ஶ்ரீ:
பதிவு : 639 / 829 / தேதி 10 செப்படம்பர் 2022
* கனவுகள் பெரிது *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 35 .
“நெடுமாறன்” தலைவருக்கு நெருங்கிய உறவினன் . சண்முகம் அவனுக்கு மாமா முறை என அவனை அறிமுகம் செய்து வைத்தபோது சூரியநாராயணன் சொன்னார் . கடலூர் சிப்காட்டில் ரசாயன கம்பெனி நிடத்திக் கொண்டிருந்த சண்முகத்தின் வளர்ப்பு மகன் தனக்கு உதவியாளனாக சொந்தத்தில் இருந்து நெடுமாறனை கடலூருக்கு அழைத்து வந்தார். தங்கும் வசதிக்காக புதுவைக்கு வந்த மாறன் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கிளம்பி சென்று இரவும் உறங்குவதற்கு தலைவர் வீட்டிற்கு வந்துவிடுவான். பழக இனிமையானவன். என்ன காரணத்தினாலோ தொழில் சரியாக போகவில்லை. அவனுக்குள் இருந்த அரசியலாளன் அதற்கு காரணம். சில காலம் கழித்து கடலூர் ரசாயன கப்பெனி விலைகாட்டிக் கொண்டிருப்பதை பற்றி என்னிடம் சொன்னதுண்டு. அது மூடிய தருணத்தில் அவனது எதிர்காலம் கேள்விகுறியானது . அவனை சென்னைக்கு திரும்பி செல்ல சொன்னார்கள் . புதுவையில் தங்கியிருந்த நாட்கள் அவனுக்கு புதிய கனவுகளை கொடுத்திருந்தது . இதுதான் தனக்குகந்த இடம் என நினைத்துக் கொண்டிருந்தவன் சென்னைக்கு செல்வதை பற்றிய சிந்தனையை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.இங்கு அவனுக்கான அடையாளம் மெல்ல உருவாகி இருந்தது அதை உதறி சென்னையில் கோடிக்காணக்கானவருடன் கரைந்து முகமிலியாக அவனால் ஒரு போதும் சென்று அமைய முடியாது. புதுவையில் அவனுக்கு கிடைத்த அங்கீகாரமும் அவனுக்கு முன் நின்றவர்கள் நகர்ந்து அவனுக்கு அளித்த இடமும் அவனை மொத்தமாக உருமாற்றி இருந்தது. அது நாள்வரை அவனைப் பற்றி அறியாத புதிய முகம் எழுந்து வந்தது . இனி புதுவையில் இருந்து கொண்டு அவன் செய்யக்கூடியதென ஒன்றுமில்லை என்றாலும் அரசியலை ஒரு சூது போல உருவகித்துக் கொண்டிருக்க வேண்டும். இருப்பதை எல்லாம் வைத்து ஆட வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். அவனுக்கு முன் வந்து நிற்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் தயங்காமல் ஏற்கும் மனநிலை அப்போது உருவானது. ஆரம்பம் முதலே வாழ்கை பற்றிய பெரும் கனவுடன் வந்தவனுக்கு அது முடிந்து போன விதம் அதிர்ச்சியளத்தது. அதே சமயம் கைக்கெட்டும் வாய்ப்பு புதுவையின் அரசியல் தலைமை ஒன்றின் வீட்டில் இருப்பது பல புதிய வாய்ப்புகளை திறந்து வைப்பது. அதில் உள்ள மிதப்பால் அவன் அதில் லட்சியம் அறம் என எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை. பசித்தவனின் வாழ்கை போக்கை அந்த “பசி” மட்டுமே முடிவு செய்வது . அவன் தனது கோட்பாடுகளை உரக்க சொல்லும் போதெல்லாம் மிக எளிதாக அவற்றை கடந்து சென்று விடுவேன். அவற்றை ஒருபோதும் விவாத பொருளாக்குவதில்லை. காரணம் அவனது அடிப்படையில் எனக்கு முரண்பாடிருந்தது.
தலைவர் வீட்டில் அவனது இடம் மிகச் சிறியது அவன் ஒரு நோக்கமும் இல்லாமல் அங்கு தங்கியிருந்த போதும் அது இருந்தது. இனி வாழ்வில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற உணர்வு அந்த இடத்தின் மீது பாய்ச்சிய வெளிச்சம் அவனுக்கான கதவை திறந்தது கொடுத்தது . தலைவர் வீட்டில் காலை மாலை இரண்டு வேளை டீ போடுவது தவிற வேறு சமயலென ஏதுமில்லை. காலை சிற்றுண்டி அவருக்கு அரவிந்தர் ஆஸிரம உணவு கூடத்தில் இருந்து வந்துவிடும். கோதுமை ரொட்டி பால் வெண்ணைப் பப்பாளி போன்ற பழ வகைகள். மதிய உணவு அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து வந்தது . மிக எளிய மெனு. சாதம் , ரசம், வத்தல் மோர் வேகவைத்த காய்கறிகள். இரவு பெரும்பாலும் 3 இட்டிலி அல்லது இரண்டு வாழைப்பழம். அது போன்ற வாழ்கை முறையை அவர் கமராஜரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஒருமுறை தலைவரை பார்க்க வந்தவர் அவரை உசுபேற்ற “ உங்கள் புதுவை காமராஜர் பட்டம் இப்போது ரங்கசாமிக்கு போய்விட்டது” என சொல்ல, சட்டென ஆவேசமாக சண்முகம் “நான் என்ன அவரைபோல சென்னை புகாரி ஹோட்டலில் மீன் குழம்பா சாப்பிடுகிறேன், அவருக்கு தமிழ்நாட்டு சண்முகம் என பட்டம் குடுங்கையா” என கொந்தளித்தார். மீன் குழம்பே ஒரு ஆடம்பரம் என நினைத்தார். காங்கிரஸின் கலாச்சாரத்தில் அந்த எளிமை என்பது ஒரு அடையாளம் போல இருந்திருக்கலாம். அகில இந்திய மூத்த தலைவர் மோதிலால் ஓரா புதுவை வந்த போது அவரை பேண மிக சிரம மாக இருந்தது. அவர் உணவில் பூண்டு வெங்காயம் என அனைத்தையும் தவிற்ப்பவர். வரும் போதே இன்ன மெனு என சொல்லிவிடும் மேலிட பார்வையாளர்களும் உண்டு. எங்கோ ஒரு புள்ளியில் மாறனிடம் அந்த மாறுதலை பார்த்தேன். திடீரென கதர் சட்டையில் பார்த்த போது அவன் தானது எதிர் காலத்தை என்னவாக உருவகித்திருந்தான் என புரிந்து கொண்டேன். என்றோ தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை அங்கிருந்து தொடங்க வேண்டும் என்கிற அவதானிப்பை அடைந்திருக்க வேண்டும். முதல் முறை கதர் சட்டையில் அவனை பார்த்த போது சிரித்தபடி வல்சராஜ் “அரசியலுக்கு வந்தாச்சா?” எனச் சொல்லி சிறு ஏளனத்துடன் கடந்து செல்ல அவருடன் தலைவர் வீட்டிற்கு வந்திருந்த நான் அவனை முழுமையாக புரிந்து கொண்டேன் . கடலூர் ரசாயன கம்பெனி மூடப்பட்டிவிட்டதை நீண்ட நாட்கள் கழித்து சொன்னான். எங்கும் செல்லாமல் அவன் தலைவர் வீட்டிலேயே அடைந்திருந்தது நினைவிற்கு வந்தது. சூரியநாராயணுடன் மாறன் கட்சி அலுவலகத்திற்கு வருவதையும் நான் பெரிதாக எண்ணவில்லை. தலைவர் வீட்டின் அடுப்பறையில் சந்திக்கும் வழக்கம் தவிற அவன் தனித்து இருந்ததால் அவனை எனது தெருங்கிய நட்பு வட்டத்தில் அறிமுகப் படுத்தினேன். பின் எல்லா விருந்துகளிலும் கலந்து கொள்ள அழைத்துச் சென்றேன். அவனுடனான நட்பு அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.
மாறன் தலைவர் வீட்டை தன்னிச்சையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு அவருக்கு மூன்று வேளை உணவும் அதை சமைக்க ஆள் என விரிவான ஏற்பாடு செய்தான் . வீடு மட்டுமின்றி தலைவரும் மெல்ல அவனை சார்ந்து கொண்டிருப்பதாக தோற்றம் உருவானது . முதலில் இது போல ஒன்றை சண்முகம் அஞ்சினாலும் தலைவர் வீட்டின் முழு வீட்டு பொறுப்பையும் மாறன் மெல்ல மெல்ல எடுத்துக் கொண்ட போது அதன் பலன்கள் கருதி அதை தடுக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம் . வயோதிகம் சில சலுகைகளை எதிர் நோக்கும். அதில் வாய்க்கு ருசியான உணவு.சண்முகத்திடம் அவனது செல்வாக்கு இருந்ததாக நான் சொல்ல மாட்டேன். அவரிடம் யாரும் தங்களுடைய செல்வாக்கை செலுத்திவிட முடியாது. அவரை மறுக்க வேண்டியவர்கள் தர்க்க ரீதியில் அதை முன்வைக்க வேண்டும். இருந்தாலும் நீண்ட நாள் அவதானிப்பிற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மாற்றமடைந்திருப்பதை பார்க்க முடியும். மாறன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. பிறரின் செயல்கள் அவரது கணக்கிற்குள் வந்து அமரும் போது அதன் விளைவுகளில் இருந்து தனக்கானதாக எடுத்துக் கொள்வார். அதைக் கொண்டு பிறரின் பார்வைக்கு அவனின் செல்வாக்கு அவரிடம் இருப்பது போல ஒரு தோற்றத்தை அவனால் உருவாக்க முடிந்தது . சண்முகம் தனது எண்ணம் எதையும் அறுதியாக சொல்லும் வழக்கமில்லாதவர். அவரவர் நிலைப்பாட்டை அவரவர் புரிதலுக்கு விட்டு விலகி நிற்பவர். அவரை சுற்றி நடந்த அரசியலின் நன்மை மற்றும் அல்லாதவைகள் என அனைத்திற்கும் அது காரணமாக இருந்தது. அவரை கட்டுப்படுத்துவதில் நெடுமாறன் முற்றாக வென்றானா என்றால் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக