https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 ஜூன், 2023

அறியாமையின் பொறுப்பு ஜெயமோகன்

 https://www.jeyamohan.in/184845/




அன்புள்ள ஜெ

என் 17 வயதான மகன் இஸ்லாமிய நூல்களை வாசிப்பது, இஸ்லாமிய கருத்துக்கள் மேல் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதுடன் இப்போது இஸ்லாமுக்கு மாறவிருப்பதாகவும் சொல்கிறான். அவனை என்னால் மாற்ற முடியவில்லை. மிகுந்த பிடிவாதத்துடன் இருக்கிறான். என்னை எதிரி என பார்க்கிறான். நாங்களெல்லாம் காஃபிர்கள் என நினைக்கிறான். இதற்கு என்ன செய்வது?

எச்

*

இக்கடிதம் விந்தையான முறையில் அனுப்பப்பட்டிருந்தது. உடைந்த ஆங்கிலத்தில் ‘சப்ஜெக்ட்’ பகுதியிலேயே கடிதம் இருந்தது. மின்னஞ்சல் அனுப்பக்கூட தெரியாதவரின் கடிதம். இந்தப் பதில் அவருக்கு எப்படிச் சென்று சேரும் என தெரியவில்லை. இந்த நீண்ட பதிலை அவரால் படிக்கமுடியுமா என்றும் தெரியவில்லை. ஆனால் இது ஒரு பொதுவான விஷயம் என்பதனால் எழுதுகிறேன்.

இதைப்போன்ற கடிதங்கள் ஆண்டுக்கு ஏழெட்டாவது வருகின்றன. இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு தங்கள் வாரிசுகள் மாறிச்செல்வதைப் பற்றிய பதற்றமும் கவலையுமாக பெற்றோர் எழுதுபவை அவை. சிலநாட்களுக்கு முன்புகூட தன் மகள் பெந்தெகொஸ்தே மதத்திற்குச் சென்றுவிட்டதைப் பற்றி ஒருவர் கண்ணீருடன் எழுதியிருந்தார். மைனர் குழந்தைகள் சட்டென்று மதம் மாறிவிடுகின்றன. பெற்றோர் அவர்களின் கண்ணுக்கு காஃபிர் ஆகவும் சாத்தானாகவும் தென்படத் தொடங்குகிறார். தமிழகத்தை விட இப்பிரச்சினை கேரளத்தில் மும்மடங்கு அதிகம்.

மதம் மாறுவது பிழையா?

மதம் மாறுவது பிழை அல்ல. அது ஒரு பயணம். ஒருவர் ஒரு மதத்தை, ஓர் ஆன்மிக வழியை கடைப்பிடிப்பது அவருடைய சுதந்திரம். இந்தியா அவருக்கு அந்த சட்டபூர்வ உரிமையை அளிக்கிறது. ஆன்மிக நோக்கில் பார்த்தாலும்கூட தனக்கான ஒரு மதத்தை அல்லது ஞானமார்க்கத்தை ஒருவர் கண்டடைவது மிகமிக அவசியமான ஒன்று.

ஆகவே 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்தை ஏற்றார் என்றால் அதன்பின் அவரை மாற்ற முயல்வதென்பது அவருடைய தனிவாழ்வில் தலையிடுவதாகும். அவருக்கு உணர்வு சார்ந்த அழுத்தங்கள் அளிப்பதென்பது அவருடைய ஆன்மிகப் பயணத்தை சிதைக்க முற்படுவது. அது அவர் வாழ்க்கை என அவரைச் சார்ந்தோர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

அதேபோல அவரும் தன் பெற்றோர் அல்லது மற்றவர்களின் நம்பிக்கையை, தனிமனிதச் சுதந்திரத்தை ஏற்றாக வேண்டும். பல சமயங்களில் அது நிகழ்வதில்லை. மதம் மாறிய ஒருவர் தன் குடும்பத்தை பலவகையான உணர்வுசார்ந்த மிரட்டல்கள் வழியாக தன் மதத்துக்கு மாற்ற முயல்வதே வழக்கம்.

ஒவ்வொருவரும் தங்கள் தனிமனித உரிமையை, தனி அகத்தை பேணிக்கொண்டாக  வேண்டும். அதில் ஊடுருவ எவரையும் விடக்கூடாது. எவர் உலகுக்குள்ளும் அத்துமீறவும் கூடாது. ஏனென்றால் இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இங்கே தனி மனிதர்களே அடிப்படையான சமூக அலகு. குடும்பம், சாதி, மதம் ஏதும் இன்றைய மனிதனுக்கு கட்டாயங்கள் அல்ல. சட்டம் தவிர எதற்கும் தனிமனிதர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல. தனிமனிதனின் அகச்சுதந்திரம் என்பது அவனுடைய உரிமை, அவனுடைய சொத்து.

என்ன செய்யலாம்?

இந்தக் கடிதத்திற்கு பதிலுரைக்கக் காரணம், இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் 17 வயதானவர் என்பதே. தன் வாழ்க்கை சார்ந்து முடிவெடுக்கும் முதிர்ச்சி அவருக்கு இல்லை. சட்டபூர்வமாகவே இல்லை. எல்லா தரப்பையும் அறிந்து, தன்னைப் பற்றியும் மதிப்பிட்டுக்கொண்டு, தன் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கும் அறிவுத்தகுதியும் அனுபவத்தகுதியும் அவருக்கு இப்போது இல்லை.

அந்நிலையில் அறுதியான முடிவுகளை அவர் எடுப்பது மிக ஆபத்தானது. மதமாற்றம் என்பது இன்றைய சூழலில் ஒருவழிப்பாதை மட்டுமே. பின்னர் நினைத்தாலும் திரும்பி வர முடியாது. உயிரை அதற்கு பணயம் வைக்கவேண்டியிருக்கும். அந்த அறுதி முடிவை நன்கு யோசித்து, தெளிந்த பின் எடுப்பதே உகந்தது.

இந்த இளைஞர் விஷயத்தில் அவரிடம் தொடர்ச்சியாக உரையாடுவதொன்றே செய்யக்கூடுவது. பெற்றோர் உரையாடலாம். அல்லது குடும்பப்பெரியவர்கள். கற்றறிந்த ஆசிரியர்கள் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் பேசலாம். குடும்பத்திற்கு குரு என எவரேனும் இருந்தால் அவர் உரையாடலாம்.

அவருடைய முடிவை ஐந்தாண்டுகள், அவருக்கு 21 கடப்பது வரை ஒத்திப்போடும்படி கோரலாம். அது வரை அவருக்கு மற்ற மதங்களின் அடிப்படைகளை கற்பிக்கலாம். பகுத்தறிவும், புறவய அறிவியல் நோக்கும்கூட கற்பிக்கப்படலாம். அதன்பின்னர் அவர் முடிவெடுப்பதே நல்லது எனறு சொல்லலாம். அவர் எல்லா தரப்பையும் அறிந்தபின், உரிய வயது வந்த பின் தன் வழியைத் தேர்ந்தெடுப்பாராயின் அது அவருடைய வாழ்க்கை, அவருடைய முடிவு. அவ்வளவுதான்.

மற்றபடி இதில் எவரும் எதுவும் சொல்வதற்கில்லை.

மதநெருக்கடிகள்

நம் சமூக ஊடகச் சூழலில் உள்ள கருத்தியல் கெடுபிடிகள் பலவகை மதவாதச் சக்திகளாலும், அரசியல் சக்திகளாலும் ஒருங்குதிரட்டப்பட்டவை. உச்சகட்ட பிரச்சாரம் வழியாக நிலைநிறுத்தப்படுபவை. ஆகவே நான் சொல்வன எளிதில் சென்று சேராது என அறிவேன். திரித்தல்கள், முத்திரை குத்தல்கள், இழிவுசெய்தல்கL ஆகியவையே இதற்கு எதிர்வினைகளாக பெரும்பாலும் எழும் என்றாலும் இவற்றைப் பேசியாகவேண்டியிருக்கிறது.

சென்ற ஓராண்டில் நான் இஸ்லாமுக்கு மதம் மாறிய எட்டு குடும்பங்களுக்கு மேல் நேரில் சந்திக்க நேர்ந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் உள்ள பொதுப்பின்னணி என்பது அவர்களின் முந்தைய தலைமுறையினர் திராவிடர் கழகத்துக் கொள்கை அல்லது இடதுசாரிக் கொள்கை கொண்டிருந்தனர் என்பதுதான்.

மதுரையில் அவ்வாறு சந்திக்க நேர்ந்த ஓர் இஸ்லாமியரிடம் பேசினேன். திக குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரும் அவர் சகோதரர்களும் இஸ்லாமியர்களாக ஆனார்கள். அவர்களின் தந்தை திகவாகவே நீடித்தார். எந்த உலகியல் நோக்குடனும் அவர்கள் மதம் மாறவில்லை. ஒரு ஜெராக்ஸ்- அச்சு கடை நடத்தி வலிமையான பொருளியல் சூழலிலேயே இருந்தனர். அவர்கள் மதம் மாறியது முழுக்க முழுக்க ஆன்மிகமான, பண்பாடு சார்ந்த தேவைகளுக்காகத்தான். மதமின்றி , கடவுள் இன்றி வாழ்வின் நெருக்கடிகளையும் அடிப்படை வினாக்களையும் எதிர்கொள்ள முடியாது என அனுபவத்தால் உணர்ந்தமையால் மட்டும்தான்.

அவர்களின் தந்தை குடும்பத்திற்கு உருவாக்கிய திராவிடர் கழகப் பின்னணி அவர்களுக்கு ஓர் எதிர்ப்பு மனநிலையை மட்டுமே அளித்தது. கொள்கை அல்லது நம்பிக்கை என அவர்களிடமிருந்தது எல்லாமே அந்த எதிர்ப்புதான். எவரும் அந்த எதிர்ப்பிலேயே தொடர்ந்து வாழமுடியாது. அவர்கள் ஒரு தலைமுறைக்காலம் அதில் வாழ்ந்தனர். அடுத்த தலைமுறைக்கு அந்த எதிர்நிலை அர்த்தமில்லாததாகத் தோன்றியது. அது இயல்பு. எந்த அடிப்படைத்தேவைக்காக மதமும் கடவுளும் உருவாகி வந்தனவோ அந்த தேவைகள் மனிதகுலத்திற்கு அப்படியே நீடிக்கின்றன. ஆகவே வேறுவழியில்லை. அவர்களுக்கு மதம் என ஒன்று தேவைப்பட்டது. அவர்களுக்கு முன் இருந்த வாய்ப்பு மதமாற்றம் மட்டும்தான்.

ஏனென்றால் தி.க மூர்க்கமான இந்து எதிர்ப்பை முன்வைக்கிறது. இந்துமதம் என்பது ஒரு கழிவுக்குட்டை என ஆழமாக அகமனதில் பதியச் செய்துவிடுகிறது. திராவிடர் கழகக் குடும்பங்களில் குழந்தைகள் அந்த ஆழமான கசப்புடனேயே பிறந்து வளர்கின்றன. இடதுசாரிக் குடும்பங்களிலும் அப்படித்தான்.மறுபக்கம் மிக உச்சகட்ட வீரியத்துடன், மாபெரும் நிதியுதவியுடன் இஸ்லாமும், கிறிஸ்தவமும் இங்கே பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அந்த மதங்களின் நம்பிக்கை சார்ந்த அடித்தளம் ஒருபக்கம், கொள்கைகளும் தத்துவமும் சார்ந்த அறிவுத்தளம் இன்னொரு பக்கம் என முழுமையாகவே அவை முன்வைக்கப்படுகின்றன. அவரவர் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப அவற்றை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே அவர்கள் இயல்பாக இஸ்லாமை தெரிவுசெய்தனர்.

இன்னொன்றுமுண்டு, இஸ்லாம் கிறிஸ்தவம் போன்றவை சிறுபான்மை மதங்கள் என்பதனால் அவற்றைப் பற்றிய விமர்சனங்கள் இங்கே மதவெறியாகக் கருதப்படுகின்றன. சட்டமே அவ்விமர்சனங்களை குற்றமாகக் கருதுகிறது. சென்ற முப்பதாண்டுகளில் நானே அந்த மதங்களின் சிக்கல்கள் பற்றியோ போதாமை பற்றியோ ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை. சொல்லப்போவதுமில்லை. இந்து மதத்தின் தத்துவ அடிப்படைகளை மட்டும் முன்னெடுத்து வைப்பதை மட்டுமே செய்து வருகிறேன்.வெற்றுச் சடங்குகள் மற்றும் பழமைவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறேன்.

ஆனால் அதற்கே என்னை மதவெறியன் என மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும், பகுத்தறிவாளர்களாக வேடமிட்டு வந்தும் முத்திரைகுத்தி வசைபாடுகிறார்கள்.இங்கே மாற்று மதத்தவர்கள் கொஞ்சம் பகுத்தறிவு, கொஞ்சம் மனிதாபிமானச் சாயம் பூசிக்கொண்டால் இந்து மதத்தை மிகக்கடுமையாக வசைபாடலாம். இழிவு செய்யலாம். அது முற்போக்காகவே கருதப்படும். இணையவெளியில் அப்படி இந்துமத காழ்ப்பை கக்கும் பலர் மதவெறியை மறைத்துக்கொண்டவர்களே.

ஒருவர் பகுத்தறிவின் சார்பாக இந்து மதத்தை வசைபாடுகிறார், ஆனால் அவர் இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ தனி வாழ்க்கையில் இருக்கிறார் என்றால் அதை பகுத்தறிவு என்று கொள்வோமா, மதவெறி என்று கொள்வோமா? தமிழகத்தில் கடுமையான பகுத்தறிவுவாதியாக இந்துமதத்தை கண்டித்துவந்த தேவநேயப் பாவாணர் தனிவாழ்க்கையில் தீவிரமான கிறிஸ்தவர். கிறிஸ்தவ இசைப்பாடல்கள் ஏராளமாக எழுதியவர்.

இந்து மதத்தின் மெய்யியலை, தத்துவத்தை முன்வைப்பவர்களைக்கூட மதவெறியர் என்றும், மத அரசியல் கொண்டவர் என்றும் முத்திரை குத்தி சிறுமைசெய்து அவர் குரல் எழாமல் செய்துவிடுகிறார்கள் மேற்குறிப்பிட்ட போலிப்பகுத்தறிவினர்.இச்சூழலில் இந்துமதம் சார்ந்து ஓர் அறிவியக்கவாதி பொதுவெளியில் பேசுவதே அபாயகரமானது.

அதாவது மற்ற மதங்கள் விமர்சனங்களே இல்லாமல் ‘பாதுகாக்கப்பட்டு’ ஒற்றைப்படையாக முன்வைக்கப்படுகின்றன. இந்துமதம் மீது விமர்சனம் மட்டுமே சூழலில் கிடைக்கிறது. இந்து மதம் கறைபூசப்பட்டு பொதுவெளியில் நின்றுள்ளது. இந்துக்குழந்தைகளிடம் அந்த இந்துமதம்தான் அறிமுகமாகிறது.

மறுபக்கம் இந்துத்துவ அரசியல் இந்து மெய்யியலை, தத்துவத்தை மேலும் திரித்தும் சிறுமை செய்தும் ஒற்றைப்படையாக்கியும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. இவர்களின் அரசியலிலுள்ள கீழ்மைகள் அனைத்துக்கும் இந்து மதம் பொறுப்பேற்கவேண்டியுள்ளது. அவர்களும் மிகக்கீழ்த்தரமாக எதிர்ப்பது இந்து ஆன்மிகத்தை மட்டும் முன்வைப்பவர்களைத்தான். இந்து அரசியலுடன் இணைந்து கூச்சலிடாத அனைவருமே அவர்களுக்கு இந்துவிரோதிகள், ஆகவே கீழ்மை செய்யப்பட வேண்டியவர்கள்.

இந்த இருதலைக்கொள்ளி நிலையில் நின்றுதான் இவற்றைப் பேசவேண்டியுள்ளது.

நம் குடும்பச்சூழல்

தமிழகத்திலுள்ள இந்துக்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதம் பற்றிய எந்த அக்கறையும் அற்றவர்கள். முழுக்க முழுக்க உலகியல் பார்வை மட்டுமே கொண்டவர்கள். பணமாக, சுகபோகமாக, அந்தஸ்தாக மாறாத எதன்மேலும் ஆர்வம் அற்றவர்கள். ஆகவே அவர்கள் அறிந்த இந்துமதம் என்பது பண்டிகைகளும் வேண்டுதல்களும் மட்டுமே. பண்டிகை என்றால் சினிமா பார்ப்பது. வேண்டுதல் என்றால் சோதிடர் சொன்னபடி அதற்கான கோயில்களுக்கு போய்வருவது. வேண்டிக்கொண்டு, குலதெய்வத்துக்கு படையல்போடுவது.

இங்கே தன் மகனோ மகளோ இந்து மதம் சார்ந்து ஓர் ஐயம் கேட்டால் அதற்கு விளக்கமளிக்கும் தகுதி கொண்டவர்கள் எத்தனைபேர்? அடிப்படைகளையாவது தெரிந்து வைத்திருக்கவேண்டுமல்லவா? அந்த ஆர்வம் எவரிடமுள்ளது? வெறும் உலகியல் வெறியே உள்ளது. அதை மறைத்துக்கொண்டு தங்களை பகுத்தறிவுவாதிகளாக பொதுவெளியில் பாவலா காட்டுகிறார்கள். இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வார்கள். மாற்றுமதத்தினருடன் சேர்ந்துகொண்டே அதைச் செய்வார்கள். ஆனால் ஒரு சோதிடன் சொல்லிவிட்டால் ரகசியமாகக் கோயிலுக்கும் சென்று வருவார்கள்.

இவர்களின் பிள்ளைகள் முற்றிலும் ஆன்மிகம் அற்ற சூழலில் வளர்கிறார்கள். ஆன்மிகம் என்பது அன்றாடச் சடங்குகளாகவும், கலையிலக்கியங்களாகவும் விரிந்திருப்பது. தமிழகத்தில் தங்கள் பிள்ளைகளை கோயில்களுக்கு கொண்டு செல்பவர்கள் எத்தனைபேர்? அவர்களுக்கு கோயில்களின் கலை பற்றி ஓர் அறிமுகம் அளிக்கும் தகுதி கொண்டவர்கள் எத்தனைபேர்? தமிழிலுள்ள மாபெரும் பக்தி இலக்கியத்தின் மெல்லிய சுவையையாவது தன் குழந்தைகளுக்கு அளிப்பவர்கள் எத்தனைபேர்? இந்து மதம்சார்ந்த கலைகளை அறிமுகம் செய்பவர்கள் எத்தனை பேர்? சரி, குறைந்தபட்சம் குலதெய்வக் கதைகளையாவது சொல்பவர்கள் எத்தனைபேர்?

சரி, பெற்றோர் அளிக்கும் நிலையில் இல்லை. அதற்கான ஏதாவது அமைப்பு உள்ளதா என்றால் அதுவுமில்லை.  இந்து மரபின் சாரமான தத்துவத்தையும் மெய்யியலையும் எடுத்துச்சொல்ல இங்கே நவீன அமைப்புகள் இல்லை. இங்கே இருப்பவை இரண்டு வகை அமைப்புகள். ஒன்று மிகப்பழமையான அமைப்புகள், பழமையை அப்படியே முன்வைப்பவை. அவை சாதியாசாரங்களுக்குள் கட்டுண்டு தேங்கிக்கிடக்கின்றன. இரண்டு, இந்துத்துவ அரசியலமைப்புகள். அவை எல்லாவற்றையும் முச்சந்தி அரசியலாக ஆக்கிவிடுகின்றன. பண்பாடு, ஆன்மிகம் இரண்டுமே அவற்றுக்கு முக்கியமில்லை. இரு சாராருமே இன்றைய இளையோரிடம் ஒவ்வாமையை உருவாக்குபவர்கள்.

இங்கே இந்து மெய்யியலைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மிக அரியவர்கள். அவர்களுக்கும் அதற்கான அமைப்புகள் இல்லை. அப்படி ஓரிரு அமைப்புகள் இருந்தால்கூட அவற்றுக்கு பொதுஆதரவு என்பது பெரும்பாலும் இல்லை. அவை காலப்போக்கில் நலிந்து மறைகின்றன.

ஆன்மிகத்தின் தேவை

ஆன்மிகமில்லாமல் வாழ்வது மனிதர்களால் இயலாது. வாழ்க்கையின் நோக்கம், இயற்கையின் உள்ளடக்கம், பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய அடிப்படைகள் சார்ந்த வினாக்களையும் விளக்கங்களையுமே நாம் ஆன்மிகம் என்கிறோம்.

உள்ளுணர்வு சார்ந்து மானுடன் அடைந்த புரிதல்களும், புரிதல்களுக்கான வழிகளும் அடங்கியவை மதங்கள். அவற்றில் பலநூறு தலைமுறைகளாக, பல்லாயிரம் ஞானிகள் உணர்ந்தவை தொகுக்கப்பட்டுள்ளன. படிமங்களாகவும், தொன்மக்கதைகளாகவும், குறியீடுகளாகவும், வழிபாட்டு முறைகளாகவும், நம்பிக்கைகளாகவும், ஆசாரங்களாகவும் அவை மதத்துக்குள் உள்ளன.

எந்த மதத்துடனும் வாழ்க்கையிலுள்ள சடங்குகளும் ஆசாரங்களும் கலந்துவிடும். ஒரு விஷயத்துக்கு புனிதத்தன்மை அல்லது தொன்மையை அளிக்க விரும்புபவர்கள் அதை மதத்துடனும் ஆன்மிகத்துடனும் இணைத்து விடுவார்கள். ஆகவே எந்த மதமானாலும் அதில் ஒரு பகுதி காலத்துக்கு ஒவ்வாததாக, பழமைவாதமாகவே இருக்கும். மதத்தில் இருந்து ஆன்மிகத்தை பிரித்தெடுத்தல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாக நிகழ்ந்தாகவேண்டிய ஒன்று.

மதம் கடந்த ஆன்மிகம் ஒன்று உண்டு. அது சென்ற இருநூறாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகி உலகமெங்கும் பரவிய ஒன்று. அதற்கு தனியான அறிவுத்தளம் உண்டு. புறவயமான தர்க்கபூர்வமான அறிவைச் சார்ந்தது அது. பலநூறு தத்துவஞானிகளும் எழுத்தாளர்களும் அறிவியலாளர்களும் இணைந்து அதை உருவாக்கியிருக்கிறார்கள். பலநூறுபேர் அதில் இன்றும் முன்னணிச் சிந்தனையாளர்களாக உள்ளனர்.

மதம் கடந்த ஆன்மிகம் என்பது நாத்திகவாதம் அல்ல. நாத்திகவாதம் என்பது மதத்தை எளிமையான நிரூபணவாதம் சார்ந்த தர்க்கபுத்தியால் மறுத்துக் கொண்டிருப்பது மட்டுமே. நாத்திகவாதத்திற்கு தனக்கான உலகப்பார்வை இல்லை. பிரபஞ்சப் பார்வையும் இல்லை.  அது ஓர் எதிர்நிலைபாடு மட்டும்தான். நேர்மாறாக மதம் கடந்த ஆன்மிகம் என்பது தனக்கான உலகப்பார்வை, பிரபஞ்ச நோக்கு கொண்டது. அதில் பல தரப்புகளும் அவற்றுக்கிடையே விவாதங்களும் உண்டு.

இங்கே மதங்களை நிராகரிப்பவர்கள் எளிமையான நாத்திகவாதத்துடன் நின்றுவிடுகிறார்கள். அதற்கு கல்வியோ சிந்தனையோ தேவையில்லை. எளிய லௌகீகவாதமும் பழிப்புகாட்டும் மனநிலையும் மட்டுமே போதும். உண்மையில், மதம் கடந்த ஆன்மிகத்தை அடைவது எளிதல்ல. மதம்சார்ந்த ஆன்மிகம் பழைமையானது, கலைகளாகவும் இலக்கியமாகவும் , வாழ்க்கை முறையாகவும் நம்மை வந்தடைவது. மதம் கடந்த ஆன்மிகம் புதியது. அதைக் கற்க நாம் கடும் முயற்சி எடுக்கவேண்டும். அறிவார்ந்து நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். தக்க ஆசிரியர்களும் வேண்டும். அது இங்கே இல்லை.

ஐரோப்பாவில் மதம்கடந்த ஆன்மிகம் வலுவாக உள்ளது. அது ஓர் முதன்மை அறிவுத்தரப்பு. இன்றைய அறிஞர்கள் பலர் அதைச் சார்ந்தவர்கள். ஆனால் அதை இந்தியாவிலிருந்து நாம் கற்கவேண்டுமென்றால் மிகக்கடுமையான உழைப்பும், ஆய்வுப்பார்வையும் தேவை. எந்தக் கல்விக்கும் தேவையான சமநிலையும் இன்றியமையாதது.

மதம்கடந்த ஆன்மிகத்தை அறிய, அதில் நிலைகொள்ள ஷோப்பனோவர் முதல் ரஸ்ஸல் வரை ஒரு மேலோட்டமான அறிமுகவாவது தேவை. கண்டிப்பாக மார்க்ஸும் லெனினும் மதம்கடந்த ஆன்மிகத்தை அறிவதற்குப் போதுமானவர்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் மெய்யியல் அல்லது ஆன்மிகம் சார்ந்த எந்த அறிவும் இல்லாதவர்கள். அவர்களின் கேள்விகளும் விடைகளும் ஆன்மிகம் சார்ந்தவை அல்ல. ஆன்மிகத்தேடல் கொண்டவர்கள் விரைவில் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள். மதம்கடந்த ஆன்மிகத்தை முன்வைக்கும் மேலைச் சிந்தனையாளர்களை அறிய போதுமான அளவுக்கு நூல்களே கூட தமிழில் கிடைப்பதில்லை.

நான் பொதுவாக ‘எனக்கு மதநம்பிக்கை இல்லை’ என்று சொல்பவர்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். மதம் கடந்த ஆன்மிகம் என ஒன்றை சென்றடைவதற்கான அறிவுத்தேடலோ, உழைப்போ அற்றவர்களாகவே இருப்பார்கள். சில்லறை நாத்திகம் பேசி கெக்கெக்கே என ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். மதம், பண்பாடு, ஆன்மிகம் பற்றி எதுவுமே தெரியாமல், ஒரு நூல்கூட வாசிக்காமல், எளிய துண்டுப்பிரசுரங்களை வாசித்துவிட்டு தங்களை ஒருபடி மேலானவர்களாக நம்பிக்கொண்டிருப்பார்கள்.

உண்மையில் இந்த நாத்திகர்கள்தான் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நேராக மதம் நோக்கிச் செல்பவர்கள். பலர் ரகசியமாக, சிலர் வெளிப்படையாக. சிலருக்கு சில கடும் நெருக்கடிகள் அதற்குக் காரணமாக அமைகின்றன. சிலருக்கு வெறும் உலகியல் பதற்றமும் ஆசைகளுமே அதற்கான காரணங்களாக அமைகின்றன. இங்கே இளமையில் நாத்திகம்பேசுபவர்கள் அப்படியே நீடிப்பது அரிதினும் அரிது. உண்மையாகவே நாத்திகர்களாக இருப்பது அதனினும் அரிது.

இந்த எளிய நாத்திகம் பேசும் திகவினர் மற்றும் இடதுசாரிகளின் குடும்பங்கள் மிகப்பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்குள் வழக்கமான மதநம்பிக்கைக்குச் சென்றுவிட்டிருப்பதைக் காணலாம். காரணம், அவர்கள் திகவாக இருந்தாலும் அவர்களின் மனைவி தன் வழியில் மரபானவராக இருந்துகொண்டிருப்பார். ஒரு கையை பிடிமானத்துக்காக பற்றிக்கொண்டுதான் இவர்கள் நடனமிட்டிருப்பார்கள். மிகச்சிலரின் குடும்பங்கள் இந்துமத எதிர்ப்பினூடாக கிறிஸ்தவம் இஸ்லாம் நோக்கிச் செல்கிறார்கள்.

இல்லங்களில் தொடங்குக!

பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் இன்று குழந்தைகள் வளரும் சூழல் மதம் அல்லது ஆன்மிகம் பற்றிய ஞானமே இல்லாதது. வீட்டில் வெறும் உலகியல்வாதம். காசு, பதவி, கௌரவம், அதையெல்லாம் அளிக்கும் படிப்பு தவிர வேறேதுமில்லை. இந்து என பெயரே ஒழிய இந்து தத்துவமோ அழகியலோ இலக்கியமோ அறிமுகமே இல்லை என்பது மட்டுமல்ல அவற்றை நையாண்டி செய்யும் பேச்சுகளே காதில் விழுகின்றன. வீட்டில் கலை, இலக்கியம், தத்துவம், சிந்தனை என எந்த நிலையிலும் பண்பாட்டுக் கல்வி என்பதற்கு இடமே இல்லை.

வெளியே நம் சமூகச்சூழலில் இருந்து கிடைப்பது கடுமையான இந்து மறுப்பு. இந்து மதமே இந்தியாவின் சகல கீழ்மைகளுக்கும் அடிப்படை என செய்யப்படும் தொடர் பிரச்சாரம். ஆகவே பொதுச்சூழலில் புழங்கும் ஓர் இந்து ’எனக்கு மதநம்பிக்கை இல்லை’ என ஒரு கட்டத்தில் சொல்லியே ஆகவேண்டும். மறுபக்கம் அதியுக்கிரமான மாற்றுமதப் பிரச்சாரங்கள். ஒரு சாரார் அப்பிரச்சாரத்திற்கு இரையாகிவிடுகிறார்கள். இதை தவிர்க்கவே முடியாது. இதில் கடைசிநேரத்தில் புலம்பும் பெற்றோர்தான் முதன்மைக் குற்றவாளிகள்.

ஒரு குடும்பம் என்பது குழந்தைகளுக்கான பொருளியலடிப்படையை உருவாக்கி அளிப்பது மட்டுமல்ல. குழந்தைகளுக்கான பண்பாட்டுவெளியை அளிப்பதும்கூடத்தான். அதைப் ‘புகட்ட’ முடியாது. அதை வாழ்க்கையாகக் கொண்டிருந்தால்தான் குழந்தைகளுக்குச் சென்றுசேரும். உலகியல் லாபத்துக்காக மட்டும் ‘சாமி கும்பிட்டு’விட்டு இந்து மெய்யியல் பற்றி ஒன்றுமே தெரியாமலிருக்கும் ஒரு மண்ணாந்தைக் குடும்பத் தலைவர் தன் குழந்தைகளின் பண்பாடு பற்றிப் பேசும் தகுதி கொண்டவரா என்ன?

வீட்டில் இருந்து பண்பாடும் மதமும் கற்பிக்கப்படவேண்டும். இயல்பாக, வாழ்க்கைமுறையாக. கண்மூடித்தனமான பழமைவாதமாக அல்ல, ஒவ்வாதன விலக்கப்பட்டு, இன்றைய காலத்திற்குரியவையாக. பண்பாட்டிலிருந்து கலையும் இலக்கியமும் அவற்றின் சாரமான நுண்படிமங்களும் வழ்ந்து சேரவேண்டும். மதத்தில் இருந்து ஆன்மிகம் வந்துசேரவேண்டும்.

அவை ஏன் குடும்பத்தில் இருந்து வரவேண்டும் என்றால் அவை ‘அறிவு’ அல்ல ‘உணர்வுகள்’. ஆழ்படிமங்கள் வழியாகச் செயல்படுபவை அவை. இளமையிலேயே அகத்தே கடந்து உள்ளே வளரவேண்டியவை. ஆன்மிகம் என்பதன் அடிப்படைகளே அவைதான்.  அவை விளக்கங்களுக்கு ஒருவகையில் அப்பாற்பட்டவை. மதம் வழியாக அவை வரலாம். அல்லது மதம் கடந்த ஆன்மிகம் வழியாக வரலாம். மதம் வழியாக சங்கரரும் திருமூலரும் வரலாம், மதம் கடந்த ஆன்மிகம் வழியாக ஷோப்பனோவரும் குரோச்சேயும் வரலாம்.

பலர் சொல்வதுண்டு, குழந்தைகளுக்கு எந்த மதத்தையும் அளிக்கவில்லை- அவர்கள் வளர்ந்தபின் உகந்ததை தெரிவுசெய்து கொள்ளட்டும் என்று. அபத்தமான கூற்று அது. உண்மையிலேயே அப்படி வளர்ந்த குழந்தைக்கு எந்த நுண்ணுணர்வும் இருக்காது. ஆன்மிகமும் கலையிலக்கியமும் புரியாத வெற்றுத் தர்க்கபுத்தி மட்டுமே இருக்கும். அந்த வெற்றுத்தர்க்கம் மெய்யான ஆன்மிகக்கேள்விகள் முன் திகைத்து நிற்கும்போது அவர்கள் மூர்க்கமான நம்பிக்கைகளை தாவிச்சென்று பிடித்துக்கொள்வார்கள். ஆன்மிகம், கலை, இலக்கியம் ஆகியவை உள்ளம் உருவாகிவரும்போதே அறிமுகமாகியிருக்கவேண்டும்.

ஓர் அறிமுகம் இந்து மரபில் ஒருவருக்கு இருக்கிறது என்று கொள்வோம். ஆனால்  மனமுதிர்ச்சி அடைந்தபின் அவருக்கு அதுவரை அளிக்கப்பட்டவை போதுமானவை அல்ல என உண்மையிலேயே தோன்றினால், இன்னொரு வழியை தேடவேண்டுமென அவர் விரும்பினால் அது அவருடைய பொறுப்பு, அவருடைய எதிர்காலம்.  ஆனால் அறிந்து அதன்பின் அவர் கடந்துசெல்லவேண்டும். அறியாமல் உதறிச்சென்றால் அதை அவர்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை தங்கள் அறியாமையால் தவறவிட்ட பெற்றோரே அதற்கு முதல்பொறுப்பு.

ஜெ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...