ஶ்ரீ:
பதிவு : 588 / 778 / தேதி 25 செப்டம்பர் 2021
* வரையறை *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 65.
மேலிருந்து பார்த்தால் அந்த உப்பளம் அரசு விருந்தினர் விடுதி குப்புற படுத்துக் கொண்டிருக்கும் அரக்கனைப் போல இருந்தது . படிகூண்டை தலையாக நினைத்தால் இரு பக்கம் தோள்கள் முன் நோக்கி மடக்கிய இரு கைகள் வாசல் வரை நீண்டு உப்பளம் ரோட்டை எட்டிப்பிடிக்க முயற்சிப்பது போல அந்தப் “ப” வடிவ இரண்டடுக்கு விடுதி சிறியதும் பெரியதுமான சுமார் 40 அறைகளைக் கொண்டது . ஒவ்வொரு பக்கமும் இருநூறு அடிகளாவது இருக்கும் . சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு நடைபெற இருக்கும் அரங்கு மையக் கட்டிடத்தின் தலை போன்ற படிக்கூண்டின் பின் பக்கம் உடலைப் போல பின்நோக்கி படுத்தது போல இருந்தது . அரங்கிற்கு முதல்மாடியில் இருந்தது நுழைய முடியும் என்பதால் கீழிருந்து அரங்கிற்கு செல்லும் படிவழி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. தேர்ந்தெடுக்பட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் முண்ணனி தலைவர்கள் மட்டும் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டாலும் தலைவர்களுக்கு தேர்வு நடக்கும் அரங்கில் உள்நுழைய அனுமதியில்லை என்பதால் அவர்களுக்கு அரங்கிற்கு இரு பக்கவாட்டில் உள்ள அறைகளை ஒருங்கி இருந்தார்கள். கீழ் தளத்தில் உள்ள அறைகள் முழுவதையும் சண்முகம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்கி இருந்தார் . கார் நிறுத்துமிடத்திற்கு இடப்புறம் விருந்தினருக்கான தனி மாளிகை இருந்த அறைகளை மேலிடப் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அங்குதான் மூப்பனாரும் மேலிட பார்வையாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் . அரங்கின் நேர் கீழ்தளம் உணவு அரங்காக திட்டமிடப்பட்டு பின் கைவிடப்பட்டிருந்தது . பொதுவாக அரசு விருந்தினர் இல்லங்கள் எப்போதும் முகச்சுழிப்பை அளிப்பது. அரசு எந்த வகையிலும் தொழில் நடத்தும் தகுதி இல்லாதது . முதல் சிக்கல் ஊழியர்களின் கடும் அலட்சியம் , ஆடம்பரம் என்கிற வகையில் இடம் தேவைக்கு அதிகமாக உபயோகப்படுத்துவது இதில் சகிக்க இயலாதது அழகூட்டு கலையில் இருக்கும் கற்பனை வறட்சி. இந்த லட்சணத்தில் உணவு விடுதி நடத்துவது கற்பனைக்கும் எட்டாதது . உணவு விடுதி நடத்தும் எண்ணத்தை அரசி கைவிட்டது நல்ல விஷயம் .
தமிழக காங்கிரஸ் தலைவர்களை கட்சி ரீதியில் புதுவைக்கு வரவழைக்கும் வழக்கம் காமராஜருடன் முடிவுற்றது . காமராஜர் காங்கிரஸில் இருந்து வலகி பிறகு கட்சி “சிண்டிகேட் இண்டிகேட் ” என சிக்கலான பிறகு தமிழ காங்கிரஸ் தலைவர்கள் புதுவையில் வரவேற்கப்படுவதில்லை. சண்முகம் நீண்ட காலம் புதுவை காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்ததால் அந்த தொடர்ச்சி பின்பற்றப்பட்டது, தமிழகத்தில் கட்சி பலமுறை பிளவுண்டது போன்றவையும் காரணமாக இருக்கலாம் . 1981 ல் திமுக வுடன் கூண்டணி முடிவான பிறகு சண்முகம் கேட்டுக் கொண்டதால் RV.வெங்கட்ராமன் புதுவைக்கு மேலிடப்பார்வையாளராக வேட்பாளர் தேர்விற்காக அனுப்பி வைக்கப்பட்டார் . நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூப்பனார் பார்வையாளராக இப்போது வந்திருக்கிறார் . தமிழக காங்கிரஸ் தலைவரான மூப்பனார் நீக்கப்பட்டு வாழப்பாடி ராம்மூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் . இருவருடைய அனுகுமுறை நேர் எதிரானது . பண்ணையாரும் தொழிறசங்கவாதியும் ஒரு போதும் இணங்கி செல்லாத இரு பின்புலங்கள் . வாழப்பாடி அரசியல் செயல்பாடுகளில் எப்போதும் ஒரு மீறல் இருக்கும் . மூப்பனார் பண்ணையார் என விமர்சிக்கப்பட்டாலும் கட்சிக்கு விசுவாசமானவராக அறியப்பட்டார் இந்தியா முழுவதிலும் கட்சிக்கு சிக்கல் எழுந்த போதெல்லாம் சரி செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். பிரதமராக நரசிம்மராவ் வந்த பிறகு தென்னக அமைப்பை நிர்வகிக்க அவருக்கு மூப்பனாரின் தேவை இருந்தது அதன் அடிப்படையில் மூப்பனார் புதுவை வந்திருந்தார் . அல்லது நரசிம்ம ராங் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் தில்லியைவிட்டு மாநிலத்திற்கு மடைமாற்றிக் கொண்டிருந்தார்.
மூப்பனார் சண்முகத்திற்கு எதிரானவராக கருதப்பட்டார் , அது புதுவை மாநில அரசியல் காரணமாக அது பின்னாளில் வலுவாக கட்டமைக்கப்பட்டது . அது காமராஜர் காலத்தில் இருந்து துவங்கி இருக்கலாம் தமிழக காங்கிரஸின் சிடுக்குகள் அதன் பின்புலம் அதை அடிப்படையாக வைத்ததுதான் புதுவையிலும் . 1989 களில் வாழப்பாடி ராம்மூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரானவுடன் சூழலில் வாழப்படிக்கு மிக அனுக்கமானவராக அறியப்பட்டாலும் அவர் தன்னை ஒருபோதும் அப்படி வகைப் படித்திக் கொள்ள விட்டதில்லை . சண்முகம் எந்த பெரிய பின்னணியில் இருந்து வந்தவரல்ல , எளிய விவசாயியான அவர் முட்டி மோதிதான் இந்த இடத்திற்கு வந்தாதால் அரசியலில் தன்னுடைய இடம் என்ன? பிறருக்கு அளிக்க வேண்டியது என்ன? போன்ற தெளிவை தனக்குள் வரையறை செய்து கொண்டதால் வீண் பெருமிதங்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்ததில்லை கட்சியினர் யாரும் அவரை அப்படி முன் வைக்கவும் முயன்றதில்லை . நான் சண்முகத்துடன் இணைந்து அவரது அரசியலை பின்தொடர்ந்த போது கண்டடைந்த இடம் இது . அவரின் 30 வருட அரசியல் செயல்பாட்டில் தன்னைப்பற்றிய கொண்ட புரிதல் காலவதியானதை அவர் அறியவில்லை அல்லது அவர் அடைந்த மாறுபாடுகளை அவரை சுற்றி இருந்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதன் இடைப்பட்ட காலத்தில் அவரை பற்றிய எனது புரிதல் எனக்கு சொன்னது அவரை இப்போது முன்வைக்க இயலாது போனால் நான் அடைந்திருந்த தொடர்ச்சி கானாமலாகும் . நான் அதற்கானவனாக என்னை உருவாக்கிக் கொண்ட போது புதிய வழிகளை அது காட்டிக் கொடுத்ததுடன் எனக்கான இடம் பிறர் பார்த்துக் கொண்டிருக்க மெல்ல உருவாகி வந்தது . சண்முகத்தைப் பற்றிய நிரந்தரமான கதைகள் இருந்தன அதில் சொல்லப்பட்ட சண்முகம் ஏறக்குறைய சண்முகமேதான் . ஆனால் அவரை நேரில் சந்திப்பவர்கள் கதைகளையும் அவரையும் பொருத்திப்பார்த்து அடையும் ஏமாற்றம் அவரது பலமாக அல்லது பலவீனமாக இருந்தது . எனக்கான சவால் அதை கடந்து செல்வது . மெல்ல எனக்கிருந்த சிக்கலான பகுதிகளில் நகரத் துவங்கினேன் . அதுவே என்னை அரசியலின் மையத்தில் கொண்டு வைத்தது .
புதுவையின் உட்கட்சிப் பூசல்கள் தமிழக காங்கிரஸில் இருந்து வேறுபட்டவை. இங்கு ஆட்சி அமைக்கும் போட்டியில் இருக்கும் சிடுக்குகளை தமிழக அரசியல் ஊடுருவல் அவற்றை இன்னும் உக்ரமாக்கக் கூடும் எனவே தமிழக காங்கிரஸின் கோஷ்டி அரசியலின் கை புதுவை வரை நீளவேண்டாம் என நினைத்தார் . தங்கபாலு , திண்டிவனம் ராம்மூர்த்தி என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களாக இருந்த அனைவருக்கும் புதுவையின் அரசியலில் ஆர்வமிருந்தாலும் சண்முகம் ஒருபோதும் அதற்கு வாய்ப்பு கொடுத்ததில்லை . மூப்பனார் அல்லது பிற தலைவர்களின் ஆதரவாளராக புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள தயங்கினர். அதை வெளிபடையாக்கிக் கொண்ட சிலர் வக்கீல் முருகேசன் பன்னீர்செல்வம் போன்றவர்கள் மூப்பனாரின் ஆதரவாளராக ரவீந்திரவர்மா போன்றவர்கள் வாழப்பாடி ராம்மூர்த்தியின் ஆதரவாளராக வெளிப்பட்ட பிறகும் சண்முகத்தின் அணியில் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் நீடித்தனர் . அவர்கள் தலைவர்களாக வரித்துக் கொண்டவருடன் உரையாட அந்த அடையாளம் அவர்களுக்கு தேவை என சண்முகம் உணர்ந்திருந்தார். அவர்கள் வழியாக தனது எண்ணங்களை அந்த தலைவர்களிடம் வெளிப்படுத்த பயன்படுத்திக் கொண்டார் அதே சமயம் அவர்களின் மீது சண்முகத்திற்கு இருந்த மன விலக்கத்தை மற்றவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர் . இந்த புரிதல் முதலில் அவர் மீது ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது ஆனால் அரசியலின் இயங்குவசை இப்படிப்பட்ட பல கூறுகளை ஊடுபாவாகக் கொண்டது என அறிந்து கொண்டேன். என் கழுத்திலும் இத்தகைய கயிறு என் எல்லைகளை வகுக்க கட்டப்பட்டிருக்கலாம் . ஆனால் அரசியல் என்பது ஒருவகை மீறல் நான் நகர நகர அவர் தனது கயிற்றின் நீளத்தை மறுவரையறை செய்து கொண்டே இருக்கச் செய்தேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக