https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 19 அக்டோபர், 2020

அடையாளமாதல் * உயரப் பறக்கும் கனவு *

 


ஶ்ரீ:பதிவு : 541  / 734 / தேதி 19 அக்டோபர் 2020


* உயரப் பறக்கும் கனவுஆழுள்ளம் ” - 03

மெய்மை- 19.


பொருளியல் பலம் , சூழ்ச்சி  மற்றும் தொண்டர் ஒருங்குதிரட்டல் திறன் ஆகியவை அரசியலின் அடிப்படை விசைகள் , அது ஆளுமைகளை உருவாக்குகிறது , அதை அரசியலில் இயக்கும் ஆற்றல் உள்ளவர்களாக அதன் திசையை முடிவு செய்கிறார்கள் . அவையே ஒருவரை தனியாளுமையாகவும் உருவெடுக்க , அரசியலின் பொருட்டு அவர்களுக்கு இடையிலான  முரணியகத்தினால் கணக்கிட முடியாத விளைவுகளை வெளிப்படுத்துகிறது  . தலைவர் அவற்றை இணைக்கும் , மறுக்கும் அல்லது மட்டுறுத்தும் மையம் மட்டுமேயாக அவர் இருக்கும் வரை அங்கு ஆரோக்கியமான அரசியலை நிலவச்செய்கிறது  . சூழலுக்கு தக்கபடி மூவரில் ஒருவரே எப்போதும் முன்னிருத்தப்படுகிறார் . அவர் மட்டுமே முக்கியமானவராக பிறரால் கருதப்படும் இடம் உருவாகிறது . எளிய தொண்டர்கள் அவர் எப்போதைக்கும் அங்கு இருந்து கொண்டிருப்பதாக  கணிக்கிறார்கள் .ஆனால் அந்த இடம் யாருக்கும்  நிரந்தரமானதல்ல . அரசியலின் நுட்பம் தெரிந்தவர் அப்படி எண்ணுவதில்லை . சூழலைக் கொண்டே ஒருவரின் இடத்தை அவர்கள் முடிவு செய்கிறார் . சூழல் மாற்றமடைந்து கொண்டே இருக்கும் நிற்காத சுழற்சி .அதனால் யாரும் யாரையும் அரசியலில் கடந்து சென்று மறுக்க முடியும் . சில சமயம் வலியவர் எளியவர்களால் புறந்தள்ளப்படுவது நிகழ்ந்து விடுகிறது .சண்முகம் தன் நிர்வாகத்தில் அதை அப்படியே நிகழ விடுவதை பல முறை பார்த்திருக்கிறேன் . அதனால் செல்வாக்குள்ளவர்கள் அவரை எப்போதும் அஞ்சினர்  . அது அவரின் சிறப்பான அனுகுமுறைகளில் ஒன்று .


சண்முகம் என்னை தொண்டர்களை ஒருங்குதிரட்டுபவராக புரிந்திருந்தார் . எனக்கான ஆகச் சிறந்த இடம் . அது உருவாகி வந்தது அவரது அனுகுமுறையின்  அடிப்படையில் . அந்த இடத்தினால் எனக்கு அங்கு பிறரின் பொருட்டு என் கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரத்தை  அவர் அளிக்கிறார்  . அது தனிப்பட்ட கருத்தாக  பிறர் கடந்து செல்ல தயங்க வைப்பது . அது அரசியலில் மிக  முக்கியமான இடம் .


தலைவர் சண்முகம் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் அழைக்க வேண்டியவர்களுக்கான அழைப்பிதழ்களைக் கொடுக்கத் தொடங்கியிருந்தார் .அது அமைப்பின் தலைவர்களுக்கான இடம் .ஆனால் அது  எனக்கு கொடுக்கப்பட்டது . அது அவரது தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் யுக்தியாகவும் இருந்திருக்கலாம் .நான் அதைப்பற்றி கவலை கொண்டதில்லை . அதன் வெளிப்படைத் தன்மையால் பிறர் என்னை என்னவாகப் பார்கிறார்களோ அதுவே என் இடம் .என்னை தொடர்சசியாக அங்கு நிறுத்திக் கொள்ள எந்த முயற்சியையும் நான் செய்ததில்லை . விரும்பி ஏற்றுக் கொண்டவருடன் எப்போதும் இருந்து கொண்டிருப்பது போல மனநிறைவை அளிப்பது பிறிதொன்றில்லை .


எப்போதும் எந்த கணக்குகளும் இன்றி தலைவர் சண்முகத்தின் அருகில் சற்று தள்ளி பின்னால் இருந்து கொண்டிருந்தது மட்டுமே நான் செய்தது .எனக்கான கற்றலின் பொருட்டே அங்கு இருந்து கொண்டிருந்தேன் . அது அகவயமான அனுபவம் .ஆனால் அது என்னை நோக்கி திறக்கும் வாய்ப்புகளையும் அது உருவாக்கும் இடங்களின் வழியாக வரும் கௌரவத்தை ஏன் மறுக்க வேண்டும் என நினைத்தேன்  . தனியாளுமைகள் அவர்களின் தன்னகங்காரத்தின் வெளிப்பாட்டினால் கூட்டத்தில் கரைந்திருக்க முடியாமையை உருவாக்குகிறது . அதுவே அவர்களின் அடையாளமும் கூட  . திரளில்  ஒருவனாக இருப்பதை என் ஆழ்மனம் எப்போதும் நிராகரிக்கிறது .


அரசியல் என்பதே புரிதலில் நிகழ்வது  .அன்றிருந்த விலகிய மனநிலையில் எனக்கு இடப்பட்ட வேளைகளை என்னால் இயற்ற முடியாது என ஒதுங்கி இருக்க முடியும் . புறவயமாக  எந்த அழுத்தமும் இல்லாத போதும் , ஆனால் அதை செய்ய விரும்பவில்லைஎனக்குறிய இடம் பற்றிய நோக்கமில்லாமல் இருத்தல் என்பது என் நிலை .அரசியல் எனது விருப்பமான துறை அங்கு எனது பங்களிப்பினால் அகக் கொந்தளிப்புகளில் இருந்து வெளிவர விரும்பியே சண்முகத்திடம் வந்து சேர்ந்தேன் .இளைஞர் அமைப்பை உருவாக்கியது வழிநடத்த வேண்டும் எனபது போன்ற எந்தத் திட்டமும் அப்போது என்னிடம் இல்லை . அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருப்பதே எனக்கான வாய்ப்பைக் கொண்டுவருவது .


தலைவர் தேர்தல் முறையாக நடைபெற்று சண்முகம் முதல்முறையாக ஏகமனதான தீர்மானத்தின் படி தேரந்தெடுக்கப்பட்ட தலைவரானார் . அதில் இளைஞர் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது மிக மிக அனிச்சை செயல் எங்களின் பங்களிப்பால் கட்சியின் பல மூத்த தலைவர்கள் பலர் மாற்றப்பட்டு புதிய தொகுதி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் . ஒரு பக்கம் எதிர்பாராத ஆதரவு தளம் விரிவாக வெளிப்படையாக அமைந்தாலும் பிறிதொரு பக்கம் பலம்மிக்க பல மூத்த தலைவர்களின் பகை புகையத் துவங்கியது .அவர்கள் தங்களை பொருளியளாலும் சூழ்ச்சியிலும் வளர்த்தெடுத்திருந்தனர் .அவர்களை எதிர்கொள்வது பெரும் அறைகூவல் என முன்பே அறிந்ததுதான் .கனவுகள் சில நேரம்  நிகழ்ந்து விடுகின்றன ஆனால் எதிர்பாரத விதத்தில் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக