ஶ்ரீ:
பதிவு : 537 / 730 / தேதி 04அக்டோபர் 2020
* ஊழின் வாய்ப்புகள் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 14.
“அரசியலில் பெரும்பாலானவர்கள் எதிர்மறையான உணர்ச்சிகளை தூண்டிவிடும் போலி இலட்சியவாதிகள். பிரிவினைஉணர்ச்சிகளையும் கசப்புகளையுமே அவர்கள் உருவாக்குகிறார்கள். அவர்கள் நமக்கு தலைவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை நெருங்கிவிட்டால் சுயநலம்மிக்கவர்களாகவோ திறமையற்றவர்களாகவோ குழப்பவாதிகளாகவோ அமைந்து பேரழிவை உருவாக்குகிறார்கள்”.- ஜெ.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணன் முன்வைத்த “கோட்பாட்டு அரசியல்” அவராலேயே மீறப்பட்டது முரண்நகை. அது உலக யதார்த்தங்களில் ஒன்று என்றாலும் அன்று உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த இளைஞர்களுக்கு “லட்சியவாதம்” பெரிதாகத் தெரிந்தது . அந்த உற்சாகம் பாலன் தலைமை பொறுப்பிற்கு வந்ததும் பெரும் எதிர்பார்ப்புடன் எழுந்து பொங்கி பின் ஏமாற்றமடைந்து விரைவில் வடிந்து போனது . தொண்டர்களின் புரட்சியின் வழியாக அதிகாரத்திற்கு வருபவர்கள் அனைவரும் சந்திக்கும் மிக சிக்கலான இடம் .அங்கிருந்து மீள்பவர் இல்லை .
தேர்தலில் வெற்றி பெறுவதன் வழியா கண்ணன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தான் செய்வதாக பாலன் சொல்லியிருந்தார். நடைமுறைக்கு சாத்தியமில்லாது என்று முன்பே நிரூபிக்கப்பட்டிருந்தும், ”லட்சியவாதம்” அதி நம்பிக்கையில் விளைவது .அதிலிருந்து மீள்வது எளிதல்ல . ஏமாற்றம் அமைப்பை தளர்ந்து போக செய்தது .பாலன் அரசியல் சூழ்சியால் அதை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.மிகப் பழைய தந்திரம் .பிரித்தாளுவது .ஒருவருக்கு ஒருவரை எதிர் எடையாக நிறுத்தும் போக்கு .தேர்தலில் தோற்ற பின்னரும் அவரை விட்டு விலகாத அமைப்பு அவரது திரிபு அரசியலால் அவருக்கு எதிர் எடையாகி ஒரு கட்டத்தில் அமைப்பு உடைந்து சிதறியது.
இங்கு சண்முகம் , கண்ணன் , பாலன் மூவரையும் ஒப்பிட்டு அரசியலில் தனது எதிரிகளை கையாள்வதில் தலைவராக உள்ள அனைவருக்கும் அந்த உரிமை சமமானதுதான் என்றாலும் எதன் அடிப்படையில் இவர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை யூகிக்க விழைகிறேன். சண்முகத்தை நடைமுறைவாதி என கொண்டாடும் போது , மற்றவர்களுக்கு அந்த இடம் ஏன் கொடுக்க முடியாதாகிறது?.சண்முகத்திடம் காணப்படும் சொல் செயல் ஒருமைப்பாடு பிறர் அதில் குற்றம்கானவதற்கான வாய்ப்பை அஞ்சுவது .எளிய வாழ்கையை முன்வைத்து பின்னர் ஒருபோதும் அதிலிருந்து விலகாதிருப்பது என்கிற கொள்கையோடு கடைசி வரை பிரம்ச்சாரியாக வாழ்ந்து மன்மறைந்தார். புதுவையில் அவருக்கு சொந்தமாக ஒரு சதுரடி நிலம் இல்லை. பிற இருவரிடம் இதை எதிர்பார்க்க முடியாது .அரசியல் சரிநிலைகளை காரணம் காட்டி தங்களின் செயல்பாடுகளை, பொருளியலை அமைத்துக் கொண்டது முதன்மைக் குறைபாடு என நினைக்கிறேன்.
1997 களில் இளைஞர் காங்கிரஸ தலைவராக வல்சராஜ் வந்தது ஒரு விபத்து .வேறொருவருக்கு செல்ல வேண்டிய பதவி சண்முகத்தின் அரசியலால் வல்சராஜிடம் வந்து சேர்ந்தது .வல்சராஜிக்கான அரசியல் களம் மாஹயில் இருக்கிறது . புதுவை அவருக்கு களைப்பாறும் இடம் மட்டும். அமைப்பின் தலைவராக அவர் வெளிப்பட ஒருபோதும் விரும்பவில்லை . ஆனால் அந்த அடையாளத்திற்கான உரிமைகளை சலுகைகளை வேறு விதத்தில் வேறெங்கோ பெற்றுக் கொண்டிருந்தார்.அவருக்கு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பராமரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.அது செயல்படுவதால் எழும் சிக்கலை நிர்வகிக்க , ஒன்றுடன் ஒன்று முரண்படும் குழுவை உருவாக்கி மொத்த அமைப்பை உறைநிலைக்கு கொண்டு சென்றார்.
பாலனிடம் இருந்து மனம்கசந்து அரசியலில் விலகி பின்னர் சண்முகத்தால் அழைப்பட்ட போது எனக்கு அரசியல் எதிர்காலம் என ஒன்றைப் பற்றி எந்த கனவும் இருக்கவில்லை. தனிப்பட்ட வாழ்கையில் அன்றிருந்த கொந்தளிப்பான மனநிலையில் இருந்து வெளிவரும் வழியாகவே அதை நினைத்தேன்.
படைப்பூக்கம் ஒன்று மட்டுமே என்னை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்திருக்கிறது என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன் .எந்த துறைக்கு சென்றாலும் சில காலத்திற்குள் அங்கு நிலவும் சூழ்நிலையில் வளர்ச்சியை, மாறுதலை, புதுப்பங்களிப்பை நோக்கிய பிறிதொரு பாதை சிறுத்து பிறர் பயணிக்க அஞ்சும் அல்லது விலக்கும் ஒன்று எனக்கு மெல்ல தெளிந்து வந்து விடுகிறது .எங்கிருந்தோ உந்தப்பட்டு அந்தப் பதையை முயற்சித்து பார்க்கும் எண்ணம் உருவாகிவிடுகிறது.ஊழின் விளையாட்டு என இப்போது நினைக்கிறேன்.
செயல்படுதன் வழியாகவே எனது கற்றல் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு எனக்கிருந்த படைப்பூக்கம் பெரும் உந்து விசை .செயல்படாமல் என்னால் இருந்திருக்க முடியாது என இப்போதும் உணர்கிறேன் .அது எனக்கு நிலையழிவை கொண்டு வந்தாலும் , முரண்பட்ட அடையாளத்தைக் கொடுத்தாலும் அதுவே எனது வழியாக இருந்தது.அதில் அடைந்த வெற்றியை பற்றி இப்போது இனிதென் நினைவுறுகிறேன் .அதில் நிலையாமல் போனது பற்றிய கசப்பு இன்றளவும் எழுந்ததில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக