ஶ்ரீ:
பதிவு : 638 / 828 / தேதி 01 செப்படம்பர் 2022
* விளையாட்டு வினை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 34 .
மறுநாள் மதியம் 3:00 மணிக்கு தில்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் மேலிடப் பார்வையாளரை புதுவைக்கு அழைத்து வர என்னை ஏன் முதல் நாள் இரவே கிளம்பிச் செல்ல சொல்கிறார்? என விளங்கவில்லை. கேட்டதற்கு “நேர மேலாண்மை” என அவர் சொன்னதை என்னால் ரசிக்க முடியவில்லை. அவரிடம் ஒருவித சர்வாதிகாரி மனநிலை அல்லது தவறே நி்கழக்கூடாது என்கிற பதட்டம் . இது எதுவும் இல்லை நான் புதுவை மேலிடப் பார்வையாளருடன் நிகழ்த்த வேண்டிய உரையாடல் பற்றி அவரின் விருப்பமாக இருக்கலாம் நான் பேசத் துவங்கினால் என்ன பேசுவேன் என்கிற அவரது புரிதல். உரையாடல் மொழி ஆங்கிலம் என்பதால் அவர் என்னுடன் அனுப்பிய விநாயகமூர்த்தி மொழி அறியாதவர். ஆனால் மாறன் எனக்கு கொண்டுவந்த செய்தி முற்றிலும் வேறானது என்பதால் அவன் என்னிடம் சொன்ன தகவல்களை சண்முகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது அவனாக முனைந்தது. அன்று இரவு சென்னைக்கு கிளம்பும் முன்பு என்னை தலைவர் வீட்டில் சந்தித்த “வில்லங்கம்” வைத்தியநாதன் பேலிடப் பார்வையாளரிடம் நாராயணசாமி பற்றி புகார் சொல்லச் சொன்னார். நாராயணசாமி மிகத் தீவிரமாக பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். சண்முகம் அந்த முறை பாராளுமன்றத்திற்கு போட்டியிட வேண்டும் என நினைத்தேன். நான் உருவாக்கி வைத்த அமைப்பு சரியாக செயல்படுகிறதா என்பதை சோதித்து மாநில அளவிலான தேர்தலே அதை சரி பார்க்கும் சிறந்த களம் . மேலும் சண்முகம் நாரயணசாமி இருவரின் பனிப்போர் வெளிப்பட போகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. சண்முகம் எதையும் வெளிப்படையாக சொல்பவரல்ல என்பதால் வில்லங்கம் சொன்னதை நான் செய்ய முடியாது என மறுத்தேன். “இது தலைவர் விருப்பம் உன்னிடம் என்னை சொல்லச் சொன்னார் என்றார். “அதை என்னிடம் அவர் நேரடியாக சொல்லட்டும்” என்றேன். என பதில் அவரை ஆவேசப்படுத்திவிட்டது. பின்னர் நாராயணசாமியுடன் நான் நேரடியாக மோதும் சூழலை “வில்லங்கம்” பின்னர் உருவாக்கினார். அவர் ஆபத்தான மனிதர் என தெரியும் ஆனால் அரசியலில் முக்கிய தகவல்களை பெற இரண்டாம் நிலையில் என்னை நான் வைத்துக் கொள்வதில்லலை என்கிற நிலையில் இருந்து மாற முடியவில்லை. யாரும் எதுவும் சொல்லாத நிலையில் சூழலுக்கு தகுந்தாற் போல் நான் சுதந்திரமாக எனது முடிவுகளை எடுக்க முடியும்.
சென்னை உடுப்பி பவனில் நாங்கள் தங்குவதற்கு அறை ஒருங்கி இருந்தது . உடுப்பி பவன் சண்முகத்திற்கு தாய்வீடு போல பல வருடங்களாக அங்கேதான் தங்குகிறார். நான் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலங்களில் எல்லாவித அரசியல் நிலைபாடுகளும் புதுவையில் அரங்கேறி தில்லி செல்வதற்கு முன்பாக கடைசி கட்ட பேரம் சென்னையில்தான் நடைபெறும் என கட்சி மோஸ்தர்கள் பல வித குரலில் பேசி ஆர்வத்தை ஏற்படுத்துவார்கள் சண்முகம் மற்றும் மரைக்காயர் தங்கள் கட்சி அரசியல் சமன்பாடுகள் குறித்து பேச்சு வார்த்தை “உடுப்பி பவனில்” நடைபெறுவதாகவும் கட்சி முக்கியஸ்தர்களுக்கான கூடுகை அங்கு நடப்பதாக தொடர்ந்து பேசிக் கொள்வதை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒருவித “கிளர்ச்சி” அடைந்ததை இப்போது நினைத்துப் பார்கிறேன். அங்கு நடந்ததாக சொல்லப்பட்ட பல கூட்டங்களில் எடுத்த முக்கிய முடிவுகள் புதுவை அரசியலில் ஒரு மாய உலகை உருவாக்கும் ரகசியம் போல இளைஞர் காங்கிரஸில் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக் கொண்டதுண்டு. அரசியல் என்பது ஒரு நாற்கள விளையாட்டு போல அதை ஆள்பவர்களை குறித்த பிரமிப்பு , திகைப்புடன் சில நேரம் நினைத்துக் கொண்டதுண்டு. அவற்றை அவர்கள் மீது ஏற்றி கட்டமைப்பது கூட ஒரு கற்பனைதான் போல. நிஜத்தில் அருகமையில் அந்த பிரம்மாண்டங்கள் ஏதுமில்லாத சாதாரன மனிதர்களாக அவர்கள் அருகில் இருப்பதாக தோன்றிவிடும். உடுப்பி பவன் ஒரு “தொன்மம்” போல பெரும் அரசியல் உருவகமாய் என்னுள் பதிந்திருந்த அந்த நாட்களை எண்ணுகிறேன். முதல் முறை அங்கு சென்றபோது பழைய பரபரப்பு தொற்றிக் கொண்டது. கற்பனையில் கண்ட ஒவ்வொரு இடமும் என்னுடன் தனது கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறது என்கிற பிரமை ஏற்படுவதுண்டு. ஆனால் அது தனது மௌனத்தில் உறைந்திருந்தது.
சென்னையில் சண்முகத்திற்கு உறவினர்கள் நிறைய பேர் இருந்தும் யாருடைய வீட்டிலும் அவர் தங்குவதில்லை. உணவிற்கு அழைத்தால் சென்று சந்தித்துவிட்டு அறைக்கு திரும்பிவிடுவார்.உடுப்பி பவன் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில். பழைய மெட்ராஸ் வாசனை நிறைந்தது பகுதியில் இருந்தது . அங்கு தங்குவது சொந்த வீட்டின் ஒரு அறையில் இருக்கும் நிறைவை தருவது. வழங்கப்படும் சைவ உணவுகள் மிக சிறந்த ருசியுள்ளவை . நவீன தங்குமிடங்களை போல இடத்தை அடைத்து கட்டப்படாமல் மிக தாராளமாக வாரி இறைக்கப்பட்டிருந்தது . ஒரு கால மெட்ராஸின் அடையாளங்காளாக இன்றும் பல அப்படி இருப்பவை. நாங்கள் உடுப்பி பவனில் தங்க நெடுமாறன் ஏற்பாடு செய்திருந்தான். “நெடுமாறன்”. மிக எளிய மனிதனாக அறிமுகமாகி பின்னர் கொந்தளிப்பான உரையாடல்களில் நுழைந்து “நவீன அரசியல் கோட்பாடுகளை” எனக்கு அவன் விளக்கப் போக நாங்கள் பிரிந்து போனோம். அவன் மிக முக்கிய தருணத்தில் சண்முகம் வீட்டில் நுழைந்து மாநில அரசியலையும் சண்முகத்தின் இடத்தையும் மாற்றியமைத்தவன். தனக்கான அரசியலை தனது சொந்த விழைவுகளில் இருந்து துவங்கியதால் பல குளறுபடிகள் நடந்தது. புத்தி கூர்மைமிக்கவனாக நான் அவனை அவதானித்திருந்தேன். அரசியலில் அவன் சில தனிப்பட்ட சந்திப்புகளில் தன்னை அவன் முன் வைக்கும் போதெல்லாம் சண்முகத்தின் தூதுவனாக எல்லோர் முன்பும் நிறுத்தியது. அவனை சந்தித்த அனைவரும் அவனைப் பற்றி ஆழத்தில் என்ன நினைத்தார்கள் என தெரியாது ஆனால் அவர்களிடம் தான் நினைப்பதை அவனால் சொல்ல முடிந்தது . சண்முகத்தை அனுக்கமாக அறிந்தவர்களுக்கு அவன் அவரை பிரதிநிதிக்கவில்லை என்பதை அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை .அரசியல் எப்போதும் உள்முகமானது. அந்த உரையாடல்களில் பிறரிடம் தான் பேசியதையும் அதன் விளைவுகளையும் என்னிடம் சொல்லிய போதெல்லாம் நான் அவனிடம் அவற்றை மாற்ற முயற்சிக்கவில்லை. அரசியல் புரிதல்களினால் ஆனது . ஒரு கோணத்தில் தான் மிக சரி என நினைப்பவர்களுக்கு அது காட்டும் உலகம் வேறானது ஒருபோதும் அது அப்படி இல்லை என அவர்களுக்கு புரியவைத்து விட முடியாது. அவர்கள் நம்மை பற்றி அதே போன்ற எண்ணங்களை கொண்டிருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக