ஶ்ரீ:
பதிவு : 609 / 799 / தேதி 27 பிப்ரவரி 2022
* சிக்கலான கணக்கு *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 07.
காங்கிரஸில் கட்சி அரசியல் எப்போதும் புரிந்து கொள்ள கடினமானதும் விசித்திரமானதுமாக உணர்ந்திருக்கிறேன். தலைவர்கள் தொண்டர்கள் இணைவு அனுக்கம் என எதுவும் இங்கு நிகழ்வதில்லை . அதை ஓராளவிற்கு முயற்சித்தவர்கள்மாநில அரசியலை ஒட்டி செய்தவர்களே. அவர்களே அதை வெற்றிகரமாகவும் நிர்வகித்தவர்கள் . அதை செய்ததினால் அதற்கான விலையை கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகழும் ஒரு சீண்டல் அவர்களை அதை நோக்கி செலுத்துகிறது .அரசியல் சூழ்தலில் மிக ஆபத்தான இடமாக தலைவர்களால் கருதப்படுகிறது.தலைவர்களின் தலைவர்கள் தங்களை எண்ணி பிரமிக்கும் சிலர் தில்லி மேலிடத்திற்கு அணுக்கமானவர்களாக அறியப்பட்டவர்கள். மிகப் பெரும்பாலும் மக்கள் செல்வாக்கில்லாதவர்கள். ராஜ்யசபை உறுப்பினர்களாகி பின்னால் இருந்து கொண்டு ஒரு செயல் எத்திசை நோக்கி செல்லவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். துரதிஷ்டவசமாக காங்கிரஸை இவர்களே ஆள்கிறார்கள். அவர்கள் இயங்கும் விதம் வேறுவகையான அலகில் இருந்து உருவாகின்றன. குறைவாக அறிந்திருப்பதனால் பலருக்கு புரியும் எளிய உண்மை என்பதுடன் சாமானியன் ஒருவனுக்கு இருக்கும் தெளிவு இவர்களுக்கு இருப்பதில்லை. அரசியலில் உள்ளுணர்விற்குத் தான் எப்போதும் தனித்த இடமுண்டு . அதுவே அனைத்தையும் கொண்டு செல்லும் மைய விசை. ஆனால் அவற்றை ஒருங்கிணைக்கும் மையத் தலைமை அனைத்தையும் தரவுகளில் இருந்தே முடிவு செய்கிறது . ஊகங்களில் செயல்பட முடியாது என்பது புரிந்து கொள்ளக் கூடியது . ஆனால் யதார்தத்த நிலை , ஊகம், உள்ளுணர்வு இவற்றை இணைக்கும் ஒரு மெல்லிய சரடைப்பற்றி ஒன்றுடன் ஒன்றை தொடர்புறுத்கிற இடத்தில் சொந்த கணக்குடன் வந்து அமர்பவர்கள் முழு கவனத்தையும் மிக துல்லியமாக திசை திருப்ப இயலும்.
தங்களது நேரத்தை மற்றும் பொருளியல் பலத்தால் ஒரு கட்டத்தில் தொண்டர் திரள் பலமுள்ளவர்களை நெட்டி வெளியே தள்ளி விடுகிறார்கள். இதில் வினோதம் கட்சி கட்டுப்பாடென உரத்த குரலில் பேசும் அவர்கள் சற்றும் கூச்சமில்லாமல் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். மக்கள் செல்வாகுள்ள அனைவரையும் இவர்களைப் போன்றவர்கள் சிதைப்பதால் கடசி கானாமலாகிறது . காங்கிரஸில் தலைவர்கள் பதவி பெற மட்டுமே கடுமையாக உழைக்கிறார்கள் , ஆட்சிக்கே வாய்ப்பில்லாத தமிழகத்திலும் அதுவே நிலை. பதவி அனைவரையும் ஒருங்கிணைத்து தன் பின்னால் கொண்டு நிறுத்திவிடும் என நம்புகிறார்கள் . ஒருவகையில் ஒரு சிறு பகுதி உண்மை . பதவி அடைந்தவர்களை முதல் நிலை மற்றும் குழுத் தலைவர்கள் வந்து சந்தித்து தங்கள் இடங்களை உறுதி செய்து கொண்டு போவதால் பதவி தங்களுக்கான முற்றதிகாரத்தை வழங்கி விடுகிறது என்கிற நிறைவு கொள்கிறார்கள் . ஆனால் தலைவர்களை சந்திப்பவர்கள் ஒருபோதும் தொண்டர் நிரைக்கு சென்று சேர்வதில்லை அவர்களைப் பிரதிநிதிப் படுத்துவதுமல்லை . அவர்களுக்கு மத்தியில் இவர்கள் இளிவரல் மனிதர்கள். அது ஒரு பிளவு அந்த இடைவெளியை கள செயல்பாடால் தவிற பிற எதனாலும் நிரப்ப முடியாது . தங்களை ஒருபோதும் யாரும் கட்சி அரசியலுக்குள் கொண்டு வைப்போவதல்லை என்கிற உண்மை அவர்களுக்கும் தெரிந்தே இருக்கிறது . கட்சி செயல்பாடு என்பது தொண்டர்களையும் கட்சியையும் எந்த வகையிலும் ஒருங்கமைக்காத தலைவர்களின் பிறந்த, இறந்த நாளைக் கடந்து எவையும் நிகழ்ந்ததில்லை . அவை பறவை கூட்டம் போல கூடிக் கலைபவைகள். எந்த தடயத்தையும் அவை விட்டுச் செல்வதில்லை. துரதிஷ்ட வசமாக இந்தியா முழுவதிலும் இதுவே நிலை. எனக்கு அவற்றைக் கடந்த ஒரு கனவிருந்தது . அனைவரையும் தொடர்புறுத்துவது அவர்களுக்குள் தொடர்ந்து நிகழ வேண்டிய உரையாடல் குறித்தும் பெரிய திட்டமிருந்தது . கூட்டுறவு சங்கம் பற்றிய முழுப் புரிதல் அடைந்தது மஹே சென்று வந்த பிறகு . அங்கிருந்து சென்னை நபார்டு வங்கி மேலாளரை சந்தித்து வந்தது பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது . தெளிவான திட்டமும் அதைவிட அனைத்தையும் உடனே துவங்க வேண்டுய அவசரமும் இருந்தது . எந்த நிமிடமும் ஆளும் திமுக அரசு கலைந்து விடும் அல்லது ஆட்சி மாற்றம் மிக அருகில் நின்றுப்பதாக அஞ்சினேன் . இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்ப்பு ஒன்றுமில்லாது அதைவிட சிக்கல் மிகுந்தது ஆட்சி மாற்றம் . அது மட்டுமே இதுவரை நான் கட்டமைத்தவற்றை துளி மிச்சமால்லாமல் கலைத்து வீசக் கூடியது .
திமுக தலைமையில் அமைந்த ஆட்சியில் உள்துறை அமைச்சர் கண்ணன் மனதளவில் அரசை விட்டு முழுமையாக வெளிவந்துவிட்டருந்தார். மூப்பனாரின் தமாக வின் புதுவை கிளையாக தன்னை அறிவித்துக் கொண்டதால் அவரது வெளிப்படையான ஆதரவு கண்ணனுக்கு தேவையாயிற்று . அவர் தன்னை முதன்னிறுத்தி தேர்தலை சந்திக்காதது முதன்மைக் காரணம் . அவர் தன்னை முன்னிறுத்தி இருந்தால் திமுக கூட்டணி சாத்தியமில்லை . கூட்டணி சார்பாக புதுவைக்கு வந்த கருணாநிதி கண்ணனை பற்றி “நக்கலடித்து” விட்டு போனார். கண்ணன் எப்போதும் திரண்டெழுந்த தலைவர்களுக்கான தலைமை ஏற்றதில்லை . அது அவருக்கு தெரியாதது. அவரது அரசியல் பாணியும் அதுவல்ல . ஒரு முற்றதிகாரம் இல்லாது வேறு எதிலும் சென்று அமையாதவர் . ஒரு வகை சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் . இருந்தும் இப்போது வெற்றி அடையப்பட வேண்டியது . அந்த சூழலிலை மிக நுண்மையாக பிண்ணியிருந்தார். அதனடிப்படையில் பல ஆளுமைகள் அவருடன் கட்சியல் இணைந்தார்கள் ஆனால் அவர்களின் மேல் கண்ணனுக்கு முற்றதிகாரமில்லை என்பது அதன் நிழல் செய்தி . கண்ணன் சுயேட்சையாக அறிவிக்கப்பட்தின் பின்னணி என்னவாக இருந்தாலும் அரசியல் ரீதியில் அது ஒரு நுட்பமான ஆடலாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது . அன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது .
தேர்தல் ஆனையம் அனைத்து அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கித் தந்து கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தியது . தொகுதி எண்களின்படி காசுக்கடைக்கு அடுத்ததாக காந்திராஜின் ராஜ்பவன் தொகுதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது . இறுதிநாள் மதியம் 3:00 மணி என்பதால் நகரப் பகுதியை சேர்ந்த 6 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமாக கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முட்டித்ததும்பிக் கொண்டிருந்தது . காசுகடை சார்பாக கண்ணனின் இரண்டாம் அணித் தலைவர்களின் நிரை பதட்டத்துடன் தேர்தல் வாசல் அருகில் நின்று கொண்டிருந்தது . காங்கிரஸ் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யவேண்டிய அலுவலகத்தின் மைக் வழியாக பலமுறை அழைக்கப்பட்டும் ஜோதி நாராயணசாமி அங்கில்லாதவராக தோன்றினார். அவரை சுற்றி அவரது ஆதரவாளர்கள் சிறிய குழு நின்றிருந்தனர் . நானும் காந்திராஜும் தேர்தல் அலுவலகத்திற்கு சற்று முன்னதாக வந்திவிட்டிருந்தோம். எங்களுக்கான அழைப்பு இன்னும் வரவில்லை .