https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஜூன், 2019

அடையாளமாதல் - 443 * வந்து சேர்ந்தவிடம் *

ஶ்ரீ:

பதிவு : 443 / 617 / தேதி 08 ஜூன்  2019

* வந்து சேர்ந்தவிடம்


எழுச்சியின் விலை ” - 45
முரண்களின் தொகை -03 .
அரசியல் முடிவுகள் எப்போதும் முரணியகத்தின் வழியாக கண்டடையப் படுகின்றன என்கிற கருதிகோளில் நம்பிக்கையுள்ளவர்கள் , பிறருடான தமது உரையாடலை எப்போதும் நிறுத்திக்கொள்வதில்லை . தங்கள் திட்டங்களுக்கு எப்போதும் முழு வடிவம் கொடுப்பதில்லை . அது பிறர் நிரப்பும் இடைவெளிகளைக் கொண்டதாக எப்போதும் இருக்கும் .நிலையான அரசியல் தலைமைகள் அரசியலின் வழியாக பிழைத்திருக்க எண்ணாதவரை அங்கு அரசியல் முழுமையுற்றே இருந்திருக்கிறது.

எந்த முரண்பாட்டிலிருந்தும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் மாநிலத் தலைமையின் தாங்கு சக்தியின் கால அளவைப் பொருத்தே அவர்களால் தங்கள் பொறுப்புகளில் நீடிக்க முடிகிறது .இந்த இரண்டு நிலைகளை புரிந்து கொள்ள தமிழக மற்றும் புதுவை காங்கிரஸ் தலைமைகளையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது .கடந்த முப்பது வருடத்தில் தமிழக தலைமை பலமுறை மாற்றி அமைக்கப்பட்ட பிறகும் , புதுவை தலைமை தனது இருப்பில் தொடர்ந்து நீடித்ததை அதன் தாங்கு சக்திக்கு காரணமாக பார்க்கிறேன் .

ஒருபோதும் ஆட்சி அமைப்பிற்குள் வர இயலாத தமிழகம் போன்ற ஒரு  மாநிலத்தில் எதன் பொருட்டு அதன் தலைமை தொடர்ந்து இத்தனை முறை மாற்றப்பட்டு வருகிறது என்கிற கேள்வியை கேட்டுக் கொண்டால் இதற்கான பதில் வெளிப்படலாம்

மத்திய தலைமைக்கு மாநில அரசியல் லாபங்களை விட தான் அடையவிரும்பும் மத்திய ஆட்சிக்கு தேவைப்படுகிற பாராளுமன்ற உறுப்பினர் கணக்கு முக்கியமானது என்கிற குற்றச்சாட்டை மிக எளிதாக எவரும் முன்வைக்க இயலலாம் . ஆனால் அதில் முழு உண்மையில்லை என்றே நினைக்கிறேன். மூப்பனார் மற்றும் வாழப்பாடி காலத்தில் நிகழ்ந்ததை இவற்றிற்கான உதாரணமாக முன்வைக்க இயலும் .மத்தியத் தலைமை தனது முடிவிற்கு மாறான மாநிலத் தலைமையின் கருத்திற்கு உடன்பட்டு தனது முடிவெடுத்ததை கடந்த தேர்தல் கால நிகழ்வுகள் புரியவைக்கும்.

மாநில தலைமை தனது அரசியல் பயணத்தில் உறுதியான நிலைபட்டுடன் இருக்கையில் அங்கு தனது கருத்து முக்கியமில்லை என மத்திய தலைமை கருத வைப்பது மாநில தலைமையின் ஆளுமையை பொருத்தது  .அதை கடந்து மத்திய தலைமைக்கு  தனிப்பட்ட நோக்கங்களும் இருக்கவும்  வாய்ப்புண்டு . யூகித்து அறியும் ஆற்றலுள்ள மாநில தலைமை அந்த இரண்டிற்குமான பொது பாதையை கண்டடையும் பொறுப்பு சூழ்ந்து கொள்கிறது . இரண்டையும் இணைத்து செயல்திட்டத்தை உருவாக்கும் மாநில தலைமையை மத்திய தலைமை விருப்புடன் அனுகுகிறது.அதற்கு வழிகாட்ட அல்லது உதவிட விரும்பும் இடத்தில் தன்னை வைத்துக் கொள்வது சரியானது என நினைக்கிறது .

புதுவை சம்பவத்தை உதாரணமாக முன்வைக்க விழைகிறேன்.2001 தேர்தல் சூழலில் இரு மாநில எல்லைகளுக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் கூட இல்லாத தமிழக பதுவை  மாநில அரசியலில் , மத்தியத் தலைமை தனது கூட்டணி விஷயத்தில் இரு வேறு நிலைப்பாட்டை எடுத்தது. தமிழகத்தில் பாமாக இணைத்து கூட்டணி முடிவு எடுத்த காங்கிரஸின் மத்திய தலைமை புதுவைக்கு அது பொருந்தாது என அறிவித்ததை காட்ட இயலும்  . இதற்கு பிண்ணனியில் மாநிலத்  தலைமையின் நிலைபாடு முக்கிய பங்கு வகித்தது.பிற மாநில தலைமை தனது உறுதியான நிலைப்பாட்டை முன்வைக்க இயலாமையை முக்கிய காரணியாக புரிந்து கொள்ள முடியும் .சண்முகத்தின் நிர்வாகத்தின் தனித் தன்மையாக இதை முன்வைக்க விரும்புகிறேன் .காரணம் அரசியல் உரையாடலில் சலிப்புறாதவர்களின் விளையாட்டு .

ஆனால் இன்று காங்கிரஸ் அமைப்பு வந்து சேர்ந்திருக்கும் இடம் அதிர்வை தந்தாலும் , அது எதிர் நோக்காத ஒன்றல்ல .அதன் தலைவர்கள் மிக கடுமையாக உழைத்து இந்த பரிபவத்தை அடைந்திருக்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வை தரும் ஜெயமோகனின் கேள்வி பதில் கட்டுரை இங்கு வருவது மிகச் சிறப்பானது என்றே நினைக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக