ஶ்ரீ:
மணிவிழா - 85
26-08-2026
![]() |
* ஆயிரமாவது ஆண்டு *
2012 களில் துவங்கிய போது பெரும் கனவை உருவாக்கி இருந்த ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா நிகழ்வுகள் 2017 களில் நான் அஞ்சியதைப் போல தென்னகம் எங்கும் மிக மெல்லிய முனுகல் கூட இல்லாமல் கடந்து சென்றது. யாருக்கும் அதுபற்றிய வருத்தமோ கவனமோ கவலையோ இல்லாமல் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர். செயற்கரிய செயல்கள் ஏன் இப்படி இசையில்லாமல் முடிகின்றன. எதை வைத்து அதன் உன்னதத்தை புரிந்து கொள்ள முடியும். எளிய மானுடர்களுக்கு அது எதுவுமே சொல்ல வரவில்லையா?. இது இப்படித்தான் நிகழும் என ஆழ்மனதில் உணர்ந்திருந்ததால் அது நிகழும் போது ஒருவித எடையேறாத மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆயிரமாவது ஆண்டு விழா குழுக்களின் கூட்டமைப்பு ஶ்ரீபெரும்பூதரில் நிறைவு நிகழ்சி நடத்தும் என்பது உச்ச விஷயமாக திட்டத்தில் இருந்தது. அதை நோக்கியே அனைத்தும் சமன் செய்யப்பட்டிருந்தது. குறைந்த பட்சம் தென்னிந்திய மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாக்குவதும் அதன் தலைமை புதுவை ராமாநுஜர் ஆயிரமாவது கமிட்டி என்றும் அது இருந்தது காரணம் வைணவ உலகின் நான்கு பெரும் ஆளுமைகளை உள்ளடக்கிய அமைப்பாக அதை உருவாக்கி இருந்தேன். திருப்பதி சின்ன ஜீயர் தலைமையில் அமைந்த கமிட்டியில் வானமாமலை ஶ்ரீரங்கம் மற்றும் திருகோவிலூர் ஜீயர்கள் மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் என்பதால் அந்த கமிட்டிக்கு எதிர் சொல் எங்கும் எழ வாய்ப்பில்லை. அரசு ஆதரவு பெற்ற நிகழ்வாக அது நடக்க வேண்டிய அனைத்து பூர்வாங்க திட்டமும் சூக்ஷ்ம வடிவம் கொண்டிருந்தது. நெருக்கத்தில் அதற்கான முழு வடிவமும் கொடுப்பது மட்டுமே நெருக்கத்தில் செய்ய வேண்டியது. ஆனால் அதன் ஸ்தூல வடிவம் வெளிப்படவே இல்லை. நான் மிக எளியவன் எனக்கு அது கைவரவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் பெரும் ஆளுமைகளுக்கும் அதே விதியில் இடம் இருந்தது.
இந்தியா முழுவதும் ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு எங்கும் கவனிக்கப்படவில்லை. சில சில சம்பிரதாயமான நிகழ்வுகளைத் தவிர. ஒரே விதிவிலக்கு மேலக்கோட்டையில் திருப்பதி சின்ன ஜீயர் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டமான ஆயிரமாவது ஆண்டு விழாக் கூடுகை . அது ஒரு துவக்கம் என்றும் அது மேலும் பல இடங்களில் தொடரும் என சொல்லப்பட்டது. அதன் இணைப்பு என்ன காரணத்தினாலோ எங்கும் முயற்சிக்கப்படவில்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூட சம்பிரதாயத்திற்கு ஒரு ஒழுங்கமையாத ராமாநுஜர் ரதயாத்திரையை நிகழ்த்தியது.
2017 களின் துவக்கத்தில் மேலக்கோட்டை நிகழ்வை ஒருங்கிணைக்க ஜீயர்களை ஒருங்கு திரட்டும் முயற்சியில் திருப்பதி சின்ன ஜீயர் பெரும் மனக் கசப்பை அடைந்ததாக சொல்லப்பட்டது. விழாவும் இடமும் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டதால் திட்டமிட்ட படி அந்த நிகழ்வு நடத்த வேண்டிய நிர்பந்தம் எழுந்ததால் அதை நிகழ்த்தி முடித்ததாகவும், முடிந்தால் போதும் என்கிற மனநிலைக்கு ஜீயர் வந்துவிட்டதாகவும் எனக்கு சொல்லப்பட்டது. அவர் இனி தனது கனவு திட்டத்தை தனித்து செய்ய விரும்புவதாகவும் மற்ற விவகாரங்களில் ஈடுபடுவது அனேகமாக நிகழாது என்றும் எனக்கு சொல்லப்பட்ட போதும் நான் அதிர்வடையவில்லை. பிறருக்கு எப்படியோ அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தால் அதனால் பெரும் பாதிப்பை அடைவது புதுவை விழா குழுவாகத்தான் இருக்கும். பிற அமைப்புகள் ஒருங்கு திரட்டபடாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. அது திரட்டப்படாது போனது ஒரு தனிக்கதை.
ஆயிரமாவது ஆண்டை ஒட்டி எழுந்த பிரம்மாண்டமான ஹைதராபாத் ராமாநுஜர் ஆலையம் ராமாநுஜரை என்றும் நினைவில் கொள்ளும். அது திருப்பதி சின்ன ஜீயருடைய ஆத்ம பலத்தாலும் தனிப்பட்ட செல்வாக்காலும் எழுந்த்து. பல நூறு கோடி செலவில் உருவக்கப்பட்டது. திருப்பதி சின்ன ஜீயர் அந்தராத்மா கண்ட கனவின் அர்த்தத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பின் அந்த ஆலையம் தவிர பிற எங்கும் அதிகம் செல்லாமலானார்.
2012 களில் திருப்பதி சின்ன ஜீயர் என்னை சேலத்தில் வைத்து தன்னை சந்திக்க அழைத்த போது பெரிய கனவுடன் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அது AVR ஸ்வர்ண மாளிகை உரிமையாளர் மணிவிழா நிகழ்வு. கற்பனைக்கு அப்பாற்பட்டு அது நிகழ்ந்து கொண்டிருந்தது. சம்பிரதாயத்தில் விருப்பும் அதை செய்து கொள்வதில் உள்ள ஆர்த்தியும் அதற்கான வாய்ப்பும் அமைந்து வருவது எளிதில் நிகழ்வதில்லை. ஆனால் அங்கு அது இணைந்து நடந்து கொண்டிருந்தது. என்னுடன் சேலம் வந்திருந்த கண்ணன் கோவில் பட்டாசாரியார் கோசகன் அந்த நிகழ்வின் பிரம்மாண்டத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார். என்னிடம் பேசுகையில் இது போன்று புதுவையில் நிகழும் வாய்ப்பில்லை நீங்கள் உங்களின் மணிவிழாவை இதுபோல நிகழ்த்தினால் தான் உண்டு என்றார். எனது மணிவிவிற்கான விதை அங்கு அவரால் விதைக்கப்பட்டது. அவர் சொல்லியபடி அது போன்ற விஸ்தாரமாக இல்லாவிட்டாலும் மூன்று நாட்கள் மிக நேர்ந்தியாக கோசகன் செய்து கொடுத்தார்.
திருப்பதி சின்ன ஜீயரை சேலம் AVR ஸ்வர்ணமாளிகை குடும்பத்தார் நிகழ்த்திய மணிவிழாவின் இடையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. என்னை சந்திக்க அழைத்த நிகழ்ச்சிக்கு அடிப்படை காரணம் திருக்கோவிலூர் ஜீயர். அவரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர்களுக்கு மத்தியில் என்ன உரையாடல் நிகழ்ந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதை ஒட்டியே நான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிக மிக அருகில் அவரை வணங்கும் வய்ப்பு கிட்டியது. என்னை யாரும் அதுவரை அப்படி வசீகரித்ததில்லை. பெரும் ஆளுமையின் அத்தனை லக்ஷணங்களும் அமைந்த மாமனிதர் மிக மிக எளிய காவி உடையில் இருந்தார். அவரை சந்தித்த அந்த நொடி என் மனதில் தோன்றிய உளப்பதிவு பெரியதாக எதாவது செய்ய வேண்டும் என்கிற எடையை சுமக்கும் வலி கொண்டவராக தெரிந்தார் . அமெரிக்காவில் “கிழக்கு டக்கௌடா” மலை மீது அமைந்திருக்கும் அந்நாட்டு தலைவர்களின் தலைகளினாலான சிலை போல இந்தியாவில் எங்காவது ஒரு மலையில் ராமாநுஜர் அவரது குருநிரையில் உள்ளவர்களான ஆளவந்தார் பெரிநம்பி குருகைகாவலர்,நம்மாழ்வார் நாதமுனிகள் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி போன்றவர்களின் சிலை வடிக்கப்பட வேண்டும் என்றார்.
புதுவையில் மலை ஏதாவது இருக்கிறதா? என கேட்டார்.இல்லை என்றேன். தமிழகத்தில் உள்ள மலைகளில் அதை முயற்சிக்க இருப்பதாகவும் மறுநாள் மாலை அங்கிருந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயல்லிதாவை சந்திக்க செல்ல இருப்பதாக சொன்னார். பிறகு நீண்ட காலம் கழித்து சென்னையில் சந்திக்கும் போது ஹைதராபாத் கோவில் திட்டம் பற்றிய தகவலை சொன்னார். “மலை புராஜெக்ட்” என்னவானது என கேட்டபோது சுற்றுப்புற சூழல் அதை அனுமதிக்கவில்லை என்றார். அவருடைய அந்த கனவு நிகழவில்லை அதற்கு பிறகு மலை அளவு உயர ராமாநுஜரின் பஞ்சலோக சிலையும் அதன் பீடத்தில்108 திருப்பதியை குறிக்கும் சன்னதிகள் எழுப்பினார். இன்றளவும் எளிய மக்கள் அங்கு திரண்டு சென்றாலும் அதன் பிரமாண்டத்திற்கு உரிய இடம் அதற்கு அளிக்கப்படவில்லை.
அந்த சூழலில் எனது ஶ்ரீபெரும்பூதூர் அனுபவத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ராமாநுஜர் விக்ரஹம் அவரின் திருமஞ்சனத்திற்கு பிறகு அவரை சுற்றி வரும் போது அவர் எனக்களித்த உளப்பதிவு மிக விசித்திரமானது. அந்த நொடி என்னுள் எழுந்த விஷயங்களில் உள்ள முரணை எடுத்து அவதானிக்க நினைத்தேன். ஆச்சாரியனாக அவர் தன்னை முன் வைக்க மிகவும் தயங்கியதாக தெரிகிறது அது புரிந்து கொள்ளக் கூடியதே. அவர் வைணவ சித்தாந்தங்களை எளிய மானிடருக்கு எடுத்து வைக்கும் ஒருவராக தன்னை முன்னிறுத்தினார். இன்று வரை வைணவ உயர் அதிகாரத்தில் உள்ள எவராலும் கடக்கப்படாத மனு தர்ம நெறிகளை மாற்ற முயன்றவர். அதன் பொருட்டு உயிரை இழக்கும் அபாயம் அன்று அவரது தலைமையிடம் என சொல்லப்பட்ட ஶ்ரீரங்கத்திலேயே இருந்தது. சமய சர்சைகளால் பேரரசுகளின் பகையை கடக்க மேலக்கோட்டை சென்றார் அவரது குருக்களும் சீடர்களும் என அனைவரும் ஏதாவதொரு ஒரு வகையில் மாற்று சம்பிரதாயத்தை சேர்ந்த அரசர்களின் சிக்கல்களை எதிர் கொண்டனர். மானுட வடிவெடுத்தவர் ராமனாக கிருஷ்ணனாக இருந்தாலும் ஊழின் நிழல் படாமால் வாழ்ந்ததாக தெரியவில்லை. பூமியில் நிரந்தரமாக எதுவும் எவருக்கும் அளிக்கப்பட்டதில்லை.
ராமாநுஜர் ஆதிசேஷனின் அவதாரமாக தோன்றினார். அவதார புருஷன். இன்றுவரையிலும் அவரது சரீரம் “தானானதிருமேனி” என ஶ்ரீரங்கத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது. இந்து சம்பிரதாயத்தில் இது போன்று வேறு எங்கும் எவருக்கும் இதுவரை நிகழ்ந்ததில்லை . தசாவதாரங்களில் ராமா கிருஷ்ண அவதாராங்களை பூர்ணாவதாரம் என்பார்கள் என்றாலும் ராமன் எளிய மானுடனாக வாழ்ந்து காட்ட முனைந்தான். கிருஷ்ணனும் கூட தனது குலத்தால் கைவிடபடுதல் வழியாக தனது எளிய மனிதர்கள் அடையும் சங்கடங்களை எதிர் கொண்டான் என்றாலும் அவர்கள் மானுடர்களாக யாராலும் உணரப்படவில்லை. ஏன் ராமாநுஜர் விஷயத்தில் அவருக்க நிஜமான பெருமைகள் இருக்க அவர்மீது ஏற்ற வேண்டிய பெருமைகள் தேவையற்றவை. அவற்றை அவர் சுமக்க தயாரில்லை என்று ஶ்ரீபெரும்பூதூரில் அடைந்த அதே உளப்பதிவு போல ஒன்றை மீளவும் திருவந்திபுரம் மணவாளமாமுனிகள் சன்னதியிலும் அடைத்தேன். இன்னும் சற்று தெளிவாக. அது எனது மனப்பிரம்மையாக இருக்கும் என்றே முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்படி அல்ல என்பது காலத்தில் எனக்கு புரியவைத்தது.
நான் உருவாக்கிய அமைப்பின் மையப் இலக்கென்பது “ராமாநுஜர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவர் கண்டடைந்து உரைத்த விழுப் பொருள் குறித்த அவரது சொற்கள் இன்றை நவீன உலக மக்களுக்கு என்னவாக பொருள் படும்” என்பது குறித்த அறிஞர்கள் கொண்ட சபை விவாதிக்க வேண்டும் என் விரும்பினேன். அது ஒரு உரையாடல் போல பல வித கோணங்கள் மனநிலை மதம் என்கிற ஒன்றிற்கு அப்பால் ஒரு உரத்த சிந்தனை போல. மதம் குறித்த புரிதல்,அதன் மீதான நம்பிக்கை, ஆச்சாரத்தால் கட்டப்பட்டுள்ள அதன் தடைகள் ஏன் மனிதர்களை இயல்பானவர்களாக ஆன்மீகத்தில் இருக்க முடியவதில்லை கண்களுக்கு தெரியாத ஒரு சுமை அனைவரின் எண்ணங்களுக்கு மேல் கல்லாக ஏறி அமர்ந்திருந்தது. அதற்கு விடை சொல்வாரில்லை
அதன் அழுத்தம் தாளாமலாகும் போது அதை நிராகரிப்பதை தவிர வேறு வழி இருப்பதாக யாருக்கும் தெரியவில்லை. இன்னும் முழு வடிவம் அடையாத நவீன தலைமுறை உருவாகி அரை நூற்றாண்டாகிறது. அது இன்னமும் தீவரமடைந்து சமூகத்தை விழுமியத்தை அறத்தை நிராகரிக்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இவர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும் ஆன்மீகம் அப்படி பட்டதல்ல என்று. அதற்கு வேறு பயன்பாடுகள் உள்ளது என்று யார் சொல்லுவர்கள்.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக