ஶ்ரீ:
மணிவிழா - 83
18-08-2026
* இறை கனிதல் *
வாழ்வியல் நடைமுறையில் இருந்து என்ன காரணத்தினாலோ மதம் என்கிற ஒன்றை கழித்துவிட்டால் அல்லது நிராகரித்தால் அவர்கள் தங்களிடமிருந்து கலையை,பண்பாட்டை, மொழியை வெளியேற்றுகிறார்கள் அதன் பின் அனைவது வெறுமை மட்டுமே என்கிறார் ஜெயமோகன். நமது மூத்தோர் மதம் என்று சொன்னது முதலில் என்றாலும் அவர்கள் பற்றி நின்றது வரிசைபடி இறுதியில் என வகுத்து வைத்தார்கள். அங்கு சென்றடையும் வரை “நம்பிக்கை” மட்டுமே மதம். அது கலை பண்பாடு மற்றும் மொழி என மனித உன்னதங்களை வழியாக கைபிடித்து முதல் படியில் வைத்து கருத்தியலான தெய்வத்தை நோக்கி செல்வது இறுதியில் நின்றது.
மதம் உருவாக்கி தந்த சம்பிரதாயம் நம்பிக்கையை நடைமுறைபடுத்துவது . “நடுவயது நம்பிக்கை இழப்பு” என்பது எவரும் எளிதில் தவிர்க்க இயலாத கோட்பாடு. ஏன் அப்படி நிகழ்கிறது. அதுவரையில் மூத்தவர்களின் சொல் நம்மை ஆள்கிறது. நடுத்தர வயது காலகட்டங்களில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று அனைத்தையும் கையளித்த மூத்தோர் மறைவால் உருவாகும் வெற்றிடம் .இரண்டு அவர்கள் சொன்னவை காலத்தால் நமக்கு பொருந்தாதவைகளாக வழக்கொழிந்தவைகளாக தோன்றிவிடுவது அல்லது அவர்களின் சொல்படி செயல்பட்டு எதிர்மறை பலன் விளையும் போது அந்த விழுமியங்கள் மட்டுமே வாழ்வை நிறைவுறச் செய்பவைகள் என்கிற நம்பிக்கை தகர்வு நிகழ்கிறது .
மூத்தோர் நமக்கு கையளித்தவைகள் அனைத்தும் அவர்களின் விழுமியங்களில் இருந்து எழுந்தவை. அந்த விழுமியங்கள் நமக்கு புரியாதவைகளாக இருக்கலாம் அல்லது உபயோகத்தில் அவற்றின் விசை நமக்கு குறைந்திருக்கலாம். அப்படி ஒன்று எழும் போது அவர்கள் முன்வைத்த மதம் தமக்கான விழுமியங்களை மீளுருவாக்கம் தெய்து அளிக்கும் என அவர்கள் நம்பி சென்றனர். அதுவரையில் சம்பிரதாய செயல்பாடுகள் கைகொடுக்கும் என நினைத்தார்கள். சம்பிரதாயத்தை கைவிட்டால் அனைத்தும் இழந்ததாகிறது. மீளவும் இறை கணியும் அதுவரை காத்திருக்க வேண்டி இருக்கும்.
வாழ்வியலின் அடையாள சிக்கல் எழும்போது தன்னிச்சையாக ஆழ்மனம் வழியாக நிகழும் தேடல் நவீன உலகம் அளிக்கும் அக மற்றும் புறசிக்கலுக்கு அப்பால் நமக்கானதை கண்டடைய இயலும். பின் அங்கிருந்து நமக்கான விழுமியங்களை அடையலாம் என்பதால் அவற்றை கலையில் பண்பாட்டில் மொழியில் அடையும் படி செய்திருந்தார்கள். அதன் பின் மதத்தின் தேவை எழாது என ஆழ்மனம் முடிவு செய்தால் கற்ற பிற அனைத்தில் இருந்தும் வாழ்வை மிக நிறைவாகவும் ஒருவர் அமைத்துக் கொள்ள முடியும் என்றால் பின் இப்பிரபஞ்சம் அவர்களுக்கானது. அவர்களுக்கு மதமும் தெய்வமும் கூட ஒரு பொருட்டல்ல. நிறைவாக வாழ்ந்து பின் மண்மறைதல் நிகழலாம். ஆனால் அதற்கான மனநிலையை அடைவதும் பின் பற்றி நிற்பதும் எளிதில் நிகழ்வதல்ல.
எனது குல மூத்தோர் துவங்கி தந்தை முன்வைத்த கலை மற்றும் பண்பாட்டு கலாச்சாரம் அனைத்தும் சம்பிரதாய செயல்பாடுகளால் நிலைநிற்றல் என்றிருந்தது. நேரடியான மதம் சார்ந்து வீட்டில் நிகழ்ந்த வழிபாடுகளும் கோவில் உற்சவங்களில் காட்டிய ஈடுபாடும் தன் காலத்திற்கு பிறகும் நிலைக்க வேண்டும் என விரும்பி அதற்கான வைப்பு தொகையை விட்டு சென்றார். அனைத்திலும் அவர் நின்று காட்டியது என்னை என் குடும்பத்தாரை எங்கும் சிதைவுறாது கொண்டு நிறுத்தியிருக்கிறது. இது அவர்கள் எங்களுக்கு அளித்த கொடை. இன்று என் அறுபத்தி நான்காவது அகவையின் நினைவில் அரை நூற்றாண்டு கடந்துவிட்ட சூழலில் நின்று திரும்பி பார்கையில் ஏற்றமும் இறக்கமும் கொண்ட வாழ்வின் அடியில் ஒன்று நிலையாக நின்று வழிநடத்தி சென்றதை உணரமுடிகிறது. மனம் நிறைவுறுகிறது. எனக்கு அகமும் புறமுமாக நிகழ்ந்தவைகள் அனைத்தும் “தத் - அது ” அளித்தவையே என்றே புரிந்து கொள்கிறேன் என்றான பின் இதில் என் திறமையும் திறனின்மையும் எங்கு இருக்கிறது. நான் கொண்டாடவே அனைத்தும் இருக்கின்றன். என்னை நோவதற்கு ஒன்றில்லாமல் செய்த அந்த “பேரிறையை” கண்ணீருடன் வணங்குகிறேன்.
“எது ஒன்று காலத்தை கடந்து நிற்க வேண்டுமோ அதை மகாபாரத்தில் வை” என்கிற நாட்டார் சொல் ஒன்று உண்டு. என் மூத்தோர் தங்களை காலத்தில் நிற்க வேண்டும் என நினைத்த அத்தனையையும் ராமாயண மகாபாரத்தில் வைத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இந்திய கண்டம் முழுவதிலும் எல்லா குடும்பங்களிலும் இது மிக ஆழமாக பரவியது. பல நூற்றுக்கணக்கான ராமாயணமும் மகாபாரதமும் இங்கு தொடர்ந்து பேசப்படுவதற்கு இதுவே முதன்மைக் காரணம். அவை அந்தந்த நிலத்தை காலகட்டத்தை அதன் உன்னதத்தை இலக்கியத்தின் வழியாக முன் வைத்தன. இரண்டு இதிகாசங்களும் அதன் காதாபாத்திரங்கள் மீமானுடர்களாக இருந்தாலும் அவர்களின் வெற்றி தோல்விகள் பற்றிய தகவல்களை எந்த பாவனையும் இல்லாமல் நிகழ்ந்தவைகளை நிகழ்ந்த விதத்ததிலேயே முன் வைக்கிறது. அதற்கு எந்த சமரசமும் தேவையாகவில்லை.வாழ்கை பூமியில் அனைவருக்கும் அப்படியே அருளுப்பட்டுள்ளது.
மனிதன் தன்னனை நெறிபடுத்திக் கொள்ள இவை ஒன்றென கலந்த இலக்கியம் முன்னுரிமை அடைவதும் அங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஆதி காவியம் என சொல்லப்படுகிற ராமாயணமும் பின்னர் வந்த மகாபாரதமும் அதற்கு முன்பிருந்த நடைமுறையில் இருந்து மாறி அமைந்தன என்பதையும், இன்றைய நவீன இலக்கியத்திற்கு முன்னோடிகள் அவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ரிஷிகள் அனைவரும் தர்மசாஸ்திரத்தை எழுதினார்கள் அவை வேதத்தை நடைமுறை படுத்தும் நெறியாக இருந்தன அதை இயற்றியவர்கள் அவற்றை தங்கள் பெயரில் ஸ்மிரிதிகளாக அறிமுகப்படுத்தினர். மனு மனு ஸ்மிருதியை யாக்கியவல்யர் யாக்கியவல்லி ஸ்மிருதி, அதை தொடர்ந்து பராசரர் பராசர ஸ்மிருதி, நாரதர் நாரத ஸ்மிருதி,தக்ஷன் தக்ஷ ஸ்மிருதி, கௌதமர் கௌதம ஸ்மிருதி,லிகிதர் லிகித ஸ்மிருதி போன்றவை இன்னும் விரிவானவை அதில் வால்மீகியும், வியாசனும் தங்கள் பெயரில் ஸ்மிரிதி எதுத வேண்டி இருக்க அவர்கள் அதை கடந்து காவியங்களை இயற்றினர். வால்மீகியோ, வாயாசனோ அனுஷ்டான ரிஷிகள் அல்லர் அவர்களை காவிய ரிஷி என்கிறது வெண்முரசு. ஸ்மிரிதிகள் அனுஷ்டானங்களினால் ஆனவை ஆனால் இதிகாசங்கள் வாழ்வியல் நெறிகளை கூற வந்தவை.இலக்கியம் வழியாக நம்மை வழிநடத்துபவை. அவைகளின் உன்னதத்தை இன்றைய நவீன இலக்கியம் வரை சென்று தொடக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் எழுதி பார்த்தனர். அதனாலேயை வியாசனும் வால்மீகியும் இன்றும் கொண்டாடபடுகிறார்கள்
ராமாயணம் புராண காலத்தின் இறுதியையும் மகாபாரதம் பிறதொரு யுகம் பிறந்துவிட்டதையும் கூறவந்தவை. இரண்டிலும் பழைய அறம் கழிந்து புதியது பிறந்து விட்டதை சொல்லியது . மானுடம் தனது அறத்தை விழுமியங்களை அதிலிருந்து அடைந்த மறுபார்வைக்கு வைக்கும் துவக்கம் நிகழ்ந்தது. ஆகவே அவற்றை அவை விதிகளாக சொல்லிச் செல்லாமல் வழிமுறைகளாக சாத்தியகூறுகளாக முன் வைக்கிறது. அவை வேதம் போலவோ ஸ்மிரிதி போலவோ மானுடர்களை நோக்கி கட்டளையிடுபவை ஈஅல்ல மாறாக “இதையும் உன் கவனத்தில் கொள் தகுந்த முடிவை நீ எடு” என அறிவுரையாக முன் வைப்பவை. “கீதை” தொடங்கி வைத்த முறை இது.அதை பற்றி வாழ முனைந்தவர்கள் பற்றிய கதைகளாக மகாபாரதம் இருக்கிறது. அங்கிருந்து ஒரு நேர் கோட்டில் அது இன்றைய நவீன இலக்கியம் முன் வைக்கும் விழுமியங்கள் வந்து தொடுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக