ஶ்ரீ:
அடையாளமாதல் - 446
பதிவு : 446 / 623 / தேதி 25 ஜூன் 2019
*அரசியல் வெறுமை *
“ எழுச்சியின் விலை ” - 48
முரண்களின் தொகை -03 .
தன்னறத்தை பேணும் தலைவர்கள் அனைவரும் தங்களின் செயல்களை தர்க்கத்திற்கு கட்டுப்படாத யூக தளத்தில் இருந்து பெற்று அதன் வழிகாட்டலில் தங்களை நடத்திச் செல்கிறார்கள் .அதை பிறிதொருவரை கலந்தாலோசிப்பது என்பது எப்போதும் அவர்களுக்கு நிகழ்வதில்லை.அபூர்வமாக சிலர் பிறருடனான தொடர் உரையாடலின் வழியாக தங்கள் யூகங்களை கூர் கொள்ளச் செய்கிறார்கள் . அவர்கள் தங்கள் அரசியல் செயல்பாட்டில் முழு வெற்றியை அடைகிறார்கள் . சண்முகம் அந்த வகைமையை சேர்ந்தவர்
அரசியல் கணிப்புகள் எப்போதும் தனித்தன்மை மிக்க புரிதல்களால் ஆனது . அதில் ஒரு ஆளுமை தான் உணரும் ஒன்றை முற்றாக பிறிதொருவருக்கு கடத்துவது சாத்தியமற்றது . எனவே அவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் வாழ்வின் ஒரு புள்ளியில் தங்களின் அனுக்கர்களின் வெறுப்பிற்கு ஆளாகிறார்கள் . ஊழின் விளைவாக அவர்களின் அரசியல் வீழ்ச்சி இங்கிருந்து துவங்குகிறது .
தங்களின் செயல்களுக்கான எதிர் விமர்சனத்தை தங்களின் அனுக்கர்களிடம் பெற்று வெறுப்புற்று மீளா வெறுமையை சென்றடைகிறார்கள் .அது ஊழின் கணக்கு போலும் . ஒவ்வொருவரும் அவர்களின் அனுக்கர்களின் எண்ணப்படி தோல்வியுற்றவர்களே. குடிமை சமூகத்தின் பார்வையில் எப்பெரும் செயல்களை ஆற்றியவர்களாக பார்க்கப்படினும் அவர்கள் சென்றடையும் இடம் அனேகமாக இதுவே என்பதுதான் வினோதம் .
மத்திய அரசியலில் , மாநில அரசியல் சார்ந்த எந்த முடிவுகளும், அதன் மாநில தலைவர்களின் சொல் மத்திய தலைமையை எப்போதும் ஆளும் . இந்தப் போக்கினால் பிற மாநில அரசியல் அமைப்பிலிருந்து அகில இந்திய அமைப்புகள் பெரிதும் மாறுபட்டிருந்தது . அந்த மாறுபாடுகளே காங்கிரஸில் வெகு காலம் நிலைபெற்றிருந்தது. காரணம் அதன் நீண்ட வரலாற்று தருணங்களின் புரிதல்கள் அவற்றை உயிர்புடன் வைத்திருந்தது .பின்னர் அமைப்புகளின் மனநிலை , கால சூழலுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு சிறுகச் சிறுக தனது விழுமியங்களில் இருந்து நழுவிப் போனது .
இதை புரிந்து கொள்ள முடியுமானால் காமராஜர் போன்றவர்கள் தங்களின் இறுதி காலத்தில் சென்றடைந்த இடத்தையும் புரிந்து கொள்ள முடியும், . சண்முகமும் அங்குதான் சென்றடைந்தார். ஒருவகையில் சண்முகம் , காமராஜரை விட ஊழினால் வாழ்த்தப்பட்டவர் . அவர் சொல்வதை கேட்க ஒரு மாநில அரசு அவருக்கு எப்போதும் இருந்தது.அதனால் அனைத்து கட்சிகளும் அவரை அஞ்சின அதுவே அவரது சொல் எப்போதும் ஆளும் முகமாக இருந்தார்.
தலைவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் உள்ளரசியலில் வென்றே தங்களின் இருப்பை அடைகிறார்கள் .அவர்களின் செயல்பாடுகளை கட்சியின் மத்தியத் தலைமை எவ்விதம் அனுமதிக்கிறது என்பதை பொறுத்தே அக்கட்சியின் மாநில அரசியல் போக்கை முடிவுசெய்யப்படுகிறது .
மாநில அரசியல் அமைப்புகள் சிறியவை என்பதால் அவை அனைத்தும் மையத் தலைமையின் மனப் போக்கை மிகத் துல்லியமாக உணரும் இடத்தில் உள்ளது , அவற்றை அனுசரித்து தங்களது எல்லா அரசியலையும் அவர்கள் முன்னெடுக்கிறார்கள் . அந்த போக்குடையவர்கள் மட்டுமே அங்கு செல்வாக்குடன்நிலைக்க இயல்கிறது .இந்தப் போக்கு மாநில கட்சிகளை ஊழல் நிறைந்தவைகளாக ஆக்குகின்றன .
அகில இந்திய அரசியலின் மையத் தலைமையும் இந்த போக்கு கொண்டால் , அது குடிமை சமூகத்திலிருந்து புதிய தலைமை எழுந்து வருவதை முற்றாக அழித்து விடுகிறது . நடைமுறை யதார்த்த அரசியலிலிருந்து அமைப்பை விலக்கி வைத்து விடுகிறது .ஒவ்வொரு தோல்வியிலும் , தன்னை வென்றெடுக்க கற்பனை வரண்டவர்களிடையே புதிய கருதுகோளுக்கான தேடலை நடத்துகிறது . அசலான தலைவர்களின் உள்நுழைவை தடுத்துவிடுகிறது, அதனால் அமைப்பு காட்டோற்றமில்லாமல் ஆகி தேங்கி குறுகி நாற்றமெடுக்கிறது .
தலைவர் சண்முகத்தின் வழியாக நான் காங்கிரஸ் அரசியலை புரிந்து கொள்ள முயன்றேன் . என் வழியாக தனது சில சிக்கலான கணக்குகளை அவர் நிறைவேற்றிக் கொண்டார் . அதன் கசப்பான விளைவுகளை நான் எதிர்கொள்ள நேர்ந்தது . அதை எதிர்நோக்கியே எனது செயல்பாடுகளும் இருந்தன அவர் எனக்கும் , நான் அவருக்குமாக தேவைப்பட்டது இந்தப்புள்ளியில்.எனது அரசியல் இதை ஒட்டி நிகழ்ந்தது .எனது வளர்ச்சியும் , வீழ்ச்சியும் அதன் சட்டத்திற்கு உட்பட்டே நடந்து முடிந்தது என்பதை உணர்ந்து இருந்ததால் , எக்கசப்பும் இன்றி அதிலிருந்து முற்றாக வெளியேறினேன் என நினைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக