ஶ்ரீ:
அடையாளமாதல் - 447
பதிவு : 447 / 624 / தேதி 26 ஜூன் 2019
*நம்பிக்கை இழப்பு *
“ எழுச்சியின் விலை ” - 49
முரண்களின் தொகை -03 .
தனது அரசியலின் இறுதிப் பகுதியில் சண்முகம் தலைமைப் பொறுப்பை AV.சுப்ரமணியத்திடம் இழந்த போது, நான் மிகுந்த வருத்தமுற்றேன் . AV.சுப்ரமணியம் அதற்கு சற்றும் பொருத்தமற்றவர் என்பதை விட , மாநிலத் தலைமையை தேர்ந்தெடுக்கும் முறையில் அனைத்து மாநிலத்தில் செய்யும் அதே கூத்தை தில்லியின் மத்தியத் தலைமை புதுவையிலும் அரங்கேற்றியிருந்தது . இதில் பழிக்பட வேண்டியவர் நாராயணசாமி .அவர் இன்று மாநில அமைப்பை இருட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறார் . இவரை தெரிவு செய்த சண்முகமும் அதில் அவருக்குறிய பங்கை பெறுபவரே. அடுத்தடுத்த தலைமை நியமித்து அகில இந்தியத் தலைமை , புதுவை அமைப்பு முற்றாக அழியும் இடத்திற்கு கொண்டு சென்றது.
கட்சியின் செயல்பாட்டாளரின் விளைவை , அது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதை மட்டுமே கணக்கில் கொள்வதற்கில்லை . தவறான நேரத்தில் ஆட்சியில் அமர்வது ஒரு முற்றழிவிற்கு முன் நிகழும் மாபெரும் சுழற்சியின் உச்சத்திற்கு கொண்டு சேர்க்கப்படுவது .அதிலிருந்து வெளியேறுகிற போது சாரமிழந்து சக்கையாகப்பட்டு , வரலாற்றிலிருந்து உதிர்ந்து விடுவதே நிகழ்ந்திருக்கிறது . மத்தியல் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அதிகார செயல்பாட்டின் விளைவை இன்றைய அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் கண்ட வரலாற்று தோல்வி உணர்த்துவது அதையே .புதுவை அமைப்பு அதைவிட மிக மோசமான பரிபவத்தை அடையும் என்றே நினைக்கிறேன் .
வருங்காலத்தில் புதுவை அரசியலில் அதிமுகவின் இன்றைய இடத்தை பிடித்தாலே விந்தைதான்.அது சந்தித்த அரசியல் வெறுமைக்கே , காங்கிரஸ் சென்றடையும். AV.சுப்ரமணியத்திடம் தனது தலைமைப் பொறுப்பை இழந்த போதே சண்முகத்திற்கான அரசியல் முடிவுற்றது . மட்டுமின்றி புதுவை காங்கிரஸ் வரலாறும் முட்டு சந்திற்கு வந்து சேர்ந்தது.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்தது . சண்முகம் மதிய உறக்கத்திலிருந்த என்னை எழுப்பினார் .அன்று காலைதான் தலைமை பொறுப்பு மாற்றப்பட்டதை அறிந்திருந்தேன்.எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் , அவருக்கு பின் அந்த பொறுப்பில் அமரும் AV.சுப்பரமணியம் குறித்து மிகுந்த மன விலக்கம் கொண்டிருந்தேன் . அவரை நன்கறிந்தவன் என்கிற வகையில் அவர் ஒரு தவறான தேர்வு என்பதில் இன்றளவும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
புதுவையின் காங்கிரஸ் வரலாற்றில் அது அழிவை நோக்கிய திருப்பு முணை .பிற மாநிலத்திலிருந்து மாறுபட்டது என்கிற நம்பிக்கையை சிதைத்த அந்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க இயலாது . அலைபேசியில் என்னை அழைத்தவர் , உடனே தன்னை சந்திக்க சொன்னார் . ஞாயிற்றுக்கிழமையில் ஓட்டுனர் வருவதில்லை என்பதால் , நான் காரை ஓட்டிச் சென்றேன் .
அவரை வீட்டில் சந்தித்த போது , தான் காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்வதாக, முறைப்படி அலுவலகத்தை சுப்ரமணியத்திடம் ஒப்படைக்க இருப்பதை பற்றி சொன்னார்.அரசியல் தலைமை மாற்றமென்பது அரசு பணியாளர் மாற்றமல்ல . ஒப்படைப்பு என எங்கும் எப்போதும் நிகழ்வதில்லை . நான் கட்சி அலுவலர் யாரையாவது அழைத்து கொடுத்தனுப்பலாம் , அல்லது என்னிடம் கொடுங்கள் ,நான் கட்சி அமைப்பின் செயளாலர் .நான் சென்று கொடுப்பதுதான் சரி , நீங்கள் செல்ல வேண்டாம் என்றேன் .வழமை போல “முறைமை ,கடைமை” என்று சொல்லத் துவங்கினார் .உச்ச கட்ட நிலையழிதலின் போதெல்லாம் அவர் அதீத உணர்வில் கொந்தளிக்கும் மனநிலையில் இருந்து மீட்டெடுக்க தன்னை தானே வதைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன் .அது அனைவருக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது என நம்பினார் . அந்த காலம் வழக்கொழிந்த போயிருந்தது என்பதுதான் வினோதம் . அப்போதெல்லாம் அவரைப் பற்றி பரிதாப உணர்வே ஏற்படும் .அந்த உணர்வே என்னை அவரை நோக்கி எப்போதும் உந்தித்தள்ளி இருக்கிறது .
ஆனால் இம்முறை அவர்மீது வருத்தமும் மனவிலக்கத்தை அடைந்திருந்தேன் .முதலவர் பதவியிலிருந்து இறங்கிய போதே தனது தனித்தன்மையை முற்றாக இழந்திருந்தார்.அரசு இயந்திரத்தை கையாளும் இடத்தில் அவர் இல்லை என்பதுடன் , அவர் நினைவில் நிறுத்தியிருந்த அரசு அதிகாரிகளின் நிரை இப்போது காணாமலாகி இருந்தது.அனைவரும் நாற்பதுகளின் மத்தியில் இருந்தார்கள் .விழுமுயங்களும் , மரியாதைகளும் யதாரத்தம் என்கிற விபரீத அரசியல் சரிநிலைகளாக உருமாறி இருந்தது . தலைமுறை இடைவெளிபோல ஒன்று எப்போதும் எங்கும் எழுவது .அவர் சந்தித்த அரசுகளும் , அரசு நிர்வாகிகளும் இப்போதில்லை .அரசு நிர்வாக முறை பிறிதொன்றாக மாறி இருந்தது .அதற்குள் சென்று அமர முடியாமற் போன ஏமாற்றத்தினால் அனைவரின் மீதும் பொருமையிழந்து போனார்.அவரது வாழ்நாள் அனுபவம் அவருக்கு கைகொடுக்காமல் நழுவிதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் .அனுபவ அறிவை செயல்படுத்துவது நரம்பின் முடுக்கு போலும் , வயோதிகத்தால் அதை இழக்கும்போது ,அறிவு ஆணவமாக மட்டுமே எஞ்சுகிறது. இந்த உண்மையால் கடுமையான தாக்குதலை அடைந்தேன் .