https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 12 அக்டோபர், 2020

அடையாளமாதல் * சிதைந்த வழி *

 


ஶ்ரீ:



பதிவு : 539  / 732 / தேதி 12 அக்டோபர் 2020


* சிதைந்த வழி



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 16.






அரசியலில் என்னை ஒரு சமன்பாட்டுக் காயாக வைக்க நான் ஒருபோதும் உடன்பட்டதில்லை .அதனால் எழும் பின்விளைவுகளை எதிர்கொள்ளத் தயங்கியதில்லை.

பாலன் என்னை பிறர் எதிரெடையாக வைக்க முயன்ற போது அவரை எதிர்த்து எழுந்து அமைப்பை அவருக்கு எதிராக திரும்பச் செய்தேன் .சண்முகத்திடம் வந்து சேர்ந்த போது அவரின் அரசியல் பாணி தெரிந்தே இருந்தேன்.

அரசியலில் என்மீது அக்கரை கொண்டோர் சொன்னது ஆலமரத்தடியில் புல் கூட முளைக்காது” என்பது. ஒருவகையில் என்னை அவரிடம் ஒப்புக் கொடுத்திருந்தேன் . அரசியலில் முளைப்பது” என் கனவுகளில் கூட இல்லை. அவரது ஆளுமையின் மீது என்கிருந்த ஈர்ப்பு காரணமாக அவர் என்னை அழைத்த போது நான் மறுக்க விரும்பவில்லைஆனால் அவரன்றி பிற எவரும் எக்காலத்திலும் நான் அறியாமல் என்னை பயன்படுத்திக் கொள்ள ஒருபோதும் அனுமதித்ததில்லை.


ஒரு செயல்திட்டதின் துவக்கத்தில் என் உடன் வருபவர்கள், என்னை அதற்கானவனாக நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கின்றனர் .அத்திட்டத்தின் வெற்றிக்கு பின்னர் , எங்கோ அதை என்திறன்” என்பதிலிருந்து என்னை விலக்கிக் வைக்கிறார்கள் .அதன்பின் அவர்களால் என்னை எளிதாக மறுக்க முடிகிறது .இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என அவதானிப்பதுண்டு.சிறு வயதில் பேச்சு குறைபாடினால் சொற்களுக்கு தவிப்பது பிறருக்கு இளிவரலாக, பரிதாப காட்சியாகிறது. அந்த அவமதிப்பிற்கு அஞ்சி ஒரு கட்டத்தில் பேசுவது முற்றாக நின்று போனது . வீட்டில் தவிர பிற இடங்களில் பேசுவதை நிறுத்தக் கொண்டேன்.பள்ளி ஒரு நரகம் .


1980 களில் நணபர்வட்டம் மிகப் பெரிதாக உருவாகியது . மாலை கடற்கறை எங்கள் கூடுகளமாகியது.35 பேருக்கும் அதிகமானோர் . நான் எனது தயக்கத்தில் இருந்து மெல்ல வெளிவந்து  எனது இடறை கடக்க முயற்சித்தேன் . ஒரு சிறிய யுக்தி கைகொடுத்தது .என்னை எப்போதும் எளிய இடத்தில் வைத்துக் கொள்வது . என்னை பற்றிய பகடியுடனே எனது உரையாடல் எப்போதும் முன்வைப்பது .அது என்னையும் என் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து பார்ப்பதில் குழப்பம் ஏற்படச் செய்து விடுகிறது.நான் என் செயல்பாடுகளில் தலைமை வகிப்பதில்லை .கூட்டு முயற்சியாகவே அதை எப்போதும் முன்வைத்திருக்கிறேன்.எனது செயல்பாடுகளில் அனைவருக்கும் பங்கிருக்க செய்வது ஒரு புள்ளியில் என்னை பிறர் குறைத்து மதிப்பிடச் செய்து விடுகிறது .


ஆழ்மனம் என்னை ஒவ்வொரு கணமும் பிறர் பார்வை வழியாக சுயமதிப்பீடு செய்தபடி இருப்பது என்னை மீறிய செயல்பாடாக உருவெடுத்தது . என்னை அதிலிருந்து விலக்கிக் கொள்ள முடியவில்லை. அது ஒரு கடும் விசை.அது எப்போதும் என் இடத்தை ,என் இடறை, பிறர் என்னை எப்படி அனுமானிக்கிறார்கள் என முடிவு செய்தபடி இருப்பதை உணர்கிறேன் . அவமதிப்பை அதிலிருந்து எழும் வலியை எப்போதும் அஞ்சினேன்  .சிறுவயது முதலே என்னை அழுத்தி அதுமட்டுமே என்னில் இருந்து எழுந்திருக்கிறது .

அதுவரை் பெற்ற அவமதிப்பை கடந்து செல்ல இது எனக்கொரு உத்தியாக ஆழ்மத்திலிருந்து உருவாகி இருக்கலாம் .அது கடும் வலிகளில் இருந்து வெளிவர அதன் பின்னே உள்ள நிதர்சனத்தை அறிந்து கொள்ள முயல்கிறேன் . என் கற்றல் அந்த வலியில் இருந்தே துவங்குவது ஆகையால் வலி இனிது” .ஒரு போதும, கசப்படையாதிருக்க முயல்கிறேன்.


கண்ணன் பாலன் அரசியல் ரீதியாக தோற்ற இடங்களை அறிந்திருந்தேன் . இருவரும்  ஒரே விழைவின் இரு முணைகள் .வல்சராஜை சண்முகத்திற்கு நிகரான அரசியல் சூழ்ச்சியாளராக வைப்பேன். ஆனால் தலைமைப்பண்பு  என்பது வேறுவிதமானது .வல்சராஜிற்கு தன்னை தாண்டிய விஷயத்தில் ஆர்வமில்லை.


புதுவையின் காங்கிரஸில் அடுத்த அரசியல் தலைமுறை உருவாகி வரகூடிய சந்தர்ப்பத்தை என்னால் பார்க்க முடிந்தது .இளைஞர் காங்கிரஸாரை சண்முகம் அஞ்சினார்.அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் இருந்தன.இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தலைமையும் அதன் நிர்வாகிகளும்  மாநில கட்சித் தலைமையால் நியமிக்கப்படுவதில்லை . அவர்கள் தில்லியில் உள்ள அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவர்கள் .நியமிக்கும் அதிகாரம் இல்லாமையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முடியாது என்பதால் மாநில இளைஞர் காங்கிரஸ் கட்டற்ற சக்தியாக உருவெடுத்தது. அதன் தலைமையின் மீறல் மனப்பான்மை இளைஞர்களை ஈர்ப்பதாக இருந்தது


1975 களின் துவக்கத்தில் இந்திராகாந்தி தனது அரசியலை முன்னகர்த்த அவருக்கு ஒரு படைத் தேவைபட்டது சஞ்ஜை காந்தியின் இளைஞர் காங்கிரஸ் அதை மிக கச்சிதமாக செய்து கொடுத்தது . அதற்கு பரிசாக  அதன் நிர்வாக சட்டத்தை தளர்த்தி அதை காங்கிரஸிற்கு நிகர் அமைப்பாக தனித்து செயல்படும்படி உருவாக்கினார்.அகில இந்திய தலைமையின் இந்த முடிவு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாக உருவெடுக்க வைத்தது .


அது வாரிசு அரசியலை , பொருளியல்  பலத்தை முன்வைப்பவர்களை நிராகரித்து தொண்டர்களால் அடையாளம் காணப்படும் தலைவர்களின் நிரை எழுந்தது வர வழிவகுத்தது . அகில இந்திய காங்கிரஸின் அமைப்பிற்குள் செல்ல , தேர்தலில் தனி ஒதுக்கீடு பெற அது தனியான வழியை உருவாக்கிக் கொண்டது  .ஆரம்பம் முதலே மூத்த தலைவர்கள் இதை விரும்பவில்லை, மறைமுக எதிர்ப்பு தீவரமாக இருந்தது . ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை உடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்.1996 களில் இறுதியில் நரசிம்மராவ் வீழ்ந்ததும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சிதைக்கத் துவங்கினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...