https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 18 அக்டோபர், 2018

அடையாளமாதல் - 411 * நிகர்நிலை பயிற்சி *

ஶ்ரீ:



பதிவு : 411 / 573 / தேதி 18 அக்டோபர்   2018

* நிகர்நிலை பயிற்சி  * 


எழுச்சியின் விலை ” - 12
முரண்களின் தொகை -01 .







தலைமையேற்று வழி நடத்துவது நாளும் தன்னம்மிக்கையை கோருவது , ஒவ்வொரு முறையும் தமக்கே தாம் என மீள மீள சொல்லிச் சொல்லி  வகுத்துக் கொள்வது, அது வந்தேறி என்பதால் பிறர் நம்மீது கொள்ளும் நம்பிக்கையினூடாக நாளும் பெருகி வளர்வது  போல நாளும் அதை குலைக்கும் பிறிதொன்று நிகழும் போது சிதைவுறுகிறது  , அப்போது தனக்கு நிகரான பிறரின் பலம் , வாய்ப்பு குறித்த அச்சம் எழுவது தவிற்க இயலாதது .அந்த நிலையில் தன்னைச் ஏதாவதொரு வகையில் சார்ந்திருப்பவர்களை  தன்னை  சூழ அமைத்துக் கொள்வது பாதுகாப்பு என்கிற உணர்வைத் தருவதாக தோன்றலாம்  . ஆனால் அது மிகை நம்பிக்கை . எண்ணவியலாத கணத்தில் அவை நம்மை விட்டு நழுவிச்செல்பவை  , ஒரு முறை நழுவுமானால் அதிலிருந்து மீண்டு எழும் வாய்ப்பையும் இல்லாமலாக்கி   விடுகிறது. பாலன் அமைப்பில் நிகழ்ந்த அந்த சீரழிவை நேரடியாக பார்த்தேன் . அவர் அதை இன்னும் திறமையாக, சிறப்பாக  கையாண்டிருக்கலாம் என்கிற எண்ணம் ஒவ்வொரு முறையும் ஆற்றாமையாக எனக்குள்  எழுந்ததுண்டு . ஆனால் இன்று அதையே வேறு கோணத்தில் பார்க்கையில், அன்று  பாலன் அதை முயற்சித்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதே யதார்த்தம்  என இப்போது நினைக்கிறேன் . அதற்கு அடிப்படை ஆதார பலம் நுட்பமான பிறிதொன்றாக மாறுகிறது

தலைமைப்பண்பு என்பது ஆளுமையை ,திறமையைக் குறித்து சொல்லப்படுவதாக இருந்தாலும் . ஒருவர்  பதவிக்கு வருகிறபோது அவரைப்  பற்றிய புரிதலில்  பிறிதெல்லோரும் மனத்தால் ஒருவருடன்   ஒருவர் உரையாடாமரேயே அவர்களுக்குள் இணைந்து  ஏதோ ஒருவகையில் அதிலிருந்து   ஒன்றுபோலவே அனைவரும் ஆழ்ந்த நம்பிக்கையை பெற்றுக் கொள்கிறார்கள் . இதை தர்க்க ரீதியாக விளக்கிட முடிவதில்லை. கண்ணன் , பாலன் இருவரும் ஏறக்குறைய ஒரே பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து எழுந்தவர்கள். மாநில மூத்த கட்சி தலைவர்களிடம் கண்ணனுக்கு இருந்த வெளித் தெரியாத மனஏற்பு பாலனுக்கு கிடைக்கவில்லை . மாறாக பாலன் எங்கும் எள்ளுக்கு உள்ளானார்

காங்கிரஸ் கட்சி அமைப்பும் அதன் மாநிலத் தலைமையும்  பாலன் தலைமையிலான இளைஞர் காங்கிரசுக்கு எதிர்ப்பாக இருந்தது புதிதல்ல, கண்ணன் தலைமையை இதைவிடக் கடுமையாக கையாண்டது , கண்ணனால் அவற்றைக் கடந்து எழுந்து வர இயன்றது . அவரது எழுச்சிக்கு தேர்தலில் வென்றது ஒரு காரணம் மட்டுமே அதை கடந்தும்  அவரால் தன்னை ஸ்தாபித்துக்கொண்டிருக்க முடியும் என்றே நினைக்கின்றேன் . ஆனால் அந்த வெற்றி அவரை கடைசி வரை அலைக்கழித்தது என்பதுதான் முரண்நகை. அந்த கால கட்டத்தில் அமைப்பை நடத்தும் பொதுத்தன்மை அவரிடமிருந்து முற்றாக விலகி இருந்தது . அவ்வப்போது கிடைத்த சில வெற்றிகள் அவரின்  கடைசி சக்திவரை உறிஞ்சிகொண்டது.

கண்ணனுக்கு கிடைத்த குறுகிய கால வெற்றி கூட பாலனுக்கு கிடைக்காமலானது. எந்த தொகுதியிலும் கட்சி சார்ந்த பொது ஆதரவை தளத்தை அவரால்  பெற முடியவில்லை . அது அமைப்பை குறுங்குழுவாக்கி நடத்திச் செல்வதை நோக்கி அவரை திருப்பி விட்டது. கட்சியின் அடிப்படை மூத்த தலைவர்களே அமைப்பின் பலம்.அதை மிக சரியாக வளர்த்தெடுத்து , கைக்கொண்டிருந்த வரை  நிலைத்த தலைமையை  கொடுக்க இயலும் என்பதற்கு சண்முகமே உதாரணம் . அவர் சுமார் முப்பதாண்டு காலத்திற்கு மேலாக கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு அது போன்ற புரிந்து கொள்ள இயலாத நிகர் செய்யப்பட்ட  ஆதார பலம் காரணமாக இருக்கலாம்

ஆரம்ப காலத்தில சண்முகமும் எதிர்பில்தான் வளர்ந்தார். கண்ணனுக்கும் பாலனுக்கும் சொல்லப்பட்ட அதே குறைவுபாடுகள் அவருக்கும் இருந்தது . ஆனால் தனது செயல்பாட்டினாலும்தளர்ச்சி அடையாத   அரசியல் நிலைப்பாட்டினாலும், தொடர் நிலைத்த வெற்றிகளையும் , பின்னர் அவரது அரசியல் எதிர்கள் அனைவரும் அஞ்சுகிற நிலையை அடைந்து , தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் . அதற்கு அவர் உருவாக்கிக் கொண்ட மேலிட தொடர்பும் செல்வாக்கும் பெரிதும் உதவின என்றாலும் , தனது செல்வாக்கை மிக கூர்மையான தருணங்களில் மட்டுமே தனக்கு சம பலமுள்ள, தன்னுடன் முரண்பட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தினார் . அது பதவியை தக்க வைத்துக் கொள்ளும் யுக்தியாக மட்டுமே என நினைக்கிறேன்

அவர் கருத்தியல் ரீதியாக உட்கட்சி அமைப்பை சரி செய்ய எல்லோருடன் அவர் நிகழ்த்திய தொடர் உரையாடல்களையும் , அவர்களை அனுசரித்து எடுத்த சில முடிவுகளின் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் . இந்த இடத்தில் சண்முகம் , கண்ணன் மற்றும் பாலன் மூவரையும் இணைத்து அரசியலின் செயல்படு முறை பற்றிய கருத்தியலை அடையமுடியுமா என பார்க்கிறேன்

மூவருக்கும்  கட்சி ரீதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் செயல்பாடுகளின் பின்னால் கோட்பாடுகள் இருந்திருக்க வேண்டும் . பிற இருவரையும் கடந்து சண்முகம்  நீண்ட நாட்கள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கு , எந்த கோட்பாடுகளை முன்னிறுத்தினாரோ அவைகளை முழுமையான நம்பிக்கையுடன் கைக்கொண்டது முக்கியமான காரணம் என நினைக்கிறேன். ஆனால் தனது இறுதி நாட்களில் அவரும் அதை கைவிட்டார். கோட்பாடுகள் இரக்கமற்றவைகள் போலும் அவை யாருக்கும் சலுகைகளை வழங்குவதில்லை . சண்முகமும் தன்னை கோட்பாடுகளுக்கு அப்பால் வைக்க முயன்றபோது அது அவரை முற்றிருளில் கொண்டு விட்டது .

அனுபவம் என்பது கூட நாளும் பயிற்சியினூடாக நிலை கொள்வது போலும்  , நாளும் புதிய பொழுது எழுகைக்கு அது நுண்ணிய மாற்றங்களுடன் தன்நடைமுறை படுத்துதலை கோருவது. அது புதுப்பிக்க படாவிடில் அவர்களை கைவிடுகிறதுஎன்கிற உண்மை எனக்கு பேரச்சத்தைக் கொடுப்பதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக