ஶ்ரீ:
மணிவிழா - 80
05-08-2026
* தடையின் விளையாட்டு *
தத்துவத்திற்கான இடம் வாழ்வியலில் எங்கு பயன்பட்டிற்கு வருகிறது என்பது பொருத்தது.அதுவரை ஒரு உடைந்த வாக்கியமாக எந்த புரிதலும் இல்லாமல் அன்றாட சொற்களில் அவற்றை பயன்படுத்துகிறோம். வாழ்வின் அங்காமாக ஒருவருக்கு அது நிகழ ஒரு “கீதா முகூர்த்தம்” வாய்க்க வேண்டும். நிகழும் போதும் அதை பயன்படுத்தும் சூழல் உருவாவது பொருத்து அதற்கான தேவை மற்றும் இடம் அந்த தேடலில் இருந்து எழுந்து வருகிறது . தத்துவம் பொதுவாக ஆன்மீகம் சார்ந்தே புரிந்து கொள்ளப்பட்டாலும் முதல் முறையாக அது அப்படியல்ல தத்துவம் பிரபஞ்சத்தின் அனைத்தின் இருப்பையும் செயல்பாட்டையும் சொல்ல வந்தது என்றும் மதம் குறித்த விளக்கங்களும் அது குறித்த தத்துவங்களும் அதில் ஒரு அங்கமாக இருக்கிறது என்கிற புதிய புரிதல் முதலில் திகைப்பை கொடுத்திருந்தது. அப்படி என்றால் மதம் அல்லது அது வலியுறுத்தும் எல்லாம் அதற்குள் இருந்தாக வேண்டும் என்கிற கருத்து வலுப்பெறுகிறது. விந்தையாக இருந்தாலும் அதை ஒரு வகையில் நிரூபனவாதம் போல முன்வைக்கலாம் போல.
“மார்க்ஸியம் ஒரு தரிசனம்” என ஜெயமோகன் சொன்ன போதும் அதே அதிர்வை அடைந்தேன். அதுவரை மார்க்ஸியத்தை ஒரு அரசியல் தரப்பாக புரிந்திருந்த எனக்கு அது புதிய பார்வையை கொடுத்தது. மார்க்ஸியம் ஒரு தத்துவ முன்வைப்பு என்றும் ஒரு தத்துவம் தரிசனமாகும் போது அது வாழ்வின் அனைத்து சாரம்சங்களை பற்றிய கோட்பாடுகளுக்கும் தீர்வு கொண்டதாக அதை வாழ்க்கையில் போட்டுப் பார்க்க உகந்ததாக இருக்கும் என புரிந்து கொண்டேன். வாழ்வியலின் எந்த துறை சார்ந்தவர்களும் தங்களுக்கான வாழ்கையை வடிவமைத்துக் கொள்ள விரும்பினால் அதிலுள்ள கூறு அதற்கான வழிகாட்டலை அளிக்க வேண்டும் . உலகின் எத்தனை கோடி மனிதர்கள் கலாச்சாரம் பண்பாடு என விரிந்து விரிந்து சென்று பின் இணைந்து கோடிக்காணக்கான தொகுப்பானாலும், அவைகளுக்குள் இருந்து பிரிந்து தனிப்பட்ட ஒருவர் தேடும் பொது வாழ்வியல் குறித்த கருத்திற்கு மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாக்கை குறித்த வழிகாட்டலையும் அது அளிக்கும். தத்துவம் ஒன்றுடன் ஒன்றை தொடர்புறுத்துகிறது அதன் வழியாக அதை புரிந்து கொள்ள வைக்கிறது. அது மாறா தன்மை கொண்டிருக்கிறது. எக்காலத்துக்குமானதாக இருக்கின்றது. தொடர்பற்றது போல தோன்றும் இரண்டை இணைக்கும் ஒன்று. மனிதனுடன் அவனது ஆன்மாவை மனதை கொண்டு இணைக்கிறது. மனம் ஒருவகையில் உறுப்பை போல புரிந்து கொள்ளப்பட்டாலும் அதை ஒரு தத்துவமாக முன்வைக்கப்படுகிறது. என்னை என்னுடன் தொடர்புறுத்த அந்த தத்துவம் தேவையாகிறது. வழிகாட்டியாக பாதையாக மருந்தாக ஆற்படுத்தலாக அது வாழ்கையில் அளித்த பெரும் விடுதலையை நினைத்துப் பார்க்கிறேன்.
ஐரோப்பிய தத்துவம் ஆன்மீகத்தில் இருந்து பிரித்து அறியப்படுகிறது. ஆன்மீகம் இறையில் என்கிற வகைமையில் அங்கு உபயோகப்படுத்தப்படுகிறது . ஆன்மீகத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தத்துவங்கள் வழியாக புதிய உச்சங்களை அடைந்தார்கள். அவற்றில் மானுட விடுதலை தனிமனித சுதந்திரம் போன்ற புதிய ஜனநாயக புரிதல்கள் அதை சார்ந்த அமைப்புகள் உருவாகி வந்தது. அவை ஐரோப்பிய சிந்தனைகள் தத்துவங்கள் வழியாக அவர்ககள் உலகிற்கு கொடுத்த கொடை. அன்றாட உலகியலில் தத்துவம் குறித்த புரிதல் அனேகமாக இங்குமங்கும் ஒலிக்கும் உதிரி வசனங்களை தவிர ஒரு மைய நீரோடையாக அதை அணுகும் மனநிலை யாருக்கும் இல்லை. அது தேவைபடாமல் வாழ்ந்து மறைபவர்கள் அனேகமாக அனைவரும் என்றால் ஆச்சர்யமில்லை . பின் அவை யாருக்காக சொல்லப்படுகிறது என்பதை விட யாரை நிராகரிக்கிறது போன்ற அனைத்து கேள்விகளும் பொருளற்றவைகள்.
தத்துவங்கள் தெரிவு செய்யப்பட்ட மிக சிலருக்கானது என்றால் அது வஞ்சனை அல்லவா? என்றால் அது அப்படியல்ல. எந்தத் துறையாக இருந்தாலும் தேடல் கொண்ட ஒருவனை அது தன் அருகில் கொண்டு சேர்த்துக் கொள்கிறது . இவை பேசி புரிந்து கொள்ள இயலாதவை,உலகின் போக்கு அப்படித்தான் வடிவமைக்கபட்டுள்ளது. கீதையில் கண்ணன் சொல்வது போல இந்த கீதையை யார் பிறருக்கு சொல்கிறானோ அவன் எனக்கு அணுக்கன் என்கிறான். அதே சமயம் யாருக்கு புரியவில்லையோ அவர்களுக்கு சொல்லாதே. நான் தான் அவர்களை அப்படி வைத்திருக்கிறேன் என்கிறான். இரண்டிற்கும் இடையே மிக மெல்லிய வெளியில் அதன் பெரும் வெளிச்சம் உள்ளது.
வாழ்வின் ஒரு தவிர்க்க இயலாத கட்டத்தில் வெறுமை ஏமாற்றத்தினூடான நிலையழிதலில் இருந்து மனதளவில் என்னை மீட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஒன்று உக்கிரமாக எதிர் நிற்கும் என நான் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதால் அது நிகழ்ந்த போது அதை எதிர் கொள்ள இயலாமல் திகைத்திருந்த சூழல். வாழ்வில் எதிர் கொண்ட அனைத்திற்கான தீர்வுகளை நோக்கிய பயணமும் அதில் வெற்றியை அடைந்திருந்த என்னால் அந்த சூழலில் இருந்து விடுபட எதையும் செய்ய இயலவில்லை. வெளியில் இருந்து எழுந்த சிக்கல்களை சமாளிக்க முடிந்த என்னால் எனக்கு நெருக்கமான உறவுகள் கொண்டு வந்த சிக்கல்களை எதிர் கொள்ள இயலவில்லை. இப்போது அது ஒன்றுமில்லாதது என நினைக்கும் ஒன்று அன்று பெரிய நிலையழிதலை கொடுத்துக் கொண்டிருந்தது. அது ஒரு எதில்பாராத அதிர்ச்சியில் இருந்து உருவாகி இருக்கலாம். அன்று மனம் அனைத்தையும் “ஏன் இப்படி” என ஓயாது கேட்டபடி இருந்தது. அதற்குள் இருந்து என்னால் அவ்வளவு எளிதில் வெளிவர இயலவில்லை. அவர்கள் அனைவரும் என்னால் எல்லா பயன்களும் அடைந்தவர்கள் ஏன் இன்று இப்படி இருக்கிறார்கள்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என புரியாத இருந்த சூழலில் அதைவிட எதிர்காலத்தில் தங்களின் தேவை குறித்து மீள என்னிடம் வந்து உதவ கோரி நிற்க வேண்டும் என அறியாதவர்கள் அல்ல.ஆனால் அது அப்போது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல என்பதாக பட்டதாக தோன்றவில்லை மறுபடியும் இங்கு “ஏன்” என கேட்காமல் இருக்க முடியவில்லை . அப்போது எழுந்து் நின்றது வன்மம் மட்டுமே. மெய்பாடுகள் மட்டுமே என்னை செயலூக்கத்திற்கு கொண்டு செல்வது.வன்மம் எனக்கானதல்ல. அதை நீண்ட காலம் சுமந்தலைய என்னால் இயலாது. அது இட்டு செல்லும் இருள் பற்றி நன்கு அறிந்திருந்தேன்.நிச்சயம் இது என் வழியல்ல. ஆனால் நிலையழிதலை உருவாக்கும் நினைவுகளை கடக்க இயலாது போது அனைத்திலிருந்து விலகி நிற்பது மட்டுமே என்ன காப்பாற்ற முடியும். அது மட்டுமின்றி நடப்பதை பேரிருப்பு எப்படி முடிவு செய்கிறதோ அதன் படி ஏற்பது மட்டுமே செய்வதற்கு உகந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக