ஶ்ரீ:
மணிவிழா - 90
15-09-2026
* பிம்பங்களை காடந்து…..*
புதுவையில் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டி துவக்கம் மிக எளிய நிகழ்வாகவோ எளிதாக துவக்கப்பட்டோ நடைபெறவில்லை . அந்த அமைப்பின் பலமும் பிரம்மாண்டமும் கூட சட்டென நிகழ்ந்து விடவில்லை. அது கோரிய அனைத்தும் மிக மிக நுண்ணிய மிக விரிவான வலைப்பின்ணலை போல ஒன்று. அவை ஒவ்வொன்றையும் ஒப்பு நோக்கி அது கோரும் அனைத்தையும் எந்த சமரசமின்றி செய்து கொண்டே இருக்க அது மெல்ல எழுந்து வந்தது. அதன் பின்னால் இருந்த கடின உழைப்பின் வழியாக மட்டுமே அதை நிகழ்த்த முடிந்தது என்பதே கூட ஒரு பாவனையோ என நான் பலமுறை நினைத்ததுண்டு . அதை போலவே ஒரு புள்ளியில் அது காற்றில் கரையத் துவங்கி பின் காணாமலானது. இரண்டிற்குமே அது மனித முயற்சியை ஒரு குறியீடு போல கொண்டது . அதற்கு எதுவும் யாரும் தேவையாய் இருக்கவில்லை என இப்போது உணர்கிறேன். இப்படி காணாமலாகி போக எதற்கு அத்தனை பிரமாண்டமாக உருவாகி இருக்க வேண்டும். சொன்னதையே மீள மீள சொல்லியபடி செல்வது ஒரு வகையில் அந்த கேள்விக்கு விடை தேடவே இந்த பதிவுகளை தொடர்ந்து வெவ்வேறு கோணத்தில் எழுதிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அதன் உருவாக்கம் தனது தேவையை மிகச் சரியாக எங்கோ முடித்து கொண்ட பிறகே மெல்ல கரைந்து போயிருக்க வேண்டும் என்பது மட்டும் நிதர்சனம் .
காயந்த சிறு சருகு அசைவிற்கும் பின்னால் ஒரு நோக்கம் இருக்கையில் இவ்வளவு பெரிய கட்டமைப்பு எழுந்து பின் காணாமலானது பெரும் வீண்டிப்பு என நான் நம்ப தயாரில்லை. நான் தற்செயல் வாதத்தை ஏற்பதில்லை அனைத்திற்கும் பின்னால் ஒரு பெருந்திட்டம் உள்ளது என்கிற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உண்டு. பின் நிகழ்ந்தது என்ன ? என்னை மீள மீள கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அது எதன் பொருட்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டதோ அதை மிக தெளிவாக ஆற்றி அமைந்திருக்கிறது. அது என்ன எனக்கு புரியவில்லை என்பதால் அது இல்லாமலாவதில்லை. ஊகங்கள் மற்றும் கற்பனை வழியாகவே மட்டுமே அதை நோக்கி பயணிக்க முடியும். அதற்கும் அதன் கனிவு தேவையாகிறது . அதற்கான கற்பனையை உருவாக்கி கொண்டே இருக்கிறேன். பல நூறு விசைகளால் இணைந்தும் பிரிந்தும் சென்ற ஒன்றை கற்பனையால் மட்டுமே அவதானிக்க இயலும் போலும்.ஒரு புத்தகம் போல அதன் பக்கங்களை முன்னும் பின்னுமாக நினைவினால் புரட்டியபடி இருக்கிறேன்.
விழாக் குழுவிடம் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் எதிர் பார்த்தது போல் நிகழாது போனதும் கசப்புடன் வீட்டைவிட்டு ஓடிப் போகும் சிறுவனின் மனோபாவத்தில் இல்லை நான் அதிலிருந்து விலகிய போது. அதே சமயம் அது ஓடிய வேகத்தில் நான் உதிர்ந்து விழவும் இல்லை. பின் என்ன நிகழ்ந்தது என கேட்டுக் கொண்டு மேலதிக தகவலுக்கு செல்கிறேன். அம்மாபெரும் அமைப்பில் இருந்து நான் வெளியேறியது எப்படியெல்லாம் நிகழ்ந்தது என்பது என்னால் மீண்டும் மீண்டும் அவதானிக்க தகுந்தது. காரணம் அகவயமான ஒரு நிறைவின்மை உருவாகிய அதே சூழலில் அதை கட்டியிருந்த பிணைப்புகள் ஒவ்வொன்றாக அறுந்து போக துவங்கின. அதைத் தொடர்ந்து அதன் ஒன்றன்பின் ஒன்று என நிகழ்வுகள் கைநழுவிக் கொண்டிருந்தன . காரிங்கள் மனித முயற்சியினால் சாதிக்கக் கூடியவை என்பதற்கு மாற்று கருத்தில்லை. ஆனால் ஒரு பெரு வெற்றிக்கு அது மட்டுமே போதுமானதல்ல. அது போல சிலர் கூடி ஒரு பெரு நிகழ்வை நிறுத்திவிடவும் இயலாது.முயற்சிகளினால் பல நிகழ்ந்திருக்கலாம் சில நிகழாது போயிருக்கலாம். எதற்கும் எளிய மனிதர்களை பொறுப்பாக்க முடியாது என நினைக்கிறேன்.
ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு உருவாக்கத்திற்கு பின்னால் உள்ள தேடலும் அது உருவாக்கி கொடுத்த விழா குழுவும் பின் விரலிடுக்குகளில் நழுவிய சந்தர்ப்பங்களும் காரணங்களாயின.பின்னாளில் அதில் தன்னிச்சையாக உருவான தடைகளுக்கு பின்னால் எளிய மானுடர்கள் என எவரும் இல்லை. ஊழ் அது தொடர்ந்து நடப்பதை ஏற்கவில்லை என்றே புரிந்து கொள்கிறேன். மனிதர்கள் அதற்கான புறவய காரனமாகி நின்றனர்.
விழாக் குழு துவங்கிய போதும் அது நிகழாது ஒரு கட்டத்தில் நின்று போன போதும் கூட அவர்கள் அதைப்பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
2012களில் துவக்க நிகழ்வன்று என்னை விட திருக்கோவிலூர் ஜீயர் மிகுந்த பதட்டத்தில் இருந்தார். இரண்டு பக்கத்தில் இருந்து அவருக்கு நெருக்கடி. ஒன்று வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்த சென்னையை மையமாக கொண்டு செயல்படும் மிக பிரபலமான நிறுவனங்களின் பெரும் தலைவர்கள் விழாக்குழுவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்கிற உத்தேச எண்ணத்தையும், இந்த இயக்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் திருக்கோவலூர் ஜீயருக்கு சிலரை தூது அனுப்பி இருந்தனர். அது ஒரு சிறு பொறியாக துவங்கி பின் எங்கெங்கு பற்றி பரவும் என்பதை கணிக்க இயலாது. நீண்ட காலமாக இருதரப்பும் ஒத்துழைத்து நிகழும் பல மரபான திவ்வியதேச நிகழ்வுகள் கூட இதனால் பாதிக்கப்படலாம் என்கிற எண்ணம் கொண்டிருந்தார். அவர் எப்போதும் தன்னை சர்ச்சைகளுக்கு அப்பால் வைத்து கொள்பவர் என்பதால் மிக எளிதில் அவரிடம் ஆளாளுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருந்தனர்.
இரண்டாவது சிக்கல் வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி ஜீயர் உருவாக்கிக் கொண்ட பிம்பம். அது பொது பிம்பம், ஆனால் மிகையல்ல . திருகோவிலூர் ஜீயருக்கு வேளுக்குடி கிருஷ்ணனை அதுவரை தனிப்பட்டு பழக்கமில்லை. செவி வழியாகவும் பல கோவில் பொது நிகழ்வில் மரியாதை நிமித்த சந்திப்புகளின் வழியாக
அவரை நிறையவே அறிந்ததாக நினைத்தார். அவை எவையும் அவருடன் நெருங்கி பழக தடை என்பதாக இருந்தது. நான் அவரை சந்தித்து விழாகுழு பற்றிய செய்திகளை சொன்ன போது அவர் மீள மீள வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய தனது ஐயங்களை சொல்லிக் கொண்டே இருந்தார். இந்த சூழலில் வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி நான் ஒன்றை சொல்லியாக வேண்டும்.
அனைவரையும் போல வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய புரிதலை என் ஊகத்தில் இருந்து நான் எடுத்துக் கொண்டது. அவரை இரண்டு வகையில் பிரித்துக் பார்த்தேன் . ஒன்று சம்பிரதாயத்தில் அவருக்குள்ள அசைக்க இயலாத நம்பிக்கை ஊற்றம் அதை பின்பற்றி தனது வாழ்கை முறையை வடிவமைத்துக் கொண்டவர்.அதிலிருந்து ஒருபோதும் விலகாதவர் என்பதால் மிக சிக்கலானவர். இரண்டாமவர் மிக எளிமையானவர் பிறர் கண்களின் வழியாக உலகை பார்க்கும் பேரார்வம் கொண்டவர். அதற்கான உரையாடல் களத்தை அவரே உருவாக்கி அளிப்பார். நான் இரண்டாமவரை மிக அனுக்கமாக உணர்ந்து அவருடானான எனது தொடர்பை உருவாக்கி வளர்த்துக் கொண்டேன். தடையற்ற உரையாடல் விமர்சனம் என எல்லாவற்றையும் அவர் முன் நான் பேச இயன்றது. அதற்கான இடத்தை அவர்தான் கொடுத்தார். அவரைப் பற்றிய புரிதலை எனது ஊகம் வழியாக கண்டடைந்தேன்.
பல துறைகளில் எனது ஊகமும் மதிப்பீடுகளும் மிகச் சரியாக இருந்திருக்கின்றன. அதற்கான பயிற்சியை எனக்கு அரசியலும் அதன் பெருந் தலைவர்களும் அளித்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை ஆளுமைகள் உருவாக்கும் பிம்பம் என்பது ஒருவகை பாதுகாப்பு வளையம். அருவமான அதுவே எல்லாவற்றையும் செய்கிறது உணர்கிறது. அது அளிக்கும் அலைகதிர்கள் அவர்களை பிறருடன் மிகச் சரியாக தொடர்புறுத்துவது அல்லது விலக்கி வைப்பது . பெரும்பான்மை அதில் உருவாகும் நண்மைகளை அவர்கள் எப்போதும் கருத்தில் கொள்வார்கள் என்பதால் அது உருவாக்கும் எதிர்மறை தன்மைகளுக்கு எந்த விளக்கமும் கொடுக்க மாட்டார்கள் .பெரும் ஆளுமைகள் சந்திக்கும் சிக்கலும் அதிலிருந்து வெளியேறும் வழியாகவும் அது ஒன்றே என இருப்பது என்பதால் யாரும் அதை களைய முயற்சிக்க மாட்டார்கள்.
வேளுக்குடி போன்றவர்கள் அனைத்தையும் மிகச் சரியாக சிந்திக்க,செயலாக்க,சொல்லாக்க தேர்ந்தவர்கள். அதையே அவர்கள் பிறரிடமும் எதிர்பார்ப்பார்கள். வெளிவுலகின் அதற்கான இடம் அனேகமாக இல்லை என்பதால் அவர்களிடம் யாரும் நீண்ட காலம் இயந்து இருக்க,பணியாற்ற இயலாது. அதை கடந்து அவர்களிடம் பணியாற்றுபவர்கள் அவரிடம் எவ்வித ஒட்டுதலும் இல்லாமல் அவற்றை செய்வதை பார்த்திருக்கிறேன். அதனால் அனைத்து சிறு வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் தாங்களாகவே தங்கள் திருப்திக்கு செய்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் வெளிவுலக தொடர்புறுத்தல் அவ்வளவே. அதை தாண்டி அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் மிக பெரியதாக இருக்கலாம் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட நட்பு வட்டங்கள் மிக மிக சிறியவை. அங்காவது அவர்கள் இயல்பாக இருப்பார்களா ? தெரியாது. அனேகமாக இதுவே அவரது நிலைபாடாக இருக்கலாம்.
வேளுக்குடியின் நிமிர்வு அவரின் இயல்பில் இருந்து உருவானதாக இருக்கலாம் ஆனால் அது உருவாக்கிய பிம்பத்தை அவர் ஒரு போதும் கலைத்தது இல்லை.
அவரின் நிமிர்வு என்பது அவரின் “சொல்லில்” இருந்து துவங்கலாம் என நினைக்கிறேன். மிகச் சரியான மொழியில் தொடர்புறுத்துபவர். தனது நேரத்தை மிக சரியாக பயன்படுத்துபவர். அந்த சூழலில் தனக்கு ஒவ்வாத விஷயங்களை மிக கறாராக வரையறுப்பார். இவை நிச்சயம் பிறரை மனம் கசங்கச் செய்யும். அது பற்றிய எந்த அக்கரையும் இல்லாதவர். அவரை போன்ற ஆளுமைகள் அனைவரின் ஒரே அனுகுகுணம் அது . இவை மிக பொதுவானது. தங்களது நேரத்தை பிறர் வீண்டிக்க அனுமதிக்காத போக்கு அதில் இருப்பதை புரிந்து கொள்ளக் கூடியது. பிற துறை சார்ந்த ஆளுமைகள் எதிர் பார்க்கும் எதையும் அவர் செய்வதில்லை என்பதால் ஒரு நிரந்தர இடைவெளி உருவானதை தனக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்டார். ஏறக்குறைய இதில் 80 சதவிகிதத்தை திருகோவிலூர் ஜீயரிடமும் பார்த்திருக்கிறேன். இருந்தும் அது போன்ற அனுகுமுறையை நேரில் பார்க்கும் போது உருவாகும் ஒவ்வாமையை ஒருவர் கடக்க இயலாது.
திருக்கோவிலூர் ஜீயர் போன்றவர்கள் வைணவ படி நிலையில் மிக உயர்ந்த இடத்தில் தங்களது பிறப்பால் பதவியால் சென்று அமர்ந்தார் என்றாலும் வேளுக்குடி மிக கச்சிதமான தனது திட்டமிடல் மொழி, பேச்சு அனுகுமுறை இவற்றால் அந்த இடத்திற்கு மிக அருகில் தவிர்க்க இயலாதவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். இப்போது முதல் முறையாக இருவரும் புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழு துவக்க விழாவில் ஒரே மேடையில் அமரப் போகிறார்கள். அவர்களுக்கு இடையேயான அந்த கண்களுக்கு புலனாக “படிநிலை” இருந்து கொண்டிருந்தது. அது எப்படி பேணப்படும் என்கிற கவலை கொண்டவராக திருக்கோவிலூர் ஜீயர் இருந்தார் என்பதை மிக நுட்பமாக புரிந்திருந்தேன்.
அதற்கு இணையாக துவக்க விழாவின் போது புதுவைக்கு வந்த வேளுக்குடி கிருஷ்ணனும் என்னுடன் முரணபட்டு எதற்கு இத்தனை பிரம்மாண்டமான மேடை. அரசியல் ஆளுமைகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களை முன்னிலை படுத்தி பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய முயல்வது சம்பிரதாயத்திற்கு விரோதமானது என சொல்லிக் கொண்ட போன போதும் நான் உணர்ந்தது இந்த படிநிலைகளை அவர்கள் பேண நினைப்பது பற்றியது. யாரோ அவருக்கு மிக தவறான புரிதலை உருவாக்கி இருந்தார்கள். நான் அவருக்கு விரிவாக பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. அவர் என்ன சொல்ல வருகிறார் என மிக துல்லியமாக புரிந்திருந்தேன். அவரிடம் எனது பதில் “விழா துவங்க போகிறது அதிக நேரமில்லை குளித்து விழாவிற்கு வாருங்கள் நீங்கள் கேட்ட அனைத்திற்கும் இரவு விரிவான பதிலை கூறுகிறேன் என்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக