https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 524 *புதியதின் ஆபத்து *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 524

பதிவு : 524  / 714 / தேதி 18 பெப்ருவரி   2020

*புதியதின் ஆபத்து  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 38 .



எனது அனுக்கர்கள் தங்களின் கூடுகையை மிக ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தனர்  அதில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விழையும் பாலனின் பழைய கமிட்டியில் இருந்தவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களை அனுக முடிவு செய்யப்பட்டது  .  தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்களில் பெரும்பான்மையினர்  யாருடனான இணைப்பில் இல்லாமல் சிதறிப்போய் இருந்தனர். தொட இயன்ற மிகச் சிலர் கூட மீண்டும் இளைஞர் காங்கிரஸில் செயல்பாடுவதில் நம்பிக்கை இல்லாத நிலையை அடைந்துவிட்டிருந்தனர் . இனி அவர்களை திரட்டுவது சாத்தியமில்லை என்றானது .

புதிய இளைஞர்கள் அமைப்பின் முதன்மை பொறுப்புகளுக்குள்  கொண்டுவர எனக்கு மிகுந்த தயக்கம் இருந்தது  . முற்றும் புதியவர்களை பொறுப்பில் கொண்டு வருவது அமைப்பின் தொடர்ச்சி காணாமலாக்குவது , அதுவரை இருந்து ஒழுக்கை பேண இயலாது செய்வது , அதனால் புதிய செயல்முறையை கோருவது . மேலும் மேல் கீழ் என்கிற அடுக்கு நிலை இல்லாதது , அது பலகால செயல்படுகளின் வழியாக தானாக உருவாகி வருவது .அவற்றில் அதை புதிதாக உருவாக்கிட இயலாது என்பதால்  , அதை மீளவும் முயறசிக்க எனக்கு உடன்பாடு இல்லை . காரணம் அது எந்த அடிப்படையையும்  இல்லாத வெறும் திரளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் . இளைஞர் காங்கிரஸ் தொடர்  செயல்வழியாக உருவாகும் அமைப்பு . குறுகிய காலத்தில் அதை உருவாக்க முடியாது . அதை மீறி உருவாக்க இயலுமானாலும் அது  விழுமியம் ஏதும் இல்லாததாகவே திரண்டு நிற்கும் .

நான் எனக்கான விழுமியம் என நினைத்ததே அறுபட்டுப் போன இணைப்பு பாதையை சரி செய்வது என்பதாக இருந்தது .அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இங்கு வர இயலாது போனவர்கள் .அவர்களை விடுத்து இன்று பல தொகுதிகளிலிருந்து உருவாக்கி எடுக்கும் புதியவர்கள் தேர்தல் காலத்தில் முற்றாக அதன் அத்தனை எதிர்மறை கோட்பாடுகளுக்கும் அறிமுகமாகிய பின்னர் அவர்களை அமைப்பின் உறுப்பினராக நிலைநிறுத்தவே இயலாது

மேலும் கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டவர்களுடனான உரையாடல் செயல்பூர்வமிக்கது . ஆணைகளில் இருந்து யதாரத்த நிலவரத்தை சட்டென புரிந்து கொள்ளக் கூடியவரகள் . அவர்களுக்கு எதையும் விளக்கி அல்லது நம்பிக்கையூட்டி ஒன்றை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை .அவரவர் தங்களின் அனுபவத்தில் இருந்து , அங்கிருந்து தங்களின் இடத்தை வருங்காலத்தை உணர்ந்து கொள்வார்கள் .அந்த இடத்தை  முற்றும் புதியவர்களை கொண்டு நிரப்புவது போல அரசியல் பிழை பிறிதொன்றில்லை . அவர்களுக்கு அரசியலின் தவறுகளால் நிகழும் வலியை யாரால் புரியவைத்து விட முடியும்?

யாருக்காக இந்த நீண்ட சண்டையை துவங்கினேனோ அவர்கள் பங்கெடுக்காத அமைப்பு என்னவாக உருவாகி வரும் என்பதை கற்பனையில் கூட என்னால் எண்ணிப் பார்க்க இயலவில்லை .அனைத்தையும் முதலில் இருந்து துவக்குவதா என்கிற ஆயாசம் எழுந்து அடித்தது .

இன்று இந்த இடத்திலிருந்து முன்னெடுத்த முயற்சியை கைவிட வேண்டும் என்கிற இடத்தை நோக்கி செல்ல முடியாத தொலைவிற்கு வந்து சேர்ந்திருந்தேன் .மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர் தங்கள் ஆதரவாளர்களின் பட்டியலை சண்முகத்திடம் கொடுக்க துவங்கியது  . முதற் கோணலை தொடங்கி வைத்தது . அதை ஒட்டி நானும் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது .நான் புதிதாக தேர்ந்தெடுத்து வைத்திருந்த இளம் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் எனது நண்பர்கள் சிலரை உடன் அழைத்துச்செல்ல நினைத்தேன் .

புதியவர்களுக்கும் எனக்கும் ஒரு சிறு இணைப்பு புள்ளியாக எனது நண்பர்களை உள்நுழைக்க முடிவு செய்தேன் . மிக தவறான முடிவு எனத் தெரிந்தே அதை செய்தேன் . எனக்கு நண்பர்களின் உளவியல் குறித்த அனுபவம் முன்பே இருந்தது. ஆனால்  அரசியலின் எந்த நிலையிலும் ஒரு நகர்வை துவங்கும் முன்பு களத்தையும் , அமைப்பின் மனநிலையையும் கணிசியாது காரியத்தில் இறங்குவது ஆபத்தானது . அரசியலின் எந்த நகர்வும் நீண்ட தொடர் அசைவை உருவாக்கியபடி செல்வது . சில சமயங்களில் அதன் தொடுமுனை வளைந்து வந்து நாம் அறியாது நமது பக்கத்தில் உள்ளவரை சீண்டி நமக்கு எதிராக்கி விடுவதுண்டு .மிக விந்தையான ஒன்று .

உருவாக்க நினைத்தது அமைப்பின் கட்டுப்பாடுகள் , காத்திருத்தல் அரசியலின் முதன்மை கோட்பாடு , எதிர் கால கனவு மற்றும் அதற்குறிய விழுமியங்களை கொண்டிருப்பது அவசியம் . முதிரா இளமை பல ஆதர்சங்களை உருவாக்கி ஏற்கவைப்பது .ஆனால. ஆழுள்ளத்தில் அதன் நடைமுறை விபீதங்களை உணர்ந்திருந்தேன் . பின்னாளில் அதற்கு பலியாகும் போது ஒரு நாள் தூக்கமிழந்ததைத் தவிர அது என்னை பெரியதாக பாதிக்கவில்லை .கசப்புகளில்லாமல் அனைத்திலிருந்தும் வெளிவர இயன்றதற்கு அதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும் .

தொகுதி அளவில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இளம் தலைவர்கள் அடங்கிய பட்டியலை நானும் சண்முகத்திடம் கொடுத்தேன் ,அதன் பிறகு அமைப்பை விட்டு விலகிய முன்னாள் நிர்வாகிகளில் யாரையும் என்னால் ஒருபோதும் உள்ளே கொண்டுவர முடியவில்லை . அவர்கள் இருபதாண்டுகளாக  இரண்டு முன்னாள் தலைவர்களால் சண்முகத்திற்கு எதிராக திரட்டப்பட்டவர்கள் . சண்முகம் எதிர்ப்பு என்கிற ஒற்றை இலக்கை  கடந்த அரசியல் என ஒன்று இருக்கிறது அதில் அவரை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புள்ளது என்கிற எனது கருத்தியல் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. புரிந்து சிலருக்கும் தங்களை சட்டென மாறிக் கொள்ள இயலவில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...