![]() |
ஶ்ரீ:
மணிவிழா - 88
10-09-2026
* நிகழா கனவும் எதார்த்தமும் *
அனைத்தையும் கைவிடச் சொல்லும் ஒரு யதார்த்தம் நிலை கொண்ட போது அதை மீறி பயணிக்க முயன்று ஒரு புள்ளியில் மாற்று வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தேன். விழா நிகழும் வாய்ப்பின்மை மெல்ல எழுந்து வந்தது. அதுவரை அலைகழித்துக் கொண்டிருந்த கனவும் முடிவிற்கு வந்ததை போல இருந்தது. திருப்பதி சின்ன ஜீயரின் “மலை புராஜெக்கட்”மற்றும் அவர் முன்னெடுத்து மேலக்கோட்டையில் நிகழ்ந்த ஆயிரமாவது ஆண்டு விழா துவக்கம் என அறிவிக்கப்பட்டாலும் பின் வேறெங்கும் நிகழாது போனது. வேளுக்குடி கிருஷ்ணின் திருப்புலிங்குடி கோவில் அனுபவம் அவருக்கு சொன்ன செய்தி “பெரும் காரியத்திலும் மனிதர்களின் சிறுமையும் பொது நோக்கின்மையும் வெளிப்பட அவர் கண்ட சுயநலமிக்க மனிதர்கள் அவரை சில காலம் செயலின்மைக்கு கொண்டடு சென்றனர் .
எனக்கு அவை இரண்டும் இரண்டு கோணங்களிலும் வெவ்வேறு திசைகளிலும் இருந்தாலும் அவை ஒன்றையே சொல்ல வந்தது என தோன்றியது. பலரின் விழா முன்னெடுப்பு முயற்சிக்கான அனுபவங்களும் அதன் முடிவுகள் ஏறக்குறைய இது போன்றே இருந்தது. இவ்விழா குறித்து முன்னெடுக்கப்படும் பெரும் முயற்சியில் ஈடுபடும் ஆளுமைகளை ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைக்கிறது. விலகி பின்னங்கால் எடுக்க தூண்டுகிறது. அதில் பிறிதொன்று, நிகழவிருக்கும் பெரும் செயல்கள் பற்றி அதன் மையப் பெரும் பொருளின் பாராமுகமும் சில்லரை சர்சைகளால் அந்த பெரும் நிகழ்வுகளை கை நழுவிப் போகும் போக்கும் உணரப்பட்டது.நின்று போன விழாக்களுக்கு காரணங்கள் என பல இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் ஊழ் அனைவராலும் உணரப்பட்டிருக்க வேண்டும
அவை என்ன சொல்ல வருகிறது என ஆராய யாரும் தயாரில்ரை . மாற்றம் பற்றிய ஏதோ ஒன்றை குறிப்பால் உணர்த்துகிறது. செயல்களால் அல்ல எண்ணங்களாலால் , அனுமானங்களால் சென்று தொட இயலாது பிறிதேதோ ஒன்றை அது கோருகிறது . அது காலத்தில் முன்னே எங்கோ இருந்தது. தனக்கான இடத்தை அது அங்கு உருவாக்கிக் கொண்டிருந்தது ஆனால் அதை பார்க்கும் அல்லது உணரும் ஆற்றல் இன்று இங்கு யாருக்கும் இல்லை.
இங்கு அடிப்படையில் மாற்றம் தேவை என காலம் கருதுகிறது. அதுவரை சொல்லப்பட்டவைகள் என்றோ காலத்தால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது. தேவை காலத்திற்கான அடுத்த கட்ட மாற்றம். ஆனால் துரதிஷ்டவசமாக அதை பற்றிய புரிதலோ அல்லது அதை செய்யக்கூடியவர்களோ அமைப்போ என எதுவும் இன்றில்லை. என்ன காரணத்தினாலோ அவர்கள் ஒருங்கு திரளும் வாய்பும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. இருக்கும் அமைப்புகள் எதுவும் மக்கள் மீது எந்த செல்வாக்கும் செலுத்த இயலாத கையறு நிலையில் இருக்கின்றன. அனைவரும் இன்றைய தேவை குறித்த மறுபரிசீலனை பற்றிய புரிதல் உள்ளவர்களாக தெரியவி்லை. அதை எங்கு எப்படி துவங்குவது என்கிற தெளிவின்மையில் சிக்கியுள்ளார்கள். அல்லது அவர்களின் முதல் சரணாகதியே இந்த சம்பிரதாயத்தை காக்க முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த அவசியமும் அதற்கு தேவையில்லை.
என்ன மாதிரியான மாற்றம் மற்றும் அது நிகழும் காலம் கண்களுக்கு புலப்படவில்லை. அதுவரை தங்கள் அனுஷ்டானங்களில் பின் நோக்கி திரும்பி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான் . இந்த சூழலில் அவர்கள் செய்யும் சரணாகதியின் விளைவும் அதன் பொருளும் நிச்சயம் ஒருநாள் உணரப்படலாம் . ஆனால் அதை பார்க்கும் ஆயுள் இன்றுள்ள எவருக்கும் இல்லை.
மெல்ல மெல்ல அது சொல்ல வந்த பிறிதொரு “கீதா முகூர்த்தம்”. அத்தனையும் நிகழந்தது இதற்காகவா?. அந்த கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை “ஆம்” என சொல்லியே இந்த பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் பிரதான திட்டமான “திறந்த அரங்கத்திற்காக” எடுத்த முயற்சி அறிவியக்கவாதிகள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களுடனான ஒரு திறந்த உரையாடலுக்காக அலைந்து திரிந்து நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்து புரியவைத்து இதற்குள் கொண்டு வந்தாலும் நான் நினைத்த இடத்திற்கு சென்று சேர்ந்திருக்க முடியுமா? எட்டப்படு் கருத்தியலுக்கு பிறரின் ஏற்பும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அவர்கள் ஆன்மீகத்திலோ பக்தியிலோ சிக்குண்டவர்களாக தெரியவில்லை. ஆச்சாரங்களில் சிக்குண்டிருந்தார்கள். அதன் வேறுபாடு மிக ஸ்தூலமானது என்பதால் ஆச்சார அனுஷ்டனங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இன்னும் தங்கள் மீது அதீதமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். யாராவது சற்று செவி கொடுத்தால் அவர்களுக்கு அனைத்தையும் புரியவைத்து விட முடியும் என்கிற மூடநம்பிக்கையை பற்றி என்ன சொல்ல.
திட்டமிட்டிருந்த நான்காவது வருடம் 2015ல் துவங்குகிறது அதில் ஆயிரம் வைதிகர்களும் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்த மாபெரும் வேள்வி பத்து நாள் நிகழும் . அதற்கான நிதி திரட்டல் மற்றும் நிர்வாக குழு செயல்பாட்டிற்கு வர வேண்டும். நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் மடாதிபதிகளின் தொடர் அமர்வு. நிறைவு நாள் திட்டமிடல். அதில் வைக்கபட இருக்கும் தீர்மானங்கள் குறித்த வரைவு . அத்துடன் திறந்த அரங்கம் நிகழ்த்தி அளித்த விவாதம் குறித்த முழு அளவிலான பரிந்துரைகள். அனைத்தும் பொருளிழந்தது போல தெரிந்தது.எதை நோக்கி நகர வேண்டும் ஏன் நகர வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்பெரும் விழாவை ஒரு வெற்று சம்பிரதாய விழாவாக நடத்தி முடிக்க என் ஆழ்மனம் ஒப்பவில்லை.
இனி ஐந்தாவது 2016 வருடம் ஐந்து லட்சம் பேர் பங்கேற்கும் பத்து நாள் மாநாட்டு நிகழ்வு. பிரதமர் வருகை. தீர்மான நகல் சமர்பிப்பு. விழா நிறைவு. இப்போது நினைத்து பார்த்தால் பெரும் உள நடுக்கமடைகிறேன். களம் முறையான தயாரிப்பில்லாமல் அறநிலைய துறை கோவில்களின் படி விலக வேண்டும் என்கிற தீர்மானம் எத்தனை அபத்தமானது. நல்லவேளை நான் அதை முயற்சிக்கவில்லை. அதற்கான வெற்றி எனது கைகளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முயற்சித்தே என்னால் ஒரு காலத்தில் என்னை மன்னிக்க இயலாது போயிருக்கும்.
சுருக்கமான என்னுடைய இந்த கனவு திட்ட வரைவை இங்கு சொல்ல வேண்டிய காரணம். எங்காவது அதை
முழுமையாக பதிவாவது செய்துவிட வேண்டும் என்கிற வேகம். அந்த விழா நடவாமல் சென்றது குறித்து நான் வருந்துவதில்லை எந்த இடத்தில் இருந்து அதன் மைய நோக்கம் திசைமாற ஆரம்பித்தது என்பது குறித்து சொல்ல நினைத்தேன். அதன் பின்னால் உள்ள ஒளி எனக்களித்த புரிதல் மகத்தானது அதை மிக விரிவாக பதிவிடுவதனூடாக என் ஆழ்மன தேடலை தொடர முயற்சிக்கிறேன். விழா குறித்த என் திட்டம் கனவாகவே சென்றுவிட வேண்டாம் என்பதுடன் குறைந்த பட்சம் அதன் பிரம்மாண்ட திட்டமும் அது நகர்வை மாற்றிய பிறிதேதோ ஒன்று என்மீது கருணை கொண்டு எனக்காக அதை நிகழ்த்தி கொடுக்காமலானது.அது பற்றிய ஒரு ஆய்வு போல முன் வைக்க நினைக்கிறேன்.
திருப்பதி சின்ன ஜீயரின் அனுபவமே எனக்கு போதுமானது. அவர் ஒரு மாபெரும் ஆன்மீக ஆளுமை அவரது செல்வாக்கு எந்த துறையிலும் குறைவற்றது. மத்தியில் இருந்து மாநிலம் வரை பெரும் அரசியல் செல்வாக்குள்ளவராக இன்று வரை திகழ்கிறார். இவ்ளவும் அவரது கனவை நிகழ்த்தி கொடுத்ததா? தெரியவில்லை ஆனால் வெளிப்படையாக தெரிந்தது அவரது ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் மேல்கோட்டை நிகழ்விற்கு பிறகு எந்த வைணவ திவ்வியதேசத்திலும் அது கொண்டாடப்படவில்லை என்பதை வைத்து அவரது உள்ளம் விரும்பிய ஏதோ ஒன்று நிகழாது போனதை அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு வகையில் புதுவையில் அவர் ஏதாவது துவங்கி இருக்க முடியும். சேலத்தில் அவருடன் வந்திருந்த திருக்கோட்டியூர் மாதவன் போன்ற பதட்டமே நிறைந்த ஒருவரை அருகில் இருக்க பிறர் அவரை கடந்து செல்ல இயலாமலானார்கள். என் வாழ்நாள் முழுவதும் அவரை போன்றவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். மிக எளிதில் அவர்களை அடையாளம் கண்டு தவிர்த்து விடுவேன். அவர்களின் வரைபடத்தில் நான் ஒருபோதும் சென்று நிற்பதில்லை.
இறுதியில் புதுவை ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நிகழ வேண்டிய விழா ராமாநுஜ கூடத்தில் மிக மிக சொற்ப எண்ணிக்கையில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நிகழ்ந்து முடிந்தது. கனத்த இதயத்துடன் எனக்கு அளிக்கப்பட்ட தாம்புல பையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். தாங்க இயலாத வலி என எதுவும் இல்லை. இது இப்படித்தான் நிகழ்ந்து முடியும் என முன்னரே அறிந்திருந்தேன் என்பதால் மிக எளிதில் கடந்து சென்றேன். என் கனவுகள் சில உதிர்ந்து போய் இருக்கின்றன அதில் ஆயிரமாவது ஆண்டு விழா்க்குழுவின் நிகழ்வுகள் குறித்த ஐந்தாண்டு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கலைந்த படி இருந்தது. அதன் முதல் முடிச்சி அவிழ்ந்து போன இடமும் தருணம் இன்றும் என் உள்ளத்தில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக