ஶ்ரீ:
பதிவு : 618 / 808 / தேதி 27 ஏப்ரல் 2022
* அனைத்தின் மறு பாதி *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 15.
தொண்டமானத்தத்தில் இனி அனைத்தும் மிகச் சரியாக நிகழும் எனத்தோன்றிய பிறகு மேலதிகமாக ஏதாவது ஒன்றை செய்யலாம் என அந்த ஊர் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்கி பின்னர் அங்கிருந்த பட்டரிடம் தலைவர் வரும் போது அவருக்கு சிறிய மாலை போட முடியுமா? என கேட்டேன்.அவர் “பூர்ணகும்பம்” கொடுக்க ஒத்துக் கொண்டார்! . ஒவ்வொரு இடத்திலும் இப்படி உருவாகி நின்று கொண்டிருக்கும் அரசியல் தனது வெளிப்படல் நேரத்திற்காக காத்திருக்கிறது. அதை சென்று யார் தொட்டாலும் அங்கிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அது தயங்குவதில்லை. என் அரசியல் நுழைவு கூட அப்படி யாரோ ? எதுவோ? தொட்டுசென்ற ஒன்று. ஆனால் அதை அங்கிருந்து வளர்த்தெடுக்க இளம் மனமும் கற்பனையுமாக ஒன்று தேவையாகிறது . முடிவில்லா கற்பனையில் திளைப்பதன் வழியாக தனக்கு உகந்த ஒரு சூழலை அது உருவாக்கிக் கொண்டு காத்திருக்கிறது . அதற்கு வயதோ அனுபவமின்மையோ ஒரு தடையில்லை. அதன் பின்னர் கொடியேற்ற நிகழ்வு தொடர்பு அறாமல் அங்கிருந்து துவங்கி அனந்தபுரத்தில் எதிர்பாராது நிகழ்ந்த வரவேற்பு வெடிவிபத்தில் ஒருவர் கண்ணை இழந்தல் என்கிற திடுக்கிடும் குறியீட்டுடன் முடிய இரவு 11:00 மணியானது. தலைவரை வீட்டில் கொண்டு நான் விடும்போது இரவு 12:45 . நாள் முழுவதும் அந்த மொத்த தொகுதியையும் நடந்தே கடந்ததால் பெரும் உடற்சோர்வுடன் வீடு சென்றேன்.
மாநில அளவிலான ஒரு பெரிய நிகழ்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை ஒரு சிறிய தொகுதி ஏன் எடுத்துக் கொண்டது? என்பதும் தேர்தலில் தோல்வியுற்ற மாரிமுத்துவால் சில நாட்களுக்குள் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்களை திரட்ட முடியுமானால் இந்த பலம் அவரது தேர்தல் வெற்றிக்கு ஏன் உதவவில்லை . ஆனால் அடிப்படையில் இதில் ஆச்சர்யமடைவதற்கு ஒன்றுமில்லாத மிக எளிய அரசியல் கணக்கு . அரசியலாளர்களை விட சமூகம் தேர்தல் அரசியலை முடிவு செய்கிறது அதிலிருந்து திரண்டதை மட்டும் அரசியலாளர் பெற்றுக் கொள்கிறார். சமூகத்தின் கூரிய பகுதியாக சில மனிதர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒயாமல் பேசி பேசி அதை உருவாக்குகிறார்கள். பெரும்பாலும் மிகச் சிறிய முதலீட்டில் டீக்கடை தையற்கடை இருசக்கர பழுது பார்ப்பவர் என வந்தவர் சற்று நேரம் அமர்ந்திருக்க வேண்டிய தொழில் செய்பவராக இருப்பார். அவரே அந்த சமூகத்தின் திரண்ட பகுதியின் முணை . அவரது கடை சிறு கூட்டம் தொடர்ந்து வந்து சந்திக்கும் இடமாகவும் இருக்கும் இப்படி அந்த மொத்த சமூகமும் அவரை ஒரு மாதத்தில் சில தடவை அவரை சந்தித்துவிடுகிறது. அங்கு பேசு பொருள் எங்கு சுற்றினாலும் அது உள்ளூர் வம்பு மற்றும் அரசியலாக இருப்பது தவிற்க இயலாது. அந்த கடை உரிமையாளர் பலர் வந்து ஒயாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தால் மின்னூட்டம் போல ஒன்றை அடைகிறார். தொடர்ந்து பேசப்படுவது கருத்தியலைப் போல ஒன்று உருவாகிவிடுகிறது . அதில் சொந்தக் கணக்கு ஏதாவது இருந்தால் அது இன்னும் உயரழுத்தம் கொண்டாதாகிறது. அன்னைத்தும் ஒரு பகடிபோல முன்வைக்கப்பட்டு செறிவாகி விவாதத்தை நோக்கி நகர்கிறது. எதை சொன்னாலும் அதற்கு எதிர்மறை வைக்கும் போக்கு எங்கும் உள்ளது போன்றே இங்கும் அவர்கள் அங்கு பேசப்படுவதை வேறு உயரத்திற்கு கொண்டு செல்கிறார்கள். கடை உரிமையாளர் எல்லா சமயங்களில் நடுவராக இருப்பார் . அல்லது வேறு வேலையற்ற ஒருவர் அந்த இடத்தில் அமர்ந்து கொள்வார் .
பல சமயம் ஒரு கருத்து உறுதியாவதற்கு அவர் சொல்லும் சில சொற்களே போதுமானவை. எவருடனும் அவர் விவாதிக்க வேண்டியதில்லை, அது அவரது வியாபார லாபத்திற்கு எதிராக சென்றுவிடக் கூடும் என்பதால் அதை செய்வதில்லை . அது தன்னை எதிர்மறையாக கொண்டு நிறுத்தும் என தெரியும் . இருபக்கமும் நிகரெடை கொண்டு நிற்கும் போது கூரிய ஒரு சொல் போதும் அதன் நிகர்நிலையை குலைக்க . பின் அந்த கருத்தியல் நிலைகொண்டுவிடும். அவரின் மனச்சாய்வை பற்றி அறிந்தவர்கள் கூட ஒரு புள்ளியில் அவருடன் இணைந்து கொள்கிறார்கள். இந்த சிறு தொழில் செய்பவர்கள் வெளிப்படையான கட்சி சார்புடையாவராக சில மேலிடத் தொடர்புகளை கொண்டவராக இருந்துவிட்டால் அவரை நோக்கி சிறு குழு வந்து இணைந்து கொண்டேயிருக்கும். ஒரு முக்கிய கேந்திரம் போல உருவாகிவிடுகிறது . நகரின் மையத்தில் ஒரு சிறிய முடித்திருத்தம் செய்யும் கடையில் நாள் முழுவதும் அமர்ந்திருந்து, அங்கேயே அமர்ந்து சிலநாட்கள் உணவருந்துவதை வழக்கமாக கொண்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை பார்த்திருக்கிறேன். அவரின் அந்த சகிப்புத் தன்மை அந்த முடித்திருத்துபவர் அளவிற்கானதல்ல.புறநகர் பகுதிகளிலும் சில சமயங்களில் நகர் பகுதிகளிலும் கூட அப்படிப்பட்ட இடங்களே அனைத்திற்கும் குவிமையம். அங்கு “சட்டாம்பியாக” அமர்ந்திருப்பவர் பல சமயங்களில் அதை இயக்கும் விசை கொண்டவர்களாக இருக்கின்றார் . தங்களுக்கு எதிரானவர்களை அங்கு அமர்ந்து கொண்டு தொடர்ந்து அவருக்கு எதிரான போர் ஒன்றை நிகழ்த்துவது போல அவர் முற்றும் மதிப்பிழக்கும் வரை அவரை பற்றி பேசுவதை அவர் ஒழிவதில்லை. அவர்களின் வாய்க்குள் சிக்கியவர் பின் ஒருபோதும் அதிலிருந்து மீண்டதில்லை.
தொகுதியை கையகப்படுத்த மாரிமுத்து செய்தது இதை போல குவி மையங்களுடன் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டது . உள்நுழைய மிக எளிதான வழி அது . அப்படி ஊருக்குள் இருந்த சிலரை நெருக்கமாக வைத்திருந்தது அவர் தேர்தலில் வெற்றி பெற உதவியது. அவரை அறிமுகம் செய்து வைத்தது அந்த குழிவின் உறுப்பினர் ஒருவராக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பும் நிறைவேற்றுதலும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் இணைந்திருக்க முடியாத எல்லை என ஒன்று எல்லையுண்டு.
அங்கு அவர்கள் தன்நிலை அறியாதவர்களாக மிக கற்பனையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களாக அவர்களின் ஒருவருக்கு கூட அதிகாரத்தில இருப்பவர்கள் அவர்கள் விழைதை வாழ்நாளெல்லாம் அவர்களுக்கு செய்து கொடுத்தாலும் நிறையாதவர்கள். பற்றி எரியும் நெருப்பை போல உண்ணுவதன் வழியாக மேலும் பெருகிக் கொண்டே இருப்பார்கள் . வென்றவர் தன்னையே தங்களுக்கு முன் வைக்கக வேண்டும் என நினைப்பவர்கள். அவர்கள் முன்னே பதவியில் உள்ளவர்கள் சிறுத்து நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள் , நிற்க வைப்பார்கள் . சமூகத்தின் ஆணவத்திற்கு முன் நிற்கக் கூடியவர் எவருமில்லை. அதன் ஆழமனம் எதிலும் நிறைவடைவதில்லை.
கடந்தகால ஆட்சியில் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கம் அளித்ததிருந்த கார் இது போன்ற ஒருவரின் கிராமத்து வீட்டின் முன் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .அதில் கட்டிவைத்திருந்த அவரின் வீட்டு மாடு ஒரு குறியீடு போல அங்கு நின்று கொண்டிருந்தது . அவர்களே கூரிய அரசியலாளர்கள். வாக்காளர்களில் திரண்ட பகுதி . எளிய மனிதர்கள் மீது தங்களின் அரசியலை ஏற்றி வைக்கிறார்கள். அதன் வழியாக முடிவெடுக்க தூண்டுகிறார்கள் .