ஶ்ரீ:
மணிவிழா - 97
19-10-2026
* கண்களில்லா காட்சிகள் *
யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்கும் குழு ஒன்று அன்று காலை ராமநாதபுரம் வந்தடைந்தது.அவர்களுக்கான சமையல் பாத்திரம் மளிகை காய்கறி எரிவாயு போன்றவைகளை ஒருங்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் மூன்று குழுவாக இருந்தார்கள் . யாத்திரையின் முதல் நாள் சமையலில் ஈடுபடும் ஒரு குழு யாத்திரிகள் அடுத்த இடத்திற்கு புறப்பட்டு சென்ற பிறகும் அவர்களின் வேலை அங்கே முடிவதில்லை. ஒவ்வொரு நிறுத்தமும் குறைந்தபட்சம் 200 கிலோமீட்டருக்கும் அதிகாமான தூரத்தை கொண்டவை. உள்ளூரில் இருந்து பெற்ற அனைத்து பொருட்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்து பின் அவர்கள் நாளை மறுநாள் யாத்திரிகர்கள் வந்து சேரும் ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். இன்றைய தேவையை செய்து கொடுக்க வேறு ஒரு குழு யாத்திரிகர்கள் வருவதற்கு ஒருநாள் முன்பே அங்கு வந்து காத்திருக்கும். இது ஒரு சுழற்சி முறை. இரண்டு ஊர்களில் சமையலில் இரண்டு குழு இருக்க மூன்றாவது குழு தொடர் பயணத்தில் இருக்கும். அது போல பஸ்கள் பழுதடைந்தால் அதன் உதிரி பாகங்களை கொண்டு வரும் வேன் ஒன்றும் அதில் அஷோக் லேலாண்டு நிறுவனத்தின் சிறந்த மெக்கானிக்குகள் சிலர் அந்த தொடர் பயணத்தில் அவர்களுடன் இருந்தனர். மருதுவர் குழு ஒன்று எப்போதும் அவர்களுடன் இருந்தது. சமையலும் தங்குமிடங்களும் யாத்திரிகர்கள் மற்றும் வைதிகர்கள் என இரண்டு குழுவுடன் தனித்தனியான சமையலும் தங்க வைப்பும் நிகழும். அனைவருக்கும் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவற்றில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாமையால் பல ஆயிரம் ரூபாய் செலவில் மொபைல் கழிப்பிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம்.
அன்று காலை வேளுக்குடியிடமிருந்து வந்த அழைப்பு யாத்திரிகர்கள் தணுஷ்கோடி செல்ல ஏற்பாடு செய்யும்படி இருந்தது. அதுபற்றி அங்கு விசாரித்த போது. யாத்திரகர்கள் வரும் பஸ்சை அதற்கு பயன்படுத்த முடியாது என்றும் அதற்கென அங்கு இருக்கும் வேன்களை பயன்படுத்திக் கொள்ள சொன்னார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து தணுஷ்கோடிக்கு முறையான சாலை வசதி இல்லை. கடலும் நிலமும் கலந்த இடத்தில் வாக்கனங்களை செலுத்தும் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இயல்வது. மேலும் கடல் அரிப்பினால் அது தினம் தினம் மாற்றமடைந்தபடி இருக்கும் நீங்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். சில லட்சம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் என தெரிந்தது. வேளுக்குடியிடம் அது பற்றி சொன்ன போது அதற்கெல்லாம் கணக்கு பார்க்க வேண்டாம் என்றார் . அன்று இரவு தணுஷ்கோடியில் உள்ளூர் வேன் ஏற்பாட்டாளரிடம் உரையாடி ராமநாதபுரம் மீள்வதற்கு இரவானது. சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. ஒரு புள்ளியில் சட்டென வண்டி எதன் மீதோ மிக கடுமையாக மோதி போன வேகத்தில் திரும்பி நின்றது. அந்த அதிர்வில் இருந்து மிள சிறிது நேரம் எடுத்தது. இறங்கி பார்த்தபோது இரவில் சட்டென உள் நுழைந்த மாடு மீது வண்டி மோதி இருப்பதை உணரமுடிந்தது. மாட்டை காணவில்லை. நாங்கள் அதிர்ந்திருந்த அந்த நேரத்தில் அது எழுந்து விலகி இருக்கலாம். நான் வண்டி எந்த நிலையில் இருக்கிறது என பார்க்க விரும்பினேன்.
இனோவா வண்டியின் முன்பகுதி முழுமையாக சிதைந்துவிட்டிருந்தது. சிறிய பழுது வண்டியை எளிதில் திரும்ப ஓட்டிச் சென்றுவிடலாம் என்பது கற்பனை என புரிந்தது. முன் பகுதி ரேடியேட்டர் முற்றிலுமாக சிதைந்து அதிலிருந்த தண்ணீர் முழுவதும் வடிந்து விட்டிருந்தது. ஏறக்குறைய பேனட்டின் மூன்றில் இரண்டு பங்கு கசங்கி உள் சென்றுவிட்டது போல இருந்தது. இஞ்சின் மற்றும் பிற பாகங்கள் என்னவாகியிருக்கும் என கற்பனை செய்வதே தளர்ச்சியை கொடுத்தது. அடுத்து
என்ன செய்வது என புரியாத அதிர்ச்சி. பின் ஒருவாரு தேறி அதிலிருந்து விலகி வந்தேன். அந்த இரவில் அங்கு நிற்க வேண்டாம் என தோன்றி நின்றுவிட்டிருந்த வண்டியை மீளவும் இயக்கி பார்க்க ஓட்டுனரிடம் சொல்ல ஆச்சர்யமாக வண்டி உயிர் பெற்ற போது சற்று நிம்மதியானாலும். இப்படியே ஓட்டி சென்றுவிடலாம் என்கிற கற்பனை செய்து பார்ப்பதில் நிம்மதி இருந்தாலும் தர்க்க புத்தி அது நடக்காது என் சொல்லிக் கொண்டே இருந்தது.
மனதில் பெரும் கவலை பாரமாக அழுத்தி இருந்தது. மனதில் அதுவரை கட்டுப்பட்டிருந்த எதிர்மறை எண்ணங்கள் சட்டென அதன் கட்டுக்கள் அனைத்தும் அவிழ்ந்து பரவ துவங்கியது. எதையும் மறுக்கும் தன்னம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் அதற்கு எதிரான எண்ணங்களே நிரம்பி வழியத் துவங்கியிருந்தது. இதை சரி செய்ய தேவைபடும் பொருளியல் வசதி அன்று என்னிடம் இல்லை என்பதே பிரதானமாக எழுந்து நின்றது. அடுத்து என்ன என்கிற எந்த ஊகமுமின்றி மிகவும் சோர்ந்து போய் இருந்தேன்.
விபத்தின் பாதிப்பால் வண்டியில் நிலைகுலைந்து அமர்ந்திருந்தேன். எண்ணங்கள் சூழ்ந்து அலையடிக்க துவங்கிவிட்டது. அன்று நல்லிரவு அனைத்து யாத்திரை வண்டிகளும் ராமநாதபுரத்தை அணுகத் துவங்கிவிடும். இப்போது இந்த வண்டியை என்ன செய்வது. எப்படி ஊருக்கு எடுத்துச் செல்வது என்பதுடன் நான் எப்படி ஊர் திரும்புவது. காவல் நிலையத்தில் தகவல் சொல்லி புதுவை கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டுமா? அது இப்போது இயலாது நாங்கள் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து விலகி சிறிது தூரம் சென்றுவிட்டிருந்தோம் . காவல் நிலையம் என எதுவும் கண்ணில் படவில்லை. அருகில் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை . யாத்திரிகர்கள் பஸ்களை எதிர்பார்க்கும் நினைவு எழுந்தது. இரவு அவ்வளவு பெரிய நிகழ்வை வைத்துக் கொண்டு இதன் பின்னால் அலைய முடியாது என தெளிவாக தெரிந்தது. அதற்குள் வண்டி நின்றுவிடும் நிலையை அடைந்திருந்தது. ஒரு கட்டத்தில் முற்றாக நின்றுவிட்டது. கெடுதலுக்ககு மத்தியில் வரு நல்லூழ் போல நாங்கள் யாத்திரிகர்கள் தங்க ஒருங்கிய ஒரு கல்யாண மண்டபம் மிக சமீபத்தில் இருக்க அங்கு காரை தள்ளிக் கொண்டு போய் விட்ட பிறகு அடுத்து என்ன என்கிற கேள்வி எழுந்து நின்றது. அப்போதே இரவு 11:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் முதல் யாத்திரிகர்கள் பஸ் வந்து சேரும். அங்கிருந்து உள்ளூர் உதவி பெற்று வேறு வாடகை காரில் அனைத்து பஸ்களும் வந்து கூடும் இடத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து இறுதி நேர மாறுதல்களை செய்யத் துவங்கினேன். மனம் மிக கணத்து கிடந்தது. ஏற்கனவே பொருளியல் சிக்கலில் இருந்த எனக்கு இதை சரி செய்ய இல்லாமலும் போகலாம். கண்முன் பல இடங்களில் சேதமடைந்து கைவிடப்பட்ட வண்டிகள் நின்ற நிலையை படம் போல காட்டி நின்றது. இனி அதுபோல இந்த வண்டியும் மீட்பில்லாத அகாலத்தில் நிற்கப் போகிறது என்கிற எண்ணம் மீள மீள வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
ராமநாதபுரம் புறநகர் பகுதி ரயில் இருப்பு பாதையை ஒட்டிய நான்கு சாலைகள் வந்து இணையும் சிறிய உள்ளூர் சாலை ஒன்றை அனைவரும் வந்து கூடும் இடமாக அறிவித்திருந்தேன் . அந்த இடம் மட்டுமே அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் சந்திக்கும் ஒரே பகுதி. வரும் வண்டிகளின் கவனத்தை கவரும் பேனர்கள் அனைத்து சாலைகளும் வந்து இணையும் இடத்தில் தொங்கவிடப்பட்டது. சுமார் 20 ஆட்டோக்களை ஏற்பாடு செய்திருந்தோம். யாத்திகர்கள் தங்க ஒருங்கிய இடங்கள் ஊரின் பல பகுதிகளில் இருந்தது. வழி சொல்லி அவர்களை அங்கு அனுப்பி வைப்பது எளிதில் நிகழாது என்பதால் உள்ளூர் ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அவர்கள் பஸ் வரவர தங்குமிடம் நோக்கி அழைத்து செல்வார்கள்.
வேலைக்கு மத்தியில் காரின் கடுமையாக அடிபட்ட காட்சி படம் போல மீள மீள வந்து கொண்டே இருந்தது. மனமோ மூளை அமைப்போ எதுவோ ஒன்றிணைக்கும் ஒன்று தனித்தனியாக பிரிந்து இரண்டு காட்சிகள் இரண்டு கணக்குகள் இரண்டு மனவோட்டத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. அது ஒருபுறமிருக்க செய்ய வேண்டிய வேலைகளில் மிக கவனமாக இருந்தேன். முதல் பஸ் நல்லிரவு 1:30 மணிக்கு வந்து சேர்ந்தது. பின் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்த பஸ்கள் வந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் ஆளரவமற்றிருந்த சாலை தேர் திருவிழா போல நிறைந்தது. சில பஸ்கள் ஓரங்கட்டி நிற்க பஸ்ஸில் இருந்து சாரி சாரியாக யாத்திரிகள் இறங்க ஆரம்பித்தனர். நீண்ட பயணத்தில் இருந்தவர்கள் இறங்கி சற்று உடலசைத்து கொண்டனர். அந்த பஸ்களை ஒருங்கிணைத்த கிஞ்சித்கார தன்னார்வலர்கள் அவர்களுக்கு அடுத்து செய்ய வேண்டியவைகளை உரக்க கூவி சொல்லிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு மெல்ல அவர்கள் வந்த பஸ்கள் ஒன்றன் பின் ஒன்று என புறப்பட்ட செல்லத் துவங்கின. பஸ்களின் வருகையை ஒருங்கிணைத்து எனக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்த எனது நண்பர்கள் குழு மூன்று பஸ்கள் வந்து சேராததை சொன்னார்கள். அந்த பஸ்களின் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு எங்கிருக்கிறார்கள் என தகவல் அறிய சொன்னேன். அதிகாலை 5:00 மணியை கடந்து விட்டிருந்தது. அந்த பணியை உதவியாளர்களிடம் விட்டு நான் எனது அறைக்கு குளிக்க சென்றேன். மனம் இரண்டாக பிரிந்து ஒன்று காரைப்பற்றி எதையோ சொல்ல முயற்சிக்க அத்துடன் மல்லுக்கட்ட மனமில்லாமல் இனி அடுத்த நிகழ வேண்டியது பற்றிய திட்டம் ஓடிக் கொண்டிருந்தது.
இரவு திருப்புல்லாணிக்கு பல ஊர்களின் வழியாக வருவதால் அனைவரையும் ஒரு பொது இடத்திற்கு வர சொல்லி தகவல் அனுப்பி இருந்தேன். அந்த இடத்திற்கான வரைபடம் எந்தெந்த வழியாக வந்தடையலாம் என்கிற குறிப்புகள் மற்றும் திட்டங்கள் வேளுக்குடிக்கு மின்னஞ்சல் அனுப்பியபடி இருந்தேன்.
அனைத்தும் சரியாக சென்று சேர்ந்திருக்கும் பின் எப்படி மூன்று பேருந்துகள் காணாமலாயின எனப் புரியவில்லை. மூன்று வாயப்புகளே கண்முன் நின்றது. வண்டிப் பழுதடைந்து நின்றுவிட்டிருந்தால் அதை சரி செய்யும் அமைப்புகள் எடுத்துக் கொள்ளும். மற்ற இரண்டு வாய்ப்புகள் பேருந்துகள் ஒன்று கடந்து சென்றுவிட்டிருக்கலாம் அல்லது இன்னும் வந்து சேராது இருக்கலாம் இந்த மூன்றிலும் நான் செய்யக் கூடியது ஏதுமில்லை. நான் என் தங்குமிடம் அடைந்து குளித்து கடற்கரை நோக்கி சென்றேன். மணி அதிகாலை 5:30 மணி. இருள் முற்றும் விலகவில்லை. காற்றில் உப்பு மனமும் பாசி மனத்துடன் சிறு குமட்டலை உருவாக்கக் கூடிய மீன் நாற்றமும் இருந்தது.
கடற்கரையில் வைதிகர்கள் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி சூழ்ந்திருந்த யாத்திரிகர்கள் வைதிகர் சொன்ன வேத மந்திரத்தை உச்சரித்து அவர் செய்ய சொன்னபடி செய்து தங்களது மூத்தோருக்கு நீர்கடன் அளித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் எந்த சிந்தனையும் இல்லாமல் அதை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன் இருந்தேன். வேளுக்குடி அங்கு இல்லை என்பதை அங்கிருந்த சூழலே சொல்லிற்று. அங்கு நின்று கொண்டிருப்பது அர்த்தமற்றது என ஒரு புள்ளியில் தோன்ற கோவிலுக்கு சென்றேன். நீர்கடன் கொடுத்து திரும்பியவர்களுக்கு கோவிலில் காலை உணவு பறிமாறிக் கொண்டிருந்தனர். வேளுக்குடி அங்கு தான் இருந்தார். பல மாதங்களுக்கு பின் அவரை நேரில் சந்திக்கிறேன். அருகில் சென்று வணங்கி மீள எண்ணமில்லாமல் அவர் பரபரப்பாக இயங்கியதை பார்த்துக் கொண்டிருந்தேன். தட்டு வேட்டி கட்டி உணவுப் பறிமாறிக் கொண்டிருந்த ஒருவரை கச்சம் கட்டி வரச்சொல்லி கடிந்து கொண்டார். மரபில் உள்ள ஆச்சார சிக்கல். எனக்கு இது புரியவில்லை. ஆச்சாரத்தை பேணும் ஆர்வத்தால் இப்படி நிகழ்கிறதா. அல்லது யாராவது எதையாவது விரோதமாக சொல்லி வைக்க போகிறார்கள் என அஞ்சுகிறாரா? இந்த கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. கண்களுக்கு புலனாகாது நின்றிருந்த அந்த ஆச்சார புருஷ்ர்களை பார்க்க முயன்றேன். மண்டபத்தில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த என்னை அவர் பார்த்த போதும் வணங்கி நிற்காமல் அவரது செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என் அருகில் வந்தவர் தணுஷ்கோடி செல்வது பற்றி கேட்டார். நான் அவரிடம் செல்லும் பாதையில் உள்ள சிக்கலையும் பயணம் சில லட்சங்களாகும் என்பதை சொன்னேன். உள்வாங்கிக் கொண்டு மறுசொல் எதுவும் சொல்லாமல் என்னை கடந்து தனது வேலையில் மூழ்கிப் போனார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக