப்பதால் தொடர்ந்து முயற்சிக்கலாம் என நினைத்தேன்.
இருபதுக்கும் அதிகமான துணை அமைப்புகள் மிக பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. மனதளவில் அந்த குழுக்களில் இருந்து 16 பேரை தெரிவு செய்திருந்தேன். ஆனால் அறிவிக்கவில்லை. அனைவருக்கும் தலைமை நிர்வாக கூட்டத்தில் ஒரு முறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. அவர்களை கவர என்னிடம் உள்ள ஒரே தூண்டில் அது மட்டுமே. காரணம் தலைமை நிர்வாக கமிட்டியில. இருந்தவர்கள் புதுவையின் பல்வேறு துறைகளை சேர்ந்த நட்சத்திர ஆளுமைகள்.
3. மூன்றாவது வருடத்தில் 2014முழு திட்ட செலவிற்கான வரைவு மற்றும் நிதி திரட்டல் பற்றிய திட்டமிடல் வில்லியனூரில் நடைபெறும் கூடுகையில் அதன் போஷகர்கள் உள்ளடக்கிய கூட்டம் நிகழ வேண்டும்.
வில்லியனூரில் பெரும் திட்டமிடலுடன் துவக்கப்பட்ட வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாசம் அவரது தனிப்பட்ட காரணத்தினால் கடைசி நிமிடத்தில் ரத்தானது எனக்கு பெரிய அதிர்வை கொடுத்திருந்தது. திருப்புலிங்குடி கோயில் திருப்பணியில் அவர் அப்போது முழுமையாக ஈடுபட்டிருந்தார். அதுவரை எல்லா சம்ரோஷ்ணத்திற்கும் ஆதரவு அளித்து வந்தார். முழுமையாக ஈடுபட்டது திருபுலிங்குடி கோவில் சம்ரோஷணம். அதில் ஏதோ ஒரு வகையில் மனம் கசந்து போனார். நிச்சயம் அது நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்ந்திருக்கலாம். அவரிடம் தொலைபேசியில் பேசிய போது. புதுவை நிகழ்விற்கு வர இயலாததை தெரிவித்தார் காரணம் கேட்ட போது “கொஞ்ச காலம் ஶ்ரீரங்கத்தோடு போகலாம் என்றிருக்கிறேன்” என்றார். அது என்ன ஶ்ரீரங்கத்தோடு போவது? எனக்கு விளங்கவில்லை.அவரின் பெரிமுயற்சியில் நிகழ்ந்த திருப்புலியூர் திவ்யதேச திருப்பணியில் ஒருங்கிணைப்பில் அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தங்கள். வைணவ உலகம் பிரமுகர்கள் எல்லா சந்தர்பங்களிலும் மிக எளிய மானிடர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் வட்டம் எவ்வளவு சிறியது என்பதும் அவர்களை ஒரு போதும் அதில் இருந்து வெளியில் அழைத்து செல்ல இயலாது என்பதுடன் அவர்கள் வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய மதிப்பீடு அவரின் நம்பிக்கை சிதைத்தது. வைணவ ஆன்மீக உலகம் எத்கைய இருளில் இருக்கிறது என்கிற செய்தி அவருக்கு பெரும் உளச்சோர்வை கொடுத்திருந்தது. இது ஒரு வகையில் எனக்கு உணர்த்திய புரிதல் மிகத் தெளிவானது. என்னை நிதானிக்கச் செய்த செய்திகள் அவை.
ஒன்றன்பின் ஒன்றாக வந்த செய்திகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய சொல்லிற்று. தடைகள் பெரிதாக வளர்கிறது அல்லது நிஜ உலகின் இருள் மெல்ல எழுந்து வருகிறது என்பது புரிந்தது. திருப்பதி சின்ன ஜீயர் தனது “மலை புராஜக்டை”கைவிட்டார் என்கிற செய்தி வந்து சேர்ந்தது. அது சொல்லும் தகவல் மிகத் தெளிவானது. மனம் மிகவும் சோர்வுற்று யாரையும் சந்திப்பதில்லை எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்தேன். இடைப்பட்ட அந்த காலத்தில் தனித்திருக்க விரும்பினேன். எனது குருவான நம்மாழ்வாரின் “திருவாய் மொழிக்கு” ஒரு எளிய நவீனபாணி விளக்கம் எழுதிப்பார்த்தால் என்ன என தோன்றி உடன் செயலில் இறங்கினேன். முதல் பத்து பாடல்களுக்கு உரை போல ஒன்று எழுத துவங்கிய போது மண்டையில் அடித்தது போல ஒரு செய்தி புரியவந்தது. என்னிடம் “மொழி இல்லை” கருத்துக்களை மொழி வடிவில் கொடுக்கும் ஆற்றல் இல்லை என்பது புரிந்து போனது. மிக இளமை முதலே தமிழில் எண்ணங்களை மிக தெளிவாக கட்டுரையாக செய்தி குறிப்பாக எழுதி இருக்கிறேன். இளஞர் காங்கிரஸின் செய்தி குறிப்பிகளை எழுதி தருவது நானும் கமலக்கண்ணனும். இருவரும் இணைந்து எழுதிய பல செய்தி தகவல்கள் மிக பிரமாதமாய அமைந்தவை அந்த நினைப்பில் துவங்கிய போது ஆழ்மனம் சொன்ன செய்தி வேறு விதமானது
