https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 ஜூன், 2022

நம் அமெரிக்க குழந்தைகள் 1 . ஜெயமோகன்





 அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும் அதிலொரு அதிகப்பிரசங்கித்தனம் உள்ளது. சொல்பவனுக்கு இன்பக்கிளுகிளுப்பும் இல்லாமலில்லை.

ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டவர்கள் அங்கிருந்து நமக்கு பத்தி பத்தியாக ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை, இடித்துரைப்புகளை சொல்லும்போது நாமும்தான் சற்று சொல்லி வைப்போமே என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே சந்திப்புகளில் சொன்னவற்றை பதிவு செய்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவுக்கு நான் நான்குமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஒரு மாதகாலம் தங்கியிருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு ஊரில் என தொடர்ந்து அமெரிக்கா முழுக்க பயணம் செய்து கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவை அமெரிக்காவில் பலகாலமாக வாழ்ந்தவர்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன்.

ஆகவே இந்தக்கருத்துகளை சொல்வதற்கான ஓர் அடிப்படைத் தகுதி இருப்பதாக நினைக்கிறேன். இவை என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள், என் தனிப்பட்ட பார்வை ஆகியவை சார்ந்தவை. பிடிக்காவிட்டால் கடந்துசென்றுவிடலாம். இந்த அவதானிப்புகளை தாங்களும் அடைந்தவர்கள் யோசிக்கலாம்.

அமெரிக்க நண்பர்கள் பெரும்பாலானவர்களின் முதன்மைக் கவலை என்பது அவர்களின் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா என்பது. ஆனால் அது சட்டைமாற்றி வந்த கவலை. தங்கள் குழந்தைகள் தமிழர்களாக நீடிப்பார்களா என்பது அக்கேள்வியின் உள்ளடக்கம். ஆனால் அதுவும் சட்டைதான். அதற்கு அடியில் இருப்பது தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களுக்குமான எதிர்கால உறவு என்னவாக இருக்கும் என்பதே.

அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சி முடிந்தபின் அங்கே வந்திருந்த ஒரு மூதாட்டி மிக உருக்கமாக ‘அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!’ என்று கூவினார். ‘ஐயா, உங்கள் பிள்ளைகளை தமிழ் பேச வையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுங்கள். தமிழை அழியவிடாதீர்கள்’ என்றார்.

அது ஓரு தமிழிலக்கிய நிகழ்ச்சி என்பதனால் அக்குரலுக்கு மதிப்பிருக்கும் என அவர் எண்ணியிருக்கலாம். அமெரிக்காவில் உண்மையில் பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் யாராவது ஒரு முதியவர் அந்த கோரிக்கையை உணர்ச்சிகரமாக முன்வைப்பார். ஒரு மாதிரி போர்வஞ்சினம் போன்ற ஒரு சூழல் உருவாகும்.

அவர்களில் ஒருவரை கொஞ்சநேரம் தனியாகச் சந்தித்து சில கேள்விகளை கேட்கவேண்டும் என்னும் துடிப்பு எனக்கு உருவாகும். வந்த இடத்தில் எதற்கு வம்பு என்று அடக்கிக் கொள்வேன். அந்த தமிழ்ப்பற்றுகொண்ட முதியவர் இந்தியாவிலிருக்கையில் வாழ்நாள் முழுக்க கனவு கண்டது தன் பிள்ளைகள் அமெரிக்கா சென்றுவிடவேண்டும் என்பதாகவே இருக்கும். முழுவாழ்க்கையில் ஈட்டிய செல்வத்தை முழுக்க அதற்கே செலவிட்டிருப்பார்.

இந்தியப் பண்பாட்டையோ, தமிழ்ப்பண்பாட்டையோ தன் பையன் அறிந்துகொள்வதும் ஈடுபடுவதும் அவனுடைய அமெரிக்கப் பயணத்துக்கு தடையாக அமையும் என கற்பனை செய்து பையனை எந்தப் பண்பாட்டு அறிமுகமும் இல்லாமல், சொந்தக்காரர்களுக்குக் கூட அறிமுகம் செய்யாமல் வளர்க்கும் பெற்றோரையே நான் திரும்பத் திரும்ப காண்கிறேன். அவர்களில் ஒருவராகவே இருப்பார் அந்த முதியவர் என்பது அவருடைய நடையுடை பாவனையிலேயே தெரியும். அதில் ‘வந்துட்டம்ல?’ என்ற தோரணை இருக்கும்.

அந்தப் பெற்றோரின் மகன்கள் உள்ளூர் திருவிழாவுக்கு ஒருமுறைகூட சென்றிருக்க மாட்டார்கள். உள்ளூர் கோயிலை பார்த்திருக்க மாட்டார்கள். சொந்தக்காரர்களின் திருமணத்துக்கு சென்றிருக்க மாட்டார்கள். குலதெய்வம் என்ன, குடும்ப மரபு என்ன என்று தெரிந்திருக்காது. தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அமைப்பு பற்றி எந்த நேரடி அறிதலும் இருக்காது. எட்டாம் வகுப்பில் ரகசியமாக பொன்னியின் செல்வன் அல்லது ராஜேஷ்குமார் படித்தவர்கள் ஒரு இரண்டு சதவீதம் பேர் இருப்பார்கள். எஞ்சியவர்களுக்கு தமிழில் போஸ்டர்கள் எழுத்துகூட்டிப் படிக்குமளவுக்கே தமிழ் அறிமுகம் இருக்கும். அவர்கள் அறிந்ததெல்லாம் படிப்பு மட்டுமே. படிப்பு அல்ல அது, தொழில்நுட்பப் பயிற்சி. அப்படியே அமெரிக்கா.

தன்  பையனோ பெண்ணோ அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி அத்தனை பெற்றோரும் பெருமிதமடைகிறார்கள். செல்லுமிடமெல்லாம் சொல்கிறார்கள். அது தங்கள் வாழ்க்கையின் வெற்றி என எண்ணுகிறார்கள். ஆனால் அந்த வெற்றியின் திளைப்பினூடாக  ஒரு கட்டத்தில் அவர்கள் அறியும் ஒன்று, தங்கள் பேரப்பிள்ளைகள் இந்தியர்களோ தமிழர்களோ அல்ல என்பது. அந்த கண்ணியுடன் தங்கள் மூதாதையர் மரபு அறுபடுகிறது என்பது. முதிய வயதில் அது பகீரிடும் ஓர் அறிதல். அதன் பதற்றத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் அப்போதுகூட அது தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்டது என அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒப்புக்கொள்வதில்லை. அமெரிக்காவுக்கு எவராவது இவர்களின் பிள்ளைகளை நாடுகடத்தினார்களா என்ன? அமெரிக்க தூதரகம் முன்னால் தவமிருந்து சென்றவர்கள்தானே அனைவரும்? அதற்குப்பின் ஏன் இந்த உணர்ச்சிகரப் பாவலாக்கள்? தமிழ்மேல் உயிரையே வைத்திருப்பதுபோன்ற மிகையுணர்ச்சிகள்? மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே நடிப்பதுதான் அதிகம்.

*

இதற்கு நான் ஏன் பதில்சொல்கிறேன் என்றால் நான் செல்லுமிடமெல்லாம் இக்கேள்வி எழுகிறது என்பதனால்தான். திரும்ப திரும்ப இத்தலைப்பு சார்ந்து அவ்வளவு பேசியிருக்கிறேன். இந்த அமெரிக்க பயணத்தில் ‘பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பது, தமிழர்களாக வளர்ப்பது பற்றிய கேள்விகள் வேண்டாம்’ என பல கூட்டங்களில் முன்னரே அறிவிக்கக்கூடச் செய்தோம்.

இந்த விவாதத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியது ஒன்றுதான். கேள்வி இது ‘அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளை தமிழர்களாக வளர்ப்பது எப்படி?’ என் பதில் ‘குழந்தைகளை வளர்ப்பது இரண்டாவது விஷயம். நீங்கள் உங்கள் அறிவுவாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை பற்றி கொஞ்சம் கவலை கொள்ளுங்கள். குழந்தைகளை வளர்ப்பது நீங்கள் அல்ல, சமூகம்’

நடைமுறையில் நிகழ்வதை வைத்துப்பார்த்தால், அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் பேசவோ, தமிழர்கள் என்னும் அடையாளத்துடன் வாழவோ எந்த வாய்ப்பும் இல்லை. அவர்களை ‘தக்கவைத்துக் கொள்ள’ செய்யப்படும் எல்லா முயற்சிகளும் கடப்பாரைக்கு சுக்கு நியாயம் கொண்டவை மட்டும்தான். இதுவே உண்மை.

(வழக்கமாக அமெரிக்காவிற்கு விருந்தினர்களாக வருகை தருபவர்கள் “அமெரிக்காவிலே தமிழ் வாழும்!” என முழங்கி கைத்தட்டல் அள்ளிச் செல்வார்கள். என் வழக்கம் உண்மையைச் சொல்லி வசைகளை பெறுவது. அதை இம்முறையும் தவறவிட விரும்பவில்லை. பழகிவிட்டது.)

அடுத்த தலைமுறை அமெரிக்கக் குழந்தைகள் எங்குமே தமிழ்க்குழந்தைகளாக இல்லை. நான் எங்குமே அவ்வண்ணம் எவரையுமே பார்க்கவில்லை. சிலருக்கு கொஞ்சம் தமிழ் முனகத் தெரிகிறது, அதுவும் அப்பா அம்மா கட்டாயப்படுத்தினால். அது ஒரு இழப்புதான். ஆனால் அந்த இழப்புக்கு தயாராகத்தான் அவர்களின் பெற்றோர் இங்கிருந்து அங்கு செல்கிறார்கள். அதன்பிறகு அதைக்குறித்து வருந்தி பயனில்லை.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்குழந்தைகளின் சவால்கள் முற்றிலும் வேறானவை. அவர்கள் தங்கள் மரபுக்கு முற்றிலும் அந்நியமான, மேலும் நவீனமான, மேலும் ஜனநாயகமயமாக்கப்பட்ட, மேலும் நுகர்வுமயமாக்கப்பட்ட ஒரு பண்பாட்டை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் அம்மாவும் அப்பாவும் இருக்கும் பண்பாட்டுக் காலத்தில் இருந்து மிகமிக முந்தியது அவர்கள் பள்ளியிலும் வெளியுலகிலும் சந்திக்கும் பண்பாட்டு வெளி. அக்குழந்தைகளின் சவால் என்பது தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து அந்த புதிய, நவீனச் சூழல் நோக்கி வளர்ந்து எழுந்து செல்வது. கூட்டுப்புழு நிலையில் இருந்து  கூடு உடைத்து எழும் பட்டாம்பூச்சி சந்திக்கும் அறைகூவல்.

இந்திய அமெரிக்கக் குழந்தைகள் அங்கே ஒரு பல்லினச் சமூகத்தில் வாழ்கிறார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒழுக்கம், பண்பாடுதான் உயர்ந்தது என்று அவர்கள் எண்ண வாய்ப்பில்லை. ஒரு குறிப்பிட்ட வகையான வாழ்க்கையே இயல்பானது அல்லது சரியானது என அவர்கள் நம்ப வழியில்லை. அப்படிச் சொல்லிக்கொடுத்தால் அவர்களை நாம் பண்பாட்டுரீதியாக முன்முடிவுகள் கொண்டவர்களாக ஆக்குகிறோம். அது சிந்தனையில் ஊனமுற்ற நிலை.

அத்துடன் நம்குழந்தைகள் தங்கள் நிறத்தாலும் வாழ்க்கை முறையாலும் எப்போதும் அந்நியர்கள் என்று அங்குள்ள புறச்சூழலில் அடிக்கோடிடப்படுகிறார்கள். அவர்கள் அதை வென்று அங்குள்ளவர்களாக திகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அங்கே அவர்களுக்குச் சுற்றம் இல்லை. அந்நிலை முற்றிலும் இயல்பானது. நம் குழந்தைகள் டெல்லி சென்றாலே இச்சிக்கலை எதிர்கொள்வார்கள்.

அச்சூழலில் அவர்கள் தங்கள் அடையாளத்தை எந்த அளவுக்கு கரைத்துக்கொண்டு, எந்த அளவுக்கு அமெரிக்க பண்பாட்டின் ஒரு பகுதியாக பொருந்திக் கொள்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் அமைகிறது. தன்னை எப்படி முன்வைப்பது என்று அச்சூழலைக் கொண்டு அவர்கள் முடிவெடுக்கவேண்டுமே ஒழிய, வீட்டில் இருந்துகொண்டு நாம் சொல்லக்கூடாது.

ஆகவே கிண்டர்கார்டன் பள்ளியில் படிக்கும் இந்திய அமெரிக்கக் குழந்தையிலிருந்து அடுத்தடுத்த எல்லா படிநிலைகளிலும் உள்ள அத்தனை குழந்தைகளுமே எந்த அளவுக்கு அமெரிக்க தன்மையைக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அமெரிக்கத் தன்மையை அள்ளிக்கொள்கின்றன. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தங்களை மாற்றிக்கொள்கின்றன. அவற்றின் இயல்பான வளர்ச்சி அத்திசை நோக்கி இருக்கிறது, சூரிய ஒளியை நோக்கி செடிகள் செல்வது போல.

அதற்கு நேர் எதிராக அவர்களை தமிழை நோக்கி இழுக்க, தமிழ் அடையாளத்தில் அவர்களை சிறைப்படுத்த, அவர்களின் பெற்றோர் முயன்றார்கள் என்றால் அது தோல்வியாகவே முடியும். அவர்களை அவ்வண்ணம் சிறைப்படுத்தி வளர்ப்பது பான்சாய் மரம் வளர்ப்பதுபோல. தொடர்ச்சியாக வேர்களையும் கிளைகளையும் வெட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

‘எப்படி என் குழந்தையை தமிழனாக நீடிக்க வைப்பது?’ என்று கேட்கும் எவரும் அக்குழந்தை அமெரிக்கச் சூழலில் அங்கே அளவிடப்படும் வெற்றியை அடையவேண்டியதில்லை என்று சொல்வதில்லை. அத்தனைபேருக்கும் பிள்ளைகள் ஹார்வார்ட் செல்வதைப் பற்றிய கனவுதான். அதற்காக சிக்கனமாக சேர்த்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களின் முழுவாழ்க்கையே.

அவர்களிடம் “சரிங்க, உங்க பையன் சுத்தத் தமிழனா இருப்பான். ஆனா ஹார்வார்ட் போகமுடியாது. சரியா?” என்று கேட்டால் பதறிவிடுவார்கள். அதன்பின் தமிழாவது, பண்பாடாவது.

அப்படியென்றால் இக்கேள்வியின் உண்மை அர்த்தம் என்ன? அவர்கள் சொல்வது இவ்வளவுதான். ‘என் குழந்தை அமெரிக்காவில் வெற்றியடையவேண்டும். அதற்கு அவன் நல்ல அமெரிக்கனாக ஆகவேண்டும். எனக்கு மட்டும் தமிழனாகவும் மகனாகவும் நீடிக்கவும் வேண்டும்’.

இது இதைச்சொல்லும் இவர்களின் பெற்றோருக்கு இருந்த அதே இரட்டை ஆசைதான். பையன் அமெரிக்காவிற்குச் செல்லவேண்டும். பேரன் தூயதமிழ் பேசவும் வேண்டும். ’நாந்ந்தான் ங்கொப்பண்டா நல்லமுத்து பேரண்டா’ என பேரன்கள் அமெரிக்காவில் கபடி ஆடவேண்டும். சின்னவயசில் நான் ஜேம்ஸ்பாண்ட் ஆகவும் விவேகானந்தர் ஆகவும் ஒரே சமயம் ஆசைப்பட்டேன்.

இதுவரைக்கும் உலகத்தில்  பிற நாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மக்களில் மிகச்சில இனங்கள் தவிர பிற சமூகங்கள் தங்கள் பண்பாட்டு அடையாளத்தை ஓரிரு தலைமுறைக்குள் முழுமையாகவே இழந்து,  குடியேறிய நாட்டின் பண்பாட்டில் கரைவதே நடந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான சமூகங்கள் அப்படி கரைந்து அமெரிக்கச் சமூகமாக ஆகிவிட்டவைதான்.

அப்படிக் கரைந்தாலும் அவர்களிடம் மாறாமல் இருப்பவை என்ன? முதலில் தோல்நிறம், அந்நிறம் அளிக்கும் அடையாளம் எப்போதும் மிச்சமிருக்கிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. மிக அரிதாக மதம் எஞ்சுகிறது.  ஏனென்றால் மதத்துக்கு மொழி தேவையில்லை. அது ஆழ்படிமங்கள் மற்றும் குறியீடுகளால் ஆனது. நமீபியா தலைநகர் விண்டூக்கில் முந்நூறாண்டுகளுக்கு முன்பு சென்று குடியேறிய தமிழர்களிடம் மதம்சார்ந்த சில குறியீடுகள், சடங்குகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவர்களுக்கு தமிழ்நாடு, இந்தியா பற்றிக்கூட ஏதும் தெரியாது என்பதை கவனித்துள்ளேன்.

யூத மதம் போன்று மிக நெருக்கமான நெறிமுறைகள் கொண்ட, திட்டவட்டமான கட்டமைப்பு கொண்ட, ஒரு மதம் ஒருவேளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒரு தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள உதவக்கூடும். அனைவருக்குமல்ல, ஒரு சாராருக்கு மட்டும். மற்றபடி மதமே கூட குறியீட்டுத் தொகையாக, தனிப்பட்ட நம்பிக்கையாகவே எஞ்சும்.

எஞ்சியோர் தங்கள் அடையாளத்தை தாங்கள் வாழும் நவீன சூழலிலிருந்து உருவாக்கிக்கொள்வது இயல்பானது, எப்போதும் நடப்பது, எவ்வகையிலும் தவிர்க்க முடியாதது. அதுவே வாழ்வின் இயல்பான போக்கு. அப்படித்தான் நாம் காணும் இந்த உலகம் உருவாகி வந்துள்ளது. அதே திசையில்தான் அது வளர்ந்துசெல்லும்.

அமெரிக்க- இந்தியக் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை, தங்கள் வாயை அவர்கள் வைத்திருக்கும் விதத்தை, அவர்கள் உடல்மொழியை நான் எப்போதும் வேடிக்கையுடன் கூர்ந்து பார்க்கிறேன். அதில் வெளிப்படுவது அவர்கள் சென்று வழங்கும் சூழலில் உள்ள ஒரே ஒரு பண்பாட்டுக்கூறுதான். அதைக்கவனித்தால் அவர்கள் முயற்சி எதை நோக்கி என்பது தெரியும்.

அமெரிக்காவில் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கருப்பினக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஜமைக்கன் குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்பானிஷ் குழந்தைகளும், சீனக்குழந்தைகளும் உண்டு. நிறம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நம் குழந்தைகள் பெரும்பாலும் கறுப்பினத்தார், ஜமாய்க்கன் இனத்தார், ஸ்பானிஷ் இனத்தாருக்கே நெருக்கமானவர்கள். பண்பாடு என்றால் சீன இனத்தாருக்கு அணுக்கமானவர்கள்.

ஆனால் இவ்வினத்தாரின் நடைஉடை பாவனையையோ, மொழியையோ நகல் செய்யும் ஒரு இந்தியக்குழந்தை கூட கிடையாது. அத்தனை இந்தியக் குழந்தைகளும் அமெரிக்க வெள்ளையினக் குழந்தைகளை – இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலோ-சாக்ஸன் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க உயர்குடிக் குழந்தைகளை மட்டும் – நகல் செய்கிறார்கள். அவர்களின் மொழியையும் நடையுடை பாவனைகளையும் அப்படியே ஏற்கிறார்கள். அவர்கள் ஆகவிரும்பும் அடையாளம் அது. அவர்கள் தேடும் பண்பாட்டு இடம் அது.

தப்பித்தவறி ஓர் இந்தியக் குழந்தை ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையர் அல்லாதோரின் மொழியையும் பாவனையையும் தானும் கொள்ள ஆரம்பித்தால் நம் இந்தியப் பெற்றோர் பதறிவிடுவார்கள். குழந்தையை சொற்களால் குளிப்பாட்டிக் குளிப்பாட்டி, தேய்த்துத் தேய்த்துக் கழுவி, அந்த அடையாளங்களை விலக்கி மீட்டாலொழிய நிம்மதி அடைய மாட்டார்கள்.வெள்ளையினத்தாரின் மொழியும் அடையாளமும் மட்டும்தான் நமக்கு வேண்டும். இது இனவெறி அல்ல. அமெரிக்கப் பண்பாட்டின் மையம் எது என நாம் அனைவருக்குமே தெரியும்.

உண்மையில் நம் இந்தியப் பெற்றோர் தங்கள் குழந்தை பள்ளியில் கற்றுவரும் ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையின உச்சரிப்பையும் உடல்மொழியையும் அவர்களிடமிருந்து தாங்களும் கூர்ந்து கற்றுக்கொள்கிறார்கள். அமெரிக்கச் சமூகத்தில் நுழைய பெற்றோருக்கு இருக்கும் வழி அக்குழந்தைகள்தான். தங்கள் குழந்தைகளின் ஆங்கிலேயத்தன்மைகளை இந்தியப்பெற்றோர் ரசிக்கிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள். அக்குழந்தை வளர்ந்து பதின்பருவத்தில் முழு அமெரிக்கனாக மாறி நிற்கையில்தான் தமிழ்ப்பதற்றம் வந்தமைகிறது.

நம் அமெரிக்கத் தமிழ்க்குழந்தைகள் அமெரிக்கர்களாகும் பயிற்சியையே கல்வி என அடைகிறார்கள். அதற்கு எதிராகத்  தமிழைக்கொண்டு நிறுத்தினால் அவர்கள் தமிழை நோக்கி எதன்பொருட்டு வரவேண்டும்? அவர்கள் வருவதனூடாக அவர்கள் பெறுவது என்ன ?வந்தால் அவர்கள் இழப்பதே மிகுதி. அடிப்படைத் தமிழ்க்கல்வி பெற்ற ஒரு தமிழ்க்குழந்தை அக்கல்வியை முழுமையாக மறந்தாலொழிய அதற்கு நாவில் அமெரிக்க ஆங்கிலம் அமையாது. அமெரிக்க உடல்மொழி வராது.

ஆகவே பெற்றோரின் செல்வாக்கு செல்லுபடியாகும் மழலைவயதில், வேறுவழியின்றி அக்குழந்தை தமிழையோ, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையோ கற்றுக்கொள்கிறது. பெற்றோரை மீறிச்செல்ல முடியும் எனும் அகவை வரும்போது எளிதில் தமிழை உதறிச் செல்கிறது. பெற்றோர் அந்த வயதில்தான் கவலை கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச்செல்வதை உணர்கிறார்கள். அவர்கள் வேறொருவராக ஆகிவிட்டதை, தங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு ஆங்கிலேயருக்கும் தனக்குமான ஒரு கலாச்சார இடைவெளி இருப்பதை அவர்கள் உணருகிறார்கள்.

நிறத்தாலன்றி மற்ற அனைத்தாலும் அயலான ஆளுமையாக மாறியிருக்கும் தன் குழந்தைகளை தங்களிடமிருந்து விலக்கும் மாபெரும் விசையெது என்று அறியாமல் திகைக்கிறார்கள். அல்லது தெரிந்து அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அல்லது அந்தப் பொறுப்பை வேறெதன்மீதாவது சுமத்த விரும்புகிறார்கள். அத்தனை வினாக்களும் அங்கிருந்துதான் வருகின்றன.

அமெரிக்கப் பெற்றோரிடம் குழந்தைகளுக்கு மூர்க்கமாக தமிழை வலியுறுத்துங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழை கற்றுக்கொடுங்கள், தமிழ்பேச வற்புறுத்துங்கள் என்று கூறமாட்டேன். தமிழ் அழிந்தால் அக்குழந்தைகளுக்கு அடையாளம் இல்லாமல் ஆகிவிடும் என்று நான் எண்ணவில்லை. நான் அக்குழந்தைகளின் தரப்பிலிருந்தே யோசிப்பேன். ஒரு குழந்தையின் அடையாளம் அதன் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் தன் அடையாளம் எது என அதுவே முடிவெடுக்க வேண்டும். பிறர் அதை புகுத்த முடியாது.

(மேலும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்