ஶ்ரீ:
பதிவு : 642 / 832 / தேதி 29 செப்படம்பர் 2022
* முந்தும் புதியவை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 38 .
1998 பாராளுமன்றத் தேர்தல்கள வேலைகள் ஆரம்பத்த போது அது கட்சியின் முகத்தை கார்பரேட் பாணியில் மாற்றி செயல்படுத்துவதாக தோன்றியது சற்று வினோதமாக பட்டது . தேர்தல் வேலைகளை முழுமையாகவே அதை கரூர் பாஸ்கரனுடன் இணைந்து ஒருங்கிணைத்தோம். ஒவ்வொரு சந்திப்பிற்கு பிறகு அவர் அதை அனுகிய முறை என்னை அப்படி பார்க்க வைத்தது. முற்றாக புதிய அனுபவம். ஒன்றொன்றும் புதிய தளத்தில் நிகழ்ந்தது. வேட்பு மனு தாக்கல் அன்று அந்த ஊர்வலம் திட்டமிடலில் இருந்து அது துவங்கியது. ஈரோடு பக்கத்தில் இருந்து ஒரு மேளக் குழுவை முதல் நாளே வரவழைத்து தங்கவைத்து அவர்களை தேவைகளை பார்த்துக் கொள்ளச் சொன்னார். அது ஒரு இருபத்தி ஐந்து பேர் குழு அவர்கள் கொண்டு வந்திருந்த மேளங்கள் ஏறக்குறைய ஐந்தடி உயரமுள்ளவை சில சிறியவை. நம்மூரில் பயன்படுத்தப்படும் பறை போன்ற தோல் வாத்தியங்களல்ல. தில்லியில் அது போன்று பார்த்திருக்கிறேன். ஸ்டீல் டிரம்முகளில் இழுத்துக் கட்டப்பட்ட சிந்தடிக் பிளாஸ்டிக் போல ஒளி ஊடுருவக் கூடியது. தோல் வாத்தியங்களை போல அவை தொய்ந்து விடுவதில்லை. ஆரம்பத்தில் அதை வழக்கமான மேளமாக நினைத்திருந்த எனக்கு அடுத்த நாள் காலை துவங்கும் போது அதன் ஒலி அலைகள் ஏற்படுத்திய சிலிர்ப்பு அடங்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. ஒருமுறை மனதை கொடுத்துவிட்டால் அதிலிருந்து மீட்டுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.
அவர்கள் எப்போது துவங்க வேண்டும் என்கிற முடிவை என்னை எடுக்க சொல்லியிருந்தார்கள் . அதை நான் தலைவர் அலுவலகத்தில் இருந்து இறங்கி வரும்போது ஆரம்பிக்க நினைத்திருந்தேன். கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் அதை ஒருவர் மாற்றி ஒருவர் சமிக்ஞை மூலம் மட்டுமே ஆரம்பிக்கச் சொல்ல முடியும். நண்பர்கள் சிலரை அதற்கு நியமித்துவிட்டு நான் தலைவருடன் அவரது அறையில் இருந்தேன். வழக்கம் போல அவருடன் சிலர் சர்ச்சையை துவங்கினர். அரசியலில் அது ஒரு வேடிக்கை பிறரின் கவனத்தை கவர அப்படி செய்வார்கள். அவர்கள் அதற்காகவே வருவார்கள் போல. அன்று அதை எப்படி நிறுத்துவது என தெரியவில்லை கூட்டம் அவரது அறைக்கு உள்ளே வெளியே என கசகசத்து ஒருவருடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். எதை குறித்த சர்ச்சை என அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் அங்கிருக்க முடியாமல் வெளியே ரோட்டிற்கு வந்த போது என் நண்பர்கள் தவறுதலாக நான் அந்த மேளத்தை துவங்க சொல்லுவதாக நினைத்துக் கொண்டார்கள். சட்டென அந்த மேளம் துவங்கிய முதல் கணம் காதில் ரீங்காரமாக ஒலித்து என்ன அது என்ன வகை தாளம் என புரிந்து கொள்ளவதற்கு முன்னர் உச்ச கதியை அடைந்திருந்தது . ஒரு மேளமே காதை பிளக்கும் ஒலியை எழுப்பக் கூடியது ஆனால் அனைத்தும் ஒரே சமயத்தில் துவங்கிய போது ஒத்திசைவு அதன் இசையை முதலில் வெளியிட்டது. துணை இசை கருவிகள் எல்லாமே மேளங்கள்தான். ஒலியில் அவை பலவிதமாக பிரதான மேலத்துடன் இணைந்து முரண்பட்டு தனித்து என ஒரு தாளகதிக்கு வந்த போது அதை கேட்பவர்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. பூனையின் எலி நோக்கு போல ஏனென்று சொல்ல முடியாமல் அதை வெறித்து பார்க்க மட்டுமே முடியும். அதிலிருந்து ஒருவாறு மீட்டெடுத்துக் கொண்டு அலுவலகத்தை நோக்கி சென்றேன். மேளக் குழு கலவை சுப்புராய செட்டியார் , சின்ன சுப்புராயபிள்ளை தெரு முட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதை ஒட்டி தலைவர் செல்லும் ஜீப் வண்டி ஒலி பெருக்கியுடன் கொடிகள் இன்னும் கட்டப்படாத நிலையில் நின்று கொண்டிருந்தது. அந்த ஒலி யாரும் யாருடனும் பேச இயலாமல் செய்துவிட்டது. மீறி தகவல் பறிமாறிக் கொள்ள விரும்பினால் தொண்டையை கிழித்துக் கொள்ள வேண்டும் . நான் என்ன செய்வது என திகைத்திருந்த நேரத்தில் அலுவலக பணியாளன் ஏழுமலை கைகள் நிறைய கழிகளில் கட்டப்பட்ட கைசின்னமிட்ட காங்கிரஸ் கொடிகளை அள்ளிக் கொண்டு வந்தான். நான் அவனை நோக்கி நேரமில்லை சீக்கிரம் என்று சைகையில் சொன்னேன். அவன் தன்தரப்பு பற்றி ஏதோ சொல்லவர அதை நிராகரித்து திரும்பவும் தலவரை சந்தித்து கிளம்பலாம் என சொல்ல வந்தேன். மனுதாக்கல் செய்வதற்கு உகந்த நேரம் சில நாட்களுக்கு முன்பே கணிக்கப்பட்டிருந்தது. இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அவருடன் ஜீப்பில் செல்பவர்கள் அவர்கள் சாமர்த்தியத்தில் அதை நிகழ்த்தி கொள்ள விடுத்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வண்டிக்கு முன்னால் அணிவகுக்க சொல்லி திரும்பினேன். கை சின்னமிட்ட காங்கிரஸ் கொடி எப்பவும் ஒவ்வாமை அளிப்பது. ராட்டை சின்னம் கொண்ட கொடி மிக அணுக்கமாக உணர்வதுண்டு. அது எனக்கும் கட்சியின் சுதந்திர போராட்ட தொடர்ச்சியில் என்கான இடத்தை அதன் சரடை கொடுக்கிறது.
மேள கோஷ்டி காங்கரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் இரு மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த தாள கதியை என்னவென்று விவரிக்க இயலவில்லை. யாரையும் எதுவும் செய்ய விடாமல் ஒரு புள்ளியில் திகைத்திருக்கச் செய்திருந்தது. வந்தவர்கள் வந்த வேலையை மறந்து சட்டென அந்த மேளக்காரர்கள் இருக்கும் இடத்தை சுற்றி கூட ஆரம்பித்தனர். கூட்டத்தின் மொத்த கவனத்தையும் கவர்ந்த பின்னர் இரு சாரையாக நின்றிந்த மேளம் ஒரு சிறு வட்டமாகி பின்னர் பிறிந்து விலகி கூடி பிறிந்து என ஒருவித நடனம் போல ஒன்றை ஆரம்பித்தனர். மேளத்துடன் ஒத்திசைந்து கூடியவர்களை வசீகரிக்க கூட்ட அடர்த்தி ஏறி ஏறி வந்தது. சற்றுமுன்னர் நான் அமைத்த ஊர்வல ஒழுங்கு முற்றாக சிதைந்து யார் எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியாமலாக்கியது. ஊர்வலம் துவங்க சில நிமிடங்களே இருக்கையில் மீண்டும் அதை எப்படி ஒருங்குவது என்கிற மிரட்சி நிலையழிவை கொடுத்தது. இனி இந்த கூட்டத்தை ஊர்வலமாக மாற்ற இயலாது.
ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென விலகி இரு பிரிவாகி நிற்க நடுவே அனைவரையும் கும்பிட்டபடி சண்முகம் வெளிவந்தார். மேளத்தில் கோல் விழும் வேகம் மேலும் அதிகரித்து போது எனக்கு அதன் அருகில் நிற்பது தாளமுடியாமலானது. இனி யாரும் யாருக்கும் ஒன்றும் சொல்லமுடியாது. ஊர்வல வண்டியில் அவர் ஏறியபிறகு அனைத்தும் ஒரு ஒழுங்கிற்கு வந்தாக வேண்டும். நகர்வு சரி செய்துவிடும் யாரும் அங்கு தேங்கி நிற்க முடியாது. நல்ல கோடைகாலம் வியர்வை வழிந்து கதர் சட்டை உடம்பில் ஒட்டிக் கொண்டது. அது கதர்சட்டைக்கே உள்ள சிக்கல். தனியடையாளம் இல்லாமலாகும் போது அனைத்தின் மீதும் ஒரு வித எரிச்சலை உண்டு பண்ணும். வியர்வை வெளிவராமல் முகத்திற்கு அடித்த பவுடர் கரையாத மனிதர்களை பார்க்கும் போது அது இன்னும் அதிகமாகும். வியர்ப்பதுதானே மனித இயல்பு இவர்களுக்கு ஏன்அது நடக்கவில்லை. சண்முகம் வண்டியில் ஏறாமல் அதை கடந்து சென்ற போது வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு நடந்து செல்ல உத்தேசிக்கிறார் என புரிந்தது. இனி அவரவர் இடத்தை அவர்களே தேர்வார்கள். கூட்டத்தில் மாட்டிக் கொண்டால் சிக்கல் என மனு பேப்பர்களை எடுத்துக் கொண்டு சூரியநாராயணனும் மாறனும் முன்பே அலுவலகம் சென்றுவிட்டருந்தார்கள் .