https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 17 செப்டம்பர், 2026

மணிவிழா 92 * புறப்பாடு….*

 





ஶ்ரீ:



மணிவிழா - 92


17-09-2026


* புறப்பாடு…….*




வேளுக்குடி கிருஷ்ணனுடன் ஒரே மேடையில் பல்லாயிரம் பேர் பார்க்க சென்றமர்வது குறித்த நிறைய ஐயம் கொண்டிருந்தார் திருகோவிலூர் ஜீயர். ஆயிரமாவது ஆண்டு துவக்க விழா என குறிப்பாட்டாலும் அதில் கூட்டத்தை ஈர்க்கும் பிரதானம் வேளுக்குடியின் மூன்று நாள் உபன்யாசம். ஜீயர் துவக்க உரை மட்டுமே அதில் நிகழ்த்துவார் பின் மேடை முழுவதும் வேளுக்குடி வசமாகும். மேடையில் நடக்கும் சிறிய முறைமை மீறல் அல்லது வேளுக்குடியின் யாரிடமும் தலை வணங்காத நெறி தனக்கு சிஷ்யர் மத்தியில் அலரை உண்டாக்கும் என்கிற சிந்தனை அவருக்கு உவப்பாக இல்லை. வடகலை அமைப்பு முன்னமே அவரிடம் தனது எதிர் எண்ணத்தை பதிவு செய்திருந்தது. இரண்டையும் நான் தேவையற்று இழுத்துக் கொண்டு வந்துவிட்டேன் என என்மீதும் வருத்தம்.


வேளுக்குடி பற்றிய ஜீயரின் அச்சம் மிக சரியானதாக இருக்குமோ என்கிற அச்சம் எனக்குள் துவக்கத்தில் எழுந்தாலும் அவை சாமான்யர்களின் புறவய பொதுப் புரிதல்களினாலானவை அவற்றை எப்படி அவர் அடைந்தார் என்பதே அப்போதைய கேள்வியாக இருந்தது . ஜீயர் போன்ற ஸ்தானத்தில் உள்ள ஒருவர் அதே எண்ணம் கொண்டிருப்பது எனக்கு துவக்கத்தில் ஆச்சர்யமளித்தது. ஜீயர் அனைவருக்கும் சுலபர் அவரின் அந்த சுபாவம் அவரிடம் நிகழும் முறைமை மீறல்களை அவர் பொருட்படுத்திவதில்லை. ஆனால் வேளுக்குடி தனக்கான இடத்தை மிக கச்சிதமாக வெட்டி வைத்திருப்பவர். என்றாலும் வேளுக்குடி பற்றிய புரிதலை நான் எங்கிருந்து பெற்றேன் என தெரியாது ஆனால் அது தான் உண்மை என்கிற தெளிவு இருந்தது. 


ஆளுமைகளுக்கு இடையேயான முறைமைகள் பற்றிய புரிதல்கள் நிஜத்திற்கும் நிழலுக்குமான வேறுபாடுகள். ஜீயரின் புரிதல்கள் சரியா? என்றால் ஆம் சரி. ஆனால் அந்த மெல்லிய வேறுபாடுகள் எங்கு கோடுகளால் பிரிக்கப்படுகின்றன என்பது இன்னும் நுண்மையானது. நான் அப்போது வேளுக்குடி பற்றிய தெளிவான புரிதலுக்குள் வந்திருந்தாலும் அதை வார்தைகளால் ஜீயருக்கு புரியவைப்பது கடினம் காரணம் அது என் குறைபாடு. ஆனால் ஒரு நிகழ்வின் மூலம் அதை சரி செய்துவிடலாம் என உறுதியாக நம்பினேன். அது நிகழும் வரை பொருத்திருப்பது மட்டுமே நான் செய்யக் கூடியது. 


வடகலை மரபினர் குறித்த எதிர் விணை நான் முன்பே ஊகித்திருந்தது தான் என்பதால் துவக்க விழா நிகழ 15 நாட்கள் இருக்கையில் அவர்கள் எழுப்பிய கேள்வி உள்ளபடியே எனக்கு புரியவில்லை. இது யாரோ செய்யும் விஷமம் அவர்கள் தலைமையிடம் இருந்து இது போன்ற ஒரு நகர்வு நிகழ வாய்ப்பில்லை. இருந்தும் நான் உடனடியாக களத்தில் இறங்கி நிலமையை சீராக்க துவங்கினேன். ஜீயர் தொலைபேசியில் என்னுடன் பேசிய விஷயங்களை ஒரு புள்ளிக்கு மேல் அவரிடம் விரிவாக உரையாட இயலவில்லை. அவர் சொல்ல வந்ததை மையமாக புரிந்து கொண்டேன். நிலைமையை சீராக்கி பின்னர் நேரில் சந்திப்பதாக சொன்னேன். இப்படி ஒரு சிக்கல் உருவெடுக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் புதிய கோணத்தை எதிர்நோக்கவில்லை. 


அப்படி ஒன்று உருவாகி நின்றால் என்ன செய்ய வேண்டும் என்கிற அவதானிப்பு முன்பே உருவாக்கி இருந்ததால் இப்போது களத்தில் அதை செயல்படுத்தும் போது மிக கவனமாக நிதானமாக காய்கள் நகர்ந்தன . முதலில் புதுவையை சேர்ந்த வடகலை பிரமுகர்களை சந்தித்து திருக்கோவிலூர் ஜீயர் என்னிடம் சொன்ன தகவலின் சுருக்கத்தை வைத்தேன். இது அவர்கள் அறிந்து நடந்ததா என்பது முதற் கேள்வி. இல்லை என்றே சொன்னார்கள். அதன் உண்மைத்தன்மையை ஆராயும் நேரமல்ல என்பதால் அவர்கள் சொன்ன இடத்திலிருந்து நான் சொல்ல வந்ததை முன்வைத்தேன்.

அதன் முதல் செய்தி புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுக் கமிட்டி என்பது புதுவையை சார்ந்து செயல்பட இருப்பது . இதில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைவரும் தென்கலையை சேர்ந்தவர்கள். தலைமை ஏற்கும் பிரதானம் திருகோவிலூர் ஜீயர். இது முழுக்க முழுக்க தென்கலையார் நிகழ்த்தும் விழா. அனைத்திலும் தென்கலை சின்னம் மிக்கிய இடம் வகிக்கும். இது நாங்கள் உருவாக்கி அமைப்பு. அதை விரிவுபடுத்தவே புதுவையின் அனைத்து முக்கிய ஆளுமைகளை உட் கொண்டு வந்து இயக்குவது என திட்டமிட்டப்பட்டது. அதை செயல்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தி முதல் கூட்டம் நிகழ்த்தினோம். அதில் இணைந்து செயல்படுவது என நீங்கள் உறுபடுத்தினீர்கள். இரு அமைப்பும் இணைந்து நடத்துவது பற்றிய பேச்சு அன்று நிகழவில்லை. அனைத்திற்கும் மேலாக புதுவை ஆளுமைகளில் சிலரை அழைக்க வேண்டும் என்கிற விழைவால் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அமைப்பு ரீதியான எந்த நகர்வும் இதில் இல்லை.


இதுவரை நாம் தனித்து செயல்பட்டு வந்தோம் இனியும் அது தொடரப் போகிறதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் . ஆயிரமாவது ஆண்டு விழா குழு இரண்டு சம்பிரதாயத்தயும் இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கவில்லை. அதன் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உங்களை தொடர்பு கொண்டேன். இந்த விஷயத்தில் எனக்கு அமைப்பிற்கு உள்ளே எதிர்பிருப்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு தெரியுமா என எனக்கு தெரியாது.

இதுவரை உங்கள் அமைப்பு நிகழ்த்திய எந்த விழாவிற்கு குறைந்தபட்சம் எங்களுக்கு அழைபிதழ் கூட அனுப்பப்பட்டதில்லை. இப்போது இந்த கேள்வி எங்கிருந்து எழுகிறது என தெரியவில்லை இதில் வடகலை  தலைமையகத்தில் இருந்து வரும் நெருக்கடி தேவையற்றது. நாம் பலமுறை கூடி முடிவெடுத்து துவக்க விழாவிற்கான நாள் குறித்த பிறகு இப்போது இது பற்றிய சர்ச்சையில் ஈடுபடுவது நமது உறவை சிக்கலாக்கும்.


அவர்களுக்கு ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு அத்தனை முக்கியம் என்றால் அகில இந்திய அளவில் அதை உருவாக்கி ஒருங்கிணைப்பை ஒருவாரத்தில் செய்து முடிக்கும் சக்தியுள்ளவர்கள். என்ன காரணத்திற்காக புதுவையில் இணைந்து செயல்பாட விரும்புகிறார்கள் இது உரிமைமீறல் போல தெரிகிறது. என்றேன். அவர்களால் ஏன் தனித்து செய்ய முயற்சிக்காது நிகழ்வதில் தடைகளை உருவாக்க நினைக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை சொன்னேன். அதில் இருக்கும் நியாயம் அவர்களுக்கு புரிய புதுவை நிகழ்வுகளில் தலையிட வேண்டாம் என கேட்டுக் கொள்ள செய்தி அவர்களது தலைமை வரை சென்றது. பின் அனைத்தும் அமைதியானது. ஆயிரமாவது ஆண்டு விழா துவக்க நாள் அன்று திருக்கோவிலூர் ஜீயர் புதுவை வந்திறங்கிய உடன் அவரை சந்திக்க வந்த வடகலை பிரமுகர்களை பார்த்த போது என்ன நிகழ்ந்தது என அறிந்து மகிழ்ந்தார். ஓரக் கண்ணால் வெளிபடுத்திய கனிவு எனக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டேன். 


வடகலையார் முயற்சி புதுவை சேர்ந்தவர்களுக்கு தெரிந்து நிகழ வாய்ப்பில்லை. பின் ஏன் நிகழ்ந்தது். ஒரே காரணம் வேளுக்குடி. வேளுக்குடியை மையப்படுத்தி அவர்கள் முன்னெடுத்த பல விஷயங்கள் ஏன்  நடைபெறவில்லை என தெரியவில்லை அல்லது புதுவையில் முன்னெடுக்கப்பட்டது போல ஒன்றை அவர்களும் முயற்சித்திருக்கலாம். வட மற்றும் தென்கலை வைணவர்கள் மட்டுமின்றி பொது மக்களை ஈர்க்கும் வேளிகுடியின் பிம்பம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. பெரிய விழாவாக எதை முன்னெடுத்தாலும் ஜன வசியம் தேவை என்றலோ திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றாலோ அது நிச்சயம் வேளுக்குடியை மையப்படுத்தியது என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களின் அழைப்பை ஏன் வேளுக்குடி ஏற்றுக்கொள்ள ஏன் தயங்கினார் என்பது எனக்கு தெரியாது. அல்லது அது போன்ற ஒன்றை அவர்கள் அதுவரை முயற்சிக்காதும் இருந்திருக்கலாம். புதுவையில் நிகழ ஆரம்பித்த பிறகு அவர்களின் எண்ணம் வேறு வகைகளில் செயல்பட முயன்றிருக்கலாம். 


இந்த சூழலில் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு நிர்வாகிகளின் முதல் கூட்டத்தில் புதுவையில் துவங்கப்பட இருக்கின்ற ஆயிரமாவது ஆண்டு விழாவில் வேளுக்குடி கிருஷ்ணன் பங்கேற்பது மட்டுமின்றி அதன் நிர்வாக பொறுப்புகளை ஏற்க இருக்கிறார் என நான் முன்வைத்த போது அவர்கள் அதை நம்பவில்லை. எங்கோ அரசியல் நிகழ்கிறது என ஊகித்திருதார்கள். அது ஒருவகையில் உண்மை. அதற்கான முயற்சியை நான் துவங்கி இருந்தேனே தவிர எனக்குமே அது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் ஆழ்மனம் அது நிகழும் என சொல்லிக் கொண்டே இருந்தது. 


புதுவையில் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கமும் அதில் வேளுக்குடி தொடர் உபனயாசம் நிகழ்த்துவது பற்றி முடிவானது ஒரு விசித்திரமான பின்னணியில் நிகழ்ந்தது.  2011-2012 களில் வேளுக்குடி தனது ஶ்ரீரங்க இல்ல கிரஹபிரவேசத்திற்கு தனது கிஞ்சித்காரம் அமைப்பின் தன்னார்வளர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். கிரஹபிரவேச நிகழ்விற்கு பின்னர் மதிய உணவு இடைவேளையில் அனைத்து தன்னார்வலர்களும் அவர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது தமிழகம் முழுவதும் உபன்யாச சிறப்பாக போய் கொண்டிருக்க ஏன் புதுவையில் நிகழவில்லை என்கிற கேள்வி எழுப்பப்பட்ட போது அவரை மையப்படுத்தி நான் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா முடிவு பாதியில் கைவிடப்பட்ட செய்தி அவரிடம் சொல்லப்பட்டது. அதுவரை எங்கும் ஆயிரமாவது ஆண்டு விழா பற்றிய எந்த முன்னகடுப்பும் நிகழாத போது புதுவையில் அதற்கான முயற்சி துவங்கப்பட்டு கைவிடப்பட்டது அவருக்கு ஆச்சர்யமளித்திருக்கலாம். அந்த சூழலில் அவர் என்னை சந்திக்க விரும்புவதை புதுவை தன்னார்வலர் பரகாலனிடம் சொல்ல அவரை திருக்கண்ணபுரத்தில் வைத்து சந்திப்பது என முடிவான போது அனைத்தும் முடிவாக இருப்பது பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மணிவிழா 93 * யானையின் வருகை*

  ஶ்ரீ : மணிவிழா - 93 18-09-2026 * யானையின் வருகை * திருக்கண்ணபுரம் எனக்கு மிக அனுக்கமான ஒரு திருத்தளம் . எனது தந்தைய...